இரானில் 4 நாட்கள் நடைபெறும் அலி காமனெயியின் இறுதிச்சடங்கு - பிரதமர் மோதி கலந்து கொள்வாரா?

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட இரானின் முன்னாள் அதி உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயியின் இறுதிச் சடங்கு அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.

பல உலகத் தலைவர்கள் உட்பட லட்சக்கணக்கான வெளிநாட்டினர் இந்த இறுதிச் சடங்கில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மற்றும் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் ஆகியோர் காமனெயியின் இறுதிச் சடங்கு மற்றும் நல்லடக்கத்தில் தேசிய தூதுக்குழுக்கள் பங்கேற்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதற்கிடையில், காமனெயியின் இறுதிச் சடங்கிற்குப் பிரதமர் நரேந்திர மோதிக்கு இரான் அழைப்பு விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன.

எந்தவொரு வெளிநாட்டுத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதை இரான் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

இருப்பினும், தெஹ்ரான் நகராட்சியின் கலாச்சார மற்றும் சமூக விவகாரங்களின் துணைத் தலைவர் முகமது அமீன் தவக்லிசாதேவின் கூற்றுப்படி, "ஜூலை 4, 5, 6, 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் தலைநகர் தெஹ்ரானில் அலி காமனெயியின் இறுதிச் சடங்கு மற்றும் நல்லடக்க நிகழ்வுகளில் 15 முதல் 20 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பங்கேற்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன."

பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா மற்றும் தி இந்து உள்ளிட்ட இந்திய ஊடகங்கள், 'தூதரக வட்டாரங்களை' மேற்கோள் காட்டி, காமனெயியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள மோதிக்கு இரான் அழைப்பு விடுத்துள்ளதாகச் செய்தி வெளியிட்டுள்ளன.

அதனையடுத்து, மோதி இரானுக்குச் செல்வாரா இல்லையா என்பது குறித்து நாட்டில் ஒரு விவாதம் தொடங்கியுள்ளது.

இருப்பினும், இரானின் முன்னாள் அதி உயர் தலைவரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்கான அழைப்பைப் பெற்றது குறித்தோ அல்லது அதனை மறுத்தோ இந்திய அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக எதையும் உறுதிப்படுத்தவில்லை.

காமனெயியின் மரணம் தொடர்பாக மௌனம் காக்கும் இந்தியா

இரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் தாக்குதல் நடத்துவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இஸ்ரேலுக்குச் சென்றிருந்தார்.

மேலும் பிப்ரவரி 28 அன்று நடந்த அந்தத் தாக்குதல்களில் ஆயதுல்லா அலி காமனெயி படுகொலை செய்யப்பட்டதை இந்தியா கண்டிக்கவில்லை.

இருப்பினும், பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகள் காமனெயியின் படுகொலையை வெளிப்படையாகக் கண்டித்தன.

ஆனால், பின்னர் இந்திய வெளியுறவு அமைச்சகம் இரானிய தூதரகத்திற்குச் சென்று, காமனெயியின் மறைவுக்கு இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டு இந்தியாவின் சார்பில் துக்கத்தைப் பகிர்ந்து கொண்டது.

இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சியான காங்கிரஸும் இந்த விவகாரத்தில் பாஜக அரசை வன்மையாகக் கண்டித்தது.

ஏப்ரல் 1 அன்று வெளியிட்ட அறிக்கையில், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா, "இரானுக்கு எதிரான சட்டவிரோதப் போர் மற்றும் அதி உயர் தலைவர் ஆயதுல்லா காமனெயி படுகொலை செய்யப்பட்டது குறித்து பிரதமர் மோதி மௌனம் சாதித்து வருவதை" தனது கட்சி கண்டிப்பதாகத் தெரிவித்தார்.

பிரதமர் அலுவலகத்தில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் தான் இரானிய தூதரகம் அமைந்துள்ளது, இருப்பினும் மோதி இரங்கல் தெரிவிக்க அங்கு செல்லவில்லை என்றும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பாஜக அரசு அதிகாரப்பூர்வமாகப் பதிலளிக்கவில்லை, ஆனால் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம், "இந்தியா அமைதியின் ஆதரவாளர்" என்றும், அதிபர் டிரம்புடனான பேச்சுவார்த்தையின் போது பிரதமர் மோதி, இந்தப் போர் ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்தையும் பாதிப்பதால் இதனை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிவுக்குக் கொண்டு வருமாறு வலியுறுத்தினார் என்றும் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் தொடரும் விவாதம்

இந்த காரணங்களால், இரானின் முன்னாள் அதி உயர் தலைவரின் இறுதிச் சடங்கில் பிரதமர் மோதி கலந்துகொள்ள மாட்டார் என்று சில இந்திய ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதே நேரத்தில் வேறு சிலர் அவர் இரானுக்குச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர்.

இரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான போர் நிறுத்தத்தை இந்தியா அதிகாரப்பூர்வமாக வரவேற்றது, ஆனால் சிலரின் கூற்றுப்படி, இந்த மோதலின் போது நாட்டின் வெளியுறவுக் கொள்கையானது 'நடுநிலைமையை' அடிப்படையாகக் கொண்டே இருந்தது.

"முன்னாள் இரானிய அதி உயர் தலைவர் அலி காமனெயியின் இறுதிச் சடங்கில் பிரதமர் மோதி கலந்துகொள்வதும் அல்லது கலந்துகொள்ளாமல் இருப்பதும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு ஒரு முக்கியமான சோதனையாக இருக்கும். இதனை உலகத் தலைவர்கள் உன்னிப்பாகக் கவனிப்பார்கள்" என்று இந்திய ஆய்வாளர் பிரவீன் சாஹ்னி எக்ஸ் தளத்தில் எழுதியுள்ளார்.

மேலும்,"மோதி இதில் பங்கேற்க மாட்டார் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் (இது தவறு என்று நிரூபிக்கப்பட்டால் நான் மகிழ்ச்சியடைவேன்)... ஏனெனில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தவறானது என்பதைப் பகிரங்கமாக ஒப்புக்கொள்வதற்குத் தைரியம் தேவை" என்று அவர் அதில் கூறியுள்ளார்.

மற்ற ஆய்வாளர்களும் இதனை இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கான ஒரு சோதனை என்றே அழைக்கின்றனர்.

முனைவர் பிரம்மா செல்லானி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்த விவகாரம் "இந்தியாவை ஒரு அசாதாரண ராஜ்ஜீய சூழ்நிலைக்குள் தள்ளியுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "ஒருபுறம், பிப்ரவரி மாத அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களுக்குப் பிறகு மௌனம் காத்தது காரணமாக இந்தியா 'ராஜ்ஜீய கடனை' எதிர்கொள்ள நேரிடலாம். மறுபுறம், இறுதிச் சடங்கில் கலந்துகொள்வது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்குக் கோபத்தை ஏற்படுத்தலாம்" என்று அப்பதிவில் எழுதியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான இந்திய அரசு, ஆயத்துல்லா அலி காமனெயி இறுதிச்சடங்கில் பங்கேற்குமா என்பது குறித்த விவாதம் அரசியல் ஆய்வாளர்கள் மத்தியில் மட்டும் அல்லாமல், இந்தியாவின் பல அரசியல்வாதிகளிடையிலும் பேசப்பட்டு வருகிறது.

இந்த சூழலில், இந்த நிகழ்வில் இந்தியா, இரானில் தனது பங்கேற்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று பல இந்திய அரசியல்வாதிகளும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஓவைசி, பத்திரிகையாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளிக்கையில், அலி காமனெயியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள "பிரதமர் செல்ல வேண்டும்" என்று கூறினார்.

"ஏனெனில் பிரதமர் இஸ்ரேலில் நின்று கொண்டு, 'நான் இஸ்ரேலுடன் நிற்கிறேன்' என்று கூறினார். எனவே பிரதமர் இப்போது இரானுக்கும் செல்ல வேண்டும்"என்றார்.

"நம்முடைய வெளியுறவுக் கொள்கை எப்போதுமே அனைவருடனும் இணைந்து வாழ்வதுதான். நமது நாட்டின் நலன்களை நாம் கவனித்துக் கொள்கிறோம்."

மோதி அரசு இந்த விவகாரத்தில் இதுவரை மௌனம் காத்து வருகிறது.

அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனாவின் செய்தித் தொடர்பாளர் கிருஷ்ணா ஹெக்டேயிடம் இது குறித்துக் கேட்கப்பட்டபோது, காமனெயியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளுமாறு இரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியான் பிரதமர் மோதிக்கு அழைப்பு விடுத்துள்ளார் என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

இருப்பினும், மோதியின் பங்கேற்பு குறித்து அவர் கூறுகையில், "இந்த நிகழ்வில் உலகம் முழுவதிலுமிருந்து தூதுக்குழுக்கள் கலந்துகொள்வார்கள் என்று கூறப்படுகிறது, ஆனால் இந்தியா இதில் கலந்துகொள்ளுமா இல்லையா என்பதை மதிப்பிற்குரிய பிரதமர் தான் முடிவு செய்வார். இது அவரது உச்சபட்ச அதிகாரமாகும். இது குறித்து நாங்கள் எதுவும் கூற முடியாது" என்றார்.

பல புத்தகங்களின் ஆசிரியரான சபா நக்வி இதுகுறித்துக் கூறுகையில், "சமீபத்திய அமைதி முயற்சிகளில் தனது பங்கிற்குப் பிறகு, இஸ்லாமிய உலகில் தன்னை ஒரு முக்கியப் புள்ளியாகப் பாகிஸ்தான் முன்னிறுத்திக் கொள்கிறது. பாரம்பரியமாக, இரான் எப்போதும் இந்தியா மீது ஒரு மென்மையான நிலைப்பாட்டையே கொண்டுள்ளது" என்றார்.

"ஆனால் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவுடனான நமது உறவின் காரணமாக, நாம் நிலைமையை மோசமாக்கினோம்."

அவர் அரசாங்கத்திற்கு வழங்கிய அறிவுரையில், "இரான் மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்டால், இரானுக்குள் நமக்கான வணிக மற்றும் மனிதாபிமான வாய்ப்புகளும் உருவாகக்கூடும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்ற ஆய்வாளர்களும் இதனை இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கான ஒரு சோதனை என்றே குறிப்பிடுகின்றனர்.

காமனெயியின் இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள்

முன்னாள் அதி உயர் தலைவரின் இறுதிச் சடங்கிற்கான நான்கு நாள் நிகழ்ச்சி நிரலை இரான் வெளியிட்டுள்ளது.

அரசு செய்தித் தொடர்பாளர் பாத்திமா மஹாஜிரானியின் கூற்றுப்படி, அலி காமனெயியின் இறுதிச் சடங்கில் நாடு முழுவதும் உள்ள மக்கள் கலந்துகொள்ளும் வகையில், தெஹ்ரான் மாகாணத்தில் ஜூலை 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் பொது விடுமுறைக்கும், ஜூலை 6 ஆம் தேதி நாடு தழுவிய பொது விடுமுறைக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நிகழ்ச்சி நிரலின்படி, ஜூலை 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் தெஹ்ரானில் 'பிரிவு உபச்சார விழா' நடைபெறும். அதனைத் தொடர்ந்து ஜூலை 6 அன்று தெஹ்ரானிலும், ஜூலை 7 அன்று கோமிலும் ஊர்வலங்கள் நடைபெறும்.

அலி காமனெயியின் இறுதிச் சடங்கு ஜூலை 9 அன்று மஷ்ஹத்தில் உள்ள இமாம் ரெசா வழிபாட்டுத் தலத்தில் நடைபெறும்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு