வங்கதேசத்திற்கு அணுசக்தி எரிபொருள் கிடைப்பது எப்போது? பாகிஸ்தான் முடிவால் தாமதம்

யுரேனியத்தை ஏற்றிச் சென்ற விமானம் தனது வான்வெளி வழியாகப் பறக்க பாகிஸ்தான் அனுமதி மறுத்ததே இதற்குக் காரணம் என்று வங்கதேசத்தில் சிலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
படக்குறிப்பு, ரூப்பூர் அணுமின் நிலையத்தின் முதல் அலகு (கோப்புப் படம்)
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

வங்கதேசத்தின் ரூப்பூர் அணுமின் நிலையத்தின் இரண்டாவது அலகுக்காக ரஷ்யாவில் இருந்து கொண்டு வரப்பட்ட யுரேனியத்தை உரிய நேரத்தில் வங்கதேசத்துக்குக் கொண்டு வர முடியவில்லை.

யுரேனியத்தை ஏற்றிச் சென்ற விமானம் தனது வான்வெளி வழியாகப் பறக்க பாகிஸ்தான் அனுமதி மறுத்ததே இதற்குக் காரணம் என்று வங்கதேசத்தில் சிலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த விவகாரம் வங்கதேசத்தில் விவாதம், விமர்சனம் மற்றும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. சமூக வலைதளங்களிலும் பல்வேறு கருத்துகளும் விமர்சனங்களும் வெளியாகி வருகின்றன.

சமீப காலங்களில் வங்கதேசத்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் மேம்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் ஏன் இத்தகைய முடிவை எடுத்தது என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

இந்த தாமதம் குறித்து பாகிஸ்தான் என்ன கூறியது?

சமீப காலங்களில் வங்கதேசத்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் மேம்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் ஏன் இத்தகைய முடிவை எடுத்தது என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
படக்குறிப்பு, ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ரூப்பூர் அணுமின் நிலையத்திற்கான எரிபொருள் தொகுப்பு (கோப்புப் படம்)

இந்த விவகாரம் தொடர்பாக, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சஜ்ஜாத் ஹைதர், பிபிசி உருது செய்தியாளர் உமர் தாரஸ் நங்கியானாவிடம் பேசினார்.

"இது விமானப் பாதைக்கான அனுமதி மற்றும் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கான அனுமதி தொடர்பான தொழில்நுட்ப மற்றும் நிர்வாக நடைமுறைகள் சார்ந்த விவகாரம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், விமானப் போக்குவரத்து அமைப்புகள் மற்றும் தொடர்புடைய பிற அதிகாரிகளுக்கு இடையே பெரும்பாலும் ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது. இதனால் விமானங்களின் அட்டவணையிலும் மாற்றங்கள் ஏற்படலாம்" என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், யுரேனியம் உரிய நேரத்தில் கிடைக்காததால், ரூப்பூர் அணுமின் திட்டத்தில் இருந்து வணிக ரீதியிலான மின் உற்பத்தியைத் தொடங்குவதில் மேலும் தாமதம் ஏற்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

வங்கதேசத்தின் உள்நாட்டு அரசியல் சூழல் மற்றும் மின் விநியோக நிலைமை ஆகியவை இந்த விவகாரம் குறித்த விவாதத்தை மேலும் அதிகரித்துள்ளதாக கருதப்படுகிறது.

எரிபொருள் நெருக்கடி காரணமாக வங்கதேசத்தில் ஏற்கெனவே மின் விநியோக நிலைமை மிகவும் மோசமாக இருக்கும் நிலையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

நாடு முழுவதும் அதிகரித்து வரும் மின்தடையால் அரசுக்கு கடும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில், மின் நெருக்கடியைச் சமாளிப்பதற்காக, ரூப்பூர் அணுமின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை கூடிய விரைவில் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்க வேண்டும் என வங்கதேசம் விரும்புகிறது.

ஆனால், தொழில்நுட்பப் பிரச்னைகள் மற்றும் யுரேனியம் உரிய நேரத்தில் வழங்கப்படாதது காரணமாக, மின் உற்பத்தியைத் தொடங்குவதில் மேலும் தாமதம் ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

எனினும், யுரேனியம் விநியோகத்துக்கான அடுத்தக்கட்ட அட்டவணை தொடர்பாக ரஷ்யாவின் அரசுக்குச் சொந்தமான அணுசக்தி நிறுவனமான ரோசாட்டம் ஏற்கெனவே அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த விவகாரம் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க காரணம் என்ன?

அணு எரிபொருளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்வது உலகம் முழுவதும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த, அதிக பாதுகாப்பு கொண்ட விவகாரமாகக் கருதப்படுகிறது. இதற்கு குறிப்பிட்ட விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றுவது அவசியம்.

சர்வதேச விதிமுறைகளின் படி, அணுசக்தி பொருட்களை ஏற்றிச் செல்லும் விமானம், எந்தெந்த நாடுகளின் வான்வெளி வழியாகச் செல்ல உள்ளதோ, அந்த ஒவ்வொரு நாட்டிடமும் தனித்தனியாக தூதரக அனுமதியைப் பெற வேண்டும். இது 'ஓவர்ஃப்ளை கிளியரன்ஸ்' (Overflight Clearance) என்று அழைக்கப்படுகிறது.

ரோசாட்டம் வட்டாரத் தகவல்களின் படி, ரூப்பூர் அணுமின் திட்டத்துக்கான யுரேனியத்தை ஏற்றிச் செல்லும் விமானம், உரிய நேரத்தில் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கான அனுமதி கிடைக்காததால் ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

எனினும், ரோசாட்டம் அதிகாரப்பூர்வமாக பாகிஸ்தானின் பெயரைக் குறிப்பிடவில்லை.

இதையடுத்து, சமீப காலங்களில் வங்கதேசத்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் மேம்பட்டு வருவது தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் வெளியாகின.

பாகிஸ்தான் ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தது என்று கேள்வி எழுப்பும் மக்கள்

சமீப காலங்களில் வங்கதேசத்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் மேம்பட்டு வருவது தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் வெளியாகின.
படக்குறிப்பு, பப்னாவில் உள்ள ரூப்பூர் அணுமின் நிலையம் (கோப்புப் படம்)
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இந்த விவகாரம் தொடர்பாக வங்கதேசத்தில் தொடர்ந்து விவாதம், விமர்சனம் மற்றும் சர்ச்சை நிலவி வரும் நிலையில், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் தரப்பை அறிய பிபிசி உருது முயற்சித்தது.

பிபிசி உருது செய்தியாளர் உமர் தாரஸ் நங்கியானாவிடம் பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சஜ்ஜாத் ஹைதர், தனது வான்வெளியைப் பயன்படுத்துவது தொடர்பான அனைத்து விண்ணப்பங்களையும் நடைமுறையில் உள்ள விதிமுறைகள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து நடைமுறைகளின்படி பாகிஸ்தான் உரிய நேரத்தில் பரிசீலித்து வருவதாகத் தெரிவித்தார்.

"வெளியாகி வரும் தகவல்கள், விமானப் பாதைகளுக்கான அனுமதி மற்றும் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கான அனுமதி தொடர்பான தொழில்நுட்ப மற்றும் நிர்வாக நடைமுறைகள் சார்ந்த விவகாரம் இது என்பதைக் காட்டுகின்றன" என்று அவர் கூறினார்.

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேலும் கூறுகையில், "வங்கதேசத்துடனான தனது உறவுகளுக்கு பாகிஸ்தான் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது. எனவே, இந்த விவகாரம் அதன் சரியான தொழில்நுட்பப் பின்னணியில் பார்க்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தைத் தவறாக சித்தரிக்கவும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளைப் பாதிக்கவும் முயற்சிக்கும் இதுபோன்ற தகவல்கள் அல்லது கூற்றுகளுக்கு தேவையற்ற முக்கியத்துவம் அளிக்கக் கூடாது" என்றார்.

மின் உற்பத்தியைத் தொடங்குவதில் தாமதம்

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேலும் கூறுகையில், “வங்கதேசத்துடனான தனது உறவுகளுக்கு பாகிஸ்தான் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது. எனவே, இந்த விவகாரம் அதன் சரியான தொழில்நுட்பப் பின்னணியில் பார்க்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தைத் தவறாக சித்தரிக்கவும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளைப் பாதிக்கவும் முயற்சிக்கும் இதுபோன்ற தகவல்கள் அல்லது கூற்றுகளுக்கு தேவையற்ற முக்கியத்துவம் அளிக்கக் கூடாது” என்றார்.
படக்குறிப்பு, மின்வெட்டு நாட்டின் சாமானிய மக்களின் பிரச்னைகளை மேலும் அதிகரித்துள்ளது (குறியீட்டுப் படம்)

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், ரூப்பூர் அணுமின் நிலையத்தின் முதல் அலகில் உள்ள அணு உலைக் கலனில் எரிபொருளை நிரப்பும் பணி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது.

ஆனால், இதுவரை அங்கிருந்து வணிக ரீதியிலான மின் உற்பத்தி தொடங்கவில்லை.

செப்டம்பர் மாதம் சோதனை அடிப்படையில் மின் உற்பத்தி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், செப்டம்பரில் மின்சாரம் கிடைப்பதற்கான வாய்ப்பு குறைவு என்பதே உண்மை நிலவரமாக இருந்தது. தற்போது இந்த ஆண்டு இறுதிக்குள் கூட மின் உற்பத்தி தொடங்குமா என்பது தெளிவாக இல்லை.

இந்த மாத தொடக்கத்தில், வங்கதேச அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஃபகிர் மஹ்பூப் இனம், அணு உலையில் உள்ள ஒரு உபகரணத்தில் ஏற்பட்ட கோளாறுதான் பிரச்னைக்குக் காரணம் என்று பிபிசி பெங்காலியிடம் தெரிவித்தார்.

இந்தச் சாதனம் 'பைலட் ஆப்பரேட்டட் ரிலீஃப் வால்வு' (PORV) என்று அழைக்கப்படுகிறது.

"ரூப்பூரில் இந்த வால்வு தொடர்பான பிரச்னை திடீரென ஏற்பட்டது. இது பைலட் ஆப்பரேட்டட் ரிலீஃப் வால்வு என்று அழைக்கப்படுகிறது. இதுதான் எங்களுக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது" என்று அவர் பிபிசி பெங்காலியிடம் தெரிவித்தார்.

"எங்கள் விஞ்ஞானிகளும் ரஷ்ய விஞ்ஞானிகளும் இணைந்து இந்தப் பிரச்னையைத் தீர்க்க முயற்சித்து வருகின்றனர்" என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், இந்த அணுமின் நிலையத்தின் இரண்டாவது அலகுக்கான எரிபொருளும் உரிய நேரத்தில் வந்து சேரவில்லை.

இதனால், வணிக ரீதியிலான மின் உற்பத்தியைத் தொடங்குவதில் மேலும் தாமதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.

எனினும், யுரேனியம் விநியோகத்தில் ஏற்பட்ட தாமதத்துக்குப் பிறகு ரோசாட்டம் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ரூப்பூர் அணுமின் நிலையத்தின் இரண்டாவது அலகுக்கான அணு எரிபொருள் விநியோகம் 2026 அக்டோபரில் தொடங்கி, டிசம்பர் வரை தொடரும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்த விதிமுறைகள் மற்றும் திட்ட அட்டவணைக்கு ஏற்ப, பல விமானங்கள் மூலம் எரிபொருள் கொண்டு வரப்படும் என்றும் ரஷ்ய அரசுக்குச் சொந்தமான அணுசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் பொருள், செப்டம்பர் மாதம் வந்து சேர வேண்டிய யுரேனியத்தின் சரக்கு, தற்போது அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் பல கட்டங்களாக வந்து சேரும் என்பதாகும்.

மின்சார நெருக்கடிக்கு மத்தியில் அதிகரித்து வரும் கவலைகள்

வங்கதேசத்தில் மின்சாரத்துக்கான தேவை மற்றும் விநியோகத்துக்கு இடையே மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ள நிலையில், யுரேனியம் வந்து சேருவதில் இந்தத் தாமதம் ஏற்பட்டுள்ளது.

திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) இறக்குமதி குறைந்துள்ளதுடன், நிலுவைத் தொகைகள் காரணமாக பல தனியார் மின் உற்பத்தி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

இதன் காரணமாக, நாடு முழுவதும் மின்தடைஅதிகரித்துள்ளது.

ரூப்பூர் அணுமின் நிலையத்தில் இருந்து 1,200 மெகாவாட் மின்சாரம் தேசிய மின் தொகுப்புடன் இணைக்கப்பட்ட பிறகு, இந்த நெருக்கடி கணிசமாகக் குறையும் என்று அரசு நம்பியது.

இதனுடன், அதிக செலவில் எண்ணெயை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் மின் உற்பத்தி நிலையங்களைச் சார்ந்திருப்பதும் குறையும்.

ஆனால், முதல் அலகில் உள்ள வால்வு தொடர்பான தொழில்நுட்பப் பிரச்னைகளும், இரண்டாவது அலகுக்கான எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட தாமதமும் ஒட்டுமொத்த நிலைமை குறித்த கவலையை மேலும் அதிகரித்துள்ளன.

அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் இரண்டாவது அலகுக்கான எரிபொருள் வந்து சேர்ந்து, அனைத்து சோதனைக் கட்டங்களும் வெற்றிகரமாக நிறைவடைந்தாலும், இரண்டாவது அலகில் இருந்து வணிக ரீதியிலான மின் உற்பத்தியை 2027-ம் ஆண்டு மத்திக்கு முன்பு தொடங்க முடியாது என்று சில நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு