திமுக vs தவெக: அரசியலை தாண்டி தனிப்பட்ட தாக்குதல்கள் அதிகரிப்பு ஏன்? கனிமொழி உள்ளிட்ட தலைவர்கள் சொல்வது என்ன?

அரசியலை தாண்டி தனிப்பட்ட தாக்குதல்கள் அதிகரிப்பு ஏன்? கனிமொழி உள்ளிட்ட தலைவர்கள் சொல்வது என்ன?
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

தமிழ்நாட்டின் அரசியலில் கூர்மையான வார்த்தைகளுக்கு என்றுமே பஞ்சம் இருந்ததில்லை. அரசியல் எதிரிகள், ஒருவரின் கொள்கை, ஆட்சித் திறன், ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் அரசியல் விசுவாசங்கள் ஆகியவற்றை கடுமையாக விமர்சிப்பது வழக்கமான ஒன்றாக இருந்து வந்துள்ளது. தற்போது திமுகவுக்கும் ஆளும் தமிழக வெற்றிக் கழகத்துக்கும் (தவெக) இடையே தற்போது நடைபெற்று வரும் மோதல், தனிநபர் தாக்குதல்கள் நிறைந்ததாக உள்ளது.

சமீபத்திய சர்ச்சை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், அவசரநிலை காலத்தில் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கைது செய்யப்பட்ட சூழ்நிலைகள் குறித்து கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து வெடித்தது.

ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக உறுதிப்படுத்தும் எந்தப் பதிவும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தக் கருத்துகள் எதிர்ப்பை ஏற்படுத்த, திமுகவின் மூத்த தலைவர் ஆ. ராசா, சனிக்கிழமை நடைபெற்ற போராட்டம் ஒன்றில் பேசியபோது, நிர்மல் குமாரை தனிப்பட்ட முறையில் தாக்கி பேசினார்.

ராசாவின் இந்தப் பேச்சு பல தரப்பினரிடமிருந்து விமர்சனங்களைச் சந்தித்தது. பின்னர் அவர் தமது கருத்துகளைத் திரும்ப பெறுவதாக தெரிவித்தார்.

இது குறித்து அறிக்கை வெளியிட்டிருந்த அமைச்சர் நிர்மல்குமார், "தி.மு.க.வை நோக்கி ஊழல், துரோகம், பொய் குறித்து கேள்விகள் கேட்டால், வன்முறை அல்லது ஆபாசமாக பேசுகின்றனர். மேடை போட்டு, என்னையும், முதல்வரையும் ஆபாசமாக பேச வைப்பதுதான் தி.மு.க.,வின் கடைசி ஆயுதம் போல. தி.மு.க.,வினரின் தரமற்ற பேச்சுகளை, அவர்கள் வீட்டில் பெண்கள், குழந்தைகளிடம் காட்ட முடியுமா என்பதை ஸ்டாலின் கூற வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

ஆனால், இந்த வார்த்தைப் போர் தனித்து நிகழ்ந்த ஒரு சம்பவமல்ல.

சில வாரங்களுக்கு முன்பே, சட்டப்பேரவையிலேயே உதயநிதி ஸ்டாலின் - நிர்மல் குமார் இடையே தனிப்பட்ட வார்த்தை மோதல்கள் நடந்தன.

அத்துடன் முதல்வர் விஜய் மு.க.ஸ்டாலினை குறித்து பேசுகையில் செய்த உடல் மொழி விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டது. பிறகு தனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டது என்றும் உள்நோக்கம் கொண்டதல்ல என்றும் அவர் விளக்கமளித்திருந்தார்.

தமிழக முதல்வர் விஜய்

பட மூலாதாரம், TN GOVT

படக்குறிப்பு, தமிழக முதல்வர் விஜய்

இந்தச் சம்பவங்கள், தமிழ்நாட்டில் தற்போது உருவாகியுள்ள புதிய போட்டியான திமுக மற்றும் தவெக இடையேயான அரசியல் விவாதங்களின் தன்மை குறித்து ஒரு பெரிய கேள்வியை எழுப்புகிறது.

கொள்கைகள் அல்லது ஆட்சிசார் செயல்பாடுகளை விமர்சிப்பதை விட, எதிர் தரப்பினரின் அரசியல் அல்லது நிர்வாகத்துடன் நேரடி தொடர்பு இல்லாதவற்றை நோக்கி அரசியல் தாக்குதல்கள் நகர்ந்து வருகின்றன.

மூத்த பத்திரிகையாளர் மாலன் இது போன்ற பேச்சுகளுக்கு சமூக ஊடகங்களின் தாக்கம் ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார்.

"தற்போதைய யூ டியூப் கலாசாரத்தில், அதிக வெளிச்சம் கிடைப்பதற்காக எல்லாவற்றையும் பரபரப்பாக்க நினைக்கிறார்கள். தனிப்பட்ட முன்பகையும் இதற்கு காரணமாக இருக்கலாம். விஜய் தனது உடல்மொழியையும் கொண்டு சில விசயங்களை சொல்ல நினைக்கிறார். உடல்மொழி அவைக் குறிப்பில் இடம்பெறாதல்லவா, அதே நேரம் தான் சொல்ல நினைத்ததையும் புரிய வைக்க முடியும். தற்போது இந்த சர்ச்சை வெடித்ததால், மக்கள் பிரச்னைகள் பேசுவதற்கு பதிலாக சட்டப்பேரவைக்கு உள்ளேயும் வெளியேயும் இதுவே விவாதிக்கப்படுகிறது" என்றார்.

மூத்தப் பத்திரிகையாளர் மாலன்

பட மூலாதாரம், Maalan

படக்குறிப்பு, மூத்தப் பத்திரிகையாளர் மாலன்
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இதே போன்று 2021-ம் ஆண்டில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆ.ராசா பேசியது சர்ச்சைக்குள்ளானது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த நிலையில், தமிழ்நாடு தேர்தல் அலுவலர், தேர்தல் ஆணையத்துக்கு ஆ.ராசாவின் பேச்சு குறித்து நடவடிக்கை எடுக்க அறிக்கை அனுப்பியிருந்தார். ஆ.ராசா தான் பெண்களை எந்த வகையிலும் இழிவுபடுத்தும் வகையில் பேசவில்லை என்று கூறியிருந்தார்.

"இது தனிநபர் சார்ந்ததும் கூட, திமுக, அதிமுக, தவெக என எந்த கட்சியாக இருந்தாலும் அனைவரும் இது போன்று பேசமாட்டார்கள். இது போன்று பேசுபவர்களை குறிப்பிட்டு சொல்ல முடியும். மிஸா விவகாரம் குறித்து மற்றொரு ஊரில் பேசிய திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான திருச்சி சிவா கண்ணியத்துடன் பேசியிருந்தார்" என்கிறார் மாலன்.

சனிக்கிழமை ஆ.ராசாவின் கருத்து சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை திமுக நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி, "யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு" என்ற திருக்குறளை தனது எக்ஸ் கணக்கில் பதிவிட்டிருந்தார்.

இந்த குறளின் அர்த்தம் - ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும்; இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகி விடும் என்பதாகும்.

அரசியல் அரங்கில் நடைபெறும் கருத்து மோதல்கள் குறித்து கனிமொழியிடம் கேட்ட போது, "மிகவும் வருந்தத்தக்கதாக, அருவருக்கத்தக்கதாக உள்ளது. யாராக இருந்தாலும் அதை (அவதூறாக பேசுவதை) நிறுத்த வேண்டும். தாக்குதல்கள் பெரும்பாலும் பெண்களை மையப்படுத்தியே இருக்கின்றன. சில நேரங்களில் பொது வாழ்க்கையில் இல்லாதவர்களும் தாக்கப்படுகிறார்கள். இப்படி பேசுபவர்கள் எந்த கட்சியினராக இருந்தாலும், அவர்கள் அதை நிறுத்த வேண்டும்" என்றார்.

மூத்தப் பத்திரிகையாளர் மாலன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி

"வீட்டில் எல்லோரும் பெண்களுடன் தானே வாழ்கிறார்கள், பெண்ணுரிமை என்பது எங்கோ கடன் வாங்கி பெற்று தருவது அல்ல. சட்டப்பேரவை இப்போது சண்டை மன்றமாக மாறி வருகிறது" என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி.

அதே நேரம் பேரவையில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் குறித்து பெண் உறுப்பினர்கள் எழுப்பிய நேர்மறையான விமர்சனத்தையும் பாலபாரதி வரவேற்றார்.

'’சில வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்று மார்க்சிஸ்ட் உறுப்பினர் லதா, பாமக உறுப்பினர் சௌம்யா அன்புமணி, தேமுதிக உறுப்பினர் பிரேமலதா ஆகியோர் வலியுறுத்தினர். ஆனால் இப்போதும் அரசு அலுவல் விவகாரங்களை திருமணமாகாத பெண்களை செல்வி என்றும், திருமணமானவர்களை திருமதி என்றும் குறிப்பிடுகிறார்கள். இதனை 'திருமிகு' என்று குறிப்பிட வேண்டும்" என்றார்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி

பட மூலாதாரம், Facebook

படக்குறிப்பு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி

இதில் ஒரு முரண்பாடும் உள்ளது. பெண்களின் கண்ணியத்தைக் காக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி, பொதுவாழ்வில் மரியாதை நிலைக்க வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் வலியுறுத்தும் அதே நேரத்தில், அரசியல் மோதல்களில் பயன்படுத்தப்படும் வார்த்தை பெரும்பாலான நேரங்களில் பெண்களை குறி வைப்பதாகவே உள்ளன. சமூக வலைதளங்களில் பரவிவிட்ட பிறகு, அப்படிப்பட்ட வார்த்தைகளை திரும்ப பெறுவதும் நாளுக்கு நாள் கடினமாகிறது.

சட்டப்பேரவையில் பேசிய போது முதல்வர் விஜய், பெண்களை இழிவுபடுத்தும் வகையில் யாரும் பேச வேண்டாம் என கடுமையாக எச்சரித்தார்.

பெண்களுக்கான சொத்துரிமை, உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு போன்றவற்றை கொண்டு வந்ததில் தங்களது பங்கு குறித்து திமுக தொடர்ந்து பேசி வருகிறது.

"நான் பேசும் பெண்ணுரிமை மற்றவர்களுக்கு மட்டுமே, என் மனதில் விழிப்புணர்வு ஏற்படாது என்றிருப்பது சரியான அணுகுமுறை அல்ல. தேர்தல் நேரத்தில் அதிமுகவை சேர்ந்த சிவி சண்முகம் சர்ச்சைக்குரிய வார்த்தைகளை பேசியிருந்தார். உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அறிமுகப்படுத்தியது திமுக. தவெக அமைச்சர் ஒருவர் பேசுவதை விட திமுக தலைவர் பேசுவதையே மக்கள் கூர்ந்து கவனிப்பார்கள்" என்று பாலபாரதி கூறுகிறார்.

"இந்த பொறுப்பு எல்லாருக்கும் இருக்கிறது. தலைவர்கள், சமூக ஊடகங்களில் பேசுபவர்கள், மேடைகளில் பேசுபவர்கள், கமெண்ட் செய்பவர்கள், அதை படித்து ரசிப்பவர்கள் எல்லாருக்கும் இதில் பொறுப்பு இருக்கிறது. அனைவரும் இந்த போக்கை உடனே நிறுத்த வேண்டும்" என்று கனிமொழி வலியுறுத்தினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு