'90 ஆண்டுகள் பழமையான கணிதச் சிக்கலை 88 மணி நேரத்தில் தீர்த்தோம்' - ஓபன்ஏஐ

பட மூலாதாரம், Reuters
- எழுதியவர், கெலி ஹேய்ஸ்
- பதவி, தொழில்நுட்ப செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
பல தசாப்தங்களாக தீர்வு காணப்படாமல் இருந்த மேம்பட்ட கணித சிக்கலை புதிய செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) மாதிரி மற்றும் ஆயிரக்கணக்கான ஏ.ஐ பாட்களைப் பயன்படுத்தி சில மணி நேரங்களிலேயே தீர்வு கண்டுள்ளதாக ஓபன் ஏஐ தெரிவித்துள்ளது.
சாட்ஜிபிடி- ஐ உருவாக்கிய ஓபன் ஏஐ, சுமார் 10,000 ஏஐ ஏஜென்ட்கள் கொண்ட குழுவை ஒருங்கிணைத்து, கடினமானதாகக் கருதப்படும் ஒரு கணித சிக்கலுக்கு வெறும் 88 மணி நேரத்தில் தீர்வு கண்டதாக செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. ஏஐ ஏஜென்ட்கள் என்பது ஓரளவுக்குத் தன்னிச்சையாகப் பணிகளை மேற்கொள்ளக்கூடிய ஏஐபாட்கள் ஆகும்.
இந்த சிக்கல் திரவங்கள் எவ்வாறு நகர்கின்றன என்பது தொடர்பான நேவியர்-ஸ்டோக்ஸ் சமன்பாடுகளுடன் தொடர்புடையது. இந்த சிக்கலின் முக்கியமான சில அம்சங்களுக்கு 90 ஆண்டுகளாகவும் கணிதரீதியான நிரூபணம் கிடைக்கவில்லை. அதாவது, ஒரு கணிதச் சமன்பாடு சரியானது என்பதை நிரூபிக்கும் ஆதாரம் இதுவரை கண்டறியப்படவில்லை.
தாங்கள் கண்டறிந்த தீர்வை ஒரு "மைல்கல்" என்று ஓபன் ஏஐ குறிப்பிட்டுள்ளது. ஏ.ஐ கருவிகள் மிக வேகமாக முன்னேறி வருகின்றன என்பதற்கு இது ஓர் ஆதாரம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால், ஓபன் ஏஐ கண்டறிந்ததாகக் கூறும் தீர்வு இன்னும் சுயாதீனமாகச் சரிபார்க்கப்படவில்லை. அமெரிக்காவைச் சேர்ந்த கணித அமைப்பான க்ளே கணித நிறுவனம் இதை பொதுவெளியில் ஏற்றுக்கொள்ளவுமில்லை. குறிப்பிட்ட சில சிக்கலான கணிதப் பிரச்னைகளுக்கு முதலில் தீர்வு காண்பவர்களுக்கு பெரும் பரிசுத்தொகை வழங்கும் மில்லினியம் பரிசுத் திட்டத்தை இந்த நிறுவனம் நடத்துகிறது.
இருப்பினும், ஓபன் ஏஐயின் இந்தக் கூற்று ஏற்கெனவே எதிர்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
நியூயார்க் பல்கலைக்கழகத்தின் கணிதப் பேராசிரியர் டிரிஸ்டன் பக்மாஸ்டர், தானும் ஓபன் ஏஐயின் போட்டி நிறுவனமான ஆந்த்ரோபிக்ல் பணியாற்றும் கணிதவியலாளர் லெவென்ட் அல்போகேவும் இதே சிக்கலுக்கு தீர்வு காணும் பணியில் ஈடுபட்டிருந்ததாக செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
தங்களது ஆய்வுப் பணியில் ஓபன் ஏஐயின் கோடேக்ஸ் கருவியை இருவரும் பயன்படுத்தி வந்ததாகவும் அவர் கூறினார். ஆனால், செப்டம்பர் 3-ஆம் தேதி தங்களது ஆய்வின் முன்னேற்றம் குறித்த தகவல்கள் ஓபன் ஏஐக்கு அனுப்பப்பட்டிருப்பதைத் தான் அறிந்துகொண்டதாக பக்மாஸ்டர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
ஓபன் ஏஐ தனது நேவியர்-ஸ்டோக்ஸ் ஆய்வை வெளியிடுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே பக்மாஸ்டரின் அறிக்கை வெளியானது
"எங்களது ஆய்வுப் பணி குறித்த தகவல்கள் ஓபன் ஏஐ-யை சென்றடைந்த பிறகுதான்" அந்த நிறுவனம் நேவியர்-ஸ்டோக்ஸ் சமன்பாடுகள் குறித்து பணியாற்றத் தொடங்கியதாக பக்மாஸ்டர் குற்றம்சாட்டினார்.
இந்த ஆய்வு தொடர்பாக ஓபன் ஏஐயுடன் பரிமாறிக்கொண்ட மின்னஞ்சல்களின் பகுதிகளையும், அந்த நிறுவனத்தின் ஆய்வுப் பணியின் நேரம் மற்றும் முறைகள் குறித்து தான் எழுப்பிய கேள்விகளையும் அவர் தனது அறிக்கையில் இணைத்திருந்தார்.
ஓபன் ஏஐ வெளியிட்ட முழுமையான கணித நிரூபணத்தை தான் இன்னும் படிக்கவில்லை என்றும் பக்மாஸ்டர் கூறினார். இருப்பினும், "என்னிடம் என்ன கூறப்பட்டது, எப்போது கூறப்பட்டது, என்ன முன்மொழியப்பட்டது" என்பது குறித்து பொதுவெளியில் தெரிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.
"ஏனெனில், எனக்குத் தெரிந்தபடி உண்மையல்லாத ஒன்றை தொடர்ச்சியான அறிவிப்புகள் உண்மை என்று காட்டுவதற்கு அனுமதிப்பதைவிட இதை வெளிப்படையாகக் கூறுவதே சரி" என்றும் அவர் கூறினார்.
இதற்கு பதிலளித்த ஓபன் ஏஐ, பக்மாஸ்டர் மற்றும் அல்போகே ஆகியோரின் "ஒரே நேரத்தில் நடைபெற்ற ஆய்வுப் பணியை" செவ்வாய்க்கிழமை பாராட்டியது. அவர்களது பணி "குறிப்பிடத்தக்கது" என்றும் அந்நிறுவனம் தெரிவித்தது.
மேலும், "அவர்கள் தங்களது ஆய்வை பொதுவெளியில் வெளியிடும் வரை, எந்த வழியிலும் அவர்களது ஆய்வுப் பணியை நாங்கள் பார்த்ததில்லை" என்று ஓபன் ஏஐ கூறியது. நேவியர்-ஸ்டோக்ஸ் சிக்கலில் தாங்கள் மேற்கொண்ட ஆய்வின்போது எந்தவொரு பயனர் தரவையும் அணுகவில்லை என்றும் அந்நிறுவனம் தெரிவித்தது.
"இது நடப்பதற்கான வாய்ப்பு குறைவாக இருந்தாலும், எங்கள் தயாரிப்புகளை அவர்கள் பயன்படுத்தியதில் இருந்து அடையாளம் நீக்கப்பட்ட தரவுகள் எங்கள் மாதிரிகளை மேம்படுத்துவதற்கு உதவியிருக்கலாம் என்பதை முழுமையாக நிராகரிக்க முடியாது," என்றும் ஓபன் ஏஐ தெரிவித்தது.
"எனினும், எங்களது நிரூபணங்கள் அவர்களுடைய நிரூபணங்களிலிருந்து குறிப்பிடத்தக்க அளவில் வேறுபடுகின்றன. நிரூபிக்கப்பட்டுள்ள துல்லியமான முடிவுகள்கூட வேறுபட்டவை," என்றும் அந்நிறுவனம் கூறியது.
ஆகஸ்ட் மாத இறுதியில், கணிதத்தில் சிறப்பாகச் செயல்படக்கூடிய புதிய ஏஐ மாதிரியைப் பயிற்றுவிக்கத் தொடங்கியதாக ஓபன் ஏஐ தெரிவித்தது.
புதிய ஓபன் ஏஐ மாதிரி தற்போது அந்த நிறுவனத்துக்குள் மட்டுமே பயன்படுத்தப்படும் கருவியாக உள்ளது. அதன் சமீபத்திய ஏஐ மாதிரி வெளியீட்டைக் காட்டிலும் இது "குறிப்பிடத்தக்க அளவில் அதிக திறன் கொண்டதாக" இருந்ததால், சில முக்கியமான மேம்பட்ட கணிதச் சிக்கல்களைத் தீர்க்க அதைப் பயன்படுத்த அதன் ஆய்வாளர்கள் முடிவு செய்தனர்.
செப்டம்பர் 1-ஆம் தேதி, அதாவது கடந்த வாரம், "இரண்டு மில்லினியம் பரிசுக் கணிதச் சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட்டதாக வதந்திகள் பரவி வருவதை அறிந்தோம்" என்று ஓபன் ஏஐ தெரிவித்தது.
இதையடுத்து, புதிய நிறுவனத்துக்குள் பயன்படுத்தப்படும் ஏஐ மாதிரியைப் பயன்படுத்திப் பயிற்சி பெற்ற ஆயிரக்கணக்கான ஏஐ பாட்களை, இன்னும் தீர்வு காணப்படாமல் இருக்கும் சில கணிதச் சிக்கல்களுக்கு தீர்வு காணும் பணியில் ஈடுபடுத்த ஓபன் ஏஐ முடிவு செய்தது.

பட மூலாதாரம், Getty Images
செப்டம்பர் 5-ஆம் தேதியன்று, அதாவது 10,000 ஏஐ பாட்களை இந்தப் பணியில் ஈடுபடுத்திய சுமார் 88 மணி நேரத்துக்குப் பிறகு, நேவியர்-ஸ்டோக்ஸ் சமன்பாடுகளின் இருப்பு மற்றும் சீரான தன்மை குறித்த சிக்கலுக்கு தீர்வு கண்டதாக ஓபன் ஏஐ தெரிவித்தது.
ஏஐ பாட்கள் மிகக் குறுகிய நேரத்தில் தீர்வை எட்டியதாகத் தோன்றினாலும், நேவியர்-ஸ்டோக்ஸ் சிக்கலுக்காக மட்டும் அவை கிட்டத்தட்ட 30 லட்சம் செய்திகளைப் பரிமாறிக்கொண்டதாகவும், 130 பில்லியன் வெளியீட்டு டோக்கன்களைப் பயன்படுத்தியதாகவும் ஓபன் ஏஐ தெரிவித்தது.
ஓபன் ஏஐயின் மிகவும் மேம்பட்ட மாதிரிகளிலிருந்து வெளியீடுகளைப் பெறுவதற்கான அதன் சொந்தக் கட்டணத்தை அடிப்படையாகக் கொண்டால், இத்தகைய முயற்சிக்கு சுமார் 10 மில்லியன் டாலர் செலவாகியிருக்கும்.
நேவியர்-ஸ்டோக்ஸ் இருப்பு மற்றும் சீரான தன்மை குறித்த சிக்கலுக்கு தற்போது தீர்வு கண்டுள்ளதாக ஓபன் ஏஐ கூறுகிறது. மில்லினியம் பரிசுக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த நான்கு நிரூபணக் கூற்றுகளில் இரண்டுக்கு இந்தத் தீர்வு விடை அளிக்கிறது. இந்தச் சிக்கலுக்கு முழுமையான தீர்வு காண்பவருக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை 1 மில்லியன் டாலர்.
"இந்த முடிவை வெளியிடுவதன் நோக்கம், எங்களது ஏஐ மாதிரிகள் அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைத் தெரிவிப்பதே. இந்த முடிவுக்காக மில்லினியம் பரிசைக் கோருவது எங்கள் நோக்கம் அல்ல," என்று ஓபன் ஏஐ செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































