You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சிஎஸ்கே பிளேஆஃப் வாய்ப்பை வலுப்படுத்திய முடிவுகள்: சன்ரைசர்ஸை இன்று வீழ்த்துமா?
- எழுதியவர், பிரதீப் கிருஷ்ணா
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
ஐபிஎல் 2026 சீசன் மிகவும் பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. எந்த அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற கேள்விக்கு இன்னும் முழுமையான பதில்கள் கிடைக்கவில்லை. நேற்று (மே 17) பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி இந்த சீசனில் முதல் அணியாக பிளே ஆஃப் இடத்தை உறுதி செய்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. இன்னும் 3 இடங்களுக்கு இன்னும் 7 அணிகள் போட்டியிட்டுக் கொண்டிருக்கின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரை இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 12 புள்ளிகள் பெற்றிருக்கிறது. தற்போதைய நிலவரப்படி புள்ளிப் பட்டியலில் 5வது இடத்தில் இருக்கிறது அந்த அணி. சூப்பர் கிங்ஸ் அதிகபட்சமாக 16 புள்ளிகள் எடுக்க முடியும் என்பதாலும், மேலும் சில அணிகளும் 16 புள்ளிகள் எடுக்க முடியும் என்பதாலும், வேறு சில போட்டிகளின் முடிவுகளும் சூப்பர் கிங்ஸுக்கு சாதகமாக இருக்கவேண்டியதாக இருந்தது.
நேற்று நடந்த இரண்டு போட்டிகளிலுமே சூப்பர் கிங்ஸுக்கு சாதகமான முடிவுகளே கிடைத்திருப்பதால் அந்த அணியின் பிளேஆஃப் வாய்ப்பு அதிகரித்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸிடம் தோற்ற பஞ்சாப் கிங்ஸ் அணியால் இனி அதிகபட்சம் 15 புள்ளிகள் தான் எடுக்க முடியும். அதனால், சூப்பர் கிங்ஸ் இரு வெற்றிகள் பெற்றுவிட்டால் பஞ்சாப் மூலம் பிரச்னை வராது.
அதேபோல், நேற்றிரவு டெல்லியில் நடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை டெல்லி கேபிட்டல்ஸ் வீழ்த்தியதும் ஒரு வகையில் சூப்பர் கிங்ஸுக்கு உதவியிருக்கிறது. தற்போது 12 போட்டிகளில் 12 புள்ளிகள் பெற்றிருக்கும் ராயல்ஸாலும் அதிகபட்சம் 16 புள்ளிகள் தான் எடுக்க முடியும். ஏற்கெனவே அந்த அணி ரன்ரேட்டில் சிஎஸ்கே-வை விட பின்தங்கிவிட்டது.
இப்படியாக சூப்பர் கிங்ஸுக்கு போட்டியாகக் கருதப்படும் 2 அணிகள் நேற்று புள்ளிகளை இழந்திருக்கின்றன. மற்ற போட்டிகளின் முடிவுகள் சூப்பர் கிங்ஸுக்கு சாதகமாக வந்திருக்கும் இந்த நிலையில், அந்த அணியின் போட்டியும் அவர்களுக்குச் சாதகமாக மாறுமா என்பதுதான் தற்போதைய கேள்வி.
இன்று (மே 18) சேப்பாக்கத்தில் நடக்கும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது சிஎஸ்கே. இந்தப் போட்டியில் வென்றால், சிஎஸ்கே-வால் முதல் முறையாக இந்த சீசனில் டாப் 4 இடங்களுக்கு முன்னேற முடியும். அது அவர்களின் பிளே ஆஃப் வாய்ப்பை மேலும் வலுப்படுத்தும். இந்தப் போட்டியில் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய விஷயங்கள் என்ன? சிஎஸ்கே முன் இருக்கும் கேள்விகள் என்ன?
சூப்பர் கிங்ஸ் டாப் ஆர்டர் vs பவுன்சர்கள்
சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் நன்கு செயல்படத் தொடங்கியிருக்கிறது. ஆரம்ப கட்டத்தில் சஞ்சு சாம்சன் மட்டுமே பெரிய பங்களிப்புகள் கொடுத்துக்கொண்டிருந்த நிலையில், மெல்ல ருதுராஜ் கெய்க்வாட், உர்வில் பட்டேல், கார்த்திக் ஷர்மா ஆகியோரும் நல்ல செயல்பாட்டைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். கடந்த சில போட்டிகளாக டெத் ஓவர்களில் துபே முன்பைப் போல அதிரடி சிக்ஸர்கள் விளாசிக் கொண்டிருக்கிறார். இவை அந்த அணிக்கு நிச்சயம் நம்பிக்கை கொடுக்கும்.
அதேசமயம் டெவால் பிரெவிஸின் ஃபார்ம் பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. அவர் இந்த சீசனில் இதுவரை ஆடியிருக்கும் 9 போட்டிகளிலும் சேர்த்து 99 ரன்கள் தான் எடுத்திருக்கிறார். அவரால் முன்பைப் போல அதிரடியாகவும் விளையாட முடியாதது மிடில் ஓவர்களில் சூப்பர் கிங்ஸுக்கு சிக்கலாக அமைந்திருக்கிறது. முக்கியமான இந்தக் கட்டத்தில் பிரெவிஸ் ஃபார்முக்குத் திரும்புவது சிஎஸ்கே அணிக்கு மிகவும் முக்கியமானது.
ஆனால், பிரெவிஸ் ஃபார்ம் மட்டுமே சூப்பர் கிங்ஸ் பேட்டர்களுக்குப் பிரச்னை இல்லை. அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்டர்கள் பெரும்பாலும் பவுன்சர்களுக்குத் தடுமாறுகிறார்கள். குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் ககிஸோ ரபாடா, லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கெதிரான முந்தைய போட்டியில் ஆகாஷ் சிங் போன்றவர்கள் அப்படித்தான் பவர்பிளேவிலேயே சிஎஸ்கே-வுக்கு பெரும் பிரச்னையை ஏற்படுத்தினார்கள்.
சிஎஸ்கே பேட்டர்களின் இந்த பலவீனத்தை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பந்துவீச்சாளர்களும் பயன்படுத்திக் கொள்ளக்கூடும். குறிப்பாக பவர்பிளேவில் பந்துவீசும் பிரஃபுல் ஹிங்கே, பேட் கம்மின்ஸ் இருவருமே ஷாட்ல் லென்த்தில் சிறப்பாகப் பந்துவீசக்கூடியவர்கள். மார்பளவு உயரத்துக்கு வரும் வகையில் அவர்கள் தொடர்ச்சியாகப் பந்துவீசக்கூடும். குறிப்பாக கம்மின்ஸ், அதுபோன்ற பந்துகளை டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக வீசிப் பழகியவர். அதனால், பவர்பிளேவில் சூப்பர் கிங்ஸ் பேட்டர்கள் இந்த சவாலுக்குத் தயாராக இருக்க வேண்டும்.
கம்மின்ஸ் அல்லது ரபாடா போன்ற வேகம் ஹிங்கேவிடம் கிடையாது என்பதால், ஒருவேளை அதை சாம்சன் போன்ற பேட்டர் சாதகமாகவும் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. எப்படியிருந்தாலும், இந்த யுத்தம் இந்தப் போட்டியின் முடிவில் நிச்சயம் முக்கியத் தாக்கத்தை ஏற்படுத்தும்.
பவர்பிளேவில் விக்கெட் வீழ்த்துமா சிஎஸ்கே?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரை வீரர்கள் தொடர்ந்து காயமடைந்துவருவது அவர்களின் பிளேயிங் லெவனில் தொடர்ச்சியாக மாற்றங்கள் செய்யவேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்துகிறது. ஜேமி ஓவர்டன் காயமடைந்ததால் கடந்த போட்டியில் இரு மாற்றங்கள் செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது சிஎஸ்கே. பேட்டிங் டெப்த் வேண்டும் என்பதற்காக அகீல் ஹொசைன் நீக்கப்பட்டு பிரஷாந்த் வீர் சேர்க்கப்பட்டார்.
பவர்பிளேவில் சிறப்பாகப் பந்துவீசும் அகீல் ஹொசைன் இல்லாதது லக்னௌவுக்கு எதிரான முந்தைய போட்டியில் சூப்பர் கிங்ஸுக்கு பாதகமாக அமைந்தது. அதனால், இந்தப் போட்டியில் அகீல் சேர்க்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அதேசமயம், சன்ரைசர்ஸ் அணியின் டாப் 3 பேட்டர்கள் அனைவருமே இடது கை பேட்டர்கள் என்பதால், இடது கை ஸ்பின்னரான அகீலை சிஎஸ்கே நிர்வாகம் சேர்க்குமா என்ற சந்தேகமும் எழுகிறது.
சன்ரைசர்ஸ் அணிக்கெதிராக ஹைதராபாத்தில் நடந்த போட்டியில், அந்த அணியின் டாப் ஆர்டரை சமாளிக்க ஆஃப் ஸ்பின் வீசக்கூடிய ஆல்ரவுண்டர் மேத்யூ ஷார்ட்டை களமிறக்கியது சிஎஸ்கே. இந்தப் போட்டியில் அது நடக்காது என்றாலும், அகீல் ஹொசைனை சேர்ப்பார்களா என்ற கேள்வி எழவே செய்கிறது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைப் பொறுத்தவரை அவர்களின் டாப் ஆர்டர் கொடுக்கும் தொடக்கம் அவர்களுக்கு மிகவும் முக்கியமானது. அவர்களுக்கு நல்ல தொடக்கம் கிடைத்துவிட்டால் எதிரணி பௌலர்களை ஆரம்பத்திலேயே பின்தங்க வைத்து விடுவார்கள்.
அதுமட்டுமல்லாமல், இந்தப் போட்டி விளையாடப்படும் ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமானதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. போட்டிக்கு முன் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்சியாளர் வருண் ஆரோன், ' 210 என்பது வெற்றி பெறுவதற்கான ஸ்கோராக இருக்கும்' என்று குறிப்பிட்டார். அதனால், பவர்பிளேவில் விரைவாக விக்கெட் வீழ்த்தாத பட்சத்தில், அதிரடி வீரர்கள் நிறைந்த சன்ரைசர்ஸ் அணி பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவிடும். அதனால், பவர்பிளேவில் அவர்களைக் கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம்.
ஏனெனில், எல்எஸ்ஜி அணிக்கெதிரான 2 போட்டிகளிலும் சேர்த்து பவர்பிளேவில் ஒரேயொரு விக்கெட்டைத்தான் வீழ்த்தியது சிஎஸ்கே. முகேஷ் சவுத்ரி, அன்ஷுல் கம்போஜ் ஆகியோரால் பவர்பிளேவில் பெரிதாகத் தாக்கம் ஏற்படுத்த முடியவில்லை. ஸ்பென்சர் ஜான்சனும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு அந்தப் போட்டியில் தான் களமிறங்கினார். அதனால், இதைக் கருத்தில் கொண்டு சூப்பர் கிங்ஸ் அணித் தேர்வில் மாற்றம் கொண்டுவருமா என்று பார்க்கவேண்டும்.
எம்.எஸ்.தோனி விளையாடுவாரா?
இந்தப் போட்டிக்கான சிஎஸ்கே அணித் தேர்வு பற்றி இருக்கும் மிகப் பெரிய கேள்வி - மஹேந்திர சிங் தோனி இந்தப் போட்டியில் விளையாடுவாரா என்பதுதான்.
இந்த சீசனில் தோனி இன்னும் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. சீசன் தொடங்குவதற்கு முன் காயமடைந்திருந்த அவர், சேப்பாக்கத்தில் பயிற்சியில் ஈடுபடுகிறார். ஆனால், அவர் இன்னும் போட்டிகளில் களமிறங்கவில்லை. இந்த சீசன் சேப்பாக்கத்தில் நடக்கும் கடைசிப் போட்டி இது என்பதால், இந்தப் போட்டியிலாவது தோனி களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன், 'என் கடைசிப் போட்டி சேப்பாக்கத்தில் தான்' என்று தோனி சொல்லியிருந்ததால், அதைக் குறிப்பிட்டு தோனியின் வருகைக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
தோனி வழக்கம்போல் இந்தப் போட்டிக்கு முன்பாகவும் சேப்பாக்கத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். ஆனால், சூப்பர் கிங்ஸ் அணித் தரப்பில் இருந்து இதுபற்றி எந்த தகவலும் சொல்லப்படவில்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு