குவைத், பஹ்ரைன் மீது இரான் தாக்குதல் - அமெரிக்காவுக்கு பதிலடி என அறிவிப்பு

குவைத், பஹ்ரைன் மீது இரான் தாக்குதல் - அமெரிக்காவுக்கு பதிலடி என அறிவிப்பு

பட மூலாதாரம், US Central Command

    • எழுதியவர், ஹாரி செகுலிச் மற்றும் டோபி மேன்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மீது இரான் தாக்குதல் நடத்தியுள்ளது. முன்னதாக, இரான் மீது "கடுமையான" தாக்குதல் நடத்தப்படும் என்று டொனால்ட் டிரம்ப் கூறியிருந்த நிலையில் இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன.

போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்குத் தெஹ்ரான் "மிகவும் அதிக நேரம்" எடுத்துக்கொள்வதாக டொனால்ட் டிரம்ப் கூறியதை அடுத்து, இரவோடு இரவாகத் தொடுக்கப்பட்ட இந்தத் தாக்குதல்கள், தங்களின் இரண்டாவது தொடர்ச்சியான "தற்காப்புத் தாக்குதல்கள்" என்று அமெரிக்க மத்திய கட்டளையகம் (சென்ட்காம் - Centcom) தெரிவித்துள்ளது.

இதற்குப் பதிலடியாக, பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மீது தான் தாக்குதல் நடத்தியதாக இரான் கூறியுள்ளது. முந்தைய நாள் இரான் நடத்திய பதிலடித் தாக்குதல்களிலும் இதே இரண்டு இடங்கள் தான் இலக்காக இருந்தன.

சமீபத்திய நாட்களில் இரு நாடுகளும் மாற்றி மாற்றி நடத்தி வரும் இந்தத் தீவிரத் தாக்குதல்கள், கடந்த ஏப்ரல் மாதம் இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒரு பெரும் சோதனையாக மாறியுள்ளது.

ஹோர்மூஸ் நீரிணையில் தாக்குதல்

ஹோர்மூஸ்

பட மூலாதாரம், Hwawon Ceci Lee/Anadolu via Getty Images

அமெரிக்காவின் இந்த புதிய தாக்குதலுக்குப் பிறகு, ஹோர்மூஸ் நீரிணைக்கு அருகே உள்ள இரானின் தெற்குப் பகுதி நகரங்களில் வெடிச்சத்தங்கள் கேட்டுள்ளன. இந்தப் பகுதியில் தான் முந்தைய சுற்றுத் தாக்குதல்களின் போது இரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள், ரேடார்கள் மற்றும் பிற தளங்களை அமெரிக்கப் படைகள் தாக்கியிருந்தன.

இந்த புதிய மோதலில், ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு எண்ணெய் கப்பல்கள் (ஆயில் டாங்கர்கள்) மீதும் தாக்குதல் நடத்தியதாக இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) கூறியுள்ளதாக இரான் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், இது குறித்து உடனடியாக அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் கிடைக்கவில்லை.

ஹோர்மூஸ் நீரிணை "அனைத்து வகையான கப்பல் போக்குவரத்திற்கும் முற்றிலும் மூடப்பட்டுவிட்டது" என்று இரான் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்தே இந்தத் தகவல் வெளியானது. ஆனால், சென்ட்காம் அமைப்பு, "வணிகக் கப்பல்கள் தொடர்ந்து ஹோர்மூஸ் நீரிணை வழியாக உள்ளேயும் வெளியேயும் சென்று கொண்டுதான் இருக்கின்றன" என்று கூறியுள்ளது.

கப்பல் போக்குவரத்துப் பாதை மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டதும், கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியான உடனும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்தன.

உலகளாவிய அளவுகோலாகக் கருதப்படும் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை, ஆசிய வர்த்தகத்தின் காலை வேளையில் சுமார் 2% உயர்ந்ததை அடுத்து, ஒரு பேரல் 95 டாலருக்கும் அதிகமாக உயர்ந்தது.

இந்த மாதம் கலிபோர்னியாவில் படம் பிடிக்கப்பட்ட அமெரிக்காவின் எஃப்-35 லைட்னிங் II போர் விமானம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்த மாதம் கலிபோர்னியாவில் படம் பிடிக்கப்பட்ட அமெரிக்காவின் எஃப்-35 லைட்னிங் II போர் விமானம்
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

அமெரிக்கா தனது புதிய தாக்குதலைத் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, டொனால்ட் டிரம்ப், "நேற்று நாம் அவர்களைக் கடுமையாகத் தாக்கினோம், இன்றும் அவர்களை மீண்டும் கடுமையாகத் தாக்கப் போகிறோம்" என்று எச்சரித்திருந்தார்.

இரான் தலைவர்கள் "ஒரு ஒப்பந்தத்தைப் பேச்சுவார்த்தை மூலம் முடிக்க அதிக காலம் எடுத்துக்கொள்கிறார்கள்" என்று டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் எழுதியிருந்தார்.

இரான் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது, ஆனால் அவர்கள் அதைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் கூறியுள்ளார். மேலும், அந்நாட்டின் "முக்கியமான வசதிகள் மற்றும் தளங்கள் மீது குண்டுகள் வீசப்படும்" என்றும் அவர் கூறினார்.

அமைதி ஒப்பந்தம் எதுவும் எட்டப்படாவிட்டால் இரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என்றும் அமெரிக்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் கூறுகையில், இரான் "எந்தவொரு அழுத்தத்திற்கும் அல்லது அச்சுறுத்தலுக்கும் எதிராக உறுதியுடன் நிற்கும்" என்றார். முன்னதாக, இரான் வெளியுறவு அமைச்சகம், அமெரிக்கா "முரணான செய்திகளை அனுப்பி, அதன் மூலம் ராஜதந்திர ரீதியிலான செயல்முறைகளைச் சீர்குலைக்கிறது" என்று குற்றம் சாட்டியிருந்தது.

கடந்த ஏப்ரல் மாதத்தில், அமெரிக்காவும் இரானும் ஒரு போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன. இது தொடக்கத்தில் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன் பிறகு இரு தரப்பினரும் அவ்வப்போது மாற்றி மாற்றித் தாக்குதல்களை நடத்தி வந்தாலும், முழு அளவிலான போராக அது மாறவில்லை.

இருப்பினும், வாஷிங்டன் மற்றும் தெஹ்ரான் இடையே பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காகச் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் முடங்கியுள்ளன, மேலும் பரஸ்பர தாக்குதல்களும் அதிகரித்துள்ளன.

செவ்வாயன்று, அமெரிக்க ஹெலிகாப்டர் ஒன்று தாக்கி வீழ்த்தப்பட்டது

பட மூலாதாரம், US Navy

இந்த வாரம், அமெரிக்க ஹெலிகாப்டர் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு இரான் தான் காரணம் எனப் பழிசுமத்தப்பட்டது. இதற்குப் பதிலடியாக, மத்திய கிழக்கு முழுவதும் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்களை இலக்கு வைத்து இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தாக்குதல்களை நடத்தியது.

எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ், மத்திய கிழக்கு பகுதி "நெருக்கடிக்குள் இன்னும் ஆழமாக இழுக்கப்பட்டு வருகிறது" என்றும், சமீபத்திய தாக்குதல்களைப் பார்க்கும்போது "இந்த போர்நிறுத்தம் என்பது ஒரு பெயரளவிலான நிறுத்தமாகவே தெரிகிறது" என்றும் கூறியுள்ளார்.

"இந்தக் குறைவான அளவிலான மோதல், முழு அளவிலான போராக மாறுவதற்கான ஆபத்துகளை நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது. அனைத்து தரப்பினரும் ராஜதந்திர ரீதியிலான தீர்வை நோக்கி உழைக்க வேண்டும். இனி தாக்குதல்கள் இருக்கக் கூடாது. சாக்குப்போக்குகளும் இருக்கக் கூடாது," என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு