'கொடிய அரக்கியாக' குறிப்பிடப்பட்ட கிளியோபாட்ராவின் மகள் செலீன் வெற்றிகரமான அரசியாக திகழ்ந்தது எப்படி?

கிளியோபாட்ரா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கிளியோபாட்ரா செலீன் தனது ஆட்சியின் போது பிரகாசமாகத் திகழ்ந்தார்.
    • எழுதியவர், ஜேன் டிரேகாட்
    • பதவி, பிபிசி ஹிஸ்டரி எக்ஸ்ட்ரா
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

ரோமானியர்கள் தாங்கள் வெறுப்பதற்கு விரும்பிய எகிப்திய ராணியாக விளங்கியவர் ஏழாம் கிளியோபாட்ரா.

அவர் தான் மார்க் ஆண்டனியை மயக்கி ஒரு பேரழிவான கூட்டணிக்கு அவரை அழைத்த "கொடிய அரக்கி" என்றும் சில சந்தர்ப்பங்களில் குறிப்பிடப்படுகிறார்.

இந்த ஒட்டுமொத்த சோக அத்தியாயமும் கி.மு 30-இல் முடிவுக்கு வந்தது. எதிர்கால ரோமானிய பேரரசரான ஆக்டேவியனின் படைகள் எகிப்து தலைநகரான அலெக்சான்ட்ரியாவை அணுகியபோது, இந்த தம்பதியினர் தங்களின் உயிரை மாய்த்துக் கொண்டனர்.

அவரின் சோகமான முடிவுக்குப் பிறகும் கிளியோபாட்ரா மீதான கொழுந்துவிட்டு எரியும் வெறுப்பில் ரோம் மூழ்கியிருந்தது. ஆனால் அவரை உருவாக்கிய எகிப்து மீதான ரோமின் வியப்பு அளப்பறியது.

இது மிகவும் வெளிப்படையாகவும் இருந்தது. நகரத்தின் சுவர்களில் உள்ள அலங்காரச் சுவரோவியங்களிலும், ஏன், நகரின் தெற்குப் பகுதியில் உள்ள போர்ட்டா சான் பாலோவில் அமைந்துள்ள கயஸ் செஸ்டியஸ் எபுலோவின் பிரமாண்டமான கல்லறை போன்ற மாபெரும் பிரமிடுகளிலும் கூட காணப்பட்டது.

அந்த முரண்பட்ட நிலையால் நிச்சயம் திகைப்புக்கு உள்ளாகியிருக்கக்கூடிய ஒருவர், மார்க் ஆண்டனி மற்றும் கிளியோபாட்ராவின் ஒரே மகளான கிளியோபாட்ரா செலீன் ஆவார்.

கி.மு 40-இல் பிறந்து அலெக்சான்ட்ரியாவின் அரச அரண்மனையில் வளர்க்கப்பட்ட செலீனின் பெற்றோர்கள் இறக்கும்போது அவருக்கு 10 வயது.

செலீன், அவருடைய இரட்டைச் சகோதரர் அலெக்சான்டர் ஹீலியோஸ் மற்றும் இளைய சகோதரர் தாலமி ஃபிலடெல்பஸ் ஆகியோர் ரோமுக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஆக்டேவியாவின் வீட்டில் தங்க வைக்கப்பட்டார். இவர் ஆக்டேவியனின் சகோதரியும், அவர்களுடைய தந்தையான மார்க் ஆண்டனியின் முன்னாள் மனைவியும் ஆவார்.

ஆக்டேவியனின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய சுவேட்டோனியஸ், (எதிர்கால) பேரரசான அவர் கனிவான தந்தை உருவம் என்றும் அந்தச் சிறார்களை தங்களின் சொந்த பிள்ளைகளைப் போலவே நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியதாகக் குறிப்பிடாலும் அந்த முடிவுக்கு சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு அரசியல் கோணம் இருக்கவே செய்கிறது.

குழந்தைகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் எகிப்து மீதான ரோமின் அதிகாரத்திற்கு வரும் எந்தச் சாத்தியமான அச்சுறுத்தலும் மட்டுப்படுத்தப்பட்டது.

நிலவு மற்றும் சூரியனின் தோற்றத்தில் வந்த வாரிசுகள்

கிளியோபாட்ரா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கிளியோபாட்ரா மற்றும் மார்க் ஆண்டனியின் இரட்டையர்கள் - அலெக்சாண்டர் ஹீலியோஸ் மற்றும் இரண்டாம் கிளியோபாட்ரா செலீன் II (ஆசிரியர் பெயர் தெரியவில்லை).
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இந்தக் கட்டுப்பாடு கி.மு 29-இல் கோடை காலத்தில் ஆக்டேவியனின் ராணுவ வெற்றியைப் பரைசாற்றும் நிகழ்வில் முதல்முறையாக வெளிப்படுத்தபப்ட்டது.

அந்த நிகழ்வின் மூன்றாவது மட்டும் கடைசி நாள் எகிப்து மீதான அவரின் வெற்றியை நினைவுகூர்ந்தது. அவர்களின் தாய் இல்லாத நிலையில், அவரது உயிரைப் பறித்ததாகக் கருதப்படும் பாம்புகள் அவரைச் சுற்றியிருப்பது போன்ற ஒரு உருவபொம்மையைக் கடந்து குழந்தைகள் நடந்து சென்றனர்.

அவர்களுக்கு மார்க் ஆண்டனி வழங்கிய விண்வெளி சார்ந்த பெயரைக் குறிக்கும் விதமாக கிளியோபாட்ரா செலீன் நிலவின் தோற்றத்திலும் அலெக்சான்டர் ஹீலியோஸ் சூரியனின் தோற்றத்திலும் வந்தனர்.

பேரணியின் வழித்தடத்தில் திரண்டிருக்கும் கூட்டம் அவர்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக இது மேற்கொள்ளப்பட்டது.

நல்வாய்ப்பாக ரோமின் மற்ற எதிரிகளான கவுலின் வெர்சின்ஜெடோரிக்ஸுக்கு நேர்ந்ததைப் போல கொண்டாட்டங்களில் இவர்கள் கலந்து கொண்டது அவர்களது மரணத்திற்கு வித்திடவில்லை.

ஆனால் அரியணை இல்லாத ஓர் இளவரசியை வைத்து என்ன செய்வது? என்கிற கேள்வியும் எழுந்தது.

மார்க் ஆண்டனியின் இதர குழந்தைகளும் பாரம்பரிய ரோமானியர்களாகவே வளர்க்கப்படுவதை ஆக்டேவியன் உறுதி செய்தார். அவரின் மூன்றாவது மனைவியான ஃபுல்வியாவிற்குப் பிறந்த இயுல்லஸ் ஆண்டோனியஸ் அரசியல் களத்தில் உயர்ந்து கவுன்சலாகத் தேர்வு செய்யப்பட்டார்.

மார்க் ஆண்டனியின் நான்காவது மனைவியான ஆக்டேவியாவிற்குப் பிறந்த அவரின் இரண்டு மகள்களான மூத்த மற்றும் இளைய ஆண்டோனியா (இரண்டு மகள்களுக்கும் ஒரே பெயர்) தகுந்த ரோமானியர்களைத் திருமணம் செய்து கொண்டனர். கலிகுலா, க்ளாடியஸ் மற்றும் நீரோ ஆகிய பேரரசர்கள் அவர்களின் வழித்தோன்றல்களாக இருந்தனர்.

ஆனால் கிளியோபாட்ரா செலீனின் நிலை எளிதான ஒன்றாக இல்லை.

கி.மு 34-இல் மார்க் ஆண்டனி அவரை க்ரெட் மற்றும் சிரனேகாவிற்கு (நவீன கால லிபியாவின் ஒரு பகுதி) ராணியாக அறிவித்திருந்தார். தன் தாயின் மறைவுக்குப் பிறகு அவர் எகிப்தின் சட்டபூர்வமான அரசியாகக் கருதப்படலாம்.

அதிர்ஷ்டவசமாக ஆக்டேவியனுக்கு அவரின் சீடர்களில் ஒருவரான காயஸ் ஜூலியஸ் ஜூபாவின் வடிவில் ஒரு தீர்வு கிடைத்தது.

கிளியோபாட்ரா செலீனைப் போலவே ஜூபா நாடுகடத்தப்பட்ட ஒரு முன்னாள் அரச குடும்பத்தின் கடைசி வாரிசு ஆவார்.

அவரது தந்தையான முதலாம் ஜூபா நுமிடியாவின் (சஹாராவுக்கு வடக்கே அமைந்துள்ள ஒரு பகுதி) மன்னராக இருந்தார். ஜூலியஸ் சீசர் மற்றும் போம்பே தி கிரேட் இடையேயான உள்நாட்டுப் போரில் தோல்வியடைந்த தரப்பை ஆதரித்திருந்தார். போம்பேவின் தோல்விக்குப் பிறகு கிளியோபாட்ராவைப் போலவே முதலாம் ஜூபாவும் தற்கொலை மூலம் உயிரிழந்தார். அவரது அரசு, கஜானா மற்றும் வழித்தோன்றல்களை ரோம் கைப்பற்றியது.

கிளியோபாட்ரா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நுமிடியாவின் மன்னர் இரண்டாம் ஜூபாவின் வெண்கலத் தலை மொராக்கோவில் கண்டுபிடிக்கப்பட்டது. கிமு 25-கிபி 23 ரபாத், தொல்பொருள் அருங்காட்சியகம்.

செலீனைப் போலவே ஜூபாவும் கி.மு 46-இல் ஜூலியஸ் சீசரின் ராணுவப் பேரணியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தார். அப்போது அவர் ஒரு குழந்தையாக இருந்தார். சீசரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவரான ப்ளுடார்ச் இவரை "இதுவரை பிடிபட்டவர்களிலேயே மிகவும் மகிழ்ச்சியான கைதி" என்று விவரித்தார்.

கி.மு 25-இல் செலீன் மற்றும் ஜூபாவின் திருமணம் நடைபெற்றது. அதன்பிறகு அவர்கள் புதிதாக உருவாக்கப்பட்டு ரோமானியக் கட்டுப்பாட்டிலிருந்த மௌரிடானியக் குறுநில அரசுக்கு (நவீனகால மொராக்கோ மற்றும் அல்ஜேரியாவை உள்ளடக்கியது) அனுப்பி வைக்கப்பட்டனர்.

பரவலாக அறியப்பட்ட அரசி

பேரரசின் மேற்குப் பகுதியில் அமைந்திருந்த ரோமின் ஒரே குறுநில அரசாக மௌரிடானியா இருந்தது.

மிகப்பெரிய நிலப்பரப்பான மௌரிடானியாவில் கணிசமான இயற்கை வளங்கள் இருந்தன. அதில் ரோமானியர்கள் பெரிதும் ஆசைப்பட்ட ஆடம்பரப் பொருட்களான ஊதா நிறச் சாயம், சிட்ரான் மரக்கட்டை மற்றும் அரிய வகை விலங்குகளும் தானியங்கள் மற்றும் மீன் போன்ற அத்தியாவசிய உணவுகளும் அடங்கும்.

அங்கு பல்வேறு பூர்வகுடி குழுக்கள் வசித்து வந்த நிலையில் அவர்கள் கூட்டாக 'பெர்பர்ஸ்" என இன்று அறியப்படுகின்றனர். இந்தப் பிராந்தியத்தில் மத்திய தரைக்கடல் கரை அருகே கிரேக்க மற்றும் ரோமானிய காலனிகளும் இருந்தன.

ரோமானியப் பேரரசின் மையப்பகுதியில் பெண்கள் வெளிப்படையற்ற அதிகாரத்தையே செலுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மௌரிடானியா போன்ற எல்லைப்புறப் பகுதிகளில் இருந்த அரசியர்கள் மிகவும் வெளிப்படையான அதிகாரத்தைச் செலுத்தினர்.

கிளியோபாட்ரா செலினும் அவரது தாய் அதைச் செய்வதைப் பார்த்து தான் வளர்ந்து வந்தார். அவர் தனது அரசை ஆண்டு பண்டைய மத்திய தரைக்கடல் பகுதியிலிருந்து தூதுவர்களை வரவேற்றதோடு மட்டுமல்லாது அருகில் உள்ள குஷ் அரசை வழிநடத்திய ராணி அமனிரேனாஸ் போன்ற இதர அதிகாரமிக்க பெண்களைச் சென்று சந்தித்தும் அவர்களுடன் உரையாடியும் வந்தார்.

எனவே, தான் பின்தங்கி ஜூபா தலைமையேற்க அனுமதிப்பதற்கு அவர் எந்த இசைவும் கொடுக்காதது ஆச்சரியமளிக்கவில்லை.

எல்லாவற்றிற்கும் மேலாக, மாவீரர் அலெக்சாண்டரின் தளபதியான தாலமியிடமிருந்து வந்த மிகவும் புகழ்பெற்ற வம்சாவளியை அவர் கொண்டிருந்தார்.

மேலும், தனது ஒன்றுவிட்ட சகோதரிகள் மற்றும் தந்தை வழிப் பாட்டியான ஜூலியா மூலமாக அரச குடும்பத்துடன் நேரடித் தொடர்பைக் கொண்டிருந்த பெருமையையும் அவர் பெற்றிருந்தார்.

எனவே இந்த தம்பதி ஒன்றாக ஆட்சி செய்தனர் என்பதை அக்காலத்து நாணயங்கள் உறுதி செய்கின்றன. அதன் ஒரு பக்கத்தில் ஜூபாவும் லத்தீன் வாசகமான ரெக்ஸ் லூபாவும் (அரசர் ஜூபா) இருந்த நிலையில் மறு பக்கத்தில் கிளியோபாட்ரா செலீனும் மற்றும் கிரேக்க வாசகமான கிளியோபாட்ரா பாசிலிஸ்ஸாவும் (ராணி கிளியோபாட்ரா) இருந்தது.

செலீன் தனது சொந்த நாணயங்களை வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது. அதில் அவரைப் பற்றி குறிப்பிடும் பிறை நிலவுகள் நிரம்பியிருந்தது மட்டுமன்றி, முதலைகள், ஐபிஸ் பறவைகள் மற்றும் ஐசிஸ் தேவதையின் கிரீடம் மற்றும் சிஸ்ட்ரம் போன்ற எகிப்தியக் குறியீடுகளுடனும் இடம்பெற்றிருந்தன.

ஒரு நாணயப் பதிப்பில் அவர், "ராணி கிளியோபாட்ரா, ராணி கிளியோபாட்ராவின் மகள்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. தனது தாய் மீது அவர் கொண்டிருந்த பெருமிதத்தை இது வெளிப்படுத்தியது.

எப்போதும் எச்சரிக்கையாகவும் விவேகமாகவும் நடந்துகொள்ளும் அந்தத் தம்பதியினர், ஆக்டேவியனைக் கௌரவிக்கும் விதமாக, மௌரிடானியாவின் தலைநகரான ஐயோலுக்கு சீசரியா எனப் புதிய பெயர் சூட்டினர்.

ஆனால், நகர மதில்களுக்குள்ளேயே கிளியோபாட்ரா மற்றும் எகிப்திய கலாசாரத்தை கௌரவிப்பதற்கான ஒரு வழியை அவர்கள் கண்டறிந்தனர்.

அதனை தொடக்க நிலையில் இருக்கும் தங்களது வம்சத்துக்கான பொருத்தமான தலைநகராக மாற்றுவதற்கான ஆடம்பர கட்டுமான திட்டம் ஒன்றையும் அவர்கள் மேற்கொண்டனர். கிளியோபாட்ரா செலீனின் பண்டைய இல்லத்திலிருந்து அவர்கள் உந்துதல் பெற்றிருந்தனர்.

அலெக்சான்ட்ராவில் இருந்த பிரபலமான கலங்கரை விளக்கத்தைப் போலவே துறைமுகத்திலும் ஒரு கலங்கரை விளக்கம், ஒரு பிரமாண்ட அரண்மனை, ஒரு பொதுமன்றம், ஒரு நாடக அரங்கம் மற்றும் ஒரு திறந்தவெளி அரங்கம் ஆகியவற்றைக் கட்டினர்.

அவர்கள் ஒரு புனிதமான சோலையை உருவாக்கினர், எகிப்தியக் கலைப் படைப்புகளை இறக்குமதி செய்தனர், பழைய கோயில்களைப் புதுப்பித்தனர் மற்றும் புதிய கோயில்களைக் கட்டினர்.

எகிப்திய ஆண் மற்றும் பெண் கடவுள்கள் விரைவில் மௌரிடானியாவில் பிரபலமடைந்தனர். அங்கு ஐசிஸ் தேவிக்கான ஒரு கோயிலும் இருந்தது, அதற்குக் ஜூபா முதலைகளை அர்ப்பணித்தார்.

காலப்போக்கில் சீசரியா மிகவும் மிகவும் மேம்பட்ட மற்றும் பல கலாசாரங்களைக் கொண்ட அரசவையாக மாறியது. அங்கு செழிப்பான கிரேக்க, ரோமானிய, எகிப்திய மற்றும் ஆப்பிரிக்க அறிஞர்களும் திறமை மற்றும் கற்பனைத்திறன் மிக்க கலைஞர்களும் இருந்தனர்.

ஜூபாவைப் பற்றி தனது சொந்த எழுத்துக்களில், அவர் எகிப்து, அலெக்சான்ட்ரியா மற்றும் நைல் பற்றிய குறிப்புகளை உள்ளடக்கியிருந்தார். இது பெரும்பாலும் கிளியோபாட்ரா செலீனடமிருந்தே வந்திருக்கும்.

ரோமானிய வாசகர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில், தனது தாயைப் பற்றியும் தனது முந்தைய வாழ்க்கையைப் பற்றியும் இருந்த நினைவுகளை மறுவடிவமைக்கும் ஒரு வழியாக அது அமைந்திருந்தது.

நீடித்து நிலைத்த பெயர்

கிளியோபாட்ரா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜூபா II மற்றும் கிளியோபாட்ரா செலீன் II ஆகியோரின் நாணயங்கள்

கிளியோபாட்ரா செலீன் மற்றும் ஜூபா ஆகியோர், தோல்வி, சிறைவாசம் மற்றும் தங்கள் பெற்றோரின் தற்கொலைகள் என அமைதியற்றதாக இருந்த தங்கள் இளமைக்காலச் சூழலை, எல்லா வழிகளிலும் ஒரு வெற்றியாக மாற்றியமைத்திருந்தனர்.

ஆனால், முதல் புத்தாயிரம் (millennium) முடிவடையும் காலகட்டத்தில், அரசியின் அகால மரணத்துடன் அந்த வெற்றிக் கதை திடீரென முடிவுக்கு வந்தது.

அவர் இறந்த துல்லியமான தேதி நமக்குத் தெரியாவிட்டாலும், அரசவைக் கவிஞரான மைட்டிலினின் கிரினகோரஸ் இயற்றிய மற்றொரு கவிதை ஒரு துப்பு அளிக்கிறது.

"பிற்பகலிலேயே உதித்த நிலவு, தனது ஒளியை அணைத்துக்கொண்டு, இருளால் தன் துயரத்தை மறைத்துக்கொண்டது. ஏனெனில், தன்னுடைய பெயரையே கொண்ட அழகிய செலீன், உயிரற்றவளாக இருள்சூழ்ந்த பாதாள உலகிற்கு (ஹேடிஸ்) இறங்கிச் செல்வதை அது கண்டது. அவளுக்குத்தான் அது தனது ஒளி அழகை வழங்கியிருந்தது. அவளது மரணத்தோடு தன் சொந்த இருளையும் அது கலந்துகொண்டது." என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

கிளியோபாட்ரா செலீனின் மரணம் சந்திர கிரகணம் நிகழ்ந்த அதே நேரத்தில் அமைந்திருந்ததாக கிரினகோரஸ் தனது கவிதையில் குறிப்பிடுவதாகத் தெரிகிறது.

இதன்மூலம் வரலாற்றாசிரியர்கள் அவரது இறப்பிற்கான இரண்டு சாத்தியமான தேதிகளை முன்மொழிந்துள்ளனர்.

இவை இரண்டுமே சீசரியா மற்றும் ரோமில் காணப்பட்ட சந்திர கிரகண தேதிகளான கி.மு. 5-ஆம் ஆண்டு மார்ச் 23 மற்றும் கி.பி. 3-ஆம் ஆண்டு மே 4 ஆகியவற்றுடன் ஒத்துப்போகின்றன.

கிளியோபாட்ரா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அல்ஜீரியாவின் செர்செல் தொல்லியல் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள கிளியோபாட்ரா செலினின் மார்பளவுச் சிலை.

அந்த ராணி ஒரு பிரமாண்டமான நினைவுக் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். அதன் எஞ்சிய பகுதிகளை இன்றும் அல்ஜீரியாவில் உள்ள செர்செல் நகருக்கு அருகில் காணலாம்.

தனது மனைவியின் மறைவுக்குப் பிறகும் ஜூபா இரண்டு தசாப்தங்களுக்கு மௌரிடானியாவைத் தொடர்ந்து ஆட்சி செய்தார். கி.பி. 21-இல் அவரது மகன் தாலமி இணை ஆட்சியாளராக நியமிக்கப்பட்டார்.

அவரது மரணத்துக்குப் பிறகும் கிளியோபாட்ரா செலீன் அரசாங்கத்தின் முக்கியமான நபராக விளங்கினார்.

டான்ஜியர் என்கிற இடத்திற்கு அருகே கண்டெடுக்கப்பட்ட நாணயத் தொகுப்பில், கி.பி. 11 முதல் 17 வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்த நாணயங்கள் உள்ளன.

இவற்றில் கிளியோபாட்ரா செலீன் மற்றும் ஜூபா ஆகியோர் இணைந்து வெளியிட்ட நாணயங்கள் மட்டுமல்லாமல், செலீன் தனித்து வெளியிட்ட நாணயங்களும் அடங்கும்.

அவர் மறைந்த பல தசாப்தங்களுக்குப் பிறகும் அவரது முன்னாள் குடிமக்கள் அவற்றைத் தொடர்ந்து பயன்படுத்தினர் என்பதையும், அவரது மனைவியின் மற்றும் தாயின் நீடித்த சிறப்பான திறன்களின் காரணமாகவே ஜூபா மற்றும் தாலமி ஆகியோரால் தங்கள் கூட்டு ஆட்சியை நிலைப்படுத்த முடிந்தது என்பதையும் இது காட்டுகிறது.

கிளியோபாட்ரா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அல்ஜீரியாவின் டிபாசா மாகாணத்தில் உள்ள மௌரிடானியாவின் அரசக் கல்லறை. இது பெர்பர் மன்னர் ஜூபா II மற்றும் ராணி கிளியோபாட்ரா செலீன் II ஆகியோரின் கல்லறையாகும்.

கிளியோபாட்ரா செலீன் தனது வாழ்நாளிலும், அதற்குப் பின்னரும் கூட, தனது ராஜ்யத்தின் மீதும் ஏனைய ரோமானிய உலகின் மீதும் அளப்பரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்.

அப்படியென்றால், இன்று அது ஏன் இவ்வளவு குறைவாகவே அறியப்படுகிறது?

முரண்பாடாகத் தோன்றினாலும், அதற்கான விடை அதன் வெற்றியிலேயே இருக்கலாம்.

ரோமானிய வரலாற்றாசிரியர்கள் பேரரசின் மையப்பகுதியில் நிகழ்ந்து கொண்டிருந்தவற்றிலேயே மிகுந்த கவனம் செலுத்தினர். சிக்கல்கள் ஏற்படும்போது மட்டுமே அவர்கள் குறுநில அரசுகளைப் பற்றிக் குறிப்பிடுவார்கள்.

மௌரிடானியா பற்றி அவர்கள் அதிகம் எழுதவில்லை என்பது, அங்கு நிலைமை நன்றாக இருந்ததைக் காட்டுகிறது.

தனது தாய் மற்றும் இதர ரோமானிய குறுநில அரசியான பௌடிகா ஆகியோர் போல் அல்லாது கிளியோபாட்ரா செலீன் உரக்கமாக அல்லாமல் மௌனமாகச் சாதித்ததைப் போலவே தெரிகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு