அண்ணாமலை பாஜக பற்றிப் பேசியது குறித்து நயினார் நாகேந்திரன் கூறுவது என்ன?

பட மூலாதாரம், X/Annamalai
இன்று சமூக ஊடக நேரலையில் பேசிய அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார். இந்த அரசியல் இயக்கம் பொறுமையாக அரசியல் கட்சியாக உருவெடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
அடுத்து வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் அதன் பின்னரான பொதுத் தேர்தலிலும் போட்டியிடப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
தான் ஏற்கெனவே அங்கம் வகித்த 'we the leader' என்கிற இயக்கத்தில் இணையுமாறு இந்த நேரலை வாயிலாக அழைப்பு விடுத்துள்ளார். அவரது அறிவிப்பைத் தொடர்ந்து அந்தத் தளத்தில் இணைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் பார்க்க முடிகிறது.
இந்த நிலையில், அண்ணாமலையின் அறிவிப்பு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், "பாஜகவில் பிராந்திய பிரச்னைகளை பேசுவது பற்றி அண்ணாமலை தெரிவித்திருந்த விஷயங்கள், தவறான குற்றச்சாட்டு" என்று தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Annamalai
அண்ணாமலை பேசியது என்ன?
சமூக ஊடக நேரலை வாயிலாகப் பேசிய அண்ணாமலை, "புதிய பாதை, புதிய அரசியல் இயக்கம் ஆரம்பிக்க வேண்டும் என்பது என்னுடைய பெரிய ஆசை" என்று தெரிவித்தார்.
மேலும், "தமிழக மக்களுக்காக 6 ஆண்டுகள் பணியாற்ற பாஜக வாய்ப்பு கொடுத்தது. இன்று அதிலிருந்து வெளியே வந்திருக்கிறேன். 2009இல் விஜயகாந்தின் தேமுதிக-வில் மூன்று மாதங்கள் மாணவராக இன்டர்ன்ஷிப் செய்தேன்.
அதன்பின் 2020இல் பாஜகவில் இணைந்தேன். இன்று புதிய இயக்கத்தை உங்கள் முன் வைக்கிறேன். என்னைப் பற்றி நிறைய செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதற்கு விளக்கம் தர வேண்டும் என்பதற்காகவே இப்போது பேசுகிறேன்" என்றார்.
'ரஜினிகாந்தின் அழைப்பு'
தனது இயக்கத்தில் இணையுமாறு கேட்டு நடிகர் ரஜினிகாந்திடம் இருந்து தனக்கு அழைப்பு வந்ததாகக் கூறிய அண்ணாமலை, "பாஜகவில் இணைகிறேன் என்கிற வாக்குறுதியை சந்தோஷிடம் கொடுத்துவிட்டேன். 2020இல் பாஜக-வில் இணைவதற்கு ஒரு நாளுக்கு முன்பு ரஜினிகாந்த் என்னை அழைத்தார், ஆனால் நான் மறுத்துவிட்டேன்" என்றார்.
"இந்தியன் என்கிற அடையாளத்துடன் பெருமைமிகு தமிழனாக இருக்கிறேன்" எனக் கூறிய அவர், ''தேசிய அடையாளத்துடன் ஆனால் தமிழகத்துக்கான பாரம்பரியத்துடன் பாஜக இருக்க வேண்டுமென்று கருதியே, பாஜகவை உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டுமென்று கூறினேன். எனக்கும் பிற கட்சிகளுக்கும் தனிப்பட்ட முறையில் எந்தப் பிரச்னையுமில்லை.'' என்றார்." என்றார்.
கடந்த டிசம்பர் மாதமே தான் ராஜிநாமா செய்யப்போவதாக கட்சித் தலைமையிடம் தெரிவித்துவிட்டதாகக் கூறிய அண்ணாமலை, "எனக்கு இருந்த கருத்து வேறுபாடுகளை 18 மாதங்களாகக் கூறி வந்தேன். கடந்த டிசம்பர் 5ஆம் தேதியே பாஜகவில் இருந்து விலகுவதாகத் தெரிவித்துவிட்டேன்" என்றார்.
"தமிழ்நாட்டில் ஓர் அரசியல் இயக்கத்தைத் தொடங்க இருக்கிறோம்" என அறிவித்த அவர், அடுத்த பொதுத் தேர்தலில் ஒரு கட்சியாகப் போட்டியிட உள்ளதாக அறிவித்தார்.

பட மூலாதாரம், PTI
'இணையதளத்தில் பதிவு, கோவையில் பயிற்சி மையம்'
மேலும் பேசிய அண்ணாமலை, "தமிழ்நாட்டிற்கு இன்னொரு அரசியல் கட்சி வேண்டும். இந்த இயக்கத்தில் இணைய விரும்புவோர் இணையதளம் மூலமாகச் சேரலாம்" என்றார்.
அதோடு, கோவையில் "ஏபிஜே அப்துல் கலாம் பெயரில் ஒரு பயிற்சி மையம் உருவாக்க இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.
தனது இயக்கத்தின் சார்பாகத் தேர்தலில் போட்டியிடுபவர்கள் "இந்தப் பயிற்சி மையத்தில் முறையாக அரசியல் பயிற்சி பெற்ற பிறகுதான் தேர்தலைச் சந்திப்பார்கள். அவர்களுக்கு அனைத்து விதமான பயிற்சிகளும் வழங்கப்படும்" என்றும் அந்தப் பயிற்சி மையத்தின் நோக்கம் குறித்து விளக்கினார் அண்ணாமலை.
'பாஜகவுடன் முரண்படுவேன்'
பாஜக மற்றும் மோதி பற்றிக் குறிப்பிடும்போது, "பிரதமர் மோதி மீது மரியாதை உண்டு. மும்மொழிக் கொள்கை போல பாஜகவிடம் முரண்பட வேண்டிய சூழல் எழுந்தால் நிச்சயம் முரண்படுவோம். முறைப்படி ராஜிநாமா செய்ய வேண்டும் என்பதால்தான் அமித் ஷாவை நேரில் சந்தித்தேன்" என்றார்.
மேலும்,''ஒரு லெவல் வரும்போது, தொடர்ந்து நாமும் பிரச்னையாக இருக்கக்கூடாது. எதையும் ஒரு அளவுக்குதான் சொல்ல முடியும். கடந்த 18 மாதங்களாக பாஜக தலைவர்களிடம் மிகப்பொறுமையாக சொல்லி வருகிறேன். கட்சியை விட்டு விலகுவதாக 2025 டிசம்பர் 4 அன்றே வெளியே சொல்லிவிட்டேன். தேர்தல் பணியை முடி்ததுவிட்டுப் போகச் சொன்னார்கள். மே கடைசி வரை எனது பணியை முடித்துவிட்டே வெளியே வந்தேன்.'' என்றார்.
திமுக, அதிமுக, தவெக, தமிழக அரசியல் தலைவர்கள் எல்லோரையும் பார்ப்பதுபோலவே, பாஜகவையும், பாஜக தலைவர்களையும் பார்ப்பதாகக் கூறிய அண்ணாமலை, ''அவரவர் அவர்களின் கட்சியை முன்னிறுத்துவது போல, நாம் நம் இயக்கத்தின் கொள்கையை முன் நிறுத்துவோம். மக்கள் தேர்ந்தெடுக்கட்டும்.'' என்றார்.
இவற்றுடன், "சமூக ஊடகங்கள் வாயிலாக உங்கள் அனைவரையும் சந்தித்து, கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும், மனம் திறந்து உரையாடவும், ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்" என்றும் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று காலையில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ராஜிநாமாவை ஏற்பதாக பாஜக தலைமை ஒரு செய்திக்குறிப்பின் மூலம் அறிவித்திருக்கிறது.
கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை ராஜிநாமா செய்ததை பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் ஏற்றுக் கொண்டதாக அந்தச் செய்திக் குறிப்பு கூறுகிறது.
"தமிழக மக்கள் புரிந்துகொள்ளும் மொழியில் தேசியக் கட்சிகள் பேசவில்லை" என பாஜக தலைவருக்கு அண்ணாமலை அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Nainar Nagendran
அண்ணாமலை பேச்சு பற்றி நயினார் நாகேந்திரன் கூறுவது என்ன?
அண்ணாமலையின் பேச்சைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், "அதைப் பற்றி நான் எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை. பாஜக மீதான அதிருப்தி பற்றி நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும்" என்றார்.
அண்ணாமலையின் ராஜிநாமா பற்றிய கேள்விக்குப் பதிலளித்த அவர், "பாஜக சித்தாந்த அடிப்படையிலான கட்சி. அண்ணாமலை சென்றுவிட்டார் என்பதால் கட்சிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "பிரதமர் மோதி எங்கு சென்றாலும் தமிழ் பற்றியும் தமிழின் பெருமை பற்றியும் பேசி வந்துள்ளார். கட்சியை யார் வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம், ஜனநாயகத்தில் அனைவருக்கும் உரிமை இருக்கிறது. பிராந்திய பிரச்னைகளுக்கு பாஜக முக்கியத்துவம் தரவில்லை என்பது தவறான குற்றச்சாட்டு" என்று தெரிவித்தார்.
இவை அனைத்திற்கும் முன்பாக, இன்று காலையில் அண்ணாமலையின் ராஜிநாமா ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிப்பு வந்தது பல யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
முன்னதாக டெல்லி சென்றிருந்த அண்ணாமலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார்.
டெல்லி செல்வதற்கு முன்பாக புதுக் கட்சி தொடங்கப் போகிறீர்களா என்று சென்னையில் செய்தியாளர்கள் கேட்டதற்கு, "இன்னும் இரண்டு நாட்களில் அனைத்தைப் பற்றியும் பேசுகிறேன்" என்று அண்ணாமலை கூறியிருந்தார்.
கடந்த 2021 சட்டபேரவைத் தேர்தலுக்குப் பிறகு பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றார். அவரது தலைமையின் கீழ் பாஜக அதிமுக கூட்டணியில் இருந்து விலகி 2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது. அப்போது ஒரு இடத்தில்கூட வெல்ல முடியவில்லை என்றாலும் அதுநாள் வரை ஒற்றை இலக்கத்தில் இருந்த பாஜகவின் வாக்கு வங்கி 11 சதவிகிதத்தை தாண்டியது.

பட மூலாதாரம், Annamalai/X
இந்த நிலையில் 2025ஆம் ஆண்டு பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை விலகினார். அதைத் தொடர்ந்து நயினார் நாகேந்திரன் பாஜக மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்றார்.
பாஜக, 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு மீண்டும் அதிமுக-வுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்டது. அந்தத் தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரசாரம் மட்டும் செய்யப் போவதாக அறிவித்தார்.
அந்தத் தேர்தலில் ஓர் இடத்தில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது. அந்தக் கட்சியின் வாக்கு வங்கி மீண்டும் 3 சதவிகிதத்திற்குக் கீழே சென்றது.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































