இந்திய அரசியலில் புதிய 'சூப்பர் ஸ்டார்' ஆன கரப்பான் பூச்சி - காரணம் என்ன?

    • எழுதியவர், ஜோயா மதின்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இந்திய அரசியல் ஓர் அசாதாரணமான சின்னத்தைப் பெற்றுள்ளது. கரப்பான் பூச்சிதான் அச்சின்னம்.

இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் தாமரையோ அல்லது எதிர்க்கட்சியான காங்கிரஸின் கை சின்னமோ அல்ல. மாறாக கரப்பான் பூச்சி தான் அச்சின்னம்.

இந்த பூச்சி, இணையத்தில் உள்ள இந்திய இளைஞர்களுக்கு எதிர்பாராத அதேசமயம் தங்களைப் பிரதிபலிக்கும் ஓர் அரசியல் குறியீடாக மாறியுள்ளது.

கடந்த வாரம் இந்தியாவின் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்குப் பிறகு, கரப்பான் பூச்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

ஒரு விசாரணையின் போது, வேலை இல்லாத இளைஞர்கள் பத்திரிகை மற்றும் சமூகச் செயல்பாடுகளை நோக்கி நகர்வதை, அவர் கரப்பான் பூச்சிகள் மற்றும் ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்டதாகக் கூறப்படுகிறது.

பின்னர் அவர், தாம் ஒட்டுமொத்தமாக இந்தியாவின் இளைஞர்களைக் குறிப்பிடவில்லை என்றும், குறிப்பாக "போலியான மற்றும் தகுதியற்ற பட்டங்களை" கொண்டவர்களை மட்டுமே குறிப்பிட்டதாகவும் விளக்கம் அளித்தார்.

ஆனால் அதற்குள்ளாகவே, இந்த கருத்துகள் இணையத்தில் வேகமாக பரவி, பெரும் அதிருப்தியையும், நகைச்சுவைகளையும் பெற்றது.

மேலும், "கரப்பான் பூச்சி ஜனதா கட்சி" அல்லது சிஜேபி எனப்படும் ஒரு நகைச்சுவையான அரசியல் எழுச்சியையும் அவரது கருத்துக்கள் தூண்டின.

இது ஒரு முறையான அரசியல் கட்சி அல்ல, மாறாக நகைச்சுவை மற்றும் நையாண்டி நிறைந்த ஓர் இணையக் கூட்டமைப்பாகும்.

இதில் உறுப்பினராவதற்கான தகுதிகளில் வேலை இல்லாமல் இருப்பது, சோம்பேறித்தனம், எப்போதும் இணையத்திலேயே மூழ்கிக்கிடப்பது மற்றும் "தொழில்முறை ரீதியாகக் குறை கூறும் திறனைக்" கொண்டிருப்பது ஆகியவை அடங்கும்.

இது போஸ்டன் பல்கலைக்கழகத்தின் மாணவரும், அரசியல் உத்தி வகுப்பாளருமான அபிஜீத் திப்கே என்பவரால் உருவாக்கப்பட்டது. இந்த யோசனை ஒரு நகைச்சுவையாகவே தோன்றியது என்று அபிஜீத் கூறுகிறார்.

அமெரிக்காவிற்குச் செல்வதற்கு முன்பு, அவர் ஆம் ஆத்மி கட்சியுடன் இணைந்து பணியாற்றினார்.

"நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டும், ஒருவேளை இதற்கென ஒரு தளத்தைத் தொடங்கலாம் என்று நான் நினைத்தேன்" என அபிஜீத் திப்கே பிபிசி மராத்தியிடம் தெரிவித்தார்.

ஆனால், அதன் பிறகு நடந்தவை அவர் எதிர்பார்த்ததை விடப் பல மடங்கு பெரியதாக இருந்தது.

சில நாட்களுக்குள், ஒரு கூகுள் ஃபார்ம் மூலம் பல்லாயிரக்கணக்கான பதிவுகளைப் பெற்ற சிஜேபி, #MainBhiCockroach ("நானும் ஒரு கரப்பான் பூச்சி") என்ற ஹேஷ்டேக் உருவாகவும், எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆதரவைப் பெறவும் தூண்டுகோலாக அமைந்தது.

இந்த இயக்கம் இணையத்தைத் தாண்டியும் பரவியது.

இளம் தன்னார்வலர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட அந்தப் பட்டத்தை ஒரு நாடக வடிவில் ஏற்கும் விதமாக, தூய்மைப் பணிகள் மற்றும் போராட்டங்களில் கரப்பான் பூச்சிகளைப் போல உடை அணிந்து பங்கேற்றனர்.

வியாழக்கிழமையன்று, சிஜேபியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 10 மில்லியன் (ஒரு கோடி) பேர் பின்தொடர்ந்தனர். உறுப்பினர் எண்ணிக்கையின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியாக பரவலாக விவரிக்கப்படும் பாஜகவின் அதிகாரப்பூர்வ பக்கத்தை (சுமார் 8.7 மில்லியன் பின்தொடர்பாளர்கள்) சிஜேபியின் இன்ஸ்டாகிராம் பக்கம் முந்தியது.

2 லட்சத்திற்கும் அதிகமானோர் அதன் எக்ஸ் பக்கத்தை பின்தொடர்கிறார்கள். அப்பக்கம் தற்போது இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.

அதைப்பார்க்க முயல்பவர்களுக்கு, "ஒரு சட்டப்பூர்வ கோரிக்கையின் காரணமாக" அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், அந்த வேகம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

அதன் ஆதரவாளர்களுக்கு, ஒரு ரசிகர் குறிப்பிட்டது போல இது "ஒரு புதிய தென்றலாக" திகழ்கிறது.

காரணம், பலர் இந்திய அரசியல் கலாசாரத்தை அளவுக்கு மீறி கட்டுப்படுத்தப்பட்டதாகவும், எதிர்ப்புக் கருத்துகளுக்கு விரோதமானதாகவும் கருதுகின்றனர்.

இதன் ஆதரவாளர்களில் மஹுவா மொய்த்ரா, கீர்த்தி ஆசாத் போன்ற எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணும் அடங்குவர்.

அதே நேரத்தில், விமர்சகர்கள் இதை எதிர்க்கட்சியுடன் தொடர்புடைய ஓர் இணைய அரசியல் நாடகம் என்று கூறி நிராகரிக்கிறார்கள். இதற்கு முன்பு, திப்கேவிற்கு ஆம் ஆத்மி கட்சியுடன் இருந்த தொடர்பைச் சுட்டிக்காட்டும் அவர்கள், இது தன்னிச்சையான கிளர்ச்சி என்பதை விட, கவனமாகத் திட்டமிட்டுத் தயாரிக்கப்பட்ட டிஜிட்டல் அரசியல் என்று வாதிடுகின்றனர்.

உடனடி எதிர்வினைகளுக்கு அப்பால், இந்த இயக்கம் பல இந்திய இளைஞர்களிடையே ஒரு தலைமுறைச் சோர்வின் அடையாளமாக மாறியுள்ளது.

அவர்கள், தாங்கள் இணையத்தில் தொடர்ந்து அரசியலை எதிர்கொள்கிறோம் என்றும், ஆனால் அதில் தங்களுக்குப் பிரதிநிதித்துவம் கிடைப்பதாக அரிதாகவே உணர்கிறோம் என்றும் கூறுகின்றனர்.

இந்தியா உலகின் மிக இளமையான மக்கள் தொகையைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகும், அதன் 140 கோடி மக்களில் தோராயமாக பாதிப் பேர் 30 வயதிற்குட்பட்டவர்கள்.

இருப்பினும், முறையான அரசியல் பங்கேற்பு என்பது இன்னமும் வரம்புக்குட்பட்டதாகவே உள்ளது.

சமீபத்திய ஆய்வொன்றில், 29% இளம் இந்தியர்கள் அரசியலில் ஈடுபடுவதையே முற்றிலும் தவிர்ப்பதாகவும், 11% பேர் மட்டுமே ஏதேனும் ஓர் அரசியல் கட்சியில் உறுப்பினராக இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

"மக்கள் தங்களது குரல் கேட்கப்படவில்லை அல்லது தங்களுக்குப் பிரதிநிதித்துவம் இல்லை என்று உணர்வதால் விரக்தியடைந்துள்ளனர்" என்று கூறுகிறார் திப்கே.

தெற்காசியா முழுவதும், சமீபத்திய ஆண்டுகளில் வேலைவாய்ப்புகள், விலைவாசி உயர்வு மற்றும் முடங்கிப்போன எதிர்காலம் குறித்த கோபத்தால் தூண்டப்பட்டு, இளைஞர்கள் தலைமையிலான போராட்ட அலைகள் இலங்கை, நேபாளம் மற்றும் வங்கதேசத்தில் அரசாங்கங்களை உலுக்கியதைக் காண முடிந்தது.

இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் ஒரு பொருளாதாரம், வேலைவாய்ப்பு, சமத்துவமின்மை அல்லது வாழ்வாதாரத்திற்கான அன்றாடச் செலவுகள் அதிகரிப்பது போன்ற கவலைகளைக் குறைத்துவிடவில்லை.

இளைஞர்கள் பலருக்கு, கல்வி என்பது இனி நிலைத்தன்மைக்கு உத்தரவாதம் அளிப்பதில்லை. மேலும் சமூகத்தில் முன்னேறுவதற்கான வாக்குறுதி மேன்மேலும் பலவீனமடைவது போலவே தோன்றலாம்.

"ஜென் ஸி தலைமுறையினர் பாரம்பரிய அரசியல் கட்சிகள் மீதான நம்பிக்கையைக் கைவிட்டுவிட்டு, தங்களுக்குப் புரியும் மொழியில் தங்களது சொந்த அரசியல் முன்னணியை உருவாக்க விரும்புகிறார்கள்" என்கிறார் திப்கே.

சிஜேபியின் இணையதளம் இந்த மனநிலையைப் பிரதிபலிக்கும் விதமாக, ஒரு கொள்கை அறிக்கையைப் போலல்லாமல், இணையப் பண்பாட்டிற்குள் வடிவமைக்கப்பட்ட ஒன்றைப் போலவே காட்சியளிக்கிறது.

அது தன்னை "சோம்பேறிகள் மற்றும் வேலையில்லாதவர்களின் குரல்" என்று விவரிப்பதுடன், "எந்த ஆதரவாளர்களும் இல்லை" மற்றும் "ஒரு பிடிவாதமான கூட்டம்" என்றும் கூறுகிறது. மேலும் "எல்லாம் சரியாக இருப்பது போல் பாசாங்கு செய்து சோர்வடைந்த" மக்களுக்கான ஒரு இயக்கத்தில் சேருமாறு ஆதரவாளர்களுக்கு அது அழைப்பு விடுக்கிறது.

இருப்பினும், இந்த நகைச்சுவைக்கு உள்ளே பொறுப்புக்கூறல் , ஊடகச் சீர்திருத்தம், தேர்தல் வெளிப்படைத்தன்மை மற்றும் பெண்களுக்கான விரிவான பிரதிநிதித்துவம் போன்ற அடையாளம் காணக்கூடிய அரசியல் கோரிக்கைகளும் புதைந்துள்ளன.

அவை இணையத்தில் தொடர்ந்து எதிர்மறைச் செய்திகளைப் பார்ப்பது, வேலையின்மை மற்றும் பொதுவான அரசியல் ஆகியவற்றைப் பற்றிய தன்னைத்தானே தாழ்த்திக்கொள்ளும் நகைச்சுவைகளுடன் இணைந்து இடம்பெற்றுள்ளன.

பகடி மற்றும் அர்ப்பணிப்பு ஆகிய இரண்டிற்கும் இடைப்பட்டதாக இருக்கும் இதன் தொனி, அதன் ஈர்ப்பின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. அவற்றின் பின்னணியில் உள்ள வேலை வாய்ப்பு, சமத்துவமின்மை, ஊழல் மற்றும் அரசியல் அந்நியமாதல் போன்ற விரக்திகள் அனைவருக்கும் பரிச்சயமானவை என்பதுதான் இத்தகைய நகைச்சுவைகள் மக்களிடம் சென்றடைவதற்குக் காரணம்.

இந்தச் சின்னத்தைத் தேர்ந்தெடுத்தது கூடப் பொருத்தமானது தான் என்று பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கரப்பான் பூச்சி என்பது ஒரு வீரமிக்க அல்லது லட்சியம் சார்ந்த ஒன்று அல்ல, மாறாக மிகவும் அடிப்படையான ஒன்று.

ஏனென்றால் கரப்பான் பூச்சி, மீண்டு வரக்கூடியது, மாற்றங்களுக்கு ஏற்பத் தன்னை மாற்றிக்கொள்ளக்கூடியது மற்றும் மிகக் குறைந்த எதிர்பார்ப்புகளுடன் சவாலான சூழ்நிலைகளிலும் உயிர்வாழும் திறன் கொண்டது.

நிச்சயமாக, நகைச்சுவையும் அரசியலும் இவ்வாறு ஒன்றோடொன்று கலப்பது என்பது ஒன்றும் புதியதல்ல.

இத்தாலியில், நகைச்சுவை நடிகர் பெப்பே கிரில்லோ அரசாங்கத்திற்கு எதிரான நகைச்சுவையின் மூலம் அதனை 'ஃபைவ் ஸ்டார் மூவ்மென்ட்' என்ற இயக்கமாக மாற்றினார்.

அதே போல் யுக்ரேனில் ஸெலன்ஸ்கி தொலைக்காட்சியில் ஒரு கற்பனையான அதிபராக நடித்ததில் இருந்து நிஜ வாழ்விலும் அதிபராக மாறினார்.

இந்தியாவின் வடிவம் இணையம் சார்ந்ததாக உள்ளது.

இது ஹேஷ்டேக்குகள், மனச்சோர்வு மற்றும் முரண் நகைச்சுவை நிறைந்த விரக்தியால் வடிவமைக்கப்பட்ட, மீம்கள் சார்ந்த, பூச்சியை மையமாகக் கொண்ட ஒரு இயக்கமாக உள்ளது.

மேலோட்டமாகப் பார்க்கையில், இது அசாதாரணமாகத் தோன்றலாம். ஆனால், இது இந்திய அரசியலுக்கு முற்றிலும் புதியதொன்று அல்ல.

இங்குள்ள அரசியல்வாதிகள், இமயமலைக் குகைகளில் தியானம் செய்வதிலிருந்து தொடங்கி, சட்டமன்ற உறுப்பினர்கள் பேருந்துகளில் ஏற்றிச் செல்லப்படுவது அல்லது ஹோட்டல்களில் தங்கவைக்கப்படுவது போன்ற காட்சிகளுக்கு நடுவே கட்சிகளை மாற்றுவது வரை, காட்சிப்படுத்தலின் சக்தியை நீண்ட காலமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

இணையப் பிரசாரங்கள் அதிகபட்ச மக்களைச் சென்றடைவதற்காக, கவனமாகத் திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்ட வைரல் வீடியோக்களையும், சுருக்கமான முழக்கங்களையும் நம்பியிருக்கின்றன.

அந்தப் பின்னணியில் பார்க்கும்போது, பூச்சியை மையமாகக் கொண்ட ஓர் அரசியல் இயக்கம் விசித்திரமான முறையில் சாத்தியமான ஒன்றாகவே தோன்றுகிறது.

மேலும், இது ஏன் இவ்வளவு வேகமாகப் பரவியது என்பதைப் புரிந்துகொள்ளவும் உதவுகிறது. இந்திய இளைஞர்கள் மற்றொரு அரசியல் கட்சியை விரும்புகிறார்கள் என்பதற்காக அல்ல, மாறாகப் பலர் தங்களது விரக்தியை வெளிப்படுத்துவதற்கான ஒரு மொழியைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதால் தான்.

"சிஜேபி என்பது வெறும் தொடக்கம் தான் என்று நான் நினைக்கிறேன்" என்று கூறிய திப்கே, "இளைஞர்கள் தற்போதைய அரசியல் அமைப்பால் சலிப்படைந்துள்ளனர், மேலும் பல இளைஞர் அமைப்புகள் முன்னோக்கி வரும்"என்றும் தெரிவித்தார்.

இருப்பினும், மற்றவர்கள் அதிக சந்தேகம் கொண்டுள்ளனர். இந்தத் தொடக்கம் எவ்வளவு வேகமாக உருவானதோ அவ்வளவு வேகமாகவே மறைந்துவிடக்கூடும் என்றும் கூறுகின்றனர்.

எப்படியிருந்தாலும், சிஜேபி ஏற்கனவே இந்திய அரசியலில் ஓர் அசாதாரணமான விஷயத்தைச் செய்துள்ளது.

இது சில இளைஞர்களைத் தங்களது குரல் கவனிக்கப்படுவதாக தற்காலிகமாக உணரச் செய்துள்ளது.

முந்தைய காலங்களில், இளைஞர்களின் அரசியல் கோபம் கொள்கை அறிக்கைகளை உருவாக்கியது.

2026 இல், அது சில நேரங்களில் பூச்சிகளைச் சின்னங்களாகக் கொண்ட மீம் கட்சிகளை உருவாக்குகிறது.

கூடுதல் தகவல்கள்: அஷய் யெட்ஜே, பிபிசி மராத்தி

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு