இரான் ஒப்பந்தத்தை சீனாவின் வெற்றி என அந்நாட்டு நிபுணர்கள் கூற காரணம் என்ன?

    • எழுதியவர், பிபிசி மானிட்டரிங்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

அமெரிக்கா-இரான் போர்நிறுத்த ஒப்பந்தத்தை நிரந்தர அமைதிக்கான ஒரு பெரிய படியாகக் காட்டக் கூடாது என்று சீனாவில் உள்ள நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் இஸ்ரேல்-ஹெஸ்பொலா மோதல் போன்ற விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையே இன்னும் பெரிய கருத்து வேறுபாடுகள் இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.

இருப்பினும், சீனாவின் "அமைதியான அணுகுமுறை" மாதிரி மற்றும் எரிசக்தி பாதுகாப்பு தொடர்பான உத்திக்கு சர்வதேச அளவில் அதிக அங்கீகாரம் கிடைத்து வருவதாகவும் விமர்சகர்கள் கூறுகின்றனர். அவர்களைப் பொறுத்தவரை, இந்த மோதல் தைவான் விவகாரத்தில் அமெரிக்காவின் எதிர்ப்புத் திறனையும் பலவீனப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (எம்ஓயு) சீன அரசு வரவேற்றுள்ள போதிலும், பேச்சுவார்த்தைக்கான சாத்தியக்கூறுகள் குறித்து சீன ஆய்வாளர்கள் மிகவும் எச்சரிக்கையான அணுகுமுறையைக் கொண்டுள்ளனர்.

அவர்கள் இந்த ஒட்டுமொத்த நிகழ்விலும் சீனாவை ஒரு வெற்றியாளராகப் பார்க்கிறார்கள்.

பேச்சுவார்த்தை நீண்ட காலம் நீடிக்கும் என்ற அச்சம்

ஜூன் 15 அன்று சீனப் பத்திரிகையான குளோபல் டைம்ஸில் எழுதிய ஒரு கட்டுரையில், வாங் ஜின் அமெரிக்கா-இரான் ஒப்பந்தம் குறித்து ஒரு "எச்சரிக்கையான அணுகுமுறையை" பின்பற்றுமாறு அறிவுறுத்தினார். வாங் சீனாவின் நார்த்-வெஸ்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார்.

ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் திறக்கும் செயல்முறை, இரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் லெபனானில் இஸ்ரேலின் தொடரும் ராணுவ நடவடிக்கை போன்ற விஷயங்களில் இரு தரப்பிற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நீடிப்பதாக அவர் கூறினார். இதன் காரணமாகவே இந்த ஒப்பந்தம் இன்னும் நிச்சயமற்ற தன்மைகளாலும் ஸ்திரமற்ற தன்மையாலும் சூழப்பட்டுள்ளது.

ஜூன் 16 அன்று அரசு ஆதரவு செய்தி தளமான குவான்சுவில் எழுதிய செல்வாக்கு மிக்க விமர்சகரான சேர்மன் ரேபிட், அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்காக நிர்ணயிக்கப்பட்ட 60 நாட்கள் கால அவகாசம் மிகவும் குறைவு என்று கூறினார்.

அவர் இதை கூட்டு விரிவான செயல் திட்டத்துடன் (ஜேசிபிஓஏ) ஒப்பிட்டார், இதற்காக அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலத்தில் சுமார் 20 மாதங்கள் பேச்சுவார்த்தை நடந்தது.

2015 இல் எட்டப்பட்ட இரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் (கூட்டு விரிவான செயல் திட்டம் - ஜேசிபிஓஏ) அமெரிக்கா உட்பட பல ஐரோப்பிய நாடுகளும் இடம் பெற்றிருந்தன. இந்த ஒப்பந்தத்தின் கீழ், இரானின் அணுசக்தி செறிவூட்டல் திட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, அதன் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளில் சில தளர்வுகள் வழங்கப்பட வேண்டும்.

டொனால்ட் டிரம்ப் 2018 இல் தனது முதல் பதவிக்காலத்தில் இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

அடுத்தகட்ட பேச்சுவார்த்தை காலவரையறையின்றி நீடிக்கலாம் என்று ரேபிட் கவலை தெரிவித்தார். இதனால் அமெரிக்காவும் இரானும் முழுமையான அமைதியும் இல்லாத, போரும் இல்லாத ஒரு சூழ்நிலையில் சிக்கிக்கொள்ளலாம். இந்த நேரத்தில் பேச்சுவார்த்தையும் முற்றிலும் முடிவுக்கு வராது மற்றும் எந்தவொரு உறுதியான முடிவும் எட்டப்படாது.

சீனா என்ன கற்றுக்கொண்டது

ஜூன் 16 அன்று, தேசியவாத விமர்சகரும் ஃபுடான் பல்கலைக்கழக பேராசிரியருமான ஷென் யி, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை "வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி" என்று அழைப்பது தவறாக இருக்கும் என்று கூறினார்.

அணுசக்தித் திட்டம், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள், இஸ்ரேல்-ஹெஸ்பொலா மோதல் மற்றும் அமெரிக்கா-இரான் இடையே நீண்டகாலமாக நிலவி வரும் அவநம்பிக்கை போன்ற ஆழமான பிரச்னைகளுக்கு இந்த ஒப்பந்தம் தீர்வு காணவில்லை என்று ஷென் யி கூறினார்.

இருப்பினும், இந்த ஒப்பந்தம் எந்தவொரு "மூலோபாய வெற்றியை" தராவிட்டாலும், போர் மற்றும் எரிசக்தி விநியோகம் தொடர்பான அழுத்தத்தை தற்காலிகமாகக் குறைக்க அமெரிக்காவிற்கு இது உதவக்கூடும் என்றும் அவர் கூறினார். இது ராஜதந்திர மட்டத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு புதிய விருப்பங்களை ஆராய்வதற்கான வாய்ப்பை அமெரிக்காவிற்கு வழங்கும்.

அதே நேரத்தில், போருக்குப் பிறகு இரான் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் ஷென் யி நம்புகிறார். இதில் உள்நாட்டு ஆட்சி முறையை வலுப்படுத்துவது மற்றும் பல்வேறு அரசியல் மற்றும் சமூகக் குழுக்களுக்கு இடையே இணக்கத்தை ஏற்படுத்துவது ஆகியவை அடங்கும்.

சீனாவின் பார்வையில், ராணுவ வலிமையை விட ராஜதந்திர முயற்சிகள் ஒப்பீட்டளவில் சிறந்த முடிவுகளைத் தரும் என்ற பாடத்தை இந்த நெருக்கடியிலிருந்து சீனா கற்றுக்கொண்டுள்ளது என்று ஷென் யி கூறினார்.

பிராந்தியப் பாதுகாப்பிற்காக ஒரு பொதுவான கட்டமைப்பை உருவாக்குவதில் சீனா ஒரு நேர்மறையான பாத்திரத்தை வகிக்க முடியும், அது பிரத்தியேகமான அல்லது வரையறுக்கப்பட்ட ராணுவக் கூட்டணிகளைச் சார்ந்திருக்க வேண்டியதில்லை என்று அவர் கூறுகிறார்.

குளோபல் டைம்ஸின் முன்னாள் தலைமை ஆசிரியர் ஹூ சிஜின் ஜூன் 15 அன்று சமூக ஊடக தளமான சினா வெய்போவில் எழுதியதாவது, "இந்தப் போர் சீனாவின் அமைதி மாதிரியை மீண்டும் ஒருமுறை சரியானதென்று நிரூபித்துள்ளது."

'தைவான் விவகாரத்தில் அமெரிக்கா பலவீனமடைந்துள்ளது'

இரான் போர் அமெரிக்காவின் வளங்கள் மீது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியது, அதே நேரத்தில் சீனா தனது நிலையான மற்றும் அமைதியான வளர்ச்சியின் வேகத்தைத் தக்க வைத்துக் கொண்டது என்பது ஹூ சிஜின் கருத்து.

சீனா ஒவ்வொரு சில ஆண்டுகளிலும் வளர்ச்சியின் புதிய நிலைகளை எட்டி வருகிறது என்றும், இப்போது அது உலகின் அதிநவீன விநியோகச் சங்கிலியைக் கொண்ட நாடாக மாறியுள்ளது என்றும் அவர் கூறினார். மேலும் பல துறைகளில் உலகை வழிநடத்தும் நிலையை அது எட்டியுள்ளது.

இரான் போரில் அமெரிக்காவின் "தோல்வி", தைவான் நீரிணையில் அதன் ஒட்டுமொத்த எதிர்ப்புத் திறனைப் பெருமளவில் பலவீனப்படுத்தியுள்ளது என்று ஹூ கூறினார்.

ஒரு நடுத்தர சக்தி கொண்ட நாட்டிற்கு எதிரான போரில் அமெரிக்காவால் தீர்க்கமான வெற்றியைப் பெற முடியவில்லை என்றால், சீனா போன்ற ஒரு பெரிய சக்திக்கு எதிராக தைவான் விவகாரத்தில் உயர்மட்ட ராணுவத் தலையீடு செய்யும் விருப்பத்தை அது கிட்டத்தட்டக் கைவிட்டிருக்க வாய்ப்புள்ளது என்று அவர் கூறினார்.

இந்தக் கருத்து அமெரிக்க மூலோபாய மற்றும் ஊடக வட்டாரங்களில் பகிரங்கமாக ஒப்புக் கொள்ளப்படாவிட்டாலும், படிப்படியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது என்று ஹூ கூறினார்.

இது தவிர, சீனாவின் எரிசக்தி பாதுகாப்பு உத்தியையும் ஹூ சிஜின் பாராட்டினார்.

பல்வேறு ஆதாரங்களில் இருந்து எண்ணெய் விநியோகம், பெரிய அளவிலான மூலோபாய இருப்புக்கள், புதிய எரிசக்தி தொழில்நுட்பங்களின் வளர்ச்சி, மின்சார வாகனத் தொழிலின் விரிவாக்கம் மற்றும் பொருளாதாரம் வேகமாக மின்சாரத்தைச் சார்ந்திருப்பதாக மாறியது ஆகியவை சீனாவிற்கு ஒரு தனித்துவமான பலத்தைத் தந்துள்ளன என்று அவர் கூறினார்.

அவரைப் பொறுத்தவரை, உலகின் மிகப்பெரிய மின் கட்டமைப்பு சீனப் பொருளாதாரத்திற்கு "குறிப்பிடத்தக்க மீள்தன்மையை" வழங்கியுள்ளது. இந்த மின் கட்டமைப்பு பெருமளவில் எண்ணெயைச் சார்ந்திருக்கவில்லை. இதனால்தான் சீனாவின் பொருளாதார வலிமையும், நெருக்கடிகளைத் தாங்கும் திறனும் உலகக் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு