விஜய்யின் பாதுகாவலர் பற்றிய விவாதம் ஏன்? முதலமைச்சர் பாதுகாப்பில் பின்பற்றப்படுவது என்ன?

TVK, Vijay, CM, NayeemMoosa, Bouncer,

பட மூலாதாரம், NayeemMoosa/Instagram

படக்குறிப்பு, முதலமைச்சர் விஜய்யுடன் அவரது தனியார் பாதுகாப்பு அதிகாரி நயீம் மூசா
    • எழுதியவர், ப. சிவசங்கர்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

முதலமைச்சரான பிறகும் விஜய் பயணிக்கும் அனைத்து இடங்களிலும் தனியார் பாதுகாவலர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவது விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

கட்சி தொடங்கிய காலம் முதல் பொதுவெளியில் தோன்றும்போது தனியார் பாதுகாப்பு அதிகாரிகள் சூழவே வருகை தந்தார் விஜய்.

தேர்தல் பரப்புரையின்போது விஜய்யின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மத்திய அரசின் 'ஒய்' (Y) பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது. அதன்பிறகும் தனியார் பாதுகாப்பு அதிகாரிகளே அவரது பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகித்தனர்.

விஜய்யின் பாதுகாப்பில் நயீம் மூசா என்பவர் தனி கவனம் எடுத்துக்கொள்வது தவெக தொண்டர்களைக் கூர்ந்து கவனிக்க வைத்தது. அண்மையில் திருச்சியில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் கூட்டத்திலும் நயீம் மூசாவுக்கு மேடையில் இருக்கை வழங்கப்பட்டிருந்தது. இது விவாதத்துக்குள்ளானது.

அரசுப் பாதுகாப்பு அமைப்புகளைச் சாராத ஒருவர், 'பாதுகாவலர்' என்ற பெயரில் முதலமைச்சரின் நிழலாகத் தொடர்ந்து செயல்படுவது பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு ஏற்புடையதா என்று அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் இன்பதுரை விமர்சித்துள்ளார். மாநில காவல்துறையினர் வழங்கும் பாதுகாப்பில் முதலமைச்சருக்கே நம்பிக்கை இல்லையா என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.

முதலமைச்சர் பாதுகாப்பில் பின்பற்றப்படும் நடைமுறை என்ன?

TN, CM, Vijay, Convoy, Protection, Core cell

பட மூலாதாரம், TNDIPR

முதலமைச்சரின் பாதுகாப்பு கருதி மத்திய அரசால் இஸட் அல்லது இஸட் பிளஸ் பிரிவு பாதுகாப்புகள் வழங்கப்படுகின்றன. அவர் சொந்த மாநிலத்தில் இருந்தாலும் அலுவல் ரீதியாக மற்ற மாநிலங்கள் சென்றாலும் இந்த பாதுகாப்பு நடைமுறை பின்பற்றப்படும்.

ஆனால் தமிழ்நாடு மாநில அரசால் உருவாக்கப்பட்டுள்ள "கோர் செல் செக்யூரிட்டி" என்ற சிறப்புக்குழு முதலமைச்சரின் முழு பாதுகாப்புக்கும் பொறுப்பாவார்கள்.

"முதலமைச்சர் இல்லத்தில் மேற்கொள்ளும் பாதுகாப்பு, உள்ளூர் மற்றும் வெளியூர்களில் முதலமைச்சர் கலந்துகொள்ளும் அரசு மற்றும் அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளில் மேற்கொள்ளப்படும் தீவிர கண்காணிப்பும் இந்த சிறப்புக்குழு தினசரி மேற்கொள்ளும் பணியாக இருக்கும்" என்று பிபிசியிடம் தெரிவித்தார் இரண்டு முதலமைச்சர்களின் பாதுகாப்புப் பணியில் முக்கிய பொறுப்பில் இருந்த பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர்.

TN, CM, Vijay, Convoy, Protection, Core cell

பட மூலாதாரம், TVKHQ

படக்குறிப்பு, திருச்சி கிழக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் விஜய் பின்னால் அமரவைக்கப்பட்டுள்ள நயீம் மூசா

கான்வாய் பாதுகாப்பு என்றால் என்ன?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

அந்த அதிகாரி அளித்த தகவல்களின்படி, முதலமைச்சர் முகாம் அலுவலகத்தில் இருந்து நிகழ்ச்சிகளுக்கு புறப்படுவதற்கு முன் முதலமைச்சர் பயணிக்கும் வாகனம் உள்ளிட்ட அவரது கான்வாய் வாகனங்களில் மூன்று அடுக்குகளில் சோதனை செய்யப்படுகிறது.

காவலர்கள் மூலம் கைமுறை தேடல் ( Manual Searching) முறையில் சோதனையிடுவது, வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் இவிடி ( Explosive vapour Detector) மற்றும் யூ.வி.எஸ் எம் ( Under vehicle search mirror ) இயந்திரங்களை வைத்து சோதனையிடுவது மற்றும் மோப்பநாய் உதவியுடன் சோதனையிடுவது போன்ற முறைகள் பின்பற்றப்படுகின்றன.

கான்வாய் வாகனங்களில் முதல் வாகனம் சிவப்பு கொடி பறக்கும் பைலட் வாகனம், பின்னே வரும் முதலமைச்சர் வாகனம் உள்ளிட்ட வாகங்களுக்கு வழி காட்டும். அதன்பின்னே வெள்ளை கொடி பறக்கும் எஸ்கார்ட் 1: செல்லும் பாதை சரியாக இருப்பதை உறுதி செய்கிறது.

அதற்கு பின் ஜாமர் வாகனம், கான்வாய் வாகனம் செல்லும் வழியில் உள்ள செல்போன் டவர்களின் சிக்னலை வலுவிழக்க செய்கிறது.

4-ஆவது வாகனமாக முதலமைச்சர் வாகனம், அதன் பின்னே வெள்ளைக்கொடி பறக்கும் எஸ்கார்ட் 2 வாகனம், அதன்பின்னே கான்வாய் காவல் கண்காணிப்பாளர் வரும் சூப்பர்வைசர் வாகனம், இறுதியாக கான்வாய் முடித்து வைக்கும் டெய்ல் ( Tail ) வாகனம்.

இதற்கிடையில் நேரத்திற்கு ஏற்றாற்போல் 2 அல்லது 3 வது இடங்களில் ஊடக வாகனமும் அனுமதிக்கப்படுகிறது.

முதலமைச்சர் வாகனத்தில் அவரது பாதுகாப்பு அதிகாரி இருப்பார், அதுதவிர மற்ற வாகங்களின் குறைந்தது ஓட்டுநருடன் சேர்ந்து 5 போலீஸார் பயணிப்பர்.

TN, CM, Vijay, Convoy, Protection, Core cell

பட மூலாதாரம், TNDIPR

கோர் செல் செக்யூரிட்டி எப்போது உருவானது?

தமிழ்நாட்டில் அமைச்சர்களுக்கு தற்போது வழங்கப்படும் தனி பாதுகாப்பு அதிகாரிகளின் பாதுகாப்பு போன்ற நடைமுறையே 1991க்கு முன்பு வரை முதலமைச்சர்களுக்கு பின்பற்றப்பட்டு வந்த நிலையில் முதலமைச்சருக்கு பாதுகாப்பு வழங்கும் சிறப்புக்குழுவை உருவாக்கினார் அபோதைய முதலமைச்சர் ஜெயலலிதா.

1991ம் ஆண்டு ராஜிவ்காந்தி மரணத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் ஏற்பட்ட பதற்றத்தால், பிரதமருக்கு பாதுகாப்பு வழங்கும் எஸ்பிஜி சிறப்புக்குழு போல எஸ்எஸ்ஜி என்ற சிறப்புப்படை உருவாக்கப்பட்டது. நாளடைவில் இதனை 'கோர் செல் செக்யூரிட்டி' என்று பெயர் மாற்றினர்.

TVK, Vijay, Private Protection, Bouncers

பட மூலாதாரம், TVKHQ

படக்குறிப்பு, தேர்தல் பிரசாரத்தின்போது தனியார் பாதுகாப்பு அதிகாரிகளின் பாதுகாப்பில் இருந்த தவெக தலைவர் விஜய்

தனியார் பாதுகாப்பு அதிகாரி சர்ச்சை உருவானது எப்படி?

திருச்சி நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் தனியார் பாதுகாப்பு அதகாரிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதை அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் இன்பதுரை விமர்சித்திருந்தார்.

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அவர், "பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்ட ஒரு முதலமைச்சர் அரசு அதிகாரி இல்லாத ஒருவரை அருகிலேயே வைத்திருப்பது அரசு சார்ந்த ரகசியங்கள் வெளியே செல்ல வாய்ப்பு ஏற்படுத்தும்" என்று கூறினார்.

முதலமைச்சர் பாதுகாப்புக்காக 1991ல் உருவாக்கப்பட்ட விதிகளை முதலமைச்சர் மீறுவதாக தெரிவித்த அவர், பாதுகாப்பு விவகாரத்தில் "எந்த முதலமைச்சரும் செய்யாத ஒரு விஷயத்தை விஜய் செய்யப்பார்க்கிறார், இது காவல்துறை அதிகாரிகள் மீதான நம்பகத்தன்மையை சீர்குலைக்காதா?'' என்று அவர் கேள்வி எழுப்பினார்.

எம்.ஜி.ஆர் என்ன செய்தார்?

எந்த முதலமைச்சரும், செய்யாத ஒன்றை முதலமைச்சர் செய்யப்பார்க்கிறார் என்ற இன்பதுரையின் கருத்தை மறுத்த முன்னாள் காவல்துறை அதிகாரி கருணாநிதி, "எம் ஜி ஆர் முதலமைச்சர் ஆன பிறகும் அரசுதுறை சாராத ஒருவரை அனைத்து நிகழ்ச்சிகளிலும் உடன் வைத்திருந்தார்" என்றார்.

இது குறித்து பிபிசி தமிழிடம் விளக்கிய அவர், "முதலமைச்சர் விஜய் போலீஸ் பாதுகாப்பு வேண்டாம், தனியார் பாதுகாவலரே போதும் என்று எங்கும் சொல்லவில்லை. அவ்வாறு சொன்னால் அதனை கேள்விக்குட்படுத்தலாம்" என்று கூறினார்.

"தனக்கு வரும் பூங்கொத்து, சால்வை போன்றவற்ற அரசு அதிகாரிகள் கையில் எப்படி தருவது என்ற காரணத்தால், நம்பிக்கையான ஒருவரை முதலமைச்சர் உடன் வைத்துள்ளார், அதனை யாரும் தடுக்க முடியாது. ஒரு உதவியாளர் செய்ய வேண்டிய பணிகளையே உடன் இருக்கும் பாதுகாவலரும் செய்வதால் அதனை விமர்சிக்க முடியாது" என்றார் அவர்.

TN CM, Convoy, Rule, Private Security, IPS, Ravi

பட மூலாதாரம், DrRaviIPS/Instagram

படக்குறிப்பு, ஓய்வு பெற்ற ஏடிஜிபி ரவி ஐ.பி.எஸ்

காவல்துறை பாதுகாப்பை முதலமைச்சரால் மறுக்க முடியுமா?

முதலமைச்சருக்கான நெறிமுறைகளை வேண்டாம் என மறுக்க முதலமைச்சருக்கு உரிமை உண்டு என்கிறார் ஓய்வுபெற்ற ஏடிஜிபி ரவி.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தனக்கு நம்பிக்கையான ஒருவரை முதலமைச்சர் உடன் வைத்திருக்க எவ்வித தடையும் இல்லை, இதனால் காவல்துறை மீதான நம்பிக்கை இல்லை என்பது இல்லை, அனைத்து எல்லைகளிலும் காவல்துறையால் வர இயலாது என்பதால் தனிப்பட்ட முறையில் உதவியாளர்களையோ, பாதுகாவலர்களையோ முதலமைச்சர் வைத்திருக்கலாம். இதனால் விதிகள் எந்த வகையிலும் மீறப்படுகிறது என்பதெல்லாம் இல்லை" என்கிறார் அவர்.

தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு முன்னர் தவெக 41 சதவீதம் வாக்குகள் பெறும் என்று இவர் கணித்திருந்தார்.

TN CM, Vijay, Private Bouncer, Nayeem Moosa

பட மூலாதாரம், NayeemMoosa/Instagram

படக்குறிப்பு, முதலமைச்சர் விஜய்யின் தனியார் பாதுகாப்பு அதிகாரி நயீம் மூசா

விஜயின் பாதுகாவலர் யார்?

தமிழக வெற்றிக்கழகம் தொடங்கப்பட்ட நாள் முதல் அக்கட்சியின் தலைவர் விஜய் உடன் பயணித்து அவருக்கான பாதுகாப்பை வழங்கி வரும் நயீம் மூசா ஒரு தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தின் நிறுவனர்.

துபையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்திற்கு சர்வதேச அளவில் வாடிக்கையாளர்கள் இருப்பதாக இந்த நிறுவனத்தின் இணையதளப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

சினிமா, அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு சேவைகளை வழங்கியிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பிரசாரங்களில் விஜய்யை நோக்கி ரசிகர்கள் வீசி எறியும் பொருட்களை லாவகமாக பிடிப்பது, கூட்டத்தின் நடுவே பாதுகாப்பாக அழைத்து செல்வது போன்ற பல்வேறு சம்பவங்கள் மூசாவை தவெகவினர் இடையே கவனிக்க வைத்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு