'நாய் தாக்குதலில் தொடங்கிய பிரச்னையும், ஃபேஸ்புக் கமெண்டும் - இலங்கை தமிழருக்கு 'சௌதியில் 5 ஆண்டுகள் சிறை'

பட மூலாதாரம், Facebook/Anojan
- எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
ஃபேஸ்புக் பதிவொன்றின் கீழ் முகமது நபி குறித்து கருத்து பதிவிட்ட சம்பவம் தொடர்பில் இலங்கையைச் சேர்ந்த தமிழர் அனோஜன் என்பவர் சௌதி அரேபிய காவல்துறையால் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் அந்த நாட்டு நீதிமன்றத்தினால் அவருக்கு கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த நாட்டு நீதிமன்றத்தினால் ஐந்து ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், 3 மில்லியன் ரியால் (இலங்கை மதிப்பில் சுமார் 27 கோடி ரூபாய்) அபாராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தார் தெரிவிக்கின்றனர்.
இந்த நீதிமன்ற தீர்ப்பு தொடர்பில் அனோஜன் தனது குடும்பத்தாருக்கு தொலைபேசி ஊடாக தெரிவித்துள்ளதாக அவரது தந்தையான தம்பிராஜா சிவராஜா பிபிசி தமிழிடம் கூறினார்.
அனோஜனை விடுதலை செய்யும் நோக்கில் தமது குடும்பத்தினர் பல்வேறு வழிகளிலும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவரது தந்தை மற்றும் அவரது சகோதரன் ஆகியோர் குறிப்பிடுகின்றனர்.
என்ன நடந்தது?
இலங்கையின் ஊவா மாகாணத்திலுள்ள பிரசித்து பெற்ற முருகன் ஆலயமான கதிர்காமம் ஆலயத்தின் வருடாந்த பாத யாத்திரை கடந்த மாதம் ஆரம்பமாகியிருந்தது.
வடக்கிலிருந்து கிழக்கு மாகாணம் வழியாக பக்தர்கள் குழுவாக பாத யாத்திரை வருவதை ஒவ்வொரு வருடமும் வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இவ்வாறு இம்முறையும் வடக்கிலிருந்து பெருந்திரளான பக்தர்கள் பாத யாத்திரை மேற்கொண்ட சந்தர்ப்பத்தில், ஒரு குழுவுடன் சுப்ரமணியம் என அழைக்கப்படும் நாய் ஒன்றும் பாத யாத்திரையில் கலந்து கொண்டது.
பக்தர்களுடன் இந்த நாய் பாத யாத்திரையில் கலந்துக்கொண்ட சம்பவம் அப்போது சமூக ஊடகங்களில் பெரும் பேசு பொருளாகியிருந்தது.
இவ்வாறு வருகைத் தந்த பக்தர்கள், கல்முனை பகுதியை நெருங்கிய தருணத்தில் இடம்பெற்ற சம்பவமே அனோஜன் இன்று பிரச்னைகளை அனுப்பவிக்க காரணமாக அமைந்துள்ளது.
கல்முனை பகுதியிலுள்ள இளைஞர் ரஷ்மின் என்பவர், பாத யாத்திரை சென்ற சுப்ரமணியம் என்ற நாயை, தனது கால்களினால் மிதித்து தாக்குதல் நடாத்தியிருந்தார்.
குறித்த இளைஞன் தாக்குதல் நடாத்திய சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதுடன் இது தொடர்பான கடும் விவாதங்களும் நடந்தன.
இந்தச் சம்பவம் தொடர்பில் கல்முனை போலீஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டதை அடுத்து, நாயின் மீது தாக்குதல் நடாத்திய இளைஞன் கைது செய்யப்பட்டிருந்தார்.
குறித்த இளைஞன் தனது தவறை ஏற்றுக்கொண்டு, பகிரங்கமாக மன்னிப்பு கோரியிருந்தார். கல்முனை போலீஸாரினால் கைது செய்யப்பட்ட இளைஞன், பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், பேஸ்புக் பக்கத்தில் நாயின் மீது தாக்குதல் நடாத்தப்பட்ட சம்பவம் குறித்த பதிவொன்றின் கீழ், அனோஜன் கருத்து ஒன்றை பதிவேற்றியிருந்தார்.
முகமது நபி குறித்து ஆட்சேபனைக்கு உரிய வகையில் இந்தப் பதிவு இருந்ததாக புகார் எழுந்தது. கல்முனை பகுதியைச் சேர்ந்த அனோஜன் தற்போது, வேலை நிமித்தம் சௌதி அரேபியாவில் உள்ளார்.
சமூக வலைத்தளத்தில் அனோஜனின் பதிவு தொடர்பில் அவரது தந்தையான தம்பிராஜா சிவராஜா, பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்தார்.
''இரண்டு நண்பர்களுக்கு இடையில் இந்த வாக்குவாதம் போயிருக்கின்றது. என் மகன் அந்தக் கருத்தை நீக்கியுள்ளார். அதற்கு முன்னர் அவர் அந்தப் பதிவை ஸ்கிரின்சோட் எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அதற்கு பிறகு அவர் வேலை செய்த நிறுவனத்திற்கும் இங்கிருந்து பலர் முறைப்பாடு செய்துள்ளார்கள்.
இவர் அந்த நாட்டிலிருந்து, அந்த நாட்டிற்கு எதிராக எதுவும் செய்யவில்லை. இது நமது நாட்டில் நடந்த பிரச்னையை மத ரீதியாக மாற்றி பெரிதாக்கி விட்டார்கள். இவர் தவறை உணர்ந்து உடனே நீக்கிவிட்டார். மன்னிப்பும் கேட்டுவிட்டார். இது தான் நடந்த பிரச்னை." என அவரது தந்தை தெரிவிக்கின்றார்.
இந்த நிலையில், அனோஜன் ஃபேஸ்புக் வழியாக காணொளி ஒன்றை வெளியிட்டு, தனது தவறை தான் உணர்ந்துக்கொண்டதாகவும், இஸ்லாமிய சமூகத்திடம் தான் மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்திருந்தார்.
''கோபத்தில் நான் முகமது நபி அவர்களை தவறாகப் பதிவிட்டுவிட்டேன். அது உண்மையிலேயே எனக்கு வருத்தமாக இருக்கின்றது. அந்தப் பதிவை தவறு என்று புரிந்துக்கொண்டு 10 நிமிடங்களில் நான் அழித்து விட்டேன். நான் செய்தது மிகப் பெரிய பாவம். இஸ்லாமிய நெஞ்சங்கள் இதனால் பெரிதும் காயமடைந்திருக்கின்றார்கள். மிகவும் கவலைப்பட்டிருப்பார்கள். உங்களை வருத்தத்திற்குள் உள்ளாக்கியமைக்கு என்னுடைய சிரம் தாழ்ந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன்," என அனோஜன் பதிவிட்டிருந்தார்.

பட மூலாதாரம், Facebook/Anojan
அரபு மொழியில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்ட பதிவை அடிப்படையாகக் கொண்டு சௌதி அரேபியா போலீஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டு, அனோஜன் கடந்த ஜூன் மாதம் 30-ஆம் தேதி கைது செய்யப்பட்டிருந்தார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட அனோஜனுக்கு நேற்று முன்தினம் சௌதி அரேபிய நீதிமன்றம் 5 வருட சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது.
''நாங்கள் வெளிவிவகார அமைச்சுக்கு சென்று சந்தித்திருந்தோம். இலங்கை அரசாங்கத்திடம் நாங்கள் எமது கோரிக்கை கடிதத்தை கொடுத்திருக்கின்றோம். வெளிவிவகார அமைச்சில் எழுத்துமூலமாக முறைப்பாடு செய்துள்ளோம். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளோம். அமைச்சர்களிடம் கருணை மனு கடிதங்களை கொடுத்திருக்கின்றோம்." என அனோஜனின் தந்தை கூறியுள்ளார்.
''சௌதி அரேபியா நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து, இதுவரை சௌதி அரேபியா அரசாங்கம் தூதரகம் ஊடாக இலங்கை அரசாங்கத்திற்கு அறிவிக்கவில்லை என அரசாங்கம் சார்பாக எங்களிடம் சொன்னார்கள். சௌதி அரசாங்கம் அறிவித்ததன் பின்னரே அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்க முடியும் என்பது குறித்து கலந்துரையாட முடியும் என அரசாங்கம் சார்பாக எங்களிடம் சொன்னார்கள்." என அவர் குறிப்பிடுகின்றார்.
இதேவேளை, செளதி அரேபியா நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட 3 மில்லியன் ரியால் தொகையை சேர்க்கும் வகையில் அனோஜனின் குடும்பத்தாரின் வங்கி கணக்குக்கு பலரும் பணத்தை அனுப்பி வருகின்றனர்.
சௌதி அரேபிய நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து, இலங்கை அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































