மாநிலங்களவை சீட்: தவெகவுக்கு கிடைத்த முதல் வாய்ப்பை விஜய் காங்கிரசுக்கு ஒதுக்கியது ஏன்?

ராகுல் காந்தியுடன் விஜய்

பட மூலாதாரம், @TVKPartyHQ/X

  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

தமிழகத்தில் காலியாகியுள்ள மாநிலங்களவை உறுப்பினர் இடத்தை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குவதாக தவெக அறிவித்துள்ள நிலையில், டெல்லியில் கால் பதிப்பதற்குக் கிடைத்த இந்த வாய்ப்பை தவெக நழுவ விட்டிருப்பதாக சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

விரைவில் பல மசோதாக்களை மத்திய அரசு கொண்டுவரவிருப்பதால், அவற்றில் தவெக நிலைப்பாட்டை வெளிப்படுத்தாமல் இருக்கவே காங்கிரஸ் கட்சிக்கு இந்த வாய்ப்பை வழங்கி தவெக ஒதுங்கியுள்ளதாகக் கூறுகிறார் பத்திரிகையாளர் பரக்கத் அலி.

ராகுலுடன் விஜய்க்கு இருக்கும் புரிதலும், காங்கிரசுடன் இணைந்து பயணிக்க வேண்டுமென்ற எண்ணமும்தான் காங்கிரசுக்கு இந்த வாய்ப்பைக் கொடுக்கக் காரணம் என்றும், இதன் மூலமாக எதிர்காலத்திலும் மதச்சார்பற்ற சக்திகளுடன்தான் தவெகவின் பயணம் தொடரும் என்பதை விஜய் வெளிப்படுத்தியுள்ளார் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறுகிறார்.

பாஜகவை எதிர்க்க பயந்து இந்த வாய்ப்பை விட்டுவிடவில்லை என்றும், இது தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி பேச்சுவார்த்தையின் போது ஒப்புக்கொண்டதுதான் என்றும் கூறுகிறார் தவெக செய்தித்தொடர்பாளர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு.

தவெகவுக்கு கிடைத்த முதல் வாய்ப்பு

ராகுல் காந்தியுடன் விஜய்

பட மூலாதாரம், @TVKPartyHQ/X

சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மயிலம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சி.வி.சண்முகம், அதில் வெற்றி பெற்றதும் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அந்த இடம் காலியானது.

கட்சி துவங்கி முதல் தேர்தலிலேயே ஆட்சியைப் பிடித்துள்ள தவெக, இதன் மூலமாக டெல்லியில் முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினராக கால் பதிக்கும் வாய்ப்பு இருப்பதாகக் கருதப்பட்டது. ஏனெனில், தமிழக சட்டப்பேரவையில் அதிக உறுப்பினர்களைக் கொண்டுள்ள தவெக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆதரவு அளிக்கும் நிலையில், அக்கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

இந்தநிலையில் மாநிலங்களவை உறுப்பினர் இடத்தை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குவதாக தவெக அறிவித்தது. இதுகுறித்து தவெக தலைவரும், தமிழக முதல்வருமான விஜய் வெளியிட்ட அறிவிப்பில், ''இம்மாதம் 18-ஆம் தேதி தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்படவுள்ள மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில், தவெக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.'' என்று கூறியிருந்தார்.

விஜயின் இந்த அறிவிப்பு, தமிழக அரசியலில் பெரும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இதனால் காங்கிரஸ் கட்சியினர் மகிழ்ச்சி அடைந்துள்ள அதேநேரத்தில் மற்ற கட்சியினர் பலரும் ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.

டெல்லியில் முதல் முறையாக பாதம் பதிக்கவும், மாநில அரசின் குரலை ஒலிக்கவும் கிடைத்த வாய்ப்பை வேண்டுமென்றே தமிழக வெற்றிக்கழகம் தவிர்த்திருக்கிறது என்கிறார் பத்திரிகையாளர் எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி.

பாஜக எதிர்ப்பு என்பதை இதுவரை வெறும் வார்த்தைகளில் மட்டுமே வெளிப்படுத்தி வரும் தவெக அதை செயல்பாடாகக் காண்பிக்க தயக்கம் காட்டியே இந்தத் தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்த்து அந்த வாய்ப்பை காங்கிரஸ் கட்சிக்கு வழங்கியிருப்பதாகக் கூறினார் அவர்.

பிபிசியிடம் பேசிய பத்திரிகையாளர் எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி, ''இது இடைத்தேர்தல்தான். இன்னும் இரண்டரை ஆண்டுகள்தான் அந்த உறுப்பினருக்கு பதவிக்காலம் இருக்கிறது. இதில் தவெக போட்டியிட்டு வென்றிருந்தால் வரும் நாட்களில் மத்திய அரசின் நிலைப்பாட்டை எதிர்ப்பது அல்லது ஆதரிப்பது என்ற முடிவை தவெக எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கும். தொகுதி மறுசீரமைப்பு மசோதா உள்ளிட்ட பல மசோதாக்களை மத்திய அரசு விரைவில் மீண்டும் கொண்டுவரவுள்ளதாகத் தகவல் உள்ளது.'' என்றார்.

''ஒரு எம்பி இருந்தாலும் இந்த மசோதாக்களை ஆதரிக்க வேண்டும் அல்லது எதிர்க்க வேண்டும். அப்போது தவெகவின் நிலைப்பாடு வெளிப்படையாகிவிடும். இப்படித்தான் அதிமுக பல விஷயங்களில் சிக்கிக்கொண்டது. அதனால்தான் இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கு மத்திய அரசு முயற்சிக்கு எதிர்ப்பு அல்லது ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுக்காமலும், பகிரங்கமாக எந்த மோதலும் வைத்துக்கொள்ளாமலும் இருப்பதற்காகவே இந்த வாய்ப்பை காங்கிரசுக்குக் கொடுத்துள்ளது.'' என்றார் பத்திரிகையாளர் பரக்கத் அலி.

டெல்லியிலிருந்து விஜய் திரும்பிய பின் அறிவிக்க இதுதான் காரணமா?

காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ்
படக்குறிப்பு, காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ்

ஆனால் இந்த முடிவை எடுத்ததன் மூலமாக இணைய விமர்சனங்களை விஜய் முறியடித்துவிட்டார் என்று கூறுகிறார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பீட்டர் அல்போன்ஸ்.

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய பீட்டர் அல்போன்ஸ், ''முதல்வர் விஜய் டெல்லி சென்றபோது அவரிடம் பிரதமர் முகம் கொடுத்து பேசவில்லைல. ஆனால் மோதி கேரள முதல்வர் சதீசனிடம் 40 நிமிடம் பேசினார்; சந்திப்பையே அமித்ஷா தவிர்த்துவிட்டார். இதனால் மிரண்டு போன விஜய் காங்கிரசை ஒதுக்கி வைக்க முடிவெடுத்துவிட்டார் என்று செய்தி பரப்பினார்கள். ஆனால் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை காங்கிரசுக்கு வழங்கியதன் மூலமாக இந்த பிரசாரத்திற்கு ஒரு பெரிய முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் விஜய்.'' என்று கூறினார்.

விஜய் இடத்தில் காங்கிரஸ் உட்பட எந்தக்கட்சியாக இருந்தாலும், இந்த வாய்ப்பை தோழமைக்கட்சிக்கு விட்டுக் கொடுத்து இருக்கமாட்டார்கள் என்று தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ள பீட்டர் அல்போன்ஸ், சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு எவ்வளவு வற்புறுத்திக்கேட்டும் கூட்டணி வைக்க மறுத்துவிட்ட ஒரு கட்சிக்கு, தற்போது 2 அமைச்சர்கள் பதவிகளை வழங்கிய பின்னும் ஒரு மாநிலங்களவை இடத்தையும் ஒதுக்கியிருப்பது தமிழக காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய அங்கீகாரம் என்றார்.

சமீபத்தில் தமிழக முதல்வர் விஜய் டெல்லி சென்றபோது, பிரதமர் மோதியைச் சந்தித்தார். ஆனால் சோனியா மற்றும் ராகுல் காந்தி ஆகியோரைச் சந்திக்கவில்லை. அதனால் தவெக – காங்கிரஸ் உறவு குறித்து அப்போது ஊடகங்களில் பல எதிர்மறை கருத்துகள் வெளியாகின. ஆனால் அங்கிருந்து திரும்பிய பின்பே, மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு வழங்கப்படுவதாக விஜய் அறிவித்திருந்தார்.

''மோதி – அமித்ஷாவின் நடவடிக்கைகளால் விஜய் காங்கிரசை சற்று தள்ளிவைக்கவுள்ளார், உள்ளாட்சித் தேர்தலில் கூட காங்கிரஸ் உடன் கூட்டணி என்பது சந்தேகமே என்று பொய்த்தகவல்களைப் பரப்பினார்கள். அதைப் பொய்யாக்கிவிட்டார் விஜய்.'' என்றார் பீட்டர் அல்போன்ஸ்.

பத்திரிகையாளர் பரக்கத் அலி
படக்குறிப்பு, பத்திரிகையாளர் பரக்கத் அலி

பிரவீண் சக்கரவர்த்திக்காக காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதா?

பிரவீண் சக்கரவர்த்தி விஜய்க்கு நெருங்கிய நண்பர் என்பதால் மாநிலங்களவை உறுப்பினரான அவர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு, இந்த வாய்ப்பு காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டது எனஊடகங்களில் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

விஜய்க்கு அவர் நண்பர் என்பதும் அந்த சீட் காங்கிரசுக்கு ஒதுக்கக் காரணமென்பதும் ஒரு சமாளிப்பான காரணம் என்கிறார் பத்திரிகையாளர் பரக்கத்.

''பாஜகவை எதிர்ப்பது, ஆதரிப்பது எதையும் வெளிப்படுத்த வேண்டாமென்றே அதை காங்கிரசுக்கு ஒதுக்கிவிட்டனர். பாம்பும் சாகவேண்டும்; கம்பும் உடையக்கூடாது என்ற நிலைப்பாட்டில்தான் தவெக இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளது. தற்போதைய தமிழக அரசின் நிலைப்பாட்டை டெல்லியில் பேசுவதற்குக் கிடைத்த ஒரு வாய்ப்பையும் இந்த அரசு திட்டமிட்டே தவறவிட்டிருக்கிறது '' என்றார் பரக்கத் அலி.

இந்த கருத்துகளை மறுக்கும் தமிழக வெற்றிக்கழகத்தின் செய்தித்தொடர்பாளர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு, ''இதில் தவெக பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. இது தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிப் பேச்சுவார்த்தையின்போது பேசப்பட்ட விஷயம்தான். எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் இல்லாவிட்டாலும் இது ஏற்கெனவே ஒப்புக்கொண்ட ஒரு விஷயம்தான். இனிவரும் காலத்தில் எல்லாத் தேர்தல்களிலும் கூட்டணி கட்சிகளுக்கு உரிய ஒதுக்கீடு வழங்கப்படும் என்பதன் அடிப்படையில்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.'' என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு