You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வெளிநாட்டில் படிப்பது எட்டாக் கனியாகிறதா? இந்திய மாணவர்களை கவலையில் ஆழ்த்தும் காரணிகள்
- எழுதியவர், நிகில் இனாம்தார்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
கிழக்கு இந்திய மாநிலமான ஜார்கண்டைச் சேர்ந்தவர் பிரகதி பிரியா. 29 வயதான அவர், கண்டென்ட் கிரியேஷன் பணியில் ஈடுபட்டு வருகிறார். பல ஆண்டுகள் கவனமாகத் திட்டமிட்ட பிறகு, இந்த ஆண்டு வெளிநாட்டில் முதுகலை படிப்பில் சேர இறுதியாக முடிவு செய்துள்ளார் பிரகதி பிரியா.
ரோமில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில்உலகளாவிய பொருளாதார விவகாரங்கள் படிக்க பிரியா செப்டம்பர் மாதம் செல்லவுள்ளார்.
இந்த படிப்பு ஐரோப்பாவில் சிறந்த தொழில்முறை வாய்ப்புகளுக்கான கதவைத் திறக்கும் என்று அவர் நம்புகிறார்.
எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பது குறித்து அவர் உற்சாகமாக இருந்தாலும், தான் எடுத்த முடிவு சரியானது தானா என்றும் அவருக்குச் சந்தேகம் எழுகிறது.
கடந்த சில மாதங்களாக யூரோ உள்ளிட்ட நாணயங்களின் மதிப்புக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்ததன் காரணமாக, அவர் தனது படிப்புக்காக வாங்க வேண்டிய கடன் தொகை கணிசமாக உயர்ந்துள்ளது.
"இது என்னை இரவில் தூங்கவிடாமல் செய்துள்ளது. என்னால் ஒருபோதும் [திருப்பிச்] செலுத்த முடியாத அளவுக்கான மாணவர் கடனை என் மீது சுமையாக ஏற்றிக்கொள்ள நான் விரும்பவில்லை," என்று பிரியா பிபிசியிடம் தொலைபேசி வழியே தெரிவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் படிப்பதற்காக தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் லட்சக்கணக்கான நடுத்தர வர்க்க இந்திய மாணவர்கள் எதிர்கொள்ளும் இக்கட்டான சூழ்நிலையை அவரது இந்த கவலை பிரதிபலிக்கிறது.
2025 ஆம் ஆண்டில் 12 லட்சத்துக்கும் அதிகமான இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உயர்கல்வியில் சேர்ந்திருந்தனர், மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பே சர்வதேச மாணவர்களை அதிக அளவில் வெளிநாடுகளுக்கு அனுப்பும் நாடாக விளங்கிய சீனாவை இந்தியா முந்தியது.
ஆனால் பலவீனமடைந்து வரும் நாணய மதிப்பு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் நிலவும் மந்தமான வேலை வாய்ப்புகள், கடுமையான விசா நிபந்தனைகள் மற்றும் குடியேற்றக் கட்டுப்பாடுகள் ஆகியவை வெளிநாட்டுக்குச் செல்வதற்காகப் பெரும் கடன்களை வாங்குவது மதிப்புள்ளதா என்று பலரையும் மறுபரிசீலனை செய்யத் தூண்டியுள்ளது.
"எனது திட்டங்களைக் கைவிடுவது குறித்தும் நான் யோசித்தேன், ஆனால் எனது பெற்றோரும் சகோதரியும் எனக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்தனர். நான் இந்த ஆபத்தான முடிவை எடுப்பதற்கு அது மட்டுமே காரணம்" என்று பிரியா கூறினார்.
வேறு பலருக்கு, அது அவர்களால் பெற முடியாத ஒரு ஆடம்பரமாக விளங்குகிறது.
இந்த யதார்த்தம் பல்கலைக்கழகங்களில் வரவிருக்கும் செப்டம்பர் மாத சேர்க்கைக்கான மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதில் பிரதிபலிக்கிறது.
"சந்தை மந்தமடைவதற்கான அறிகுறிகள் தெளிவாகத் தெரிகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில் பிரிட்டன் மற்றும் அமெரிக்காவுக்கான மாணவர் சேர்க்கை 20% குறைந்துள்ளது. மேலும் 10-15% சரிவு இனி வரும் காலங்களில் ஏற்படும் என்று நான் எதிர்பார்க்கிறேன்" என ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் சேர உதவும் 'எட்வைஸ் இன்டர்நேஷனல்' நிறுவனத்தின் நிறுவனர் சுஷில் சுக்வானி பிபிசியிடம் தெரிவித்தார்.
கடுமையான விசா தேவைகள் ஏற்கெனவே பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளன.
பிரிட்டனில், 76% பல்கலைக்கழகங்கள் ஜனவரி மாத சேர்க்கையில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகப் பதிவு செய்துள்ளன, அதே நேரத்தில் அமெரிக்காவில் 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மற்றும் 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கு இடையில் மாணவர் சேர்க்கை கிட்டத்தட்ட 7% சரிந்தது.
ரூபாயின் மதிப்பில் ஏற்பட்டுள்ள கடுமையான வீழ்ச்சி, வெளிநாடுகளில் படிக்க விரும்பும் மாணவர்கள் மற்றும் ஏற்கெனவே வெளிநாட்டில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் ஆகிய இரு தரப்பினரும் எதிர்கொள்ளும் சவால்களை மேலும் அதிகரித்துள்ளது.
"ஏற்கெனவே வெளிநாடுகளில் உள்ள பல மாணவர்கள் தங்களது கல்விக் கட்டணத்தின் ஒரு பகுதியைச் செலுத்தியுள்ளனர், ஆனால் கடந்த ஆண்டில் அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் 10%-க்கும் மேல் சரிந்துள்ளதால், தங்களின் எதிர்காலத் தவணைகளைச் சமாளிக்க இப்போது அவர்கள் கடன்களை மறு நிதியாக்கம் செய்யவும் கூடுதல் நிதியைத் திரட்டவும் வேண்டியுள்ளது" என்று சுக்வானி கூறினார்.
அவரது கணக்கீடுகளின்படி, 2019 ஆம் ஆண்டிலிருந்து முக்கிய கல்வி இடங்களின் நாணயங்களுக்கு எதிராக இந்திய ரூபாய் 35% முதல் 47% வரை வீழ்ச்சியடைந்துள்ளது.
வேலை கிடைத்து வெளிநாட்டிலேயே தங்கியுள்ள சில பட்டதாரி மாணவர்களின் வருமானம் உயர்ந்துள்ள போதிலும், பல சர்வதேச மாணவர்களுக்குத் தங்களின் தொழில்முறை பயணத்தைத் தொடங்குவது கடினமாகி வருகிறது.
"தாங்கள் பயிற்சி பெற்ற துறைகளில் திறன் சார்ந்த வேலைகளைப் பெறலாம் என்ற நம்பிக்கையில் அவர்கள் அங்கு வருகிறார்கள், ஆனால் இறுதியில் தற்காலிக பணிகளில் அவர்கள் வேலை செய்ய நேரிடுகிறது. முன்னதாக, அந்த வேலை அவர்களின் கல்விக்கு நிதியுதவியாக இருந்தது. இப்போது பலர் படிப்பை முடித்துவிட்டு அதை முழுநேரமாகச் செய்து வருகிறார்கள்" என்று வாஷிங்டனில் உள்ள வட அமெரிக்க இந்திய மாணவர்கள் சங்கத்தின் நிறுவனர் சுதான்ஷு கௌஷிக் பிபிசியிடம் தெரிவித்தார்.
குறிப்பாக, ரூபாயின் மதிப்பு சரிந்ததால் வெளிநாட்டுக் கல்வி முன்னெப்போதையும் விட விலை உயர்ந்ததாகிவிட்டதால், இது உயர் நடுத்தர வர்க்க இந்தியக் குடும்பங்களின் அபாயங்களை எதிர்கொள்ளும் துணிச்சலைப் பாதிக்கிறது என்று அவர் கூறினார்.
இருப்பினும், வெளிநாட்டுக் கல்விக்கான ஒட்டுமொத்தத் தேவை இன்னும் வலுவாகவே உள்ளது.
உலகளாவிய மாணவர் இடம்பெயர்வு அறிக்கை 2026-யின் படி, இந்திய மாணவர்கள் உயர் கல்விக்காக அதிகம் செல்லும் அமெரிக்கா, பிரிட்டன் , கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இந்திய மாணவர்களின் சேர்க்கை 2030 ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு சராசரியாக 0.5% குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், மாற்று இடங்கள் மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது.
"குறைந்த கல்விச் செலவு, படிப்புக்குப் பிந்தைய சாதகமான வேலைவாய்ப்பு வழிகள், வலுவான வேலை வாய்ப்புகள் மற்றும் ஈர்க்கக்கூடிய பலன்கள் காரணமாக ஜெர்மனி, அயர்லாந்து, இத்தாலி மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் இந்திய மாணவர்களிடமிருந்து அதிக ஈர்ப்பைப் பெற்று வருகின்றன" என்று மாணவர் தங்குமிட தளமான 'யுனிவர்சிட்டி லிவிங்' நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சிஓஓ மயங்க் மகேஸ்வரி கூறினார்.
மாணவர்களின் ஆர்வம் அதிகரித்து வருவதால், தனது நிறுவனமும் இந்த "புதிய இடங்களை" நோக்கி தனது கவனத்தை மாற்றியுள்ளதாக சுக்வானி கூறுகிறார்.
பிரிட்டன் அல்லது அமெரிக்காவை விட பிரியா இத்தாலியைத் தேர்ந்தெடுத்ததற்கு குறைவான செலவுகளே முக்கியக் காரணியாக இருந்தது.
பிரிட்டனில் அவர் செலுத்தியிருக்க வேண்டிய தொகையில் தோராயமாக பாதியளவு தான் அவரது கல்விக் கட்டணம் . அதே நேரத்தில் அமெரிக்காவுக்குச் செல்வது "பேசவே முடியாத ஒன்று" என்று அவர் கூறினார், ஏனெனில் அங்கு அவரது படிப்பை முடிக்க இரண்டு ஆண்டுகள் ஆகியிருக்கும், ஆனால் ரோமில் அதற்கு ஒரு ஆண்டு மட்டுமே ஆகும்.
உலகளவில் போட்டித்தன்மை வாய்ந்த உயர்கல்வித் துறைகளை உருவாக்குவதில் பல ஆண்டு காலங்களைச் செலவிட்டுள்ள பிரிட்டன் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு இந்த போக்குகள் கவலையளிக்கும் அறிகுறியாகும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
சீனாவிலிருந்து மாணவர் சேர்க்கை குறைந்துள்ள நிலையிலும், இரு நாடுகளுக்கும் சர்வதேச மாணவர்களின் மிகப்பெரிய ஆதாரங்களில் ஒன்றாக இந்தியா தொடர்ந்து விளங்குவதால் இந்த கவலை குறிப்பாக தீவிரமாக உள்ளது.
"வீழ்ச்சியடைந்து வரும் நாணய மதிப்பு, வேலைவாய்ப்புச் சந்தை, செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி, விசா சிக்கல்கள் மற்றும் தற்போதைய [டொனால்ட் டிரம்ப்] நிர்வாகத்தின் கொள்கைகள் என அனைத்தும் இணைந்து ஒரு கடுமையான நெருக்கடியை உருவாக்கியுள்ளன. இதில் யாருக்கும் வெற்றியும் இல்லை" என்று கௌஷிக் கூறினார்.
"மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள், பல்கலைக்கழகங்கள் பாதிக்கப்படுகின்றன, கல்லூரி நகரங்கள் பாதிக்கப்படுகின்றன மற்றும் பரந்த பொருளாதாரமும் பாதிக்கப்படுகிறது."
குறிப்பாக அமெரிக்கா, வெளிநாடுகளில் தனக்கு இருக்கும் மிகவும் வெற்றிகரமான செல்வாக்கு ஆதாரங்களில் ஒன்றைச் சிதைக்கும் அபாயத்தை எதிர்கொள்கிறது என்று அவர் குறிப்பிடுகிறார்.
"நமது மிகவும் செல்வாக்கு மிக்க மற்றும் லாபகரமான மென்மையான அதிகார வடிவங்களில் ஒன்றாக உயர்கல்வியை மேம்படுத்துவதில் நாம் அடைந்த ஆதாயங்களிலிருந்து நாம் பின்வாங்குகிறோம்" என்று கூறுகிறார் கௌஷிக்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு