அமெரிக்கா - இரான் ஒப்பந்தம்: பாகிஸ்தான் முக்கியத்துவம் பெறுவதால் இந்தியாவுக்கு சிக்கலா? 'தி லென்ஸ்' விவாதம்

பட மூலாதாரம், Government of Islamabad / Handout/Anadolu via Getty Images
அமெரிக்கா, இரான் இடையே பல மாதங்களாக நீடித்த பதற்றங்களுக்குப் பிறகு, போர் நிறுத்தம் மற்றும் இரு நாடுகள் இடையிலான பேச்சுவார்த்தைகளை நோக்கிய முன்னேற்றம் மத்திய கிழக்கில் ஸ்திரத்தன்மை குறித்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மோதலின் தாக்கம் மத்திய கிழக்குடன் மட்டும் நின்றுவிடாமல், உலகளாவிய எரிசக்தி விநியோகம் மற்றும் கடல்சார் வர்த்தகத்தையும் பாதித்தது.
உலகின் எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் முக்கியப் பங்காற்றும் ஹோர்மூஸ் நீரிணை குறித்துக் குறிப்பாகக் கவலைகள் அதிகரித்திருந்தன. தற்போது அது இயல்பு நிலையில் செயல்படும் என்ற சூழல் உருவாகியுள்ளது எண்ணெய் சந்தைகளுக்குச் சற்று நிம்மதியளித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு ஹோர்மூஸ் நீரிணையில் கடல்சார் போக்குவரத்து விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்புமென அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.
அமெரிக்கா, இரான் இடையிலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதில் பாகிஸ்தானும் பங்காற்றியுள்ளது. இது அதன் சர்வதேச ராஜதந்திர நிலையை வலுப்படுத்தக்கூடும்.
எரிசக்திப் பாதுகாப்பு, முதலீடு, அங்கு வசிக்கும் இந்தியர்கள், மூலோபாய நலன்கள் ஆகியவற்றின் அடிப்படையில் மத்திய கிழக்கு ஒரு மிக முக்கியமான பிராந்தியமாக இருப்பதால், இது இந்தியாவுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.
இத்தகைய சூழலில், பாகிஸ்தானின் செல்வாக்கு அதிகரித்தால், இந்தியா தனது உத்தியை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலைமை ஏற்படலாம்.
இந்தியா தனது எண்ணெய் மற்றும் எரிவாயு தேவைகளில் சுமார் 90 சதவிகிதத்திற்கு இறக்குமதியையே சார்ந்துள்ளது. இதில் வளைகுடா நாடுகளின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.
இந்தப் பிராந்தியத்தில் பதற்றம் குறைந்தால், இந்தியா பல வழிகளில் பயனடையக்கூடும். எரிசக்தி விலைகள் குறைவது, எண்ணெய், எரிவாயு விநியோகம் சீராவது இதில் முக்கியமான நன்மைகளாக அமையும்.
பிராந்திய மோதல்கள் குறைவது, வளைகுடா நாடுகளில் பணிபுரியும் சுமார் ஒரு கோடி இந்தியர்களின் பாதுகாப்பை மேம்படுத்தக்கூடும். கூடுதலாக, முக்கியமான சர்வதேச கடல் வழித்தடங்களில் பணியாற்றும் இந்திய மாலுமிகள் எதிர்கொள்ளும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் குறைய வாய்ப்புள்ளது.
இந்த நிலையில், பல முக்கிய கேள்விகள் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளன. இரான், இஸ்ரேல், அமெரிக்கா இடையிலான மோதலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது நோக்கங்களை அடைந்தாரா என்பது அதில் ஒரு முக்கியக் கேள்வியாக உள்ளது.

பட மூலாதாரம், Getty Images
மோதல் நிலவினாலும் இரான் தனது அணுசக்தித் திறனைத் தக்கவைத்துக் கொண்டால், அந்த முடிவை அது தனக்கான ஒரு 'மூலோபாய வெற்றி'யாகக் கருதுமா என்பது மற்றொரு கேள்வி.
இந்தச் சூழல் முழுவதும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு தொடர்ந்து முழு ஆதரவை அளிக்குமா என்பதையும், அந்த உறவின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
இவற்றுடன், இந்திய பிரதமர் நரேந்திர மோதி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையிலான சந்திப்பின்போது வெளிப்பட்ட கருத்துகள் மற்றும் ஜி7 உச்சிமாநாட்டின்போது நடந்த விவாதங்களை எவ்வாறு புரிந்துகொள்வது என்பது குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.
இவைபோக, சர்வதேச அரங்கில் பாகிஸ்தானின் வளர்ந்து வரும் பங்கும் விவாதத்திற்குரிய மற்றொரு விஷயமாக உள்ளது. பிராந்திய விவகாரங்களில் மத்தியஸ்தராக தன்னை முன்னிறுத்திக் கொண்ட பிறகு, சர்வதேச மன்றங்களில் பாகிஸ்தான் இப்போது அதிக முக்கியத்துவத்தையும் செல்வாக்கையும் பெறுகிறதா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.
இந்தக் கேள்விகளை ஆராய்ந்து அதற்குரிய சாத்தியமான பதில்களைப் புரிந்துகொள்ளும் நோக்கில், 'கலெக்டிவ் நியூஸ்ரூமின்' இதழியல் துறை இயக்குநர் முகேஷ் சர்மா, பல சிறப்பு விருந்தினர்களுடன் உரையாடினார்.
இந்த உரையாடல்கள் பிபிசியின் வாராந்திர நிகழ்ச்சியான 'தி லென்ஸ்'-இன் ஒரு பகுதியாக அமைந்திருந்தன. இதில் நிபுணர்கள் இரான்-இஸ்ரேல்-அமெரிக்கா இடையிலான மோதல் குறித்தும், அதன் விளைவாக இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இப்பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகள் மீது ஏற்படக்கூடிய பரந்த தாக்கங்கள் குறித்தும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்கா-இரான் ஒப்பந்தத்தை எப்படிப் புரிந்துகொள்வது?
போர்கள் மற்றும் மோதல்களின்போது, சண்டையிடும் தரப்பினர் தற்காலிகமாகத் தங்கள் ராணுவ நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்வது வழக்கம். இது அவர்களுக்குத் தங்கள் படைகளை ஒருங்கிணைக்க, வலிமையை மீட்டெடுக்க, உத்திகளை மறுஆய்வு செய்ய, அடுத்த கட்டத்திற்குத் தயாராக உதவுகிறது.
இதன் காரணமாக, ஒரு முக்கியமான கேள்வி எழுப்பப்படுகிறது: அமெரிக்கா, இரான் இடையிலான மோதல் உண்மையில் முடிவுக்கு வந்துவிட்டதா அல்லது அது தற்காலிகமாக மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதா?
இந்தக் கேள்விக்குப் பதிலளித்த 'சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான மையம்' (Centre for Social and Economic Progress) அமைப்பின் வருகைதரு மூத்த ஆய்வாளர் காந்தி பாஜ்பாய், அமைதி திரும்புவதற்கான வாய்ப்புகள் இருந்தாலும், தற்போதைய சூழல் இன்னும் நிச்சயமற்றதாகவே இருப்பதாகக் கூறினார்.
"இது போர்க்களத்தில் மேற்கொள்ளப்படும் ஓர் உத்திசார்ந்த இடைநிறுத்தம் (strategic pause) என்று நான் கருதவில்லை," என்று காந்தி பாஜ்பாய் கூறினார்.
அதேவேளையில், "இந்த மோதல் நீண்ட காலமாகத் தொடர்ந்து வருகிறது, இதில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் சோர்வடைந்துள்ளனர். எனவே, அமைதி திரும்புவதற்கான வலுவான வாய்ப்பு இருப்பதாகக் கருதுகிறேன்," என்றார் அவர்.
பாஜ்பாயின் கருத்துப்படி, இந்த மோதல் நீண்ட காலமாக நீடித்து வருவதால், சண்டையைத் தொடர்வதைவிட அமைதியான தீர்வைக் காண்பதிலேயே சம்பந்தப்பட்ட தரப்பினர் இப்போது அதிக ஆர்வம் காட்டக்கூடும்.
இருப்பினும், எதிர்காலம் இன்னும் தெளிவற்றதாகவே உள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
"அடுத்த 60 நாட்களுக்குள் அவர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஒரு முறையான ஒப்பந்தமாக மாற்ற வேண்டும்; அதில் எத்தகைய முன்னேற்றம் ஏற்படுகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்."
இந்தச் செயல்முறை எளிதாக இருக்காது என்றும் பாஜ்பாய் எச்சரித்தார்.
"அதிபர் டிரம்ப் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எதுவும் சுமூகமாக நடப்பதில்லை என்பது அனைவருக்கும் தெரியும். எனவே, இனிவரும் நாட்களில் பல எதிர்பாராத திருப்பங்கள் இருக்கவும் வாய்ப்புள்ளது," என்று அவர் கூறினார்.
அமெரிக்கா இந்த மோதலில் ஈடுபட்டதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று, இரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதைத் தடுக்க வேண்டுமென்ற அதன் நீண்டகால நோக்கம். இரான் அணு ஆயுதத் திறனைப் பெறுவதை அனுமதிக்க மாட்டோம் என்று அமெரிக்கா பலமுறை கூறியுள்ளது.
இது மற்றொரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது: இந்த மோதலில் அமெரிக்கா எதற்காக நுழைந்ததோ, அந்த இலக்குகளை அது அடைந்துவிட்டதா?
இதற்குப் பதிலளித்த காந்தி பாஜ்பாய், "அடுத்த 60 நாட்களில் இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று, இரான் தனது அணு ஆயுதத் திட்டத்தை நிறுத்த ஒப்புக்கொண்டால், அதை அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கான பெரும் வெற்றியாகக் கருதலாம்," என்று விளக்கினார்.

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்கா-இரான் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானின் பங்கு
அமெரிக்கா, இரான் இடையிலான ஒப்பந்தத்தில் பாகிஸ்தானின் பங்கு குறித்துப் பேசிய காந்தி பாஜ்பாய், பாகிஸ்தானின் ஈடுபாட்டை பிராந்திய அரசியல் மற்றும் மோதல்களின் பரந்த பின்னணியில் பார்க்க வேண்டும் என்றார்.
இருப்பினும், பாகிஸ்தானின் தீவிரமான ஈடுபாடு இந்தியாவில் சில கவலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் பாஜ்பாய் சுட்டிக்காட்டினார்.
அவரது கூற்றுப்படி, "பாகிஸ்தானின் தீவிரமான பங்கு இந்தியாவுக்கு சற்று சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், இந்த முழு நிகழ்விலும் இந்தியாவின் பங்கு ஒப்பீட்டளவில் குறைவாகவே இருந்த நிலையில், பாகிஸ்தானின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகத் தெரிந்தது."
அத்துடன் சமீபத்திய மாதங்களில் பாகிஸ்தானின் செல்வாக்கு அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
"கடந்த ஐந்து அல்லது ஆறு மாதங்களில், குறிப்பாக சௌதி அரேபியாவுடன் பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்துகொண்ட பிறகு, அமெரிக்கா மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் அதன் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது," என்று பாஜ்பாய் கூறினார்.
அவரைப் பொறுத்தவரை, பாகிஸ்தான் - சௌதி அரேபியா இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தம், வளைகுடா பிராந்தியத்திலும் அமெரிக்கா உடனான உறவிலும் பாகிஸ்தானின் தூதரக மற்றும் மூலோபாய முக்கியத்துவத்தை வலுப்படுத்தி இருப்பதாகத் தெரிகிறது.
"இதை இந்தியாவுக்கு ஒரு சிறிய பின்னடைவாகக் கருதலாம்," என்கிறார் பாஜ்பாய். அதே வேளையில், இதன் நீண்டகாலத் தாக்கம் என்ன என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
"எதிர்காலத்தில் பாகிஸ்தான், அமெரிக்கா இடையிலான உறவு எந்த திசையில் செல்லும் என்பதையும், அந்தப் பிராந்தியத்தில் பாகிஸ்தானின் பங்கு எவ்வளவு தூரம் விரிவடையும் என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்."
இதற்கிடையில், மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப இந்தியாவும் தனது பிராந்திய அணுகுமுறையை மாற்றியமைத்து வருவதாகத் தெரிவதையும் பாஜ்பாய் குறிப்பிட்டார். இதற்கு உதாரணமாக, பிரதமர் நரேந்திர மோதியின் சமீபத்திய வெளிநாட்டுப் பயணத்தைச் சுட்டிக்காட்டினார்.
பாஜ்பாயின் கருத்துப்படி, அந்தப் பயணத்தின்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பிரதமர் மோதி மேற்கொண்ட சந்திப்புகள் கூட, அந்தப் பிராந்தியத்தில் இந்தியாவின் பரந்த ராஜதந்திர உத்தியின் ஒரு பகுதியாக இருக்கலாம்.
"இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையிலான உறவுகள் ஏற்கெனவே வலுவானதாகவும் ஆழமானதாகவும் உள்ளன. அவற்றை மேலும் வலுப்படுத்த இந்தியா முனைப்பு காட்டி வருகிறது," என்று அவர் விளக்கினார்.

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்கா-இரான் போரில் வென்றது யார்?
'ஃபோர்ஸ்' இதழின் நிர்வாக ஆசிரியர் கஸாலா வஹாப், இந்த ஒப்பந்தத்தை முற்றிலும் மாறுபட்ட கண்ணோட்டத்தில் பார்க்கிறார். அவரைப் பொறுத்தவரை, "இது இரானுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. இரான் இத்தகைய பெரும் வெற்றியைப் பெறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை."
இரான் ராஜதந்திர ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளதை உலகம் முழுவதும் உள்ள மக்களால் தெளிவாகக் காண முடிவதாகவும் அவர் கூறுகிறார்.
இரான் மீதான அழுத்தத்தை அதிகரிக்க விரும்பினால், நேரடி ராணுவ மோதலைத் தவிர வேறு சிறந்த வழி எதுவும் அமெரிக்காவிடம் எஞ்சியிருக்கவில்லை என்று அவர் வாதிடுகிறார்.
கஸாலா வஹாப் கூறுவதன்படி, "அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியது; பின்னர் ஒரு சிறப்பு நடவடிக்கையை மேற்கொள்ள முயன்று தோல்வியடைந்தது. பலமுறை தரைவழித் தாக்குதல் நடத்தப் போவதாக மிரட்டியது என்றாலும் அதிலும் வெற்றிபெற முடியவில்லை. மூலோபாய ரீதியாகவும் இரான் வெற்றி பெற்றுள்ளது."
மேலும் விரிவாகப் பேசிய அவர், "அமெரிக்காவின் இரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் அனைத்து நிலைகளிலும் தோல்வியடைந்துள்ளன. அதுமட்டுமின்றி, அமெரிக்கா தனியாகப் போராடவில்லை, இஸ்ரேலும் இந்தப் போராட்டத்தில் அதனுடன் இணைந்திருந்தது" என்று குறிப்பிட்டார்.
கஸாலா வஹாப்பின் கூற்றுப்படி, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒரே மாதிரியான நோக்கங்களுக்காகவே செயல்பட்டன; ஆனால் அந்த நோக்கங்களை அவர்களால் முழுமையாக அடைய முடியவில்லை.
இருப்பினும், இந்த மதிப்பீடு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கொண்ட நிலைப்பாட்டில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. அதிபர் டிரம்ப் இந்த முடிவை இரானுக்கான தோல்வி என்று பலமுறை குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "இந்தப் போர் இரானை பலவீனப்படுத்தியுள்ளது. இப்போது அவர்களிடம் விமானப் படை இல்லை, கடற்படை இல்லை, வான் பாதுகாப்பு அமைப்பு இல்லை, ரேடார் வசதியும் இல்லை. அவர்களிடம் எதுவுமே எஞ்சியிருக்கவில்லை" என்று குறிப்பிட்டார்.
இந்தப் பதிவின் மூலம், மோதலின் காரணமாக இரானின் ராணுவத் திறன்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் வாதிட்டார்.
இரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதைத் தடுப்பதே தங்கள் முதன்மை நோக்கம் என்றும், அந்த இலக்கை வெற்றிகரமாக அடைந்துவிட்டதாகவும் அமெரிக்கா பலமுறை கூறியுள்ளது.
இந்தக் கூற்றுக்கு பதிலளிக்கும் விதமாக, கஸாலா வஹாப் மாறுபட்ட கருத்தை வெளிப்படுத்தினார். அப்போது அவர், "இது ஆச்சரியமளிக்கிறது; இரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பது பற்றி ஒருபோதும் பேசியதில்லை. சொல்லப்போனால், அதன் முன்னாள் உயரிய தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி அதற்கு எதிராக ஒரு ஃபத்வாவையே (மதத் தீர்ப்பை) பிறப்பித்திருந்தார்," என்று கூறினார்.
இரான் முன்னதாக அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டு இருந்ததையும் அவர் குறிப்பிட்டார்.
அவரது கூற்றுப்படி, அணு ஆயுதங்களை உருவாக்கமாட்டோம் என்ற இரானின் உறுதிமொழி அந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றிருந்தது. இரானின் அணுசக்தித் திட்டம் குறித்த விவகாரம் அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளாலும் வலுவாக முன்னிலைப்படுத்தப்பட்டு இருப்பதாக கசலா வஹாப் கூறினார்.
அவரது பார்வையில், "அமெரிக்காவும் இஸ்ரேலுமே இதை ஒரு பிரச்னையாக மாற்றியுள்ளன."
ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளில் பாகிஸ்தானுக்கு இருந்த பங்கு குறித்தும் அவர் கருத்துத் தெரிவித்தார்.
அவரது கூற்றுப்படி, பேச்சுவார்த்தை முயற்சிகளின்போது பாகிஸ்தான் முக்கியப் பங்காற்றியது. "சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் மற்றும் கலந்துரையாடல்கள் அடங்கிய முழு செயல்முறையிலும், மத்தியஸ்தராக பாகிஸ்தான் ஆற்றிய பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது" என்று அவர் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
பிரான்ஸில் நடந்த டிரம்ப் - மோதி சந்திப்பு எவ்வளவு முக்கியமானது?
பிரான்ஸில் நடந்த ஜி7 உச்சிமாநாட்டின்போது, இந்திய பிரதமர் நரேந்திர மோதியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் சந்திப்பு ஒன்றை நடத்தினர்.
இந்திய-அமெரிக்க உறவுகளின் எதிர்காலப் போக்கு குறித்த பல விவாதங்களும் கேள்விகளும் எழுந்துள்ள சூழலில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. இதனால், இந்தச் சந்திப்பு மிகவும் முக்கியமானதாகக் கருதப்பட்டது.
தங்கள் உரையாடலின்போது, ஓமன் கடற்கரைக்கு அருகே அமெரிக்க தாக்குதல்களால் கொல்லப்பட்ட மூன்று இந்திய மாலுமிகள் குறித்த விவகாரத்தை பிரதமர் மோதி எழுப்பினார்.
அந்தப் பிராந்தியத்தில் இந்தியாவின் நலன்கள் மற்றும் கவலைகள் தொடர்பான விஷயங்கள் குறித்தும் அவர் விவாதித்தார்.
இதற்கிடையில், இந்தியாவும் அமெரிக்காவும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்கு மிக அருகில் இருப்பதாக அதிபர் டிரம்ப் கூறினார்.
இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் என்பது வணிகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிப்பதற்காக இரு நாடுகளுக்கு இடையே நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி மேற்கொள்ளப்படும் ஒரு வர்த்தக உடன்படிக்கை.
அதோடு, பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்தும் டிரம்ப் வலுவான கருத்து ஒன்றை வெளியிட்டார். யாரேனும் இந்தியாவின் மீது தாக்குதல் நடத்தினால், "நான் இந்தியாவுக்கு உதவ முன்வருவேன்" என்று அவர் கூறினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்ச்சியான மூலோபாய ஒத்துழைப்பை இது குறிப்பதாகத் தோன்றியதால், இந்தக் கருத்துகள் கவனத்தை ஈர்த்தன.
இதுவொரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது: தூதரக ரீதியாக இந்திய-அமெரிக்க உறவுகளுக்கு இந்தச் சந்திப்பு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது?
இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக, சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான மையத்தைச் சேர்ந்தகாந்தி பாஜ்பாய், இச்சந்திப்பு குறித்த தனது மதிப்பீட்டைப் பகிர்ந்துகொண்டார்.
அப்போது அவர், "மோதி, டிரம்ப் இடையிலான சந்திப்பு நீண்ட நேரம் நீடிக்கவில்லை; மிகவும் சுருக்கமாக இருந்தது. பெரும்பாலும் பிரதமர் நரேந்திர மோதியே பேசினார், டிரம்ப் அவரை மிகவும் கூர்ந்து கவனிப்பதாகத் தோன்றியது," என்று குறிப்பிட்டார்.
பாஜ்பாயின் கூற்றுப்படி, முக்கியமான விவகாரங்கள் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்குவதற்கு மோதி இந்தச் சந்திப்பைப் பயன்படுத்திக்கொண்டார்.
மேலும் பேசிய அவர், "இந்திய மாலுமிகளின் மரணம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டைப் பிரதமர் முன்வைத்தார்; அத்துடன் அமெரிக்கா, இந்தியா இடையிலான நீண்டகால உறவுகளின் எதிர்காலம் குறித்தும் பேசினார். டிரம்ப் இந்தக் கருத்துகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டார்," என்று கூறினார்.
இதன் மூலம், இந்தியாவின் கவலைகளையும் முன்னுரிமைகளையும் மோதி தெளிவாகத் தெரிவித்துள்ளார் என்றும், அந்தக் கருத்துகளை ஏற்றுக் கொள்வதற்கு டிரம்ப் தயாராக இருந்ததாகத் தோன்றியதாகவும் பாஜ்பாய் கருதுகிறார்.
அதேவேளையில், இரு தலைவர்களுக்கும் இடையிலான தனிப்பட்ட அணுகுமுறை குறித்துப் பேசிய பாஜ்பாய், "அவரது உடல் மொழியில் பணிவோ அல்லது கனிவோ எனக்குத் தெரியவில்லை," என்று கூறினார்.
சீனா குறித்து டிரம்ப் தெரிவித்த கருத்துகளையும் பாஜ்பாய் சுட்டிக்காட்டினார். அவரது கூற்றுப்படி, "சீனாவுடன் ஒரு ஜி2 ஏற்பாட்டை உருவாக்குவது குறித்த சாத்தியக்கூறுகள் பற்றி டிரம்ப் பேசினார். அத்துடன் சீனாவுடன் ஓர் ஒப்பந்தத்தை மேற்கொள்ளவும் வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டார்."
உலகின் இரண்டு மிகப்பெரிய வல்லரசுகள் முக்கிய உலகளாவிய விவகாரங்களில் நெருக்கமாக இணைந்து செயல்படும் சூழலை விவரிக்க ஜி2 என்ற சொல் சில நேரங்களில் பயன்படுத்தப்படுகிறது.
அந்தக் கருத்துகளுக்கு காந்தி பாஜ்பாய் விமர்சன ரீதியாக எதிர்வினையாற்றினார். "இந்திய பிரதமர் முன்பாக இவ்வாறு பேசியது இந்தியாவுக்கு மிகவும் அவமானகரமான விஷயம்," என்று அவர் கூறினார்.

பட மூலாதாரம், Satellite image (c) 2025 Maxar Technologies.
இரான் அணுசக்தி திறனை தக்கவைத்துக் கொண்டால் என்ன நடக்கும்?
அமெரிக்கா, இரான் இடையிலான ஒப்பந்தம் குறித்துப் பேசிய முன்னாள் இந்திய தூதர் அருண் குமார், பேச்சுவார்த்தை செயல்முறை இன்னும் தொடர்வதாகவும், ஒப்பந்தம் இன்னும் முழுமையாக இறுதி செய்யப்படவில்லை என்றும் கூறினார்.
அருண் குமாரின் கூற்றுப்படி, "இந்த ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் இன்னும் நடைபெற்று வருகின்றன. ஒப்பந்தத்தின் அனைத்து விவரங்களையும் தீர்த்துக்கொள்ளும் வகையில் இதற்கென 60 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது."
"இரான் இனி அணு ஆயுதங்களைத் தயாரிக்காது என்பதை அமெரிக்கா உறுதி செய்துள்ளது," என்றும் அருண் குமார் கூறினார்.
அதாவது, எதிர்காலத்தில் இரான் அணு ஆயுதங்களை உருவாக்காமல் இருப்பதை உறுதி செய்வதே அமெரிக்காவின் முக்கிய நோக்கங்களில் ஒன்று எனக் குறிப்பிட்டார் அவர்.
இருப்பினும், ஒரு முக்கியமான கேள்வி எஞ்சியுள்ளது.
ஒப்பந்தத்தை எட்டும் அதே வேளையில், இரான் தனது தற்போதைய அணுசக்தித் திறன்களை எப்படியாவது தக்கவைத்துக் கொண்டால், அமெரிக்கா தனது இலக்குகளை அடைந்துவிட்டதாகவும், ராஜதந்திர ரீதியில் வெற்றி பெற்றுவிட்டதாகவும் கூற முடியுமா?
இந்தக் கேள்விக்குப் பதிலளித்த அருண் குமார், அந்த ஒப்பந்தத்தில் பல முக்கிய அம்சங்கள் அடங்கியிருப்பதைச் சுட்டிக்காட்டினார்.
அவரது கூற்றுப்படி, "ஒப்பந்தத்தில் உள்ள 14 அம்சங்களில் அணுசக்தி ஒப்பந்தமும் அடங்கும்."
சுருக்கமாகக் கூறுவதெனில், இரானின் அணுசக்தித் திட்டம் என்பது 14 வெவ்வேறு அம்சங்கள் அல்லது விதிகளைக் கொண்ட ஒரு பரந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதி மட்டுமே.
ஒப்பந்தத்தின் மிக முக்கியமான பகுதிகளில் ஒன்றாக தான் கருதுவதையும் அருண் குமார் சுட்டிக்காட்டினார்.
"இரான் எண்ணெயை விற்பனை செய்ய முடியும் என்பது இந்த ஒப்பந்தத்தின் மிக முக்கியமான நிபந்தனைகளில் ஒன்று. அது ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்," என்று அவர் கூறினார்.
அவரது கூற்றுப்படி, இரான் தடையின்றி எண்ணெயை விற்பனை செய்ய அனுமதிப்பது பெரும் பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












