'காங்கிரஸ் துரோகத்தால் மனக்காயம்': இந்தியா கூட்டணி கூட்டத்தை புறக்கணிக்கும் திமுக

பட மூலாதாரம், X/DMK
ஜூன் 8-ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் "இந்தியா" கூட்டணிக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என திமுக அறிவித்துள்ளது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் என்பதால், தாங்கள் கலந்துகொள்ளப்போவதில்லை எனவும் திமுக விளக்கம் அளித்துள்ளது.
அதே நேரத்தில் இந்தக் கூட்டத்தில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகள் முன்வைக்கும் பிரச்னைகளில், திமுக குரல் கொடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,''இந்தியா கூட்டணி தொடங்கியதிலிருந்து அக்கூட்டணியின் மையச் சக்தியாக திராவிட முன்னேற்றக் கழகம் இயங்கியது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது
''தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்குப் பின், காங்கிரஸ் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இழைத்த துரோகத்தினால் மனக்காயமுற்றிருக்கும் கட்சியினரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கின்ற வகையில், வருகின்ற ஜூன் 8-ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் இந்தியா கூட்டணிக் கூட்டத்தில், அதாவது காங்கிரஸ் பங்கேற்கும் கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்காது'' என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், @TVKPartyHQ/X
தேர்தலை தொடர்ந்து பிரிவு
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவும், காங்கிரசும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்திருந்தன. இந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சி ஐந்து தொகுதிகளில் வெற்றியும் பெற்றது.
ஆனால் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் தவெகவிற்கு ஆதரவளிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது.
இதற்கு திமுகவின் சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு கடுமையான கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சி முதுகில் குத்திவிட்டதாகவும், ஒரே இரவில் அணி மாறி சென்றதாகவும், பழம்பெரும் பேரியக்கம் அரசியலின் அடிப்படை நாகரிகத்தைக் கூட கடைப்பிடிக்க முடியாத அளவுக்கு, பதவி ஆசை அவர்களின் மூளையை மழுங்கடித்துவிட்டது எனவும் திமுக சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன
காங்கிரஸ் கட்சி இந்த விமர்சனங்களை புறந்தள்ளிவிட்டு தவெக அமைச்சரவையிலும் இடம் பெற்றது. மேலும், தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க திமுகவும் அதிமுகவும் பேசியதாக காங்கிரஸ் தலைவர்கள் பதிலுக்கு விமர்சித்தனர்.
சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதலே காங்கிரஸ் திமுக இடையே உரசல்களிருந்து வந்தன. காங்கிரஸ் கட்சியில் ஒரு பிரிவினர் தவெகவுடன் கூட்டணி அமைக்க ஆதரவாக செயல்பட்டதாக செய்திகள் வெளியாகின.
ஆட்சியில் பங்கு மற்றும் தொகுதி பங்கீடு காரணமாக நீண்ட இழுப்பறிக்கு பின்பே காங்கிரஸ் திமுக இடையே உடன்பாடு எட்டப்பட்டது.
இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்ற திமுகவின் முடிவு குறித்து பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், மாநில அளவில் தவெகவுடனும், தேசிய அளவில் திமுகவுடனும் கூட்டணி வைத்துக்கொள்ள காங்கிரஸ் முயற்சிப்பதாக தெரிவித்தார்.
''ஆனால் திமுக காங்கிரஸை மன்னிக்க தயாராக இல்லை. தற்போதைய நிலையில் காங்கிரஸ் கட்சியிடமிருந்து திமுக விலகியிருக்க நினைக்கிறது. இனிவரும் காலங்களில் பிரச்னைகளின் அடிப்படையில் இந்தியா கூட்டணிக்கு திமுக ஆதரவளிக்க வாய்ப்புள்ளது'' என அவர் தெரிவித்தார்.
எதிரெதிராக இருந்தாலும் பல கட்சிகள் நாட்டு நலனுக்காக இந்தியா கூட்டணியில் இடம்பெற்றிருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் லஷ்மி ராமசந்திரன் தெரிவித்தார்.
''அரசியல் வேறுபாடுகளை மறந்து கூட்டத்தில் திமுக பங்கேற்க வேண்டும். இந்தியா கூட்டணி எதிர்காலத்தில் மேலும் வலுவாக இருக்கும்'' என அவர் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































