'நான் கேள்விப்பட்டதே இல்லாத ஊருக்கு குடிபெயர ரூ. 5 லட்சம் கொடுத்தார்கள்' - இலவச சினிமா டிக்கெட், ஒயின் என சலுகை வழங்கும் நகரங்கள்

பிரியானா பெய்ரூட்டி

பட மூலாதாரம், Brianna Beyrouti

படக்குறிப்பு, பிரியானா பெய்ரூட்டி
    • எழுதியவர், ஸ்டீபன் ஸ்டார்
    • பதவி, பிபிசி
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

அமெரிக்காவின் ஒரிகன் மாகாணத்தில் உள்ள போர்ட்லேண்ட் நகரில் வாழ்ந்த தனது பழைய வாழ்க்கையை நினைத்துப் பார்க்கும்போது, தாம் பொருளாதார ரீதியாக "மூழ்கிக்கொண்டிருந்தேன்" என்று பிரியானா பெய்ரூட்டி கூறுகிறார்.

"நான் உண்மையிலேயே மாதச் சம்பளத்தை வைத்தே வாழ்க்கையை ஓட்டும் நிலையில் இருந்தேன். சிறிய செலவு கூட திடீரென வந்தால், 'அய்யோ, குழந்தைகளுக்கு காலணி வாங்க வேண்டும், அதற்கு எப்படி பணம் செலுத்தப் போகிறேன்?' என்று கவலைப்படுவேன். சிங்கிள் பேரண்ட் என்பதால் எல்லாப் பொறுப்புகளும் என் தோள்களில்தான் இருந்தன," என்கிறார் அவர்.

கடந்த ஆண்டு, 25 லட்சம் மக்கள்தொகையைக் கொண்ட போர்ட்லேண்ட் மாநகரப் பகுதியை விட்டு பிரியானா வெளியேறினார்.

அவரும் அவரது இரண்டு குழந்தைகளும், சுமார் 2,000 மைல் தூரத்தில் இந்தியானாவில் உள்ள மன்சி என்ற சிறிய நகரத்துக்குக் குடிபெயர்ந்தனர். சுமார் 65,000 மக்கள்தொகை கொண்ட அந்த நகரில் ஒரு பல்கலைக்கழகமும் பரந்த திறந்தவெளிப் பகுதிகளும் உள்ளன. மக்கள்தொகை வளர்ச்சியை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ், குடிபெயர்வு செலவுக்காக 5,000 டாலர் உதவித்தொகையையும் (சுமார் ரூ. 5 லட்சம்) அவர் பெற்றார்.

இந்த இடமாற்றம் அவரது பொருளாதார வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் அதே வங்கியில் வீட்டில் இருந்தபடி தொடர்ந்து பணிபுரிவதால், ஆண்டுக்கு 107,000 டாலர் என்ற சம்பளம் மாறவில்லை. ஆனால், வாழ்க்கையில் முதன்முறையாக ஒரு வீட்டை வாங்க முடிந்துள்ளது. மேலும், அவரது வீட்டு கடன் தவணை முன்பு வாடகையாக செலுத்திய தொகையைவிடக் குறைவாக உள்ளது.

போர்ட்லேண்டில் ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்காக மாதம் 1,290 டாலர் வாடகை செலுத்திய அவர், மன்சியில் தனி வீட்டுக்கான வீட்டு கடன், வீட்டு காப்பீடு மற்றும் சொத்து வரி ஆகியவற்றைச் சேர்த்தாலும் மாதச் செலவு 1,100 டாலராக மட்டுமே உள்ளது.

அதோடு, இந்தியானாவில் வருமான வரி குறைவாக இருப்பதுடன், கார் காப்பீடு மற்றும் மின்சாரச் செலவுகளும் குறைந்துள்ளன. இதனால் மாதத்திற்கு சுமார் 600 டாலர் கூடுதலாக மிச்சப்படுவதாக பிரியானா கூறுகிறார்.

"முன்பைவிட இப்போது என் வாழ்க்கையை நிம்மதியாக வாழ முடிகிறது. என் குழந்தைகள் ஏதாவது கேட்டால், 'ஆம்' என்று சொல்லும் மனநிலையில் இருக்கிறேன். என் வாழ்க்கைத் தரம் கணிசமாக உயர்ந்துள்ளது," என்கிறார் அவர்.

பிரியானாவும் அவரது குழந்தைகளும் போர்ட்லேண்ட் நகரிலிருந்து மன்சி நகரத்துக்குக் குடிபெயர்ந்தனர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரியானாவும் அவரது குழந்தைகளும் போர்ட்லேண்ட் நகரிலிருந்து மன்சி நகரத்துக்குக் குடிபெயர்ந்தனர்
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

பெரிய நகரத்தை விட்டு சிறிய நகரத்துக்குக் குடிபெயர்ந்தது பிரியானா மட்டும் அல்ல.

அமெரிக்காவில் வாழ்க்கைச் செலவு தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், மலிவான வீடுகளைத் தேடி பலர் வெளியேறுவதால், நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் பலவற்றின் மக்கள்தொகை குறைந்து வருகிறது.

2025ஆம் ஆண்டு அமெரிக்க தேசிய ரியல்டர்ஸ் சங்கம் வெளியிட்ட அறிக்கையின்படி, ஒரு மாகாணத்தில் இருந்து மற்றொரு மாகாணத்துக்கு குடிபெயர்ந்தவர்களில் பெரும்பாலானோரின் முக்கிய காரணம் வாழ்க்கைச் செலவு ஆகும்.

இதன் விளைவாக, நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், ஒரிகனின் போர்ட்லேண்ட் போன்ற பெரிய நகரங்கள் சமீப ஆண்டுகளில் மக்கள்தொகை சரிவைக் கண்டுள்ளன. கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு வீட்டில் இருந்தபடி பணிபுரியும் நடைமுறை பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டதும் இந்தப் போக்கை மேலும் ஊக்குவித்துள்ளது.

மறுபுறம், மன்சி போன்ற அமெரிக்காவின் சில சிறிய நகரங்கள் மற்றும் ஊர்கள், பல தசாப்தங்களாக நீடித்த மக்கள்தொகை சரிவுக்குப் பிறகு மீண்டும் வளர்ச்சியைக் கண்டு வருகின்றன.

அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஆண்டு மன்சியின் மக்கள்தொகை 65,466 ஆக இருந்தது. இது 2020-ஆம் ஆண்டில் இருந்த 65,194 பேருடன் ஒப்பிடும்போது அதிகமாக இருந்தாலும், 1990ஆம் ஆண்டில் இருந்த 71,828 பேருடன் ஒப்பிடும்போது இன்னும் குறிப்பிடத்தக்க அளவில் குறைவாகவே உள்ளது.

இலவச சினிமா டிக்கெட்டுகள், ஒயின்

மற்ற நகரங்களிலிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்டவும், இந்தியானாவுக்கு வெளியே இருந்து வீட்டில் இருந்தபடி பணிபுரிபவர்களை ஈர்க்கவும், மன்சி நகர நிர்வாகம் குடிபெயர்வு செலவுக்காக 5,000 டாலர் பண ஊக்கத்தொகையை வழங்குகிறது.

இதற்காக, மேக்மைமூவ் என்ற இணையதளத்தின் மூலம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அமெரிக்காவின் பல சிறிய நகரங்கள் மற்றும் ஊர்களில் வழங்கப்படும் இதுபோன்ற குடிபெயர்வு ஊக்கத் திட்டங்களின் விவரங்களையும் அந்த இணையதளம் பட்டியலிடுகிறது. இந்த சேவைக்காக அந்த நகரங்கள் மேக்மைமூவ் நிறுவனத்துக்கு சந்தா கட்டணம் செலுத்துகின்றன.

புதிய குடியிருப்பாளர்களை ஈர்ப்பதற்காக சில நகரங்கள் இலவச சினிமா டிக்கெட்டுகள், உணவக வவுச்சர்கள், ஏன் இலவச ஒயின் பாட்டில்களைக்கூட வழங்குகின்றன.

மேக்மைமூவ் திட்டத்தின் மூலம் மன்சிக்குக் குடிபெயர்ந்த சுமார் 100 குடும்பங்களில் பிரியானாவும் அவரது குழந்தைகளும் அடங்குவர். இதற்கு முன்பு மன்சி நகரைப் பற்றி தாம் கேள்விப்பட்டதே இல்லை என்று அவர் கூறுகிறார்.

அமெரிக்கா முழுவதும் கடந்த ஆண்டு மொத்தம் 1,000 பேருக்கு குடிபெயர உதவியதாக மேக்மைமூவ் நிறுவனம் கூறுகிறது. 2026-ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கையை 1,500 ஆக உயர்த்தும் இலக்கை நோக்கி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

எலெனா க்ரிசோஸ்டோமு

பட மூலாதாரம், Elena Chrysostomou

படக்குறிப்பு, எலெனா க்ரிசோஸ்டோமு

பெரிய நகர வாழ்க்கையை விட்டு சிறிய நகரத்துக்குக் குடிபெயர்ந்த மற்றொருவர் விஞ்ஞானியான எலெனா க்ரிசோஸ்டோமு.

2024ஆம் ஆண்டில், அவர் கலிபோர்னியாவின் சான் டியாகோ நகரிலிருந்து, இலினாய்ஸ் மாகாணத்தில் 17,700 மக்கள்தொகை கொண்ட ஜாக்சன்வில் என்ற சிறு நகரத்துக்குக் குடிபெயர்ந்தார்.

இந்த இடமாற்றத்துக்கு ஜாக்சன்வில் பிராந்திய பொருளாதார மேம்பாட்டுக் கழகம் ஆதரவளித்தது. அந்த அமைப்பு அவருக்கு 5,000 டாலர் பண உதவியுடன், 4,000 டாலர் மதிப்புள்ள "வாழ்க்கைத் தர மேம்பாட்டுத் தொகுப்பையும்" வழங்கியது. இதில் இலவச உடற்பயிற்சிக் கூட உறுப்பினர் அட்டை மற்றும் கோல்ஃப் விளையாட்டு அனுமதிச் சீட்டுகளும் அடங்கும்.

"ஏற்கனவே வாழ்வதற்கு சிறந்த இடமாக உள்ள இந்தப் பகுதியை மேலும் கவர்ச்சிகரமாக மாற்றுவதற்காகவே இந்தத் திட்டம் உதவுகிறது," என்று ஜாக்சன்வில் பிராந்திய பொருளாதார மேம்பாட்டுக் கழகம் தெரிவித்துள்ளது.

சான் டியாகோவில் ஒரு படுக்கையறை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு மாதம் 3,000 டாலர் வாடகை செலுத்திய எலெனா, தற்போது மூன்று படுக்கையறைகள் கொண்ட வீட்டை சொந்தமாக வாங்கியுள்ளார். அதற்கான வீட்டு கடன் தவணை மாதம் 1,868 டாலராக உள்ளது.

அதே நேரத்தில், அவர் வேலையை மாற்றியதால் அவரது சம்பளம் 22% உயர்ந்துள்ளது. மேலும், வேலைக்குச் செல்ல 15 நிமிடங்கள் கார் ஓட்டிச் செல்ல வேண்டிய நிலை மாறி, தற்போது ஒரு நிமிட பயணமே போதுமானதாக உள்ளது.

"நான் தனியாக ஒரு வீடு வாங்க முடியும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. அதற்கு ஒரு துணை தேவைப்படும் என்று எப்போதும் நினைத்தேன். அப்படியே இருந்தாலும், சான் டியாகோவில் அது மிகவும் கடினமாக இருந்திருக்கும்," என்கிறார் அவர்.

"இப்போது வாழ்க்கை மிகவும் சுதந்திரமாக உணரப்படுகிறது. பாதுகாப்பும் தன்னிறைவும் அதிகரித்துள்ளன."

எலெனாவும் பிரியானாவும் தங்களது முடிவைப் பற்றி எந்த வருத்தமும் இல்லை என்று கூறினாலும், புதிய வாழ்க்கையில் சில குறைகளும் இருப்பதை ஒப்புக்கொள்கின்றனர்.

அவற்றில் பொழுதுபோக்கு வாய்ப்புகள் மற்றும் உணவகத் தேர்வுகள் குறைவாக இருப்பது, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை விட்டு விலகி வாழ வேண்டிய நிலை, மேலும் பிரியானாவைப் பொறுத்தவரை அவரது குழந்தைகளை புதிய பள்ளிகளில் பழக்குவது போன்ற சவால்கள் அடங்கும்.

போர்ட்லேண்டில் வாழ்ந்தபோது பூங்காக்கள் மற்றும் கடைகளுக்கு நடந்தே செல்ல முடிந்ததாகக் கூறும் பிரியானா, இப்போது எங்கு செல்ல வேண்டுமானாலும் காரையே நம்பியிருக்க வேண்டியுள்ளது.

இருப்பினும், ஒட்டுமொத்தமாக தனது வாழ்க்கை குறித்து மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பதாக அவர் கூறுகிறார்.

"என் வாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக சேமிப்பு வைத்திருக்கிறேன். நான் இப்போது ஒரு வீட்டு உரிமையாளர். என் குழந்தைகளுடன் பல விஷயங்களைச் செய்ய முடிகிறது. என் இளைய குழந்தை பிறந்த பிறகு முதல் முறையாக நாங்கள் குடும்பமாக விடுமுறைக்குச் சென்றோம்," என்கிறார் அவர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு