"அவரால் பேசக் கூட முடியாது" - புதுக்கோட்டையில் மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை

பட மூலாதாரம், Getty Images
(எச்சரிக்கை: இக்கட்டுரையின் சில பகுதிகள் சங்கடத்தை ஏற்படுத்தலாம்)
"என் சகோதரி வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத் திறனாளி. பட்டப்பகலில் அவருக்கு இப்படியொரு கொடூரம் நடந்துள்ளது" எனக் கூறியபடியே அழுதார், பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரி.
ஞாயிற்றுக்கிழமையன்று (மே 17) புதுக்கோட்டையில் தனது சகோதரி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தொடர்பாக பிபிசி தமிழிடம் இவ்வாறு அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குற்றம் சுமத்தப்பட்ட மற்றொரு நபரைக் கைது செய்யாமல் காவல்துறை தாமதம் செய்வதாகக் கூறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கைதான நபர் மீது ஐந்து பிரிவுகளில் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டுவிட்டதாக புதுக்கோட்டை நகர டி.எஸ்.பி பிருந்தா பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயதான இளம்பெண் ஒருவர், தனது வீட்டில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
"வீட்டின் அருகே பஸ் ஏறினால் அரிசி ஆலைக்கு அருகிலேயே இறங்கிவிடுவார். வேலை முடித்து வீட்டுக்கு வரும்போது பேருந்தை தவறவிட்டால் அரிசி ஆலை உரிமையாளர் என் அம்மாவுக்கு போன் செய்து தகவல் தெரிவித்துவிடுவார்" என்கிறார், பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரி.
கடந்த ஆறு வருடங்களாக அரிசி ஆலையில் பாதிக்கப்பட்ட பெண் வேலை பார்த்து வந்துள்ளார்.
"எங்களுடன் பிறந்தவர்களில், மூத்தவராக அக்கா இருந்தாலும் பிறவியிலேயே வாய் பேச முடியாது, காது கேட்காது என்பதால் திருமணமே வேண்டாம் என மறுத்துவிட்டார்" என்கிறார் அவரின் சகோதரி.
"அரிசி ஆலையில் சாம்பல் அள்ளுதல் உள்பட எந்த வேலையைக் கொடுத்தாலும் அவர் செய்வார். எங்களைப் படிக்க வைத்து திருமணம் செய்து கொடுத்ததில் அக்காவுக்கு பெரும் பங்கு உண்டு. நாங்கள் நல்ல நிலைமையில் இருப்பதற்கு அவரும் ஒரு காரணம்" எனக் கூறினார்.
'அவரால் பேசி வெளிப்படுத்த முடியவில்லை'

பட மூலாதாரம், Handout
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடந்த சம்பவம் குறித்து அவர் கூறும்போது, "அன்று மழை, இடி, மின்னல் என சூழல் இருந்தது. காலையில் வேலைக்குச் சென்ற அக்கா இரவு ஏழு மணி கடந்தும் வீட்டுக்கு வரவில்லை. அரிசி ஆலை உரிமையாளரிடம் கேட்டபோது, 5 மணிக்கே சென்றுவிட்டதாகக் கூறினார்" என்கிறார்.
இதன்பிறகு பாதிக்கப்பட்ட பெண் வேலைக்குச் செல்லும் வழித்தடங்களில் அவரைக் குடும்ப உறுப்பினர்கள் தீவிரமாக தேடியுள்ளனர். "அக்காவை சிலர் பார்த்ததாக கூறினாலும் உறுதியான தகவல் கிடைக்கவில்லை. சுமார் 7.30 மணியளவில் அக்கா இருக்கும் இடம் குறித்த தகவல் கிடைத்தது" என்கிறார் அவரது சகோதரி.
வீட்டில் இருந்து சில கி.மீ தொலைவில் உள்ள கிராமத்தில் பாதிக்கப்பட்ட பெண் இருந்துள்ளார். இதைப் பற்றிப் பேசும் அவரது சகோதரி, "நாங்கள் மருத்துவமனைக்கு போனபோது அக்காவுக்கு முகத்தில் காயம் இருந்தது . அழுது கொண்டே இருந்தார். தனக்கு என்ன நேர்ந்தது என அவரால் பேசி வெளிப்படுத்த முடியவில்லை" எனக் கூறினார்.
அங்கிருந்த கிராமத்தினரும் பெண் காவலர் ஒருவரும் பாதிக்கப்பட்ட பெண்ணை ஆம்புலன்ஸில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இவரின் கூற்றுப்படி, "வேலை முடிந்து அரிசி ஆலை அருகே பேருந்துக்காக பாதிக்கப்பட்ட பெண் காத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது மாரிமுத்து, சேகர் ஆகியோர் காரில் அவரை வலுக்கட்டாயமாக ஏற்றிச் சென்றுள்ளனர்" என்கிறார்.
புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையிலும் இதே தகவல்கள் இடம்பெற்றுள்ளன. பேருந்து நிறுத்தத்தில் பெண் காத்துக் கொண்டிருந்தபோது வீட்டில் இறக்கிவிடுவதாகக் கூறி மாரிமுத்து, சேகர் ஆகியோர் ஏற்றிச் சென்றுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இதன்பிறகு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து காரில் இருந்து இறக்கிவிட்டுச் சென்றுள்ளதாகக் கூறியுள்ள மாவட்ட காவல்துறை, 'வழக்கில் தொடர்புடைய மாரிமுத்து என்பவர் 24 மணிநேரத்துக்குள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்' எனத் தெரிவித்துள்ளது.
ஐந்து பிரிவுகளில் வழக்கு

பட மூலாதாரம், Handout
மருத்துவமனையில் தனக்கு நேர்ந்த கொடுமைகளை பாதிக்கப்பட்ட பெண் வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த விவகாரத்தில் பெண்ணின் தாயார் அளித்த புகாரின் பேரில் இரண்டு பேர் மீது ஐந்து பிரிவுகளில் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது .
மற்றொரு நபரைக் கைது செய்வதற்கு காவல் துணைக் கண்காணிப்பாளர் பிருந்தா தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வருவதாகவும் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
"மருத்துவமனையில் என் அக்காவை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். மறுநாள் (திங்கள்கிழமை) காலை வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். வீட்டுக்கு வந்த பிறகு திடீர் வலிப்பு வந்து பாதிக்கப்பட்டார். இதன்பிறகு மீண்டும் மருத்துவமனையில் சேர்த்தோம்" என்கிறார் அவரது சகோதரி.
தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகக் கூறிய அவர், "கைதான இருவரும் எங்களுக்கு அறிமுகமான நபர்கள் இல்லை. தெரிந்த நபர் என்பதால் அக்கா சென்றதாக சிலர் கூறுகின்றனர். அது தவறானது. என் அக்காவை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிச் சென்றுள்ளனர்" எனக் கூறுகிறார்.
"பட்டப்பகலில் இப்படியொரு கொடூர சம்பவம் நடக்கும் என எதிர்பார்க்கவில்லை. என் அக்காவுக்கு மட்டுமல்ல இனி வேறு யாருக்கும் இதுபோன்று நடக்கக் கூடாது" எனவும் அவர் வேதனைப்பட்டார்.
காவல்நிலையம் முற்றுகை

பட மூலாதாரம், Handout
இந்தநிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கோரியும் மற்றொரு நபரைக் கைது செய்ய வலியுறுத்தியும் அங்குள்ள காவல்நிலையத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்பட பல்வேறு கட்சிப் பிரமுகர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாலியல் வன்கொடுமை தொடர்பாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பாதிக்கப்பட்ட பெண் பரிதாபகரமான நிலையில் சாலையில் அழுது கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த பெண் காவலரின் உதவியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்' எனக் கூறியுள்ளார்.
'இக்கொடூர குற்றச் செயலில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க விடாமல் தண்டிக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் போராடி வருகின்றனர்' என மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
மேலும், 'பாதிக்கப்பட்ட பெண்ணின் எதிர்கால பாதுகாப்புக்காக தமிழ்நாடு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் அவருக்கு உயரிய மருத்துவ சிகிச்சை அளித்து உதவ வேண்டும்' எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
பா.ம.க தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், "இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை நகர டி.எஸ்.பி பிருந்தாவிடம் பிபிசி தமிழ் பேசியது. "வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபர் கைது செய்யப்பட்டுவிட்டார். இவர்கள் மீது வேறு எந்தக் குற்ற வழக்குகளும் நிலுவையில் இல்லை" என்று மட்டும் அவர் பதில் அளித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

























