சீனாவின் சொந்த தேவைகளே அதனை இந்தியாவுடன் நெருங்கி வரச் செய்கிறதா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், தீபக் மண்டல்
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
இந்த மாதத் தொடக்கத்தில் கிர்கிஸ்தான் தலைநகரான பிஷ்கெக்கில் நடைபெற்ற எஸ்சிஓ கூட்டத்தின் போது இந்திய பிரதமர் மோதியுடன் கைகுலுக்கும் முன்பே, பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க சீன அதிபர் ஷி ஜின்பிங் இந்தியா வரக்கூடும் என்ற ஊகங்கள் பரவத் தொடங்கின.
செப்டம்பர் 12 அன்று, பிரிக்ஸின் 18ஆவது கூட்டத்தில் பங்கேற்க ஜின்பிங் புதுடெல்லி வந்ததன் மூலம் அந்த ஊகங்கள் உண்மையாகின.
கடைசி ஏழு ஆண்டுகளில் அவர் இந்தியாவிற்கு மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும்.
2020 ஜூன் 15 அன்று கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன படையினருக்கிடையே ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு இருநாட்டு உறவு மோசமடைந்தது. அதன் பிறகு 2025ல் நடைபெற்ற எஸ்சிஓ கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோதி சீனா சென்றபோது உறவில் மாற்றத்திற்கான அறிகுறிகள் தெரிந்தன.
கல்வான் மோதலுக்குப் பிறகு அதிகரித்த கசப்புக்குப் பின், ஷி ஜின்பிங் இந்தியா வர சம்மதிக்க காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது.
உலகளாவிய புவிசார் அரசியல் சூழ்நிலைகளில் ஏற்பட்ட வேகமான மாற்றங்களும், சீன பொருளாதாரம் எதிர்கொள்ளும் சவால்களும் இதற்கான பதிலை அளிக்கின்றன என நிபுணர்கள் கூறுகின்றனர்.
எல்லைப் பகுதியில் இந்தியாவும் சீனாவும் கடுமையான போட்டியாளர்களாக இருந்தாலும், வர்த்தகத் துறையில் அவை முக்கியமான கூட்டாளிகளாக உள்ளன.
எல்லையில் மோதல், வர்த்தகத்தில் கூட்டாளிகள்

பட மூலாதாரம், Getty Images
இந்தியா மற்றும் சீன படைகளுக்கிடையே பலமுறை பதற்றம் நிலவியிருந்தாலும், அதன் தாக்கம் இருநாட்டு வர்த்தகத்தில் பெரிதாக பிரதிபலிக்கவில்லை.
இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக மதிப்பு 151.5 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. 2025-26 காலகட்டத்தில் சீனாவுடனான இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை மிக அதிகமாக உள்ளது. அது 112.16 பில்லியன் டாலரைத் தாண்டியுள்ளது.
இந்தியாவின் தொழில்துறை லட்சியங்கள் பெருமளவில் சீன தொழில்நுட்பத்தை பெறுவதை சார்ந்து வருகின்றன.
2025-ல் இந்தியா சீனாவிலிருந்து சுமார் 57 பில்லியன் டாலர் மதிப்பிலான மின்னணு மற்றும் மின்சார உபகரணங்களை இறக்குமதி செய்தது.
ஸ்மார்ட்போன் முதல் தொலைத்தொடர்பு வலைப்பின்னல்கள் மற்றும் மின்னணு சாதனங்களின் தொகுப்பு பணிவரை, சீன உதிரிபாகங்களின் மீது இந்தியா எவ்வளவு சார்ந்துள்ளது என்பதை இது காட்டுகிறது. இந்திய மருந்துத் தொழிலும் சீனாவை பெரிதும் சார்ந்துள்ளது; இதில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான ஏபிஐ-கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
மறுபுறம், இந்தியாவை தனது பொருட்களுக்கான மிகப்பெரிய சந்தையாக சீனா பார்க்கிறது. 2025ஆம் ஆண்டு இந்தியாவில் 15 கோடிக்கும் மேற்பட்ட ஸ்மார்ட்போன்கள் விற்பனையாயின. அதில் 90 சதவீதம் போன்களோ அல்லது அவற்றின் உதிரிபாகங்களோ சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. ஷோவ்மி, விவோ மற்றும் ஓப்போ போன்ற சீன நிறுவனங்களுக்கு இந்திய சந்தை மிக முக்கியமானதாக இருந்துள்ளது.
2025-ல் 45 லட்சம் கார்கள் விற்பனையான இந்திய கார் சந்தையையும் சீனா கவனமாக நோக்கி வருகிறது. 2020க்கு முன்பு, இந்திய ஸ்டார்ட்அப் சூழலில் சீன நிறுவனங்கள் பில்லியன்கணக்கான டாலர்களை முதலீடு செய்திருந்தன.
அலிபாபா குழுமமும் டென்சென்ட் ஹோல்டிங்ஸும் பேடிஎம், சோமாட்டோ, ஓலா எலக்ட்ரிக் மற்றும் பைஜூஸ் போன்ற நிறுவனங்களில் அதிகமாக முதலீடு செய்திருந்தன.
ஆனால் 2020 மோதல்களுக்கு பிறகு, பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து பல சீன முதலீடுகளுக்கு அனுமதி வழங்க இந்தியா மறுத்தது. அதேபோல் சீனா தனது நிறுவனங்கள் அரிய கனிமப் பொருட்கள், கார்கள் தயாரிக்கப் பயன்படும் காந்தங்கள் மற்றும் பிற பொருட்களை இந்தியாவுக்கு விற்பனை செய்வதை தடுக்க முயன்றது.
இதற்கிடையில் புவிசார் அரசியல் சூழல் வேகமாக மாறியிருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். டிரம்பின் சுங்க வரிகளும் அமெரிக்கா-இரான் போரும் உலகளாவிய வணிக நம்பிக்கைக்கு பெரிய அதிர்ச்சியளித்தன.
இரான் போரால் சீனாவுக்கு கூடுதல் சிக்கல்

பட மூலாதாரம், Getty Images
2025-ல் டொனால்ட் டிரம்ப் சீனா மீது வரிகளை விதித்தபோது, சீன பொருளாதாரம் ஏற்கனவே குறைந்த வளர்ச்சி விகிதம், வேலைவாய்ப்பின்மை போன்ற சிக்கல்களை எதிர்கொண்டிருந்தது.
இருப்பினும் அது தனது ஏற்றுமதியை அதிகரித்து, சுமார் ஐந்து சதவீத வளர்ச்சியை பதிவு செய்தது.
ஆனால் நாட்டிற்குள் பொருளாதார அதிருப்தி அதிகரித்து வருகிறது.
சீனா ஏற்றுமதியை மையமாக கொண்ட ஒரு பொருளாதாரமாகும். ஆனால் இரான் போருக்குப் பிறகு உலகளவில் பொருட்களுக்கான தேவை குறைந்ததால், உலகின் மிகப்பெரிய உற்பத்தி மையமான சீனாவிற்கு தனது பொருட்களை விற்பனை செய்வது கடினமாகியுள்ளது.
சீனாவை கண்காணித்து வரும் பத்திரிகையாளர்களின் கருத்துப்படி, வர்த்தக உபரிநிலை கொண்ட நாடாக இருந்தாலும், சீனாவின் உள்நாட்டு சந்தையில் தேவை போதுமான அளவில் இல்லை.
இந்தப் பிரச்னை அதன் பொருளாதார வளர்ச்சியை மந்தமாக்குகிறது. இங்குதான் இந்திய சந்தை சீனாவுக்கு முக்கியமாகிறது. 140 கோடி மக்களைக் கொண்ட இந்தியா ஏற்கனவே பெரிய சந்தையாக உள்ளது. இந்த சந்தை தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதால், சீன பொருட்களுக்கு இந்தியாவில் அதிக வாய்ப்புகள் உருவாகின்றன.
சீனா எந்த நெருக்கடியில் சிக்கியுள்ளது?

பட மூலாதாரம், Getty Images
சீனா தனது மந்தமடைந்து வரும் பொருளாதாரத்தைக் கருத்தில் கொண்டு, சமீபத்தில் 8 அரசு வங்கிகளுக்கும் காப்பீட்டு நிறுவனங்களுக்கும் சுமார் 54 பில்லியன் டாலர் பண உதவி வழங்க முடிவு செய்துள்ளது. இதன் நோக்கம் நிதி அமைப்பை வலுப்படுத்துவதும் நுகர்வோர் தேவையை அதிகரிப்பதும் ஆகும்.
பிபிசி செய்தியாளர் லாரா பிக்கர் தனது ஒரு செய்தியறிக்கையில் சீனாவின் உள்நாட்டு பொருளாதார சிக்கல்களை விவரித்துள்ளார்.
"140 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்ட சீனாவிற்கு பெரிய உள்நாட்டு சந்தை உள்ளது. ஆனால் மக்கள் செலவழிக்க விரும்பவில்லை. உள்நாட்டு நுகர்வு பலவீனமாக உள்ளது. ஏற்றுமதிக்குத் தேவையான அளவு பொருட்கள் இருந்தாலும், நாட்டின் உள்ளே தேவையை அதிகரிப்பதில் சீனா சிரமப்படுவதாக தோன்றுகிறது" என அவர் எழுதுகிறார்.
"இதற்குக் காரணம் அமெரிக்காவுடனான சீனாவின் வர்த்தகப் போர் அல்ல, மாறாக அதன் உள்நாட்டுப் பொருளாதார நிலைதான் காரணம். உதாரணமாக, சீனாவின் பிரமாண்டமான வீட்டு வசதித் துறை சரிந்துள்ளது. ஒரு காலத்தில் மலிவான கடன்களின் உதவியால் வளர்ச்சி கண்ட வீட்டு வசதி துறை தற்போது அதிகப்படியான விநியோகத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் மக்களிடம் செலவழிக்கும் அளவு பணமும் இல்லை. சீனாவின் மொத்த மக்கள் தொகையை கணக்கில் கொண்டாலும் நாட்டில் உள்ள அனைத்து காலி குடியிருப்புகளையும் நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது."
தற்போது 300 கோடி மக்களுக்கு போதுமான அளவு காலி வீடுகள் இருப்பதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சீன புள்ளிவிவரத் துறையின் முன்னாள் துணைத் தலைவர் ஹே கெங் ஒப்புக்கொண்டதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"மத்திய வர்க்க சீனக் குடும்பங்களுக்கு வீட்டு விலை மட்டும் கவலையாக இல்லை என லாரா பிக்கர் குறிப்பிடுகிறார்.
அரசு அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குமா என்பது குறித்தும் அவர்கள் கவலைப்படுகின்றனர். அடுத்த பத்து ஆண்டுகளில் 50 முதல் 60 வயதுக்குள் உள்ள சுமார் 3 கோடி மக்கள் பணியாற்றும் துறையிலிருந்து வெளியேறுவார்கள். 2019-ல் சீன சமூக அறிவியல் அகாடமி வெளியிட்ட மதிப்பீட்டின்படி, அரசு ஓய்வூதிய நிதி 2035க்குள் காலியாகக்கூடும்."
"லட்சக்கணக்கான பட்டதாரிகள் வேலைக்காக போராடி வருகின்றனர் என்பதால் தங்களது குழந்தைகளும் பேரக்குழந்தைகளும் வேலை பெறுவார்களா என்பதை பற்றியும் மக்கள் கவலைப்படுகின்றனர்," என அவர் எழுதியுள்ளார்.
2023 ஆகஸ்டில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, சீன நகர்ப்புறங்களில் 16 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் ஐந்தில் ஒருவருக்கும் அதிகமானோர் வேலை இல்லாமல் இருந்தனர். அதன் பின்னர் இளைஞர் வேலைவாய்ப்பின்மைத் தரவுகளை அரசு வெளியிடவில்லை.
சீனா ஒரே இரவில் அமெரிக்காவிற்கு பொருட்களை விற்பனை செய்வதிலிருந்து உள்ளூர் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வதற்கு மாற முடியாது என்பதே சிக்கல்.
சீனாவின் வர்த்தக உபரி மற்றும் இந்திய சந்தை

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் கிழக்காசிய ஆய்வுகள் துறையின் இணைப் பேராசிரியர் அரவிந்த் யெலேரி கூறுகையில், கல்வான் மோதலுக்குப் பிறகும் சீனா இந்தியாவுடனான வர்த்தகத்தைத் தொடர்ந்து நடத்தியதாகக் கூறுகிறார்.
"கல்வான் மோதலுக்குப் பிறகும் சீனா இந்தியாவுடனான வர்த்தகத்தைத் தொடர்ந்தது. இந்தியா விதித்த கட்டுப்பாடுகளுக்கு பதிலளித்து சீனாவும் கடுமையான தடைகளை விதித்திருக்கலாம். ஆனால் அது அப்படி செய்யவில்லை. 2022, 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவுடனான சீனாவின் வர்த்தகம் தொடர்ந்து உயர்ந்தது. சீனாவின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை தொழில்கள் இந்தியாவுடனான வர்த்தகத்தின் மூலம் பயன் பெறுகின்றன என்பதை சீனா நன்கு அறிந்துள்ளது. இதனால் உள்நாட்டு சந்தைக்கு பணப் பரிவர்த்தனை அதிகரித்து தேவையும் உயரும்" என அவர் பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார்.
"ஐரோப்பா, அமெரிக்காவுடனான சீனாவின் வர்த்தக உறவுகள் நீண்ட காலமாக வலுவாக இருந்தன. ஆனால் 2017-18க்குப் பிறகு அந்த சந்தைகளில் சீனாவுக்கு இருந்த வாய்ப்புகள் குறைந்தன" என அவர் சொல்கிறார்,
"இந்தியா தனது வர்த்தகத் தொடர்புகளை பன்முகப்படுத்த விரும்புகிறது. ஆனால் அதன் வரம்புகளையும் வாய்ப்புகளையும் சீனா நன்கு புரிந்துள்ளது. அதனால் இந்தியா தன்னை சார்ந்திருக்க வேண்டும் என்பதே அதன் விருப்பம். ஏற்கனவே உள்ள நிலையான வாடிக்கையாளரை அது இழக்க விரும்பவில்லை. தற்போதைய வளர்ச்சி தொடருமானால், அடுத்த ஐந்து முதல் ஏழு ஆண்டுகளில் இருநாட்டு வர்த்தகம் 200 பில்லியன் டாலரை எட்டலாம்." என அரவிந்த் யெலேரி கூறுகிறார்.
"சீனா இந்தியாவுடன் ஒரு நீண்டகால உத்தியிலும் பணியாற்றி வருகிறது. வர்த்தக ஒத்துழைப்பை அதிகரிப்பதன் மூலம், இந்தியாவுடன் புவிசார் அரசியல் மற்றும் அரசியல் ரீதியிலான உறவுகளையும் இயல்புநிலைக்குக் கொண்டு வர சீனா விரும்புகிறது" என்கிறார் அவர்.
"சீனாவிடம் அதிகப்படியான உற்பத்தி உள்ளது. ஆனால் உற்பத்திச் செலவுகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. தயாராக உள்ள பொருட்களுக்கு உள்நாட்டில் தேவை இல்லை. இந்த உபரி உற்பத்தியை உலக சந்தைகளில் விற்பனை செய்து, அதன் மூலம் வரும் பணத்தை உள்நாட்டு தேவையை அதிகரிக்க பயன்படுத்த சீனா விரும்புகிறது. அதனால் இந்தியா போன்ற மிகப்பெரிய சந்தையைக் கொண்ட நாடு அதற்கு அவசியமாகிறது."
வர்த்தகம் தொடரும், போட்டியும் தொடரும்
கடந்த ஆண்டு இந்தியாவும் சீனாவும் நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்கின. சீன வணிக நிபுணர்களுக்கான விசா செயல்முறையையும் இந்தியா எளிமையாக்கியது. இருந்தபோதிலும், இரு நாடுகளுக்கிடையிலான வணிகப் போட்டி எளிதில் முடிவுக்கு வர வாய்ப்பில்லை.
ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, சீனாவின் அலிபே பணப் பரிவர்த்தனை அமைப்பை இந்தியாவின் உடனடி பணம் செலுத்தும் அமைப்புடன் இணைக்கும் முன்மொழிவுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. தேசிய பாதுகாப்பு தொடர்பான கவலைகள் காரணமாக, ஆன்ட் குரூப்புடன் தொடர்புடைய இந்த சேவைக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
சீன மொபைல் நிறுவனமான ஷோவ்மிக்கு எதிராக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்ற எஸ்எஃப்ஐஓ பரிந்துரையையும் இந்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இதற்கிடையில், இந்தியாவுக்கு முக்கிய தொழில்நுட்பங்களையும் கட்டமைப்பு வசதிகளையும் வழங்க வேண்டாம் என்று சில சீன நிறுவனங்களை அந்நாட்டு அதிகாரிகள் அறிவுறுத்தியதாக இந்திய தரப்பில் ஒருவரை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
இதில் துறைமுக உபகரணங்கள், சூரிய மின்பலகைகள் மற்றும் மொபைல் போன் தயாரிப்பிற்கு தேவையான உபகரணங்கள் அடங்கும். ராய்ட்டர்ஸ் இதுகுறித்து கேட்டபோது சீன வர்த்தக அமைச்சகம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































