திருப்பதி தொழிற்சாலை விபத்து: இரண்டு தமிழர்கள் உள்பட 5 பேர் பலி - என்ன நடந்தது?

பட மூலாதாரம், UGC
(இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.)
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் ஶ்ரீ சிட்டி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இயங்கி வந்த டில் ஹெல்த்கேர் இண்டஸ்ட்ரீஸ் என்கிற நிறுவனத்தில் இன்று காலை நீர் கொதிகலன் வெடிப்பு ஏற்பட்டது.
இந்த விபத்தில் தற்போது வரை 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அதில் இருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என திருப்பதி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஸ்வர் ஊடகங்களிடம் தகவல் தெரிவித்ததாக பிபிசி தெலுங்கு சேவை கூறுகிறது. அவரது கூற்றுப்படி, மற்ற மூவரில் இருவர் உள்ளூரைச் சேர்ந்தவர்கள், ஒருவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்.
கொதிகலன் அமைந்திருந்த பகுதியில் பணியாற்றிய மூவர், அருகில் பணியாற்றிய இருவர் என மொத்தம் ஐந்து பேர், வெடிவிபத்தின்போது சிதறித் தெறித்த பாகங்கள் தாக்கியதில் உயிரிழந்ததாக அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், UGC
விபத்தில் படுகாயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக சென்னை அழைத்துச் செல்லப்பட்டு இருப்பதாக பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.
உயிரிழந்த தொழிலாளர்களில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மற்றவர்கள் சிகிச்சை பெற்று வந்தபோது உயிரிழந்ததாக பிடிஐ செய்தி கூறுகிறது.

பட மூலாதாரம், UGC
ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் இந்தச் சம்பவம் குறித்து ஆழ்ந்த அதிர்ச்சியை வெளிப்படுத்தியதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தனது இரங்கலையும் தெரிவித்துக் கொண்டார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பட மூலாதாரம், UGC
இன்னும் வெடிப்புக்கான காரணம் தெரியவில்லை. உயிரிழந்த தொழிலாளர்களின் பெயர்கள் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.
இந்த வெடிப்புச் சம்பவம் குறித்து திருப்பதி நாடாளுமன்ற உறுப்பினர் மத்திலா குருமூர்த்தி ஆழ்ந்த அதிர்ச்சியையும் துயரத்தையும் வெளிப்படுத்தினார்.
உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 இலட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று திருப்பதி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், குடும்பத்தில் உயர்கல்வி பயில்பவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களது முழு கல்விச் செலவும் ஏற்கப்படும் என்றும், தகுதியுடையவர்களுக்கு ஸ்ரீ சிட்டி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாகப் 'பாய்லர் ஆய்வாளர்' (Boiler Inspector) ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார். 'டில் ஹெல்த் கேர் இண்டஸ்ட்ரீஸ்' மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், யாருடைய அலட்சியம் இந்த விபத்திற்குக் காரணம் என்பதைக் கண்டறியக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் வெங்கடேஷ்வர் கூறினார்.
ஸ்ரீ சிட்டியில் உள்ள ஏனைய தொழிற்சாலைகளிலும் பாதுகாப்புத் தணிக்கை (Safety Audit) மேற்கொள்ளுமாறு நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































