'மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி'- தவெக கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்ன?

மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

தவெக கூட்டணிக்கு 'மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றி கழகத்தின் கூட்டணிக் கட்சிகளை ஒன்றிணைக்கும் இரண்டாவது கூட்டம் இன்று (செப்டம்பர் 09) சென்னையில் நடந்து முடிந்துள்ளது.

இந்தக் கூட்டத்தின் முடிவில், தவெக கூட்டணிக்கு 'மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி' என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தமிழக வெற்றிக் கழகத்துடனான கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.

கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று (செப். 9) சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. ஆனால், இந்தக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் முன்னரே அறிவித்திருந்தன.

இந்தக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், "தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான கூட்டணியாக இது இருக்கும், இதன் தலைவராக தமிழக முதலமைச்சர் விஜய் இருப்பார். இந்தியா கூட்டணியின் அங்கமாகவே இந்தக் கூட்டணி இருக்கும். 2029 தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளர் யார் என்பது தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்படும்" என்று கூறினார்.

'மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி'- தவெக கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்ன?

பட மூலாதாரம், TNDIPR

இது தொடர்பாகப் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர், "இந்தக் கூட்டணி பலமான கூட்டணியாக இருக்கும், வரப்போகும் இடைத்தேர்தலில் இந்தக் கூட்டணியின் சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் நாளை (செப்டம்பர் 10) அறிவிக்கப்படும். சமூக நீதி மற்றும் மதச்சார்பின்மையின் அடிப்படையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஒரு நல்ல ஆட்சி அமைந்துள்ளது" என்று கூறினார்.

அதன் பின்னர் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், "இதுவரை ஆதரவுக் கட்சிகளாக இருந்த நாங்கள் இப்போது கூட்டணிக் கட்சிகளாக மாறியுள்ளோம். அகில இந்திய அளவில் மதச்சார்பின்மையைப் பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது. அதை உணர்ந்துதான், நாங்கள் ஒருமித்த கருத்துடன் இந்தக் கூட்டணியை உருவாக்கியுள்ளோம்" என்று கூறினார்.

மேலும், "இது தேர்தலுக்கான கூட்டணி மட்டும் இல்லை. சமூக நீதி, மதச்சார்பின்மை போன்ற விழுமியங்களைப் பாதுகாக்கும் நோக்கிலான கூட்டணி இது. அதன் அடிப்படையிலேயே பயணிப்போம். இடையே வரும் தேர்தல்களை இணைந்து சந்திப்போம்" என்றார்.

'மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி'- தவெக கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்ன?

"இந்துத்துவா, பாசிச சக்திகளுக்கு என்றுமே தமிழ்நாட்டில் இடமில்லை என்பதை உணர்த்தும் வகையில் இந்தக் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. அதை பெயரிலேயே வெளிப்படுத்தியுள்ளோம்" என்று செய்தியாளர்களிடம் பேசினார் மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ.

"மாவட்ட அளவில் கூட்டணிக் கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுவோம். இதற்கான கூட்டங்கள் மாவட்டந்தோறும் நடைபெறும். வரப்போகும் தேர்தல்களில் இந்தக் கூட்டணியின் வேட்பாளர்கள் வெற்றி பெற அனைவரும் பாடுபடுவோம். குறிப்பாக, இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் முதலமைச்சர் விஜய் தலைமையில் கூட்டணித் தலைவர்கள் பங்குபெறும் பிரசாரக் கூட்டங்கள் நடைபெறும்" என்றும் அவர் கூறினார்.

"தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்தக் கூட்டணியில் வெற்றிகரமாகச் செயல்படும், தேர்தல்களில் வெற்றிவாகை சூடும் என்ற நம்பிக்கையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது" என்றார் வைகோ.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு