மடப்புரம் அஜித்குமார் வழக்கு: டிஎஸ்பி உள்ளிட்ட 4 பேர் மீதான வழக்கு கொலை வழக்காக மாற்றம்

மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர், ஆய்வாளர், சார்பு ஆய்வாளர், தலைமை காவலர் ஆகிய 4 பேர் மீதான வழக்கு கொலை வழக்காக மாற்றி மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நால்வரையும் 16ஆம் தேதி வரை சிறையில் அடைக்க வேண்டும் எனவும் நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலை வழக்காக மாற்றம்

பட மூலாதாரம், Handout
மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர், ஆய்வாளர், சார்பு ஆய்வாளர், தலைமை காவலர் ஆகிய 4 பேர் மீதான வழக்கு கொலை வழக்காக மாற்றி மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நால்வரையும் செப்டம்பர் 16ஆம் தேதி வரை சிறையில் அடைக்க வேண்டும் நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் காவலாளியாக பணிபுரிந்து வந்தவர் அஜித்குமார். இவர் மீது கடந்த 2025ஆம் ஆண்டு, ஜூன் மாதம் இந்த கோவிலுக்கு வந்த மதுரையைச் சேர்ந்த நிகிதா என்பவர், நகை காணாமல் போனது தொடர்பாக புகாரளித்திருந்தார். இது தொடர்பாக காவலாளி அஜித்குமாரிடம் தனிப்படை பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில் ஜூன் 28ஆம் தேதி அவர் உயிரிழந்தார். இந்த வழக்கு அச்சமயத்தில் பெரும் கவனம் பெற்றது. அரசியல் ரீதியான விவாதங்களும் நிகழ்ந்தன.
இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டு கடந்த ஆண்டு ஜூலை 14 ஆம் தேதி முதல் டி.எஸ்.பி மோஹித் குமார் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் பல்வேறு நபர்களிடமும் விசாரணை நடத்தி மதுரை மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
இந்த கொலை வழக்கில் தனிப்படை காவலர்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன், ராமச்சந்திரன் ஆகிய 6 பேரும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற நிலையில் அஜித்குமார் கொலை சம்பவத்தன்று பணியில் இருந்த மானாமதுரை சரக டிஎஸ்பி சண்முகசுந்தரம், திருப்புவனம் காவல்நிலைய ஆய்வாளர் ரமேஷ்குமார் மற்றும் சார்பு ஆய்வாளர் சிவக்குமார், தலைமை காவலர் இளையராஜா ஆகிய 4 பேரின் பெயர்களும் வழக்கில் சேர்க்கப்பட்டன. இவர்கள் 4 பேர் மீதும் சதி செய்தல், தடயங்களை மறைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பட மூலாதாரம், Handout
இந்த வழக்கு மதுரை மாவட்ட 5 ஆவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி தாமோதரன் முன்பு இன்று (செப்டம்பர் 10) விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 6 தனிப்படை காவலர்களுடன், டிஎஸ்பி சண்முகசுந்தரம் மற்றும் திருப்புவனம் காவல்நிலைய ஆய்வாளர் ரமேஷ்குமார் மற்றும் சார்பு ஆய்வாளர் சிவக்குமார், தலைமை காவலர் இளையராஜா ஆகியோரும் ஆஜராகினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி தாமோதரன் டிஎஸ்பி சண்முகசுந்தரம், திருப்புவனம் காவல்நிலைய ஆய்வாளர் ரமேஷ்குமார், சார்பு ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் தலைமை காவலர் இளையராஜா ஆகிய 4 பேர் மீதான வழக்கை கொலை வழக்காக பதிவு செய்ய கோரி வழக்கின் பிரிவை மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.
இதனையடுத்து 4 பேரையும் வரும் 16 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் நீதிபதி உத்தரவு பிறப்பித்த நிலையில் 10 பேரும் மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு






























