பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம் - மனைவி கைது செய்யப்பட்டது எப்படி?

பட மூலாதாரம், Handout
எச்சரிக்கை: கட்டுரையில் இடம்பெற்றுள்ள உள்ளடக்கம் சங்கடம் தரலாம்.
பொதுவாக, கொலை வழக்குகளில் தலையில்லாத சடலம் கண்டுபிடிக்கப்பட்டால் அந்த வழக்கு காவல்துறைக்கு பெரும் தலைவலியாக மாறுவது இயல்பு.
அந்தவகையில், பெரம்பூர் ரயில் நிலையத்தின் நான்காம் நடைமேடையில் ஜூன் 5 ஆம் தேதியன்று தலையில்லாத சடலத்துடன் கிடந்த சூட்கேஸ் ஒன்று காவல்துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மூன்றே நாட்களில் செங்கல்பட்டு ஏரிக்கு அருகில் சடலத்தின் தலை கண்டறியப்பட்ட நிலையில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் உள்பட இரண்டு பேரை காவல்துறை கைது செய்துள்ளது.
மருத்துவர்கள் பயன்படுத்தும் இரு வண்ண பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் சிசிடிவி காட்சிகள் ஆகியவை குற்றத்தில் ஈடுபட்ட நபர்களை நெருங்க பிரதான காரணங்களாக இருந்ததாக, பிபிசி தமிழிடம் புளியந்தோப்பு காவல் துணை ஆணையர் முத்துக்குமார் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Handout
சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தின் நான்காம் நடைமேடையில் கிடந்த நீலநிற சூட்கேஸ் குறித்து பயணி ஒருவர் தகவல் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில் ரயில்வே பாதுகாப்புப் படை காவலர் ஒருவர் அதனைத் திறந்து பார்த்ததாக, காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூட்கேஸில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் தலையற்ற சடலம் கிடந்துள்ளது. இரு கைகளும் இரு கால்களும் துண்டிக்கப்பட்டு சடலம் மட்டும் இருந்ததாக காவல்துறை கூறுகிறது.
பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் துணியால் சடலம் சுற்றப்பட்டிருந்தது. இதையடுத்து, சந்தேக மரணம் என்ற பிரிவில் பெரம்பூர் ரயில்வே காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
'140 சிசிடிவி காட்சிகள்'
பிறகு கொலை வழக்காக மாற்றப்பட்டு புலன் விசாரணைக்காக ஓட்டேரி காவல்நிலைய போலீஸாரிடம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, புளியந்தோப்பு காவல் உதவி ஆணையர் முத்துக்குமார் தலைமையில் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
பெரம்பூர் ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் சரிவர வேலை செய்யாத நிலையில், ஐந்தாம் தேதியன்று காலை ரயில் நிலையத்தை நோக்கி வந்த ஆப் மூலம் வாகனங்கள் புக் செய்யப்படும் நிறுவனங்களின் முன்பதிவு விவரங்கள் சரிபார்க்கப்பட்டதாக, காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி பெரம்பூர் ரயில் நிலையத்துக்கு வந்த ஆப் மூலம் புக் செய்யப்பட்ட ஆட்டோ ஒன்றை கண்காணிப்பு வளையத்துக்குள் காவல்துறை கொண்டு வந்துள்ளது. பின்னர் இதன் மூலம் சந்தேக நபர்களின் வசிப்பிடத்தை அடையாளம் கண்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
"பெரம்பூர் ரயில் நிலையம் வரும் வழியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தோம். சுமார் 140க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளைப் பின்தொடர்ந்தபோது குற்றத்தில் ஈடுபட்ட நபர்களை நெருங்க முடிந்தது" என்கிறார், புளியந்தோப்பு காவல் துணை ஆணையர் முத்துக்குமார்.

பட மூலாதாரம், Handout
'சிக்க வைத்த இரு வண்ண கவர்கள்'
வழக்கில் கைப்பற்றப்பட்ட சிவப்பு மற்றும் மஞ்சள் நிற பிளாஸ்டிக் கவர்கள் முக்கிய தடயங்களாக இருந்ததாக பிபிசி தமிழிடம் துணை ஆணையர் முத்துக்குமார் தெரிவித்தார்.
"உடலை அகற்றுவற்காக இந்த பிளாஸ்டிக் கவர்களைப் பயன்படுத்தியுள்ளனர். இவை நோயாளிகளுக்கு பயன்படுத்தக் கூடியவை. சிரிஞ்ச் உள்ளிட்டவைகளைப் போடுவதற்காக சிவப்பு நிற பிளாஸ்டிக் கவர் பயன்படுத்தப்படுகிறது" என்கிறார், துணை ஆணையர் முத்துக்குமார்.
பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள், தரமணியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சொந்தமானது என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, மருத்துவமனையில் சிவப்பு, மஞ்சள் நிற பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தும் ஊழியர்களின் விவரங்கள் மற்றும் அனைத்துத் துறை ஊழியர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
வெளிமாநிலத்தைச் சேர்ந்த புற்றுநோயாளிகளுக்கு அறைகள், பயணம் மற்றும் தங்குமிடம் ஆகியவற்றுக்கான ஏற்பாடுகளைச் செய்து தரக் கூடிய தரகராக ரஹீமா கதூன் என்பவர் பணிபுரிந்து வந்ததாக காவல்துறையின் செய்திக் குறிப்பு கூறுகிறது.
அந்தவகையில், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை நோயாளிகளிடம் இருந்து ரஹீமா கதூன் பெற்றிருக்க வாய்ப்புள்ளதை காவல்துறையின் செய்திக் குறிப்பு மூலம் அறிய முடிகிறது.
"சடலம் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் கிடைத்த ஆடையில் இருந்து முக்கியமான தடயம் ஒன்று சிக்கியது" என்கிறார் துணை ஆணையர் முத்துக்குமார்.
காவல்துறையின் விசாரணையில், இறந்துபோன நபர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 35 வயதான அமீர் அலி என்பதும் இவர் தேனாம்பேட்டையில் தங்கியிருந்து கட்டட தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்துள்ளது.
அமீர் அலி கொலை வழக்கில் அவரது மனைவி ரஹீமா கதூன் மற்றும் அவரது ஆண் நண்பரும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவரான அஷ்ரஃப் அலி ஆகியோரை காவல்துறை கைது செய்துள்ளது.
கொலை செய்ததன் பின்னணி

பட மூலாதாரம், Handout
"ரஹீமா கதூனுக்கு அசாம் மாநிலத்தில் ஏற்கெனவே திருமணம் ஆகி குழந்தை ஒன்று உள்ளது. கணவருடன் விவகாரத்து ஏற்பட்ட பிறகு சென்னைக்கு வந்து தங்கியுள்ளார். அவருக்கு அமீர் அலியின் அறிமுகம் கிடைத்துள்ளது. இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்" என்கிறார், புளியந்தோப்பு காவல் துணை ஆணையர் முத்துக்குமார்.
காவல்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, தன்னிடம் முறையான திருமண உறவில் இல்லாமல் வேறு பெண்களுடன் அமீர் அலி தொடர்பில் இருந்ததால் ரஹீமா கதூன் மனஉளைச்சலுக்கு ஆளானதாகக் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேலதிக தகவல்களை பிபிசி தமிழிடம் பகிர்ந்த துணை ஆணையர் முத்துக்குமார், "அண்மையில் அசாம் மாநிலத்துக்கு அமீர் அலி சென்றுள்ளார். அங்கு வேறொரு பெண்ணைத் திருமணம் செய்யும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார்" என்கிறார்.
திருமணம் செய்யப் போகும் பெண்ணுடன் அமீர் அலி எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ரஹீமா கதூன் பார்த்தாகவும் இதைப் பற்றிக் கேள்வி எழுப்பியபோது அவரை அமீர் அலி அடித்துக் கொடுமைப்படுத்தியதாகவும் துணை ஆணையர் தெரிவித்தார்.
இந்தத் தகவலை வழக்கில் கைதான அஷ்ரஃப் அலியிடம் ரஹீமா கதூன் தெரிவித்ததாக காவல்துறை கூறியுள்ளது. "அஷ்ரஃப் அலிக்கு அசாம் மாநிலம் பூர்வீகம். அவர் அவ்வப்போது சென்னை வந்து சென்றுள்ளார். சென்னையில் அவர் வேலை பார்க்கவில்லை" என்கிறார், துணை ஆணையர் முத்துக்குமார்.

பட மூலாதாரம், Handout
'பலமுறை விசாரித்தும் பதில் இல்லை'
காவல்துறையின் கூற்றுப்படி, ஜூன் 2 ஆம் தேதியன்று தூக்க மாத்திரைகளை பாலில் கலந்து அமீர் அலிக்கு ரஹீமா கதூன் கொடுத்ததாகவும் மறுநாள் காலை கூர்மையான ஆயுதம் மூலம் கழுத்தை துண்டித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 5 ஆம் தேதியன்று பெரம்பூர் ரயில் நிலையத்தில் தலையில்லாத சடலத்தையும் மறுநாள் செங்கல்பட்டு பகுதியில் தலையை மறைத்து வைத்ததாகவும் மற்ற உடற்பாகங்களை தேனாம்பேட்டையில் உள்ள வீட்டின் அருகில் உள்ள கழிவுநீர் கால்வாயில் வீசியதாகவும் குற்றத்தில் ஈடுபட்ட நபர்கள் கூறியதாக, காவல்துறை கூறுகிறது.
"ஜூன் 6 ஆம் தேதியன்று புறநகர் ரயில் மூலம் செங்கல்பட்டு ரயில் நிலையத்துக்கு ரஹீமா கதூனும் அஷ்ரஃப் அலியும் வந்துள்ளனர். அங்குள்ள ஏரிக்கு அருகில் உள்ள சேற்றில் தலையை புதைத்து வைத்துள்ளனர்" என்கிறார், துணை ஆணையர் முத்துக்குமார்.
திங்கள்கிழமையன்று செங்கல்பட்டு வருவாய்த்துறை முன்னிலையில் சடலத்தின் தலை கைப்பற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை கூறியுள்ளது.
"கைதான நபர்களிடம் விசாரிக்கும்போது சடலம் பற்றிய தகவல்களைக் கூறிவிட்டனர். ஆனால், கொலை செய்வதற்காக தேர்வு செய்யப்பட்ட வழிமுறையின் பின்னணி குறித்து பலமுறை விசாரித்தும் பதில் பதில் பெற முடியவில்லை" என, காவல் துணை ஆணையர் முத்துக்குமார் குறிப்பிட்டார்.
'எந்தவித குற்ற உணர்வும் இல்லை'
ரஹீமா கதூன், அஷ்ரஃப் அலி ஆகியோர் மீது கொலை, தடயங்களை மறைத்தல் ஆகிய பிரிவுகளில் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. அமீர் அலியின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"ஆனால், அவர்கள் இன்னமும் சென்னை வரவில்லை" என்கிறார், துணை ஆணையர் முத்துக்குமார்.
"குற்றத்தில் ஈடுபட்டதாகக் கைதான பெண் வசித்த வீட்டின் அருகில் உள்ளவர்களுக்கு எவ்வித சந்தேகமும் வரவில்லையா?" என அவரிடம் பிபிசி தமிழ் கேட்டது.
"கடந்த மூன்று நாட்களாக இவர்களின் செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன. துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். அதற்கு எலி இறந்துவிட்டதாக ரஹீமா கதூன் கூறியுள்ளனர்" எனக் கூறினார்.
" கொலை செய்தது குறித்து ரஹீமாவுக்கோ அஷ்ரப் அலிக்கோ எந்தவித குற்ற உணர்வும் இல்லை. கொலை செய்த வழிமுறையை ஆராய்ந்தபோது, இவர்கள் மீது வேறு ஏதேனும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதா என்பது குறித்து கண்டறியுமாறு அசாம் காவல்துறைக்குத் தெரியப்படுத்தியுள்ளோம்" எனவும் அவர் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































