You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆர்சிபி தோற்றாலும் முதலிடம்: பிளேஆஃபில் எஞ்சிய ஓரிடத்திற்கு 4 அணிகள் போட்டி
- எழுதியவர், நிதிஷ் எஸ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இரு அணிகளுமே ப்ளே ஆஃப் சுற்றுக்கு ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டிருந்த நிலையில், நேற்றைய ஆட்டத்தை கிரிக்கெட் பாணியில் சொல்லவேண்டுமென்றால் டெட் ரப்பர். (Dead Rubber).
குறிப்பிட்ட ஒரு போட்டியின் வெற்றி தோல்வியால் தொடரின் முடிவுகளில் பெரிதாக மாற்றம் நடந்துவிடாது எனும் பட்சத்தில் அத்தகைய போட்டிகள் டெட் ரப்பர் என அழைக்கப்படும்.
ஆனால் நுணுக்கமாக பார்த்தால் நேற்றைய போட்டி இந்த இரு அணிகளுமே மிக முக்கியமானது. இந்தப் போட்டியில் பெங்களூரு மிக மோசமாக தோற்றால் புள்ளிப்பட்டியலில் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்படலாம் என்கிற நிலை இருந்தது.
முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கே ப்ளே ஆஃப் சுற்றில் இரண்டாம் வாய்ப்பு கிடைக்கும். மூன்றாம் நான்காம் இடங்களை பிடிக்கும் அணிகள் மோதும் போட்டி நாக் - அவுட் போட்டி. இதில் இன்னொரு தரவும் இருக்கிறது.
2011-இல் முதன்முறையாக இந்த ப்ளே ஆஃப் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து இப்போதுவரை ஒரே ஒரு சீசன் தவிர்த்து ஏனைய அனைத்து சீசன்களிலும் லீக் சுற்றில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த அணிகள் மட்டுமே கோப்பையை கைப்பற்றியிருக்கின்றன. 2016 சீசன் மட்டும் விதிவிலக்கு. அந்த சீசனில் லீக் சுற்றில் மூன்றாமிடம் பிடித்த சன்ரைசர்ஸ் அணி கோப்பை வென்றது.
நேற்று ஆடுவதாக இருந்த பிட்ச் முழுக்கமுழுக்க பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானது. இந்தப் பிட்ச்சில் கடைசியாக ஆடப்பட்ட இரு ஆட்டங்களிலும் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி முறையே 242/2, 235/4 என ரன்களை குவித்தது. அதனால் நேற்றைய போட்டியிலும் ரன் மழை பொழியும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ்ஸும் பேட்டிங்கையே தேர்ந்தெடுத்தார்.
சன்ரைசர்ஸ் அணியில் எந்த மாற்றமும் இல்லை. பெங்களூரு தரப்பில் கடந்த போட்டியில் ஆடியிராத கேப்டன் ரஜத் படிதார் மீண்டும் அணிக்குத் திரும்பியிருந்தார். கையில் ஏற்பட்ட காயம் காரணமாக பெத்தேல் நேற்றைய போட்டியில் பங்கேற்கவில்லை. இந்த ஒரே ஒரு மாற்றம் மட்டுமே.
சூறாவளியாய் சுழன்ற ஹைதராபாத் பேட்டர்கள்
இந்த சீசனில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஆர்.சி.பியின் புவனேஸ்வர் குமார் 14 போட்டிகளில் 24 விக்கெட்கள் எடுத்துள்ளார். ஹைதராபாத்தின் இந்த மைதானத்தில் அதிகபட்சமாக 48 விக்கெட்களை அவர் எடுத்திருக்கிறார்.
அவர் வீசிய முதல் ஓவரிலேயே ஹைதராபாத் 13 ரன்கள் எடுக்க, ஒரு ஹை - ஸ்கோரிங் ஆட்டத்திற்கு தயாரானது மைதானம். புவி வீசிய ஆட்டத்தின் மூன்றாவது ஓவரிலும் 12 ரன்கள் விட்டுக் கொடுத்தார். ரஷிக் சலாம் வீசிய நான்காவது ஓவரில் மூன்று பவுண்டரிகள் அடித்த கையோடு யார்க்கர் பந்தில் போல்ட்டாகி வெளியேறினார் ட்ராவிஸ் ஹெட். ரஷிக் வீசிய பவர்ப்ளேயின் கடைசி ஓவரில் 11 ரன்கள் வர, ஹைதராபாத்தின் ஸ்கோர் ஆறு ஓவர்கள் முடிவில் 63/1.
அதன்பின் தொடங்கியது சிக்ஸர் மழை. சுயாஷ் சர்மா வீசிய ஏழாவது ஓவரில் தொடர்ந்து இரு சிக்ஸர்கள், ஷெப்பர்ட் வீசிய எட்டாவது ஓவரில் இரு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என வேகம் கூட்டினார் அபிஷேக் சர்மா. முதல் 14 பந்துகளில் 26 ரன்கள் எடுத்திருந்த அபிஷேக் அடுத்த ஆறே பந்துகளில் அரைசதம் கடந்தார். அடுத்த ஓவரிலேயே டைமிங் தவறியதால் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார் அபிஷேக். அவர் ஆட்டமிழந்தபோது அணியின் ஸ்கோர் 97/2 ஆக இருந்தது.
அடுத்த மூன்று ஓவர்களில் க்ளாஸனும் இஷான் கிஷனும் இணைந்து 26 ரன்கள் மட்டுமே எடுத்தார்கள். ரன்ரேட் 11.44-லிருந்து 10.75 ஆக குறைந்தது. அதை இன்னும் குறைக்க ஆர்.சி.பியின் நம்பிக்கை நாயகனான ஹேசல்வுட்டை 13-வது ஓவர் பவுலிங் போட அழைத்துவந்தார் கேப்டன் படிதார். ஆனால் அந்த ஓவர்தான் ஹைதராபாத் அணிக்கு திருப்புமுனை ஓவரானது.
க்ளாஸன் அந்த ஒரு ஓவரில் மட்டும் மூன்று சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி விளாசினார். மொத்தம் 27 ரன்கள். ஹைதராபாத் இந்த சீசனில் ஒரு ஓவரில் எடுத்த அதிகபட்ச ரன்கள் இவை. ஸ்கோர் சட்டென 150-ஐ கடந்தது.
அதன்பின் ராக்கெட் வேகத்தில் பறந்தது ஹைதராபாத் அணியின் ஸ்கோர். 14வது ஓவரில் 15 ரன்கள், 15வது ஓவரில் 18 ரன்கள், 16வது ஓவரில் 20 ரன்கள் என அடுத்த மூன்றே ஓவர்களில் 200 ரன்களை கடந்தது ஹைதராபாத். ஐ.பி.எல் வரலாற்றில் மூன்றாவது அதிவேக 200 ஸ்கோர் இது. இஷான் கிஷன், க்ளாஸான் இருவரும் இந்த சீசனில் தங்களது ஆறாவது அரைசதத்தை பூர்த்தி செய்தார்கள். 48 பந்துகளில் நூறு ரன்கள் பார்ட்னர்ஷிப்.
ஒருவழியாக க்ருணால் பாண்ட்யா வந்து இந்த இணையை பிரித்தார். அவர் வீசிய ஸ்லிங்கர் பந்தில் வெங்கடேஷ் ஐயரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் க்ளாஸன். அவர் 24 பந்துகளில் 51 ரன்களை விளாசினார்.
அடுத்து களமிறங்கிய நிதிஷ் குமார் ரெட்டியும் நேரத்தை விரயமாக்காமல் வந்த வேகத்தில் இரு சிக்ஸர்கள் பறக்கவிட்டார். ஹேசல்வுட் வீசிய 18வது ஓவரில் 13 ரன்கள். கடைசி இரு ஓவர்களில் மேலும் ஒரு 17 ரன்கள் என 20 ஓவர்கள் முடிவில் 255/4 எடுத்து பிரமாண்ட இலக்கை ஆர்.சி.பிக்கு நிர்ணயித்தது ஹைதராபாத் அணி.
முதல் இன்னிங்ஸின் கடைசி பந்தில் ஆட்டமிழந்த இஷான் கிஷன் 46 பந்துகளில் 79 ரன்கள் எடுத்தார். ஒருவகையில் ஹைதராபாத் இப்படி ஒரு இலக்கை அடைய ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் மோசமான பீல்டிங்கும் ஒரு காரணம். இஷானுக்கு மட்டுமே மூன்று கேட்ச்களை தவறவிட்டார்கள் பெங்களூரு வீரர்கள்.
அதிரடியாக ஆடிய க்ளாஸன் இந்த சீசனில் 600 ரன்களை கடந்தார். அவர் 600 ரன்களை கடப்பது ஐ.பி.எல்லில் இதுவே முதல்முறை. பெங்களூரு அணியின் இரு சீனியர் பவுலர்களான புவனேஸ்வர் குமாரும் ஹேசல்வுட்டும் எட்டு ஓவர்களில் 106 ரன்கள் விட்டுக் கொடுத்திருந்தார்கள். அவர்களின் ஒருங்கிணைந்த எகானமி - 13.25
ஆர்சிபி போராடி தோல்வி
இலக்கைத் துரத்துகையில் ஆர்சிபி முன்னே இப்போது ஏகப்பட்ட சமன்பாடுகள் இருந்தன.
- இலக்கைத் துரத்தி வென்றுவிட்டால் புள்ளிப்பட்டியலில் அந்த அணிக்கு முதலிடம். தோல்வி எனும் பட்சத்தில் 178 ரன்களுக்கு அதிகம் எடுத்தாலும் ரன்ரேட் அடிப்படையில் அதே முதலிடம்.
- 166லிருந்து 177 ரன்களுக்குள் எடுத்தால் அந்த அணிக்கு இரண்டாமிடம். முதலிடம் குஜராத்திற்கு. ஹைதராபாத் மூன்றாமிடம்.
- அதுவே ஆர்சிபி 165க்கும் குறைவான ரன்கள் எடுத்தால் முதலிடம் குஜராத்திற்கு. இரண்டாமிடம் ஹைதராபாத் அணிக்கு. ஆர்.சி.பி மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்படும்.
எனவே ஒரு கவுரவமான தோல்வியை நோக்கி பெங்களூரு பேட்ஸ்மேன்கள் ஆடியதைப் போன்றே இருந்தது இரண்டாவது இன்னிங்ஸ். ஒரு பெரிய இடைவெளிக்குப் பின் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கினார் வெங்கடேஷ் ஐயர். அணி நிர்வாகம் அவர் மீது வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை. ஷிவாங் குமார் வீசிய மூன்றாவது ஓவரில் அவர் எடுத்தது மட்டும் 22 ரன்கள்.
அதில் மூன்று சிக்ஸர்களும் ஒரு பவுண்டரியும் அடக்கம். இஷான் மலிங்கா வீசிய நான்காவது ஓவரில் அவர் அவுட்டான போது ஸ்கோர் 4.3 ஓவர்களில் 60/1. அவர் மட்டும் 19 பந்துகளில் 44 ரன்கள்.
பவர்ப்ளேயின் கடைசி ஓவரில் கோலியும் ஷகிப் ஹுசேன் பந்துவீச்சில் அவுட்டாக ஸ்கோர் ஆறு ஓவர்கள் முடிவில் 74/2. தொடர்ந்து பத்து போட்டிகளாக குறைந்தது ஒரு விக்கெட்டாவது வீழ்த்தியிருக்கிறார் ஷகிப் ஹுசேன். ஐ.பி.எல்லில் இந்த சாதனையை நிகழ்த்தும் முதல் இந்திய பவுலர் இவர். இஷான் மலிங்கா பந்துவீச்சில் படிக்கல்லும் வெளியேற ஸ்கோர் ஒன்பது ஓவர்கள் முடிவில் 94/3.
தேவைப்படும் ரன்ரேட் 14-ஐ தாண்டி சென்றுகொண்டிருந்தது. பெங்களூரு பேட்ஸ்மேன்கள் எவ்வளவு முயன்றும் அணியின் ரன்ரேட் 10-ஐ தாண்டாமல் பார்த்துக்கொண்டார்கள் ஹைதராபாத் பவுலர்கள். ஆட்டத்தின் பெரும்பகுதி கேப்டன் படிதாரே 110 என்கிற ஸ்ட்ரைக் ரேட்டில்தான் ஆடிக் கொண்டிருந்தார். 14 ஓவர்களுக்கு பின்தான் அவரால் கொஞ்சம் வேகம் கூட்டவே முடிந்தது.
18வது ஓவரில் 37 பந்துகளில் அரைசதம் கடந்தார் அவர். அதற்கடுத்த ஓவரிலேயே பார்ட் டைம் பவுலரான ஹெட் பந்துவீச்சில் அவுட்டானார். கடைசி ஓவரில் 15 ரன்கள் வர, 20 ஓவர்கள் முடிவில் 200/4 என ஆட்டத்தை நிறைவு செய்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. 55 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் வெற்றி பெற. இஷான் கிஷன் தான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். புள்ளிப்பட்டியலில் பெங்களூரு முதலிடத்திலே நீடிக்கிறது.
இதன்மூலம் முதல் மூன்று இடங்களைப் பிடித்த அணிகளும் 18 புள்ளிகளோடு இந்த சீஸனின் லீக் போட்டிகளை நிறைவு செய்திருக்கின்றன. கடைசியாக 2019 சீசனில் இப்படி மும்பை, சென்னை, டெல்லி தலா 18 புள்ளிகள் பெற்றிருந்தன. பத்து அணிகள் என்றான பின் இப்படி நடப்பது இதுவே முதல்முறை.
நான்காவது இடம் யாருக்கு?
இன்னும் மூன்று லீக் போட்டிகளே மிச்சமிருக்கின்றன. அவை அனைத்துமே கிட்டத்தட்ட நாக் - அவுட் போட்டிகள்தான். இன்று லக்னோ - பஞ்சாப் அணிகளும் நாளை மும்பை - ராஜஸ்தான் அணிகளும் கொல்கத்தா - டெல்லி அணிகளும் மோதுகின்றன. இவற்றில் பஞ்சாப், ராஜஸ்தான், கொல்கத்தா, டெல்லி ஆகிய நான்கு அணிகளுமே ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பு இருக்கிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ்
ராஜஸ்தான் அணி 14 புள்ளிகளோடு இந்த நான்கு அணிகளில் முதலிடத்தில் இருக்கிறது. நாளை மும்பையுடனான போட்டியில் வென்றுவிட்டால் 16 புள்ளிகளோடு நேரடியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும். ஒருவேளை தோற்றுவிட்டால் பஞ்சாப், கொல்கத்தா இரு அணிகளின் தோல்விக்காக காத்திருக்க வேண்டும். கொல்கத்தா - டெல்லி போட்டியில் டெல்லி வென்றாலும் மிக அதிக ரன்கள் வித்தியாசத்தில் அந்த வெற்றி இருக்கக்கூடாது. டெல்லியின் ரன்ரேட் இப்போது -0.871 ஆக இருப்பதால் அந்த அணி எவ்வளவு முயன்றாலும் ரன்ரேட்டில் ராஜஸ்தானை முந்துவது என்பது கடினமான காரியமாக உள்ளது. எனவே ராஜஸ்தான், டெல்லி இரு அணிகளும் 14 புள்ளிகளோடு முடித்தாலும் ரன்ரேட் அடிப்படையில் ராஜஸ்தான் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும்.
பஞ்சாப் கிங்ஸ்
இந்த அணி 13 புள்ளிகளோடு ஐந்தாவது இடத்தில் இருக்கும் பஞ்சாப் இன்றைய போட்டியில் தோற்றுவிட்டால் தொடரைவிட்டு வெளியேறிவிடும். ஒருவேளை வென்றுவிட்டால் ராஜஸ்தான், கொல்கத்தா அணிகளின் தோல்விக்காக காத்திருக்கவேண்டும். ஒருவேளை ராஜஸ்தான் தோற்று கொல்கத்தா வென்றாலும் அந்த வெற்றி அதிக ரன்கள் வித்தியாசத்தில் இருக்கக்கூடாது.
கொல்கத்தா நைட்ரைடர்ஸ்
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் 13 புள்ளிகளோடு ரன்ரேட் அடிப்படையில் ஆறாவது இடத்தில் இருக்கிறது. டெல்லியுடனான போட்டியில் தோற்றுவிட்டால் கொல்கத்தா தொடரைவிட்டு வெளியேறிவிடும். ஒருவேளை வெல்லும்பட்சத்தில் அது மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் இருக்கவேண்டும். கூடவே ராஜஸ்தான், பஞ்சாப் தங்களின் கடைசி லீக் போட்டியில் தோற்றிருக்க வேண்டும்.
டெல்லி கேப்பிடல்ஸ்
நான்கு அணிகளில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பு மிகக் குறைவாக இருப்பது டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்குத்தான். ராஜஸ்தான், பஞ்சாப், கொல்கத்தா ஆகிய மூன்று அணிகளுமே தோற்கவேண்டும். அதே சமயம் கொல்கத்தா அணிக்கு எதிராக டெல்லி பெரும் வெற்றியை ஈட்ட வேண்டும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு