பட்டிமன்ற உலகில் தனிக் கவனம் பெற்ற சாலமன் பாப்பையா வறுமையை வென்று சாதித்த கதை

பட மூலாதாரம், Solomonpappaiah/FB
"அன்பு தாய்மார்களே... அருமைப் பெரியோர்களே...இனிய குழந்தைகளே காலை வணக்கம்..." -இந்த வார்த்தைகள் ஒலிக்கத் தொடங்கினாலே பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையாவின் நினைவு வருவதைத் தவிர்க்க முடியாது.
"தனியார் தொலைக்காட்சியில் திருக்குறள் தொடரை ஆரம்பிக்கும்போது எதையாவது சொல்லி ஆரம்பிக்குமாறு நிகழ்ச்சி தயாரிப்பாளர் கூறியதால் இவ்வாறு பேசத் தொடங்கினேன்" என்கிறார் சாலமன் பாப்பையா.
மதுரையில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 11) உடல்நலக் குறைவு காரணமாக சாலமன் பாப்பையா காலமானார். அவருக்கு வயது 90.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடி கிராமத்தில் 1936 ஆம் ஆண்டு சுந்தரம்-பாக்கியம் தம்பதியின் ஒன்பதாவது மகனாக சாலமன் பாப்பையா பிறந்தார்.
பெற்றோர் இருவரும் மில் தொழிலாளிகள். "அம்மா நோயுடன் வாழ்ந்து வந்தார். வீட்டின் நிதி நிலைமை சரியாக இல்லை. உறவுகளில் யாரும் உதவ தயாராக இல்லை. என் வகுப்பறையில் இருந்த நண்பர்களே எனக்கு உதவி செய்தனர்" என, ஊடக பேட்டி ஒன்றில் சாலமன் பாப்பையா கூறியுள்ளார்.
நன்றாக எழுதுவது, பாட்டு பாடுவது, மேடைகளில் பேசுவது, பாடத்தில் முதல் மதிப்பெண் வாங்குவது, நாடகத்தில் நடிப்பது, கதை சொல்வது போன்றவை தமது நண்பர்களுக்குப் பிடிக்கும் என்பதால் தானாக முன்வந்து அவர்கள் உதவி செய்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
"என்னுடைய வீட்டில் யாரும் கல்லூரிக்குப் போனதில்லை. நான் மட்டும் தான் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றேன். எனக்கு மதுரா கோட்ஸில் கிளர்க் வேலை வாங்கித் தரலாம் என்பது என் தந்தையின் கனவாக இருந்தது" என்கிறார் அவர்.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகு மதுரை அமெரிக்கன் கல்லூரிக்கு ஆசிரியர் ஒருவர் அழைத்துச் சென்று விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுத்ததாக சாலமன் பாப்பையா கூறியுள்ளார்.
"ஆனால், 'கல்லூரி கட்டணம் செலுத்த என்னிடம் பணம் இல்லை. நான் உதவி செய்ய முடியாது' என அப்பா கூறிவிட்டார். 69 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டும். என் தூரத்து உறவினர் தன் நகையைக் கொடுத்து படிக்க உதவினார்" என்கிறார் அவர்.
1957 ஆம் ஆண்டு பி.ஏ பொருளாதாரம் படித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்த சாலமன் பாப்பையா, அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுகளை எழுதிக் கொண்டிருந்தார்.
செங்கல்பட்டு வட்டாட்சியர் அலுவலத்தில் அவருக்கு கிளர்க் வேலை கிடைத்துள்ளது. அதே காலகட்டத்தில் மதுரை தியாகராயர் கல்லுரியில் முதுகலை தமிழ் பாடத்தில் சேருவதற்கு இடம் கிடைத்தது.
'மகனுக்கு அரசு வேலை கிடைத்துவிட்டதால் குடும்பத்தின் பொருளதார பிரச்னை தீர்ந்துவிடும்' என அவரின் தந்தை நினைத்த நேரத்தில், குடும்பத்தை சமாதானப்படுத்திவிட்டு முதுகலை தமிழ் படிக்கச் சென்றதாக அவர் கூறியுள்ளார்.
"தமிழ் மொழி மீது ஈடுபாடு வந்ததற்கு தனது தந்தையும் தமிழ் ஆசிரியர்களும் காரணம்" என ஊடக பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார். " என் அப்பா நளவெண்பா பாடுவார். அந்த ஏடுகள் என் வீட்டில் இருந்தன. அவை பாட்டன் காலத்து ஏடுகளாக இருந்தன" என்கிறார்.
'வகுப்பறைகளே மேடைகள்'

பட மூலாதாரம், CMOTamilnadu
"என் வீட்டில் புத்தகங்கள் அதிகம் இல்லை. எனக்குக் கற்றுக் கொடுத்த தமிழ் ஆசிரியர்களை நினைத்துப் பார்க்கிறேன். ஆழமான தமிழ் ஆசையை அவர்கள் தான் விதைத்தனர்" என அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
எம்.ஏ தமிழ் முடித்த உடன் தனக்கு வேலை கிடைக்கவில்லை எனக் கூறும் சாலமன் பாப்பையா, "மதுரையில் டுட்டோரியல் கல்லூரியில் வகுப்பெடுக்க என்னை அழைத்தனர். அது பெண்கள் மட்டுமே நிறைந்த வகுப்பு என்பதால் எவ்வாறு பேச வேண்டும் என்பதற்கான அனுபவம் கிடைத்தது. அங்கிருந்து வேலூர் ஊரிஸ் கல்லூரியில் டியூட்டராக (Tutor) வேலை கிடைத்த பிறகு ஒவ்வொரு வகுப்பும் தனக்கு மேடையாக மாறின" என்று குறிப்பிட்டுள்ளார்.
1961 ஆம் ஆண்டு மதுரை அமெரிக்கன் கல்லூரியில் சாலமன் பாப்பையாவுக்கு டியூட்டர் வேலை கிடைத்தது. மூன்று ஆண்டு ஒப்பந்தத்தில் பணியில் சேர்ந்தார். அவருக்குத் திருமணம் செய்து வைக்கும் வேலைகள் நடந்தன.
"வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நினைத்தேன். ஆனால் அது முடியவில்லை. திருமண செலவுக்கே வழியில்லாத நிலை இருந்ததால் வரதட்ணையைத் தவிர்க்க முடியவில்லை" என்கிறார் அவர்.
அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ஜெயபாய் என்பவரை அவர் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆண், பெண் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
அமெரிக்கன் கல்லூரியில் பணிபுரிந்த காலங்களில் மேடைப் பேச்சுகளில் சாலமன் பாப்பையா தீவிர கவனம் செலுத்தி வந்தார். புதுக்கோட்டையில் 1961 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் புதுகை இலக்கிய மன்றம் நடத்திய கூட்டத்தில் அவர் பேசினார்.
பாரதியார், ரவீந்திரநாத் தாகூரை முன்னிறுத்தி நடத்தப்பட்ட விழாவில் சாலமன் பாப்பையாவின் பேச்சு இலக்கிய ஆர்வலர்களை ஈர்த்தது. பின்னாளில் தான் படித்த கல்லூரியிலேயே பேராசிரியராகவும் தமிழ்த் துறை தலைவராகவும் அவர் உயர்ந்தார்.
குடும்ப உறவுகளை முன்னிறுத்திய பட்டிமன்றம்

பட மூலாதாரம், SolomonPappaih/FB
தொடக்க காலங்களில் படித்தவர்கள் மத்தியில் பட்டிமன்றங்கள் நடத்தப்பட்டு வந்தன. அதனை பாமர மக்கள் மத்தியில் கொண்டு வந்து சேர்த்ததில் குன்றக்குடி அடிகளாருக்கு முக்கியப் பங்கு உள்ளது.
1962 ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் நடந்த சிலப்பதிகார மாநாட்டில் தான் அடிகளாரை சாலமன் பாப்பையா சந்தித்துப் பேசினார். அப்போது, 'கோவலன் வீழ்ச்சிக்குக் காரணம் சூழலா.. காமமா?' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது.
இதன்பிறகு பாப்பையாவுக்கு பல்வேறு வாய்ப்புகளை குன்றக்குடி அடிகளார் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். எட்டயபுரத்தில் நடந்த பாரதி விழாவில் சாலமன் பாப்பையா பங்கேற்றார். அவர் பேச்சைக் கேட்டு கல்கத்தாவில் பேசுவதற்கு அழைத்துள்ளனர். இதுவே அவர் நடுவராக பங்கேற்ற முதல் நிகழ்ச்சியாக பார்க்கப்படுகிறது.
"இலக்கிய தரத்தில் தலைப்புகளை வைத்தால் மக்களுக்குப் புரியாது" என்பதால் குடும்ப விவகாரங்களை தலைப்பாக மாற்றி நடத்தினார்.
"நாங்கள் குடியிருந்த வீடு சிலமுறை அடமானத்துக்குச் சென்றுவிடும். இதனால் வாடகை வீட்டில் குடியேறுவோம். காம்பவுண்ட் சூழ்ந்த அந்த வசிப்பிடங்களில் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன்" என்கிறார் அவர்.
அவரது பட்டிமன்றத் தலைப்புகளும் குடும்பங்களை மையப்படுத்தியே அமைக்கப்பட்டன. 'இன்றைக்கு வெற்றிகரமான திருமணம் எது? பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணமா? பிள்ளைகளே பார்த்துக் கொள்ளும் திருமணமா?', 'பாரம்பரியத்தைப் பெரிதும் போற்றுகிறவர்கள் ஆண்களே... பெண்களே' என்ற தலைப்புகள் மக்கள் மத்தியில் பேசப்பட்டன.
'விருதுகளை சுமப்பதில்லை'
தமிழ் இலக்கியத்தை சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் பட்டிமன்றத்தை சாலமன் பாப்பையா நடத்தி வந்தார். பட்டிமன்றங்களில் இரு தரப்பினரும் முன்வைக்கும் கருத்துகளை நகைச்சுவை கலந்து அவர் அளிக்கும் தீர்ப்புகள் வரவேற்பைப் பெற்றன.
நடுவராக மட்டுமன்றி எழுத்தாளராகவும் பல்வேறு நூல்களை சாலமன் பாப்பையா எழுதியுள்ளார். 'புறநானூறு புதிய வரிசை வகை', 'பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஒரு பார்வை', 'திருக்குறள் உரையுடன்' ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது, மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது ஆகியவற்றை சாலமன் பாப்பையா பெற்றுள்ளார். 2010 ஆம் ஆண்டு முத்தமிழ்ப் பேரரறிஞர் என்ற விருதை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது. பல்வேறு நிகழ்ச்சிகளில் ஏராளமான விருதுகளை அவர் பெற்றுள்ளார்.
"இந்த விருதுகளை நான் பெரிதாக நினைப்பதில்லை. இதை யார் சுமப்பார்கள். இதைத் தூக்கி சுமந்தால் நான் சிறு பிள்ளையாக மாறிவிடுவேன். சிலவற்றை நண்பர்களுக்கும் சிலவற்றைப் பள்ளிக் கூடங்களுக்குக் கொடுத்துள்ளேன்" என்கிறார் அவர்.
பாப்பையாவுக்கு நேர்ந்த துயரம்

பட மூலாதாரம், SpecialArrangement
அவருடன் பல காலம் பட்டிமன்றங்களில் பேசிய ராஜா கூறும்போது, "நான், பாரதி பாஸ்கர் உள்பட பல பேச்சாளர்களை அவர் உருவாக்கியுள்ளார். அவர் செய்த சாதனைகளுக்கு அளவில்லை. அவருடன் சுமார் 50 ஆண்டுகளாக உடன் இருந்துள்ளேன்" என்கிறார்.
ஏராளமான மேடைப் பேச்சாளர்களை சாலமன் பாப்பையா வளர்த்துவிட்டாலும் அதனால் தனக்கு ஏற்பட்ட துன்பத்தையும் ஊடக பேட்டி ஒன்றில் விவரித்துள்ளார்.
"நிறைய பேரை உயரக் கொண்டு சென்றுள்ளேன். அவர்கள் எனக்குத் துரோகம் செய்வார்கள். 'நான் இருக்கக் கூடாது' என என்னைக் கொலை செய்யும் அளவுக்குக் கூட வந்துள்ளனர். அதற்காக பல்வேறு செயல்களைச் செய்துள்ளனர்" என்று அவர் ஒருமுறை கூறியுள்ளார்.
தொடக்க காலங்களில் வானொலியில் பட்டிமன்றங்கள் ஒலிபரப்பப்பட்டு வந்தன. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குன்றக்குடி அடிகளார் தலைமையில் நடந்த பட்டிமன்றம் வானொலியில் ஒலிப்பரப்பானது.
1990 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் கோவையில் மாணிக்கம் என்பவர் பாரதி விழாவில் பேசுவதற்கு சாலமன் பாப்பையாவை அழைத்தார். அந்த நிகழ்ச்சிக்கு தூர்தர்ஷன் சென்னை மண்டல நிர்வாகி ஒருவர் வந்துள்ளார்.
நிகழ்ச்சிக்குக் கிடைத்த வரவேற்பு காரணமாக பட்டிமன்றங்களை தூர்தர்ஷனில் ஒளிபரப்புவது என முடிவாகியுள்ளது. இதற்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்து தனியார் தொலைக்காட்சியில் பட்டிமன்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாயின.
பாப்பையாவின் சினிமா ஆர்வம்
திரைத்துறையின் மீது சாலமன் பாப்பையாவுக்கு ஈடுபாடு இருந்துள்ளது. ஆனால், 'தனக்கு வாய்ப்பு கிடைக்குமா?' என்ற எண்ணம் காரணமாக அதில் அவர் தீவிர கவனம் செலுத்தவில்லை.
"திரைப்படம் என்னை வளர்த்தது. அண்ணா எழுதிய 'வேலைக்காரி' வசனத்தை அப்படியே ஒப்புவிப்பேன். திரைப்படம் பார்க்க காசு இருக்காது. என் நண்பர்கள் தான் கூட்டிச் செல்வார்கள்" என்கிறார் அவர்.
1979 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 'புதிய வார்ப்புகள்' படத்தை விமர்சனம் செய்து பேசினார். இது பாரதிராஜாவுக்கு ஈர்ப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, 1984 ஆம் ஆண்டு பாலச்சந்தர் தயாரிப்பில் வெளிவந்த 'பூவிலங்கு' படத்தை விமர்சனம் செய்து பேசினார்.
இதன்பிறகு பாலச்சந்தரின் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா நிகழ்ச்சிகளில் பேசுவதற்கு சாலமன் பாப்பையாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான 'டூயட்' படத்தில் நீதிபதி தீர்ப்பு வழங்குவது போன்ற காட்சியில் அவர் நடித்திருந்தார்.
தொடர்ந்து, 'புது வருஷம்' படத்தில் சுதந்திர போராட்ட தியாகியாக நடித்தார். ஷங்கரின் இயக்கத்தில் வெளிவந்த 'பாய்ஸ்' படத்தில் நீதிபதியாக நடித்திருந்தார்.
ரஜினிகாந்த் நடித்த 'சிவாஜி' படத்தில் அங்கவை, சங்கவை ஆகிய பெண்களின் தந்தையாக நடித்திருப்பார். படத்தில் அவர் பேசும் வசனங்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. அதன்பிறகு அவர் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.
பட்டிமன்றங்கள் மூலமாக பெரும்பாலான தமிழர்களின் இதயங்களில் இடம்பிடித்த சாலமன் பாப்பையா, வறுமையான சூழலைக் கடந்து பட்டிமன்ற உலகில் தனிக் கவனம் பெற்றார். பல்வேறு படிநிலைகளைக் கடந்து தான் வந்ததை விவரிப்பதற்கு அவர் தவறியதில்லை.
அதைப் பற்றி அவர் இவ்வாறு கூறுகிறார்.
"இளவயதில் எந்த ஆசையும் இல்லை. அதற்கான வசதியும் இல்லை. அலைகள் நகர்த்திய கப்பலாக என் வாழ்க்கையை ஏதோ ஓர் இறை ஆற்றல் நகர்த்திக் கொண்டு போனது".
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு






























