விடுதியில் பெண் செவிலியர் கொலை: 4 பேரை போலீஸ் சந்தேகித்த நிலையில் பைக் மெக்கானிக் சிக்கியது எப்படி?

காவல்துறையினர் குற்றவாளிகளை கண்டுபிடித்தது எப்படி?

பட மூலாதாரம், UGC

    • எழுதியவர், அமரேந்திர யர்லகடா
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

(இந்தக் கட்டுரையில் உள்ள சில தகவல்கள் உங்களுக்கு சங்கடம் தரலாம்)

ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராகப் பணிபுரிந்து வந்த இளம் பெண் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஹைதராபாத் போலீசார் தெரிவித்துள்ளனர்.

அந்தப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஷம்ஷாபாத் துணை காவல் ஆணையர் பி. ராஜேஷ் தெரிவித்தார்.

"குற்றஞ்சாட்டப்பட்ட நபர் அந்த இளம் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றபோது, அவர் கடுமையாக எதிர்த்தார். அதையும் மீறி அவர் வன்கொடுமை செய்துள்ளார்" என்று ராஜேஷ் கூறினார்.

ஹைதராபாத் புறநகர்ப் பகுதியில் நடந்த இந்த கோரச் சம்பவம் தெலங்கானாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் குற்றச் சம்பவம் தொடர்பாக பிகாரைச் சேர்ந்த முகமது சனாவுல்லா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஹைதராபாத் புறநகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் செவிலியர் விடுதியில் 21 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் ஆகஸ்ட் 29-ஆம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில் முக்கிய உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக ராஜேஷ் தெரிவித்தார்.

"செவிலியர் விடுதியில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அந்த இளம் பெண்ணின் முகம் மற்றும் தலையில் காயங்களுடன் ரத்தக் கறைகள் இருந்தன. நாங்கள் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளோம்" என்று அவர் கூறினார்.

ஆகஸ்ட் 28-ஆம் தேதி இரவு 10:30 மணியளவில் அந்த இளம் பெண் தனது உறவினர்களிடம் பேசியது தெரியவந்துள்ளது என்று போலீசார் கண்டறிந்துள்ளனர்.

மறுநாள் காலை, அவரிடமிருந்து போன் அழைப்பு வராததால், உறவினர் ஒருவர் அங்கு வந்து, அருகில் உள்ள மற்றொரு ஜன்னலின் வழியாக சக ஊழியர்கள் மற்றும் செவிலியர்களின் உதவியோடு உள்ளே பார்த்தபோது அவர் இறந்து கிடப்பது தெரியவந்துள்ளது. பின்னர் அவர்கள் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர் என்று போலீசார் கூறுகின்றனர்.

'ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களுக்கு அடிமையாகி...'

வழக்கின் பின்னணியை விவரிக்கும் காவல்துறையினர்.

பட மூலாதாரம், HydCityPolice

இளம் பெண்ணின் மூக்கு மற்றும் வாயில் ரத்தம் கசிந்திருந்ததாகவும், அவரது தலையில் காயங்கள் இருந்ததாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளதாக ராஜேஷ் விளக்கினார்.

"கொலை நடந்த இடத்திற்கு அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து நான்கு அல்லது ஐந்து சந்தேக நபர்களை அடையாளம் கண்டோம். விடுதிக்கு அருகில் உள்ள பைக் மெக்கானிக் கடையில் பணிபுரியும் சனாவுல்லாவும் அவர்களில் ஒருவர்" என்று அவர் கூறினார்.

சனாவுல்லாவின் செல்போனைப் பரிசோதித்தபோது, அதில் ஆபாச படங்கள், பெண்களின் புகைப்படங்கள் இருப்பது கண்டறியப்பட்டதாகவும், அவரை விசாரித்தபோது இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததாகவும் ராஜேஷ் தெரிவித்தார்.

சனாவுல்லா அங்கு இரண்டு முதல் மூன்று மாதங்களாக வேலை செய்து வருவது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

"சனாவுல்லா மது மற்றும் ஆபாச வீடியோக்களுக்கு அடிமையாகியுள்ளார். அவர் ஒரு மாதமாக அந்த இளம் பெண்ணின் நடமாட்டத்தைக் கண்காணித்து வந்துள்ளார். மேலும் அவர் சில இளம் பெண்களின் புகைப்படங்களையும் எடுத்துள்ளார். ஆகஸ்ட் 28 அன்று, அந்த இளம் பெண்ணுடன் அறையில் இருந்த மற்றொரு தோழி திருவிழாவுக்காக ஊருக்குச் சென்றிருந்தார். இதைப் பயன்படுத்திக் கொண்ட சனாவுல்லா, இளம் பெண் தனியாக இருப்பதை நோட்டமிட்டு இந்தத் கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளார்" என்று ராஜேஷ் கூறினார்.

பைக் மெக்கானிக் கடையின் பின்புறமுள்ள ஜன்னல் வழியாகப் பார்த்தால், விடுதி அறையின் ஜன்னல் தெளிவாகத் தெரியும் என்று போலீசார் தெரிவித்தனர்.

'ஜன்னல் வழியாக நுழைந்து...'

விடுதி அறையின் ஜன்னலுக்குக் கம்பிகள் இல்லாததால், அதன் வழியாகவே சனாவுல்லா உள்ளே நுழைந்ததாக ராஜேஷ் தெரிவித்தார்.

பட மூலாதாரம், UGC

விடுதி அறையின் ஜன்னலுக்குக் கம்பிகள் இல்லாததால், அதன் வழியாகவே சனாவுல்லா உள்ளே நுழைந்ததாக ராஜேஷ் தெரிவித்தார்.

"நள்ளிரவு 12 - 2 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அவர் உள்ளே வந்தபோது அந்தப் பெண் சத்தம்போட்டுக் கத்தியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண் கடுமையாக எதிர்த்ததால், சனாவுல்லா அவரைத் தாக்கியுள்ளார். இதில் அவர் மயக்கமடைந்தார். அதன்பிறகு அவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக விசாரணையின் போது சனாவுல்லா ஒப்புக்கொண்டார்" என்று ராஜேஷ் கூறினார்.

சம்பவத்தின் போது சனாவுல்லா மதுபோதையில் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. குற்றச் செயலில் ஈடுபட்ட பிறகு, அதே ஜன்னல் வழியே அவர் தப்பிய ஓடியதாகவும் போலீசார் கண்டறிந்துள்ளனர்.

இவ்வழக்கு தொடர்பாகக் கூடுதல் விசாரணைக்காக சனாவுல்லா காவலில் எடுக்கப்பட்டு, விசாரணை விரைவாக முடிக்கப்படும் என்று ராஜேஷ் தெரிவித்தார்.

'கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்'

பீகார் பெகூசராய் பகுதியைப் சேர்ந்த சனாவுல்லா 2023-ஆம் ஆண்டு ஹைதராபாத்துக்குக் குடிபெயர்ந்தார்.

பட மூலாதாரம், UGC

ஆய்வாளர் கே. லட்சுமிநாராயண ரெட்டி பிபிசியிடம் பேசியபோது, சனாவுல்லா பிகாரின் பெகுசராய் பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரிவித்தார்.

"2023-ஆம் ஆண்டு பிகாரில் இருந்து ஹைதராபாத்துக்கு வந்தார். உப்பல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனப் பழுதுபார்ப்பாளராகப் பணியாற்றினார். சில மாதங்களுக்கு முன்பு துக்குகுடாவுக்கு வந்து, அங்கு இருசக்கர வாகனப் பழுதுபார்ப்பாளராகப் பணியாற்றி வந்தார்," என்று அவர் கூறினார்.

னாவுல்லாவுக்கு மனைவியும் ஒரு மகனும் இருப்பதாக லட்சுமிநாராயண ரெட்டி தெரிவித்தார். அவரது மனைவி மீண்டும் கர்ப்பமானதைத் தொடர்ந்து, அவர் பிகாருக்குச் சென்றதாகவும் கூறினார்.

இந்தச் சம்பவம் குறித்து உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரிடமும் பிபிசி பேசியது.

"எங்கள் மகள் இறந்துவிட்டார். நாங்கள் துக்கத்தில் இருக்கிறோம். இப்போது இதுகுறித்து பேச விரும்பவில்லை. குற்றம்சாட்டப்பட்டவர் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்," என்று அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக சனாவுல்லாவின் குடும்பத்தினரின் பதிலைப் பெற பிபிசி முயன்று வருகிறது. அவர்களைத் தொடர்புகொள்ள முடிந்தவுடன், இந்தச் செய்தியில் சேர்க்கப்படும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு