"நாய்களின் பயமின்றி வாழ்வது உரிமை" - உச்சநீதிமன்றத்தின் கருத்து உணர்த்துவது என்ன?

பட மூலாதாரம், Sunil Ghosh/Hindustan Times via Getty Images
தெருநாய்கள் தொடர்பான தனது முந்தைய உத்தரவை திரும்பப் பெற உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. செவ்வாய்க்கிழமை அன்று இது தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பிடிஐ மற்றும் லைவ் லா செய்தி நிறுவனங்களின் தகவல்படி, நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு, தனது முந்தைய உத்தரவுகளில் மாற்றங்களைக் கோரிய மனுக்களை நிராகரித்தது.
கடந்த ஆண்டு (2025) நவம்பரில் பிறப்பித்த உத்தரவில், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், பள்ளிகள், ரயில் நிலையங்கள் போன்ற பொது இடங்களில் பிடிக்கப்படும் தெருநாய்களை, தடுப்பூசி அல்லது கருத்தடை செய்த பிறகு அதே இடத்தில் மீண்டும் விடக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. எளிமையாகச் சொன்னால், பொது இடங்களில் பிடிக்கப்படும் தெருநாய்களை இனி காப்பகங்களில் மட்டுமே வைத்திருக்க வேண்டும்.
மேலும், இந்திய விலங்குகள் நல வாரியம் வெளியிட்ட தரப்படுத்தப்பட்ட செயல்பாட்டு நடைமுறையை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
செவ்வாய்க்கிழமை தனது தீர்ப்பில், குழந்தைகள் மீது நாய்கள் தாக்குதல் நடத்தியது தொடர்பான 'மிகவும் கவலையளிக்கக்கூடிய' சம்பவங்களை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. "சிறு குழந்தைகள் கடித்துக் குதறப்பட்டனர், முதியவர்கள் மீது தாக்குதல்கள் நடந்தன, ஏன் வெளிநாட்டுப் பயணிகள் கூட நாய்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்" என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
மக்களின் உயிரை நாய்களின் தாக்குதலிலிருந்து பாதுகாக்கத் தவறியதற்காக மாநில அரசுகளையும், நிர்வாக அதிகாரிகளையும் நீதிமன்றம் பொறுப்பாக்கியது.
பல ஊடக அறிக்கைகளை மேற்கோள் காட்டி நீதிமன்றம் கூறுகையில், "நாய்க்கடி அச்சுறுத்தல் இப்போது விமான நிலையங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் உள்ளிட்ட முக்கியமான பொது இடங்களுக்கும் பரவிவிட்டது" என்று தெரிவித்தது. இந்தப் பிரச்சினை "மிகவும் விரிவான" வடிவம் எடுத்துள்ளதாகவும், "இத்தகைய சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடப்பது" உத்தரவுகளைச் செயல்படுத்துவதில் உள்ள குறைபாட்டைப் பிரதிபலிப்பதாகவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
இந்த உத்தரவுகளைச் செயல்படுத்துவதில் தவறும் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
தீர்ப்பை வழங்கும்போது, "கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமையில், நாய் தாக்குதல்களுக்குப் பயப்படாமல் ஒருவர் சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமையும் அடங்கும். அரசு மௌன சாட்சியாக இருக்க முடியாது. குழந்தைகள், வெளிநாட்டுப் பயணிகள் மற்றும் முதியவர்கள் நாய்க்கடி சம்பவங்களுக்குப் பலியான அந்தத் துயரமான தரைமட்ட யதார்த்தங்களை நீதிமன்றத்தாலும் புறக்கணிக்க முடியாது. குழந்தைகள் மற்றும் முதியவர்களின் வாழ்க்கை வெறும் உடல் வலிமையையோ அல்லது விதியையோ மட்டுமே சார்ந்திருக்கும் ஒரு சமூகத்தை அரசியலமைப்பு சட்டம் கற்பனை செய்யவில்லை."
நவம்பர் 2025-ன் உத்தரவு

பட மூலாதாரம், Nasir Kachroo/NurPhoto via Getty Images
இதற்கு முன்னதாக, நவம்பர் 2025-ல் உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில், அனைத்து மாநில அரசுகளும் தெருநாய்கள் மற்றும் கால்நடைகளை நெடுஞ்சாலைகள், சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளிலிருந்து அகற்ற வேண்டும் என்று கூறியிருந்தது.
நீதிமன்றம் தனது உத்தரவில், "இதை முறையாகப் பின்பற்ற வேண்டியது அவசியம்; இல்லையெனில் இதற்குக் காரணமான அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் பொறுப்பாக்கப்படுவார்கள்" என்று தெரிவித்திருந்தது.
மேலும், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், பொது விளையாட்டு வளாகங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் நிறுவனங்களைக் கண்டறிந்து, தெருநாய்கள் உள்ளே நுழையாதவாறு அவற்றைச் சுற்றிப் பாதுகாப்பு வேலிகளை அமைக்க வேண்டும் என்றும் அனைத்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
இதுபோன்ற வளாகங்களில் இருக்கும் தெருநாய்களை அகற்றி, அவற்றிற்கு கருத்தடை செய்ய வேண்டும் என்றும், அதன் பிறகு அவற்றை நாய் காப்பகங்களில் சேர்க்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவு குறித்துச் சில வழக்கறிஞர்கள் கவலை தெரிவித்ததோடு, நீதிமன்றத்தில் இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி முறையிட்டனர். இருப்பினும், நீதிபதிகள் அமர்வு அந்த முறையீட்டை நிராகரித்துவிட்டது.
அப்போது உச்ச நீதிமன்றம் என்ன கூறியிருந்தது?

பட மூலாதாரம், Getty Images
அப்போது நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு, தாமாக முன்வந்து இந்த வழக்கில் தீர்ப்பை வழங்கியிருந்தது.
'லைவ் லா' செய்தி நிறுவனத்தின் தகவல்படி, ஒவ்வொரு கல்வி நிறுவனம், மருத்துவமனை, விளையாட்டு வளாகம், பேருந்து நிலையம், பணிமனைகள் மற்றும் ரயில் நிலையங்களைச் சுற்றி முறையான பாதுகாப்பு வேலி அமைப்பது அவசியம் என்றும், இதன் மூலம் தெருநாய்கள் உள்ளே நுழைவதைத் தடுக்க முடியும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.
அத்தகைய இடங்களிலிருந்து தெருநாய்களை அகற்றுவதும், தடுப்பூசி மற்றும் கருத்தடை செய்த பிறகு, விலங்குகள் பிறப்பு கட்டுப்பாட்டு விதிகளின்படி நாய்களுக்காக ஒதுக்கப்பட்ட காப்பகங்களில் அவற்றை வைப்பதும் உள்ளூர் நிர்வாகத்தின் பொறுப்பு என்று அந்த அமர்வு குறிப்பிட்டது.
'லைவ் லா' தகவல்படி, அந்த இடங்களிலிருந்து அகற்றப்படும் நாய்களை மீண்டும் அதே இடத்தில் விடக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவாகக் கூறியிருந்தது.
அவ்வாறு மீண்டும் அதே இடத்தில் விடுவது, அந்த இடங்களைத் தெருநாய்கள் இல்லாத பகுதிகளாக மாற்றும் நோக்கத்தை நிறைவேற்றாது என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.
மேலும், நாய்கள் மீண்டும் அங்கு வந்து வசிக்காதவாறு, குறிப்பிட்ட கால இடைவெளியில் அந்த இடங்களை ஆய்வு செய்யுமாறு உள்ளூர் அமைப்புகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் திரியும் கால்நடைகளை அகற்றுவதற்கான வழிகாட்டுதல்களையும் நீதிமன்றம் வழங்கியிருந்தது.
இதற்கு முன்பு உச்ச நீதிமன்றம் என்ன கூறியிருந்தது?

பட மூலாதாரம், Getty Images
உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவைத் தொடர்ந்து டெல்லியில் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
2025-ஆம் ஆண்டு ஜூலை மாதம், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஒரு செய்தி அறிக்கையைத் தொடர்ந்து தாமாக முன்வந்து தெருநாய்கள் விவகாரத்தைக் கையில் எடுத்தது.
இரண்டு நீதிபதிகள் கொண்ட இந்த அமர்வு, கடந்த ஆண்டு (2025) ஆகஸ்ட் 11-ஆம் தேதி விசாரணை நடத்தியபோது, டெல்லி-என்.சி.ஆர் பகுதியில் உள்ள அனைத்துத் தெருநாய்களையும் காப்பகங்களில் அடைக்க உத்தரவிட்டது.
நாய்க்கடி மற்றும் ரேபிஸ் பாதிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்திருந்ததுடன், இந்தப்பணியை எட்டு வாரங்களுக்குள் முடிக்குமாறு அதிகாரிகளுக்குக் காலக்கெடுவும் விதித்திருந்தது.
இருப்பினும், இந்த உத்தரவுக்கு விலங்கு நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சில நாய் வளர்ப்பாளர்கள் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலேயே மனுத் தாக்கல் செய்தனர்.
விலங்குகள் உரிமை அமைப்பான 'பெட்டா இந்தியா', "நாய்களை அகற்றுவது அறிவியல் பூர்வமான முறை அல்ல, இதனால் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்காது" என்று கூறியிருந்தது.
அந்த அமைப்பு மேலும் கூறுகையில், "டெல்லி அரசு முன்னரே பயனுள்ள கருத்தடைத் திட்டத்தைச் செயல்படுத்தியிருந்தால், இன்று தெருக்களில் நாய்களின் எண்ணிக்கை இவ்வளவு அதிகமாக இருந்திருக்காது" என்று குறிப்பிட்டிருந்தது.
தெருநாய்களைக் காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, பிடிக்கப்பட்ட நாய்களை மீண்டும் அந்தந்த பகுதிகளிலேயே விட வேண்டும் என்று அறிவுறுத்தியது.
இருப்பினும், ரேபிஸ் பாதிப்பு உள்ள நாய்கள் அல்லது ரேபிஸ் இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் நாய்களை மீண்டும் விடக்கூடாது என்றும் அந்தத் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக, டெல்லி ஜந்தர் மந்தரில் பல நாய் வளர்ப்பாளர்களும், விலங்குகள் உரிமை ஆர்வலர்களும் ஒன்று கூடி, உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவுக்குத் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்தியாவின் மாநிலங்களில் நிலைமை என்ன?

பட மூலாதாரம், Getty Images
நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில், தெருநாய்கள் மற்றும் ரேபிஸ் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த 'ஏபிசி விதிகள் 2023'-ன் படியே நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
2022-ஆம் ஆண்டு மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு அமைச்சகம் நாடாளுமன்றத்தில் அளித்த தகவலின்படி, உத்தரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவில்தான் அதிக எண்ணிக்கையிலான தெருநாய்கள் உள்ளன. அதேசமயம், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, லட்சத்தீவு மற்றும் மணிப்பூர் ஆகிய பகுதிகளில் தெருக்களில் நாய்கள் ஏதுமில்லை.
இருப்பினும், 2012-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2019-ல் உத்தரப் பிரதேசத்தில் தெருநாய்களின் எண்ணிக்கை 20.59 லட்சமாகக் குறைந்ததாக அமைச்சகம் தெரிவித்திருந்தது.
உத்தரப் பிரதேசத்தில் தெருநாய்கள் குறித்து மிகக் கடுமையான விதிகள் உள்ளன. அம்மாநில நகராட்சி விதிகளின்படி, பொது இடங்களில் தெருநாய்களுக்குத் தட்டுப்பாடின்றி உணவளிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
மறுபுறம் கேரளாவில், 2012-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2019-ல் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அங்கு சுமார் 2.89 லட்சம் நாய்கள் உள்ளன. தெருநாய்களின் தாக்குதல்களைக் கையாள, ஏபிசி விதிகளை அமல்படுத்துவதற்காக மாநில அரசு சிறப்பு கண்காணிப்புக் குழுக்களை அமைத்துள்ளது.
நாட்டின் பொருளாதாரத் தலைநகரான மும்பை, ஒரு சமநிலையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கிறது. மும்பையில் தெருநாய்கள் மற்றும் பூனைகளுக்கு உணவளிப்பது சட்டப்பூர்வமானதுதான்; ஆனால், அவை தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் சுத்தமான இடங்களில் மட்டுமே அவ்வாறு செய்ய அனுமதிக்கப்படுகின்றன.
சுற்றுலாவுக்குப் புகழ்பெற்ற கோவா மாநிலத்திலும் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கோவா, நாட்டில் ரேபிஸ் கட்டுப்படுத்தப்பட்ட முதல் மாநிலமாகும். 2017-ஆம் ஆண்டுக்குப் பிறகு, அம்மாநிலத்தில் மனிதர்களுக்கு ரேபிஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை. ஆனால், 2023-ஆம் ஆண்டில் ஒரு நபர் உயிரிழந்த சம்பவத்துடன் ஒரு வழக்கு பதிவாகியது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு





























