நடப்பு சீசனில் சிஎஸ்கே ஜொலிக்க முடியாமல் போனது ஏன்? 5 முக்கிய விஷயங்கள்

    • எழுதியவர், பிரதீப் கிருஷ்ணா
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 2026 ஐபிஎல் கோப்பைக்கான போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் 89 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்து பிளே ஆஃப் வாய்ப்பை இழந்திருக்கிறது சிஎஸ்கே. தொடர்ந்து மூன்றாவது சீசனாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்திருக்கிறது அந்த அணி.

விளையாடிய 14 போட்டிகளில் ஆறில் மட்டுமே வெற்றி பெற்று 12 புள்ளிகள் மட்டுமே பெற்றது சிஎஸ்கே. குஜராத்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நிலையில், 89 ரன்களில் படுதோல்வி அடைந்தது அந்த அணி.

இந்த சீசன் தொடக்கமே சூப்பர் கிங்ஸுக்கு மோசமாகத்தான் இருந்தது. முதல் 3 போட்டிகளிலுமே தோற்று பின்தங்கியிருந்தது அந்த அணி. அதற்கடுத்த 8 போட்டிகளில் 6 வெற்றிகள் பெற்று நல்ல கம்பேக் கொடுத்திருந்தது. ஓரளவு நம்பிக்கை ஏற்பட்டிருந்த நிலையில், கடைசி 3 போட்டிகளிலுமே தோற்று பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டது சிஎஸ்கே.

சேப்பாக்கத்தில் விளையாடிய 7 போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்ற சூப்பர் கிங்ஸ், 'அவே' ஆட்டங்களில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றது. வெளியே ஆடிய ஆட்டங்களில் மும்பை மற்றும் டெல்லியில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்தது.

சூப்பர் கிங்ஸின் இந்த தடுமாற்றத்துக்கு பல்வேறு காரணங்கள் பரவலாக விவாதிக்கப்படுகின்றன. ஓரளவு பலமான அணியாகக் கருதப்பட்டிருந்தாலும் சூப்பர் கிங்ஸின் இந்த பின்னடைவுக்கு வழிவகுத்த 5 முக்கியக் காரணங்களை இங்கே அலசுவோம்.

1) காயத்தால் வீரர்கள் அவதி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் தொடர்ச்சியாக முன்னணி வீரர்களுக்கு ஏற்பட்ட காயங்களால் பாதிக்கப்பட்டது. சீசன் தொடங்குவதற்கு முன்பே அணியின் முக்கிய பௌலர் நாதன் எல்லிஸ் காயமடைந்து வெளியேறினார். முன்னாள் கேப்டன் மஹேந்திர சிங் தோனி காயமடைந்ததன் காரணமாக ஒரு போட்டியில் கூட பங்கேற்கவில்லை. டெவால் பிரெவிஸ் காயமடைந்திருந்ததால் முதல் 3 போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை.

இதைவிட சீசன் தொடங்கிய பிறகு ஏற்பட்ட சில காயங்கள் சிஎஸ்கே அணியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. நம்பர் 3 பொசிஷனில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வந்த ஆயுஷ் மாத்ரே, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் காயமடைந்தார். அதனால் அவர் தொடரிலிருந்தே வெளியேறினார். 33.50 என்ற சராசரியில் 177.87 என்ற ஸ்டிரைக் ரேட்டில் விளையாடியிருந்தார் மாத்ரே. சூப்பர் கிங்ஸ் வெற்றி பெறத் தொடங்கியதற்கு அவருடைய அதிரடி இன்னிங்ஸ் முக்கியக் காரணமாக இருந்தது. அவர் வெளியேறியது பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியது.

மாத்ரேவுக்குப் பதிலாக நம்பர் 3 இடத்தில் விளையாடிய உர்வில் பட்டேல் அதிவேக அரைசத சாதனையை சமன் செய்திருந்தாலும், இந்த சீசனில் அவருடைய சராசரி 18.43 தான். மற்ற 6 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து அவர் 64 ரன்களே எடுத்தார். இந்த இடத்தில் தான் மாத்ரேவின் சீரான நம்பத்தகுந்த அதிரடியைத் தவறவிட்டது சிஎஸ்கே.

சூப்பர் கிங்ஸ் அணியில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது ஜேமி ஓவர்டனுக்கு ஏற்பட்ட காயம். பேட்டிங், பௌலிங் இரண்டிலும் சிறந்த பங்களிப்பைக் கொடுத்த ஓவர்டன், களத்திலும் தன் தலைமைப் பண்பின் மூலம் தாக்கத்தை ஏற்படுத்தினார். அவருக்கு ஏற்பட்ட காயம் ஆல்ரவுண்டர் பொசிஷனில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியது. நன்கு பவுன்ஸ் அதிகமாக இருந்த ஒருசில ஆடுகளங்களில் ஓவர்டனால் தாக்கம் ஏற்படுத்தியிருக்க முடியும். ஓவர்டன் ஆடாத 4 போட்டிகளில் மூன்றில் தோல்வியடைந்தது சிஎஸ்கே.

இவர்கள் மட்டுமல்ல, வேகப் பந்துவீச்சாளர் கலீல் அஹமது, இளம் ஆல்ரவுண்டர் ராமகிருஷ்ணா கோஷ் போன்றவர்களும் காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேறினார்கள். இப்படித் தொடர்ச்சியாக ஏற்பட்ட காயங்கள், அதனால் அணியில் ஏற்பட்ட தொடர் மாற்றங்கள் அணியில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்தியது.

2) சீரற்ற பேட்டிங் செயல்பாடு

சீசன் தொடக்கத்திலிருந்தே சூப்பர் கிங்ஸின் பந்துவீச்சு தான் பிரச்னை என்று கருதப்பட்டது. ஆனால், பெரும்பாலான போட்டிகளில் அவர்களின் பேட்டிங் தான் பிரச்னையாக அமைந்தது. சீசனின் முதல் ஆட்டத்தில் 127 ரன்களுக்கு ஆல் அவுட். கடைசிப் போட்டியில் 140 ரன்களுக்கு ஆல் அவுட். டைட்டன்ஸுக்கு எதிராக பவர்பிளேவில் 23/3. சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் 10 ஓவர்களில் 111/3 என்றிருந்த அந்த அணி, கடைசி 10 ஓவர்களில் 84 ரன்களை எடுத்து வெற்றி பெறத் தவறியது. இப்படி பல போட்டிகளில் அவர்களுடைய பேட்டிங் பெரும் பிரச்னையாக அமைந்தது.

சூப்பர் கிங்ஸுக்காக எந்த பேட்டருமே சீரான செயல்பாட்டைக் கொடுக்கவில்லை. அந்த் அணிக்காக மொத்த சீசனிலும் 300 ரன்களுக்கு மேல் எடுத்தது இரண்டே வீரர்கள் தான்: சஞ்சு சாம்சன் - 477 ரன்கள், ருதுராஜ் கெய்க்வாட் - 337 ரன்கள். அதிலும் கெய்க்வாட் 123.44 என்ற ஸ்டிரைக் ரேட்டில் தான் விளையாடியுள்ளார். அதுவே பல கட்டங்களில் அந்த அணி பின்னடைவைச் சந்திக்கக் காரணமாக இருந்தது. ரசிகர்கள், விமர்சகர்கள் என பலராலும் விமர்சிக்கப்பட்டது. கேப்டனின் 'இன்டென்ட்' தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கப்பட்டது.

அந்த அணியின் மிடில் ஆர்டரில் கார்த்திக் ஷர்மா தவிர்த்து வேறு யாரும் சீரான செயல்பாட்டைக் கொடுக்கவில்லை. 270 ரன்கள் மட்டுமே எடுத்த துபே ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. 11 போட்டிகளில் ஆடிய டெவால் பிரெவிஸ் 18.88 என்ற சராசரியில் 151 ரன்கள் மட்டுமே எடுத்தார். பிரஷாந்த் வீர், சர்ஃபராஸ் கான், மேத்யூ ஷார்ட் போன்ற வீரர்கள் மாற்றி மாற்றி பயன்படுத்தினாலும், யாருமே எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், இந்த சீசனின் சிறந்த பேட்டரான சஞ்சு சாம்சன் கூட சீராக எல்லாப் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடவில்லை. 477 ரன்கள் எடுத்த அவர் இரண்டு சதங்கள் அடித்தார். ஆனால், 7 போட்டிகளில் அவர் 11 ரன்களுக்கும் குறைவாகவே எடுத்தார். அதைவிட முக்கியமான ஒன்று, 14 போட்டிகளில், நான்கில் மட்டுமே அவர் பவர்பிளேவைத் தாண்டி விளையாடினார். இப்படி அணியின் சிறந்த பேட்டர் முதல் அனைவருமே சீரற்ற ஆட்டத்தைத்தான் வெளிப்படுத்தினார்கள்.

ஒவ்வொரு அணியும் சிக்ஸர்களாகவும், 200+ ஸ்கோர்களாகவும் விளாசிக் கொண்டிருக்கும் இந்த சீசனில், சிஎஸ்கே அணியின் இத்தகைய சீரற்ற செயல்பாடுகளால் அப்படியான பெரிய ஸ்கோர்களைப் பதிவு செய்யவும், சேஸ் செய்யவும் முடியவில்லை.

3) பந்துவீச்சு கட்டமைப்பு

இது ஏலத்தின் போதே ஏற்பட்ட பிரச்னை. மற்ற அணிகளில் இருப்பதுபோன்ற உலகத்தர வேகப் பந்துவீச்சாளர்களை வாங்கத் தவறியது சிஎஸ்கே. கடந்த மெகா ஏலத்தின்போதே அவர்களின் பெரும்பாலான முதலீடு ஸ்பின்னர்களுக்குச் சென்றுவிட்டது. அதனால், வேகப் பந்துவீச்சில் அவர்கள் அவ்வளவாக கவனம் செலுத்தவில்லை. எல்லிஸும் காயமடைந்துவிட, அது வேகப்பந்துவீச்சை வெகுவாகப் பலவீனப்படுத்துவிட்டது.

பெரும்பாலான அணிகளில் குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு உலகத்தர வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். ஆர்சிபி - புவனேஷ்வர் குமார், ஜாஷ் ஹேசில்வுட்; குஜராத் டைட்டன்ஸ் - ககிஸோ ரபாடா, மொஹம்மது சிராஜ், ஜேசன் ஹோல்டர்; சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - பேட் கம்மின்ஸ்; ராஜஸ்தான் ராயல்ஸ் - ஹோஃப்ரா ஆர்ச்சர்; டெல்லி கேபிட்டல்ஸ் - மிட்செல் ஸ்டார்க், லுங்கி எங்கிடி... இப்படி பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். ஆனால், சூப்பர் கிங்ஸில் அப்படி சொல்லும்படியான பெயர்களே இல்லை. இது அவர்களுக்குப் பெரும் பின்னடைவாக அமைந்தது.

மற்ற அணிகளின் இந்த பௌலர்களில் பவர்பிளேவில் எதிரணி பேட்டர்களை அச்சுறுத்தினார்கள். விக்கெட்டுகளை அள்ளினார்கள். அள்ளுகிறார்கள். சூப்பர் கிங்ஸால் அதைச் செய்ய முடிவதில்லை. டைட்டன்ஸுக்கு எதிரான நேற்றைய போட்டி, எல்எஸ்ஜி அணிக்கெதிரான போட்டிகள் அனைத்திலும் அதுவே நடந்தது. அன்ஷுல் கம்போஜ் 21 விக்கெட்டுகள் வீழ்த்தினாலும், அவர் புதிய பந்தில் பந்துவீசவில்லை. அவருடைய பெரும்பாலான விக்கெட்டுகளும் ஆட்டத்தின் பிற்பகுதிகளில் வந்தவையே.

அதேபோல் சுழற்பந்துவீச்சும் முன்பைப்போல் அச்சுறுத்துவதாக இல்லை. கடந்த சீசனில் 24 விக்கெட்டுகள் வீழ்த்திய நூர் அஹமது இம்முறை 13 விக்கெட்டுகளே வீழ்த்தினார். அவர் இரண்டு ஸ்பின்னர்களுள் ஒருவராக இருக்கும்போது நெருக்கடி இல்லாமல் சிறப்பாகச் செயல்படுகிறார். அதுவே, தனியாகச் செயல்படும்போது அவரால் பெரிய தாக்கம் ஏற்படுத்த முடிவதில்லை. சிஎஸ்கே இந்த சீசனில் 8 போட்டிகளில் தான் அகீல் ஹொசைனைக் களமிறக்கியது, பிரஷாந்த் வீர் சொற்ப ஓவர்களே பந்துவீசினார். அதனால், நூர் அஹமதுவின் தாக்கமும் குறைந்துவிட்டது.

இரண்டு வெளிநாட்டு ஸ்பின்னர்களைக் களமிறக்கும் வகையில் அணியைக் கட்டமைத்ததே பிரச்னை தான் என்று தனது யூடியூப் சேனலில் பேசிய வீடியோ ஒன்றில் குறிப்பிட்டார் சிஎஸ்கே மற்றும் இந்திய அணிகளின் முன்னணி வீரராக திகழ்ந்தவரான ரவிச்சந்திரன் அஷ்வின். அணித் தேர்வில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களுக்கு இதுவும் ஒரு காரணம்.

4) மோசமான ஃபீல்டிங்

இந்த ஐபிஎல் சீசனில் ஃபீல்டிங்கின் தரம் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது. அதிக கேட்ச்களைத் தவறவிட்ட அணிகளின் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

23 கேட்ச்களை அந்த அணி த் தவறவிட்டிருக்கிறது. 12 சிஎஸ்கே வீரர்கள் குறைந்தபட்சம் ஒரு கேட்சையாவது தவறவிட்டிருக்கிறார்கள். சஞ்சு சாம்சன், ஷிவம் துபே இருவரும் அதிகபட்சமாக தலா 3 கேட்ச்களைத் தவறவிட்டிருக்கிறார்கள்.

அனைத்து அணிகளுக்குமே இது பிரச்னை என்றாலும், முன்பு கூறியதுபோல் உலகத்தர பந்துவீச்சு இல்லாத ஒரு அணி, அவர்களின் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்வது அவசியம். அப்படி இல்லாதபட்சத்தில் அது அவர்களுக்குப் பின்னைடைவை ஏற்படுத்திவிடும். உதாரணமாக, சன்ரைசர்ஸுக்கு எதிராக சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் கிளாசன் 18 ரன்கள் எடுத்திருந்த போது கொடுத்த கேட்ச் வாய்ப்பைத் தவறவிட்டார் ஸ்பென்சர் ஜான்சன். இதனால் தப்பிப் பிழைத்த கிளாசன், போட்டியின் முடிவையே மாற்றிவிட்டார். அந்த கேட்ச் 2 புள்ளிகளைப் பெற்றுக் கொடுத்திருக்கலாம். ஆனால், அது கையை விட்டுப் போனது.

அதுமட்டுமல்லாமல், ஃபீல்டிங்கில் தொடர்ந்து ஏற்படும் சொதப்பல்கள் அணியின் ஒட்டுமொத்த சூழ்நிலையையும் கூட பாதிக்கும். பஞ்சாப் கிங்ஸ் அதற்கு ஒரு மிகப் பெரிய உதாரணம். தொடர்ந்து கேட்ச்களைத் தவறவிட்டுக் கொண்டிருந்தவர்கள், அது ஒரு பிரச்னையாக வெடிக்கத் தொடங்க, சில மாற்றங்கள் செய்யத் தொடங்க, தற்போது தொடர்ச்சியாக 6 போட்டிகளில் தோற்றிருக்கிறார்கள்.

சூப்பர் கிங்ஸ் அணியிலும் அப்படியான சிக்கல் ஏற்பட்டது. துபே தொடர்ச்சியாக கேட்ச்களைத் தவறவிட, ஒருகட்டத்தில் அவரை சப்ஸ்டிட்யூட்பட்டியலுக்கு மாற்றியது சிஎஸ்கே. சப்ஸ்டிட்யூட் பட்டியலில் இருந்த அவர், ஒரு போட்டியில் எந்த வகையிலும் பங்கேற்கவே இல்லை. உலகக் கோப்பை வென்ற ஒரு வீரர் இப்படியான தருணங்களை எதிர்கொள்ளும் போது அது மேலும் அவர்களின் நம்பிக்கையை பாதிக்கும். அது துபேவின் பேட்டிங்கிலும் பிரதிபலித்தது. அணியின் ஒட்டுமொத்த செயல்பாட்டிலும் பிரதிபலித்தது.

5) பெரிய அணிகளுக்கு எதிராக தடுமாற்றம்

ஒரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறவேண்டும் என்றால் அவர்கள் அனைத்து அணிகளுக்கு எதிராகவும் உறுதியான செயல்பாட்டைக் கொடுக்கவேண்டும். பலமான அணிகளுக்கு எதிராகவும் நல்ல செயல்பாட்டைக் கொடுக்கவேண்டும். சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த சீசனில் அதைச் செய்யத் தவறியிருக்கிறது.

சூப்பர் கிங்ஸ் இந்த சீசனில் பெற்றிருக்கும் 6 வெற்றிகளுமே புள்ளிப்பட்டியலில் கடைசி 5 இடங்களில் இருக்கும் அணிகளுக்கு எதிராக வந்தவை. 10வது இடத்தில் இருக்கும் எல்எஸ்ஜி-க்கு எதிராக ஒரு வெற்றி, 8வது மற்றும் 9வது இடங்களில் இருக்கும் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு எதிராக தலா 2 வெற்றிகள். 5வது இடத்தில் இருக்கும் கேகேஆர் சீசன் தொடக்கத்தில் தொடர்ந்து தோற்றுக் கொண்டிருந்த போது அவர்களுக்கு எதிராக 1 வெற்றி. சிஎஸ்கே பெற்ற 8 தோல்விகளில் 7, டாப் 5 இடங்களில் இருக்கும் அணிகளுக்கு எதிராக வந்தவை.

டாப் 5 இடங்களில் இருக்கும் அணிகளுக்கு எதிரான தோல்விகளிலும் பெரும்பாலானவை பெரும் தோல்விகள். ஆர்சிபி-க்கு எதிராக 43 ரன்களில் தோல்வி, டைட்டன்ஸுக்கு எதிராக 89 ரன்களிலும், 8 விக்கெட்டுகளிலும் தோல்வி, ராயல்ஸுக்கு எதிராக 8 விக்கெட்டுகளில் தோல்வி... சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டிகளைத் தவிர, சிஎஸ்கே பெற்ற அனைத்து தோல்விகளுமே பெரிய தோல்விகள் தான்.

அந்தப் போட்டிகளில் சிஎஸ்கே தங்களின் போராட்ட குணத்தை வெளிப்படுத்தவில்லை என்று ரசிகர்கள், வல்லுநர்கள் என பலரும் பல்வேறு கட்டங்களில் விமர்சனம் செய்தார்கள். இந்தப் போட்டிகளில் இரண்டில் சூப்பர் கிங்ஸ் போராடி வெற்றியை நுகர்ந்திருந்தாலும், அவர்களின் சீசன் வேறு மாதிரி முடிந்திருக்கும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு