தீப்பொறி ஆறுமுகம், விடுதலை விரும்பி ஆகியோரின் பேச்சால் அனல் பறந்த அரசியல் களம் இப்போது எப்படி மாறியுள்ளது?

ரீல்களுக்கு முந்தைய மேடை - அண்ணா முதல் உதயநிதி வரை: தமிழக அரசியல் மேடையில் நடந்த மாற்றம்

பட மூலாதாரம், Getty/TN Assembly

  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

தஞ்சாவூரில் நடந்த அரசியல் கூட்டத்தில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட சம்பவம், அரசியல் பேச்சின் எல்லைகள் குறித்த பழைய விவாதத்திற்கு இட்டுச் சென்றுள்ளது.

கடந்த நூற்றாண்டின் பெரும்பகுதியில், தமிழ் மக்கள் அரசியலை வெறுமனே கேட்கவில்லை; இரவு நேரங்களில் அது நிகழ்த்திக் காட்டப்படுவதைப் பார்க்கவும், கேட்கவும் மக்கள் திரண்டனர்.

தொலைக்காட்சி ஸ்டூடியோக்கள், யூடியூப் சேனல்கள், ரீல்ஸ் ஆகியவை அரசியலை சில விநாடிகளுக்கு உள்ளாகச் சுருக்குவதற்கு முன், "மேடைப் பேச்சு" என்ற தனிப்பட்ட அரசியல் வடிவம் இருந்தது. ஒரு மைக்கிரோஃபோன், தற்காலிக மேடை, வரிசையாக ஒளிரும் டியூப் லைட்டுகள், கூட்டத்தைத் தாண்டி குரலை எடுத்துச் செல்லும் ஒலிப்பெருக்கிகள், மேலும் மறுநாள் காலை குறித்த கவலை ஏதுமின்றி பல மணிநேரம் பேசும் பேச்சாளர்கள்.

சமூக சீர்திருத்தம் மற்றும் சமூக அரசியல் விவாதங்களுக்கு திராவிடர் கழகம் (திக) மேடையைப் பயன்படுத்தியது. அதிலிருந்து உருவான திமுக, அதே மேடையைத் தேர்தல் அரசியலுக்கு பயன்படுத்தியது.

"காங்கிரஸுக்கும் சிறந்த பேச்சாளர்கள் இருந்தனர். ஆனால் அவர்களது பேச்சு பழைய பாணியில் இருந்தது. 1950 மற்றும் 1960களின் இளம் திமுக வேறுபட்ட பாணியை அறிமுகப்படுத்தியது. இலக்கியத் தமிழ், நாடக அம்சம், நையாண்டி, கருத்தியல் வாதம், பொழுதுபோக்கு ஆகியவை ஒன்றிணைந்த அரசியல் நிகழ்வாக அது அமைந்தது" என்கிறார் விவேகானந்தா பல்கலைக்கழக வரலாற்றுத் துறையின் ஓய்வுபெற்ற தலைவர் பேராசிரியர் அ. கருணானந்தன்.

"அந்தப் பேச்சுகள், எதிரிக்கு அளிக்கப்பட்ட வெறும் பதிலடியாக இருக்கவில்லை. அதில் மொழிநயம் மற்றும் இலக்கியச் செறிவு இருந்தன. முரசொலி மாறன், ஆலடி அருணா போன்றோர் அறிவுசார் ஆழத்தை கொண்டு வந்தனர்" எனக் குறிப்பிட்ட அவர், "டி.கே.எஸ். இளங்கோவனின் தந்தையான டி.கே. சீனிவாசன், கட்சி வட்டாரங்களில் 'தத்துவ மேதை' என அறியப்பட்டார். ஆசைத்தம்பி, நாவலர் நெடுஞ்செழியன், நாஞ்சில் மனோகரன் ஆகியோர் இலக்கியம், பண்பாடு, உலக அரசியல் ஆகியவற்றை பொது மக்களுக்குப் புரியும் வகையில் விவரித்தனர்" என்று விளக்கினார்.

நேரடி அரசியல் மட்டுமின்றி பொங்கலை ஏன் கொண்டாட வேண்டும், தீபாவளியை ஏன் கேள்விக்கு உட்படுத்த வேண்டும், தமிழ் என்ற அடையாளம் என்ன, சமூகப் படிநிலைகள் எவ்வாறு செயல்படுகின்றன போன்ற பல்வேறு தலைப்புகள் கூட்டங்களில் விவாதிக்கப்பட்டன.

திராவிட இயக்கத்திற்கு வெளியிலும் சுவாரஸ்யமான வேறுபாடுகள் இருந்தன. காமராஜர் இலக்கியத் தமிழுக்காக புகழப்படவில்லை. ஆனால் அறிவாளிகள் பேச வேண்டிய தருணத்தை அவர் நன்கு உணர்ந்தார் என்று சுட்டிக்காட்டும் பேராசிரியர் கருணானந்தன் டி.பி. மீனாட்சிசுந்தரம் போன்ற தமிழ் அறிஞர்களுக்கு காமராஜர் மேடையளித்தார் என்றும் குறிப்பிடுகிறார்.

கருணாநிதி இதற்கு நேர்மாறாக, சொற்களுடன் இயல்பான உறவைக் கொண்டிருந்தார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் "Time Capsule" அரசியல் சொல்லாடலில் இடம் பிடித்தபோது, அதை உடனடியாகவும் நினைவில் நிற்கும் வகையிலும் "காலப்பெட்டகம்" என்று தமிழாக்கம் செய்தார்.

மேடைப்பேச்சு வரலாறு

பட மூலாதாரம், Getty Images

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

திராவிட மேடைப் பேச்சுகளை தனி அரசியல் கண்டுபிடிப்பாகப் பார்க்கக் கூடாது என்று சென்னைப் பல்கலைகழகம் மற்றும் தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர் கோபாலன் ரவீந்திரன் எச்சரிக்கிறார்.

"திராவிட இயக்க மேடைப் பேச்சுகளை தனித்து பார்க்கக்கூடாது. அவை தென்னிந்தியாவின் நீண்ட வாய்மொழி வரலாற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டவை."

அவரது கருத்துப்படி, திராவிட இயக்கப் பேச்சாளர்கள் பல நூற்றாண்டுகளாக உருவான வாய்மொழி மரபின் திறன்களைப் பெற்று, அவற்றை நவீன அரசியலுக்காகப் பயன்படுத்தினர். மார்க்சிய அரசியலைச் சேர்ந்த பி. ஜீவானந்தம்கூட சங்க இலக்கியத்தை நோக்கித் திரும்பினார். திராவிட இயக்கப் பேச்சாளர்கள் திருக்குறளை முன்னிறுத்தினாலும், பிராமண அறிஞரான பரிமேலழகரின் உரைக்கு முன்னுரிமை அளிக்க மறுத்தனர். இலக்கியம் வெறும் பண்பாட்டு அலங்காரமாகக் காட்சிப்படுத்தப்படவில்லை, அது அரசியல் வாதத்தின் ஒரு கருவியாக மாற்றப்பட்டது.

தமிழ் அடையாளமும் அதேபோல அரசியல் ஆயுதமாக மாறியது. அண்ணாவின் "வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது" என்ற வாசகம், முழு அரசியல்-பொருளாதாரக் கருத்தியலை விளக்கக் குறிப்புகள் இன்றியே மக்களிடையே பரவக்கூடிய ஒரு வாக்கியமாகச் சுருக்கியது என்கிறார் கருணானந்தன்.

பேச்சாளர்களின் குரல்களுக்கும் தனித்துவமான பங்கு இருந்தது. "அண்ணாவும் கருணாநிதியும் 'கரகர' குரலைக் கொண்டிருந்தனர். ப. ஜீவானந்தம் இடி முழக்கம் போன்ற குரலைக் கொண்டவர்," என்கிறார் பேராசிரியர் ரவீந்திரன்.

அண்ணா சுருக்கமான சொற்றொடர்களையும் இரண்டு அல்லது மூன்று சொற்கள் கொண்ட வாக்கியங்களையும் விரும்பினார். பெரியாரின் நாத்திகக் கண்ணோட்டத்தில் இருந்து தனது தத்துவ வேறுபாட்டை அவர் திருமூலரின் வரிகளைக் கடன் வாங்கி, "ஒன்றே குலம், ஒருவனே தேவன்" என்று வெளிப்படுத்தினார்.

ஒவ்வொரு பேச்சாளரும் தங்களுக்கென கருத்தியல் புலங்களை உருவாக்கிக் கொண்டனர்.

"ஜீவானந்தம் வறுமையைப் பேசினார்; அண்ணா ஜமீன்தாரி முறை மற்றும் பெண்களின் விடுதலையை எடுத்துரைத்தார்; திரு.வி.க., கவித்துவமான மொழிநடையில் மனித நடத்தை மற்றும் அதன் வரம்புகளைப் பற்றிப் பேசினார். ஒவ்வொருவரும் தங்கள் தலைவரின் சில அம்சங்களைப் பின்பற்றியபோதும், தங்களுக்கென தனித்துவமான பாணியையும் உருவாக்கிக் கொண்டனர்" என்கிறார் பேராசிரியர் ரவீந்திரன்.

மேடைப்பேச்சு வரலாறு

பட மூலாதாரம், Prof Karunandhan

படக்குறிப்பு, பேராசிரியர் அ.கருணாநந்தன்

தொழில்நுட்பமும் இந்த அரசியல் உருவாக்கத்திற்குத் துணை நின்றது. 1920களில் ஒலிப்பெருக்கி அமைப்புகள் பரவலான பயன்பாட்டுக்கு வந்தன. மனிதக் குரலின் புவியியல் எல்லைகளை அவை விரிவுபடுத்தின. அடுத்த தசாப்தத்தில் 'பேசும்' படங்கள் தோன்றின. அவற்றில் ஆரம்பத்தில் பாடல்கள் அதிகமாக இடம் பெற்றன. பின்னர் இளங்கோவன் (தமிழ் சினிமாவின் ஆரம்பகால திரைக்கதையாசிரியர் மற்றும் வசன கர்த்தா) போன்ற எழுத்தாளர்களின் வருகையால் வசனங்களின் செல்வாக்கு அதிகரித்தது.

இதன் பிறகு எல்லைகள் கரைந்தன. நாடகம் சினிமாவானது; சினிமா அரசியல் மேடையின் மொழிநடையை எடுத்துக்கொண்டது. அண்ணாவின் நாடகங்களுக்கு சினிமாவை போல டிக்கெட்டுகள் விற்பனையாகின. 1949இல் திமுகவை நிறுவிய பின்னர், அவர் திரைப்படங்களுக்கும் எழுதத் தொடங்கினார். தீவிரமான அரசியல் வசனங்கள் திரைக்கு இடம்பெயர்ந்தன.

"திராவிட இயக்கம் மக்களிடம் செல்வதற்கான ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த வகையில், மேடைப் பேச்சு, நாடகம், சினிமா, பத்திரிகைத் துறை ஆகிய நான்கு ஊடக வடிவங்களையும் வளர்த்தது" எனச் சுட்டிக்காட்டுகிறார் பேராசிரியர் ரவீந்திரன்.

திருமண விழாக்கள்கூட அரசியல் மேடைகளாக மாற்றப்பட்டன. அண்ணாவின் அன்றாடப் பணித் திட்டத்தில் திருமண நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. தனிப்பட்ட நிகழ்வாகக் கருதப்படும் சடங்கு, பொது மக்களிடம் அரசியலைக் கொண்டு செல்லும் வாய்ப்பாக மாறியது.

அரசியல் ஆர்வம் கட்சிக் கூட்டங்களுக்குள் மட்டுமே இருந்ததில்லை. கீழ்ப்பாக்கம் ஈ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு எதிரே வசித்த தத்துவப் பேராசிரியர் டி.எம்.பி. மகாதேவனின் வீட்டிற்கு வார இறுதி நாட்களில் மக்கள் திரண்டு வந்து, சில நேரங்களில் சாலையிலும் நிற்கும் அளவுக்கு நீண்ட நேரம் அவரது உரையைக் கேட்டுக்கொண்டிருப்பதை ரவீந்திரன் நினைவுகூர்கிறார். மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்காவில் திரு.வி.க. பேசியபோது, அது ரசிகர் கூட்டத்தை ஒத்த வரவேற்பைப் பெற்றது.

"அந்தக் காலத்தின் குழந்தைகள்தான் திராவிட இயக்கப் பேச்சாளர்களாக முக்கியப் பங்கு வகித்தனர்," என்கிறார் ரவீந்திரன்.

பெரியார், பல திராவிடப் பேச்சாளர்கள் பயன்படுத்திய அலங்காரமான மொழிநடையைப் பெரிதாக நம்பவில்லை. எம்.ஜி. ஆரும் அதுபோலவேதான். பொது மக்களுக்கு எளிதில் புரியும் வகையில் கருத்தை எடுத்துச் சென்றதே அவர்களின் பலமாக இருந்தது.

மேடைப்பேச்சு வரலாறு

பட மூலாதாரம், Prof Gopalan Ravindran

படக்குறிப்பு, பேராசிரியர் கோபாலன் ரவீந்திரன்

ஆனால் ஆட்சி அதிகாரம் வந்த பிறகு மாற்றங்கள் வரத் தொடங்கின என்கிறார் பேராசிரியர் கருணானந்தன். 1967இல் திமுக பெற்ற வெற்றி, ஓர் இயக்கத்தின் உச்சநிலையாகப் பார்க்கப்பட்டது.

"அதிகாரத்தின் அருகில் இருப்பதே முக்கியமானது, கருத்தியல் ஈடுபாடு அல்ல என்று கருதிய பலரும் அதன் பின் அரசியலுக்குள் வந்தனர். 1970களில் இருந்து பேச்சுகள் கொள்கைகளைவிட நிர்வாகம், தனிநபர்கள், அதிகாரப் போட்டி ஆகியவற்றை மையமாகக் கொண்டு நகரத் தொடங்கின" என்கிறார் பேராசிரியர் கருணானந்தன்.

தத்துவ மோதல், படிப்படியாக தனிப்பட்ட மோதலாக மாறியது. மேடையில் இன்னொரு வகை பேச்சாளர்கள் எப்போதும் இருந்தனர். முக்கிய தலைவர்கள் வரும்வரை கூட்டத்தை தக்க வைத்திருக்கும் வேலையை நாகூர் ஹனீபா போன்ற பாடகர்கள் கொண்டிருந்தனர். சில பேச்சாளர்கள் நயமோ மென்மையோ இல்லாத காரணத்தாலேயே புகழ்பெற்றனர்.

"வெற்றிக்கொண்டான் அதற்கான குறிப்பிடத்தக்க உதாரணமாக இருந்தார். தீப்பொறி ஆறுமுகம் போன்றோர் தீவிரமான, தூண்டுதல் நிறைந்த மொழிக்காக அறியப்பட்டனர். விடுதலை விரும்பி போன்றவர்கள் எதிரியின் கொள்கையை விளக்குவதற்குப் பதிலாக, அவரின் 'மூக்கை உடைத்து' விடுவது போன்ற உருவகத் தாக்கமே நோக்கமாக இருந்தது" என்று விவரிக்கிறார் பேராசிரியர் கருணானந்தன்.

கடந்த 1970களுக்குப் பிறகு பேச்சு வழக்குத் தமிழ், சாதாரண மக்களை அடைய வேண்டிய மொழியாகக் கருதப்பட்டது. ஆனால் மொழி எளிமைப்படுத்தப்படும் போதெல்லாம், வாதமும் அதனுடன் மறைந்துவிட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர். கருத்தியல் வேறுபாடு தனிப்பட்ட பகையாக மாறியது. திறமையான பேச்சாளர்கள்கூட சில நேரங்களில் தனிப்பட்ட வெறுப்பால் வாதத்தின் சாரத்தை இழந்தனர்.

"சிந்தாந்த அரசியல் இப்போது ஆர்ப்பாட்ட அரசியலாகிவிட்டது," என்கிறார் பேராசிரியர் கருணானந்தன். இதைத்தான் இலங்கையைச் சேர்ந்த தமிழறிஞரும் திராவிட இயக்க ஆய்வு நூல்களை எழுதியவருமான கார்த்திகேசு சிவதம்பி திராவிட இயக்க அரசியலில் "கொள்கை விலக்கம்" என்று குறிப்பிடுவதாக பேராசிரியர் ரவீந்திரன் சுட்டிக்காட்டுகிறார்.

இந்தப் பேச்சுகள் குறிப்பாக பெண்களைச் சுற்றி மிகவும் அருவருப்பான வடிவம் பெற்றது. சமூகத்தில் இருந்த ஆணாதிக்கம் தமிழ் இலக்கியத்திலும் திரைப்படப் பாடல்களிலும் காணப்பட்டதைப் போலவே, அரசியல் மேடையிலும் நுழைந்தது. அது பெண் உடல், தோற்றம், உறவுகள் போன்றவை ஆண் அரசியல் எதிரிகளைத் தாக்குவதற்கான வசதியான கருவிகளாகப் பயன்படுத்தப்பட்டன. "விரசமான மொழியைப் பேசுவது சில நேரங்களில் புரட்சியாக கருதப்பட்டது" என்கிறார் பேராசிரியர் கருணானந்தன்.

மேடைப்பேச்சு வரலாறு

பட மூலாதாரம், Getty Images

எனினும், இத்தகைய பேச்சுகளை உருவாக்கிய அதே இயக்கம், பெண்கள் விடுதலை மற்றும் விதவைத் திருமணத்திற்கு வலுவான அரசியல் ஆதரவையும் வழங்கியதாக அவர் எடுத்துகூறுகிறார்.

மண்ணின் மணம் வீசும் நகைச்சுவை திராவிட அரசியலுக்கு அந்நியமல்ல. வரலாற்றில் மேடைப் பேச்சாளர் என்பது அரசியல்வாதி, ஆசிரியர், நகைச்சுவையாளர், நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கும் கலைஞர் ஆகிய பல முகங்களின் கலவையாக இருந்தார். ஆனால் உதயநிதி, தலைவரை எதிர்பார்த்து கூட்டத்தைத் தக்க வைக்கும் பேச்சாளர் அல்லர். அவர் எதிர்க்கட்சித் தலைவர். இந்தப் பின்னணியில்தான் உதயநிதி சம்பவம் தனித்துவமான முக்கியத்துவத்தைப் பெறுகிறது.

ஒரு காலத்தில் சிரிப்பைத் தூண்டிவிட்டு இரவில் மறைந்து போயிருக்கும் ஒரு கருத்து, இன்று காணொளித் துணுக்குகளாகவும், சமூக ஊடக வாதமாகவும், காவல் புகாராகவும், முதல் தகவல் அறிக்கையாகவும், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் ஆதாரமாகவும் மாறுகிறது.

இந்த வீழ்ச்சி இதற்கும் முன்பே தொடங்கிவிட்டதாக பேராசிரியர் ரவீந்திரன் கருதுகிறார். 1930களில் இருந்து 1960கள் வரை திராவிட இயக்கம் ஆழமான தத்துவ வளர்ச்சியைக் கண்டது. அதன் பின்னர் கருத்தியல் பலவீனமடைந்தது. இயக்கத்தை வளர்க்கும் கருவியாக இருந்த பத்திரிகைத்துறையின் முக்கியத்துவம் குறைந்தது. அதிகமான தொண்டர்கள் பேச்சாளர்களாக மாற விரும்பினர். 1960களின் மேடைப் பேச்சை 2015இல் நடந்த ஒன்றுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், சொற்களில் மாற்றம் மட்டுமல்ல, கருத்துச் செறிவு மற்றும் மொழிநய இழப்பும் தெளிவாகத் தெரியும் என அவர் கூறுகிறார்.

ஒரு மைக்கிரோஃபோன் இன்று முன்பைவிட அதிக சக்தி வாய்ந்ததாக உள்ளது. ஒரு காலத்தில் அது ஒரு மைதானம் முழுவதும் மனிதக் குரலை எடுத்துச் சென்றது. இன்று அதில் பேசப்படும் சில விநாடிகள், கூட்டம் முடிவதற்கும் முன்பாக கோடிக்கணக்கான மொபைல் தொலைபேசிகளுக்குச் சென்று சேர்கின்றன.

ஒரு காலத்தில் தமிழ்நாட்டின் மேடைப் பேச்சாளர்கள் இருந்ததற்குக் காரணம், உலகைப் பற்றி அறிய பொது மக்கள் கொண்டிருந்த அறிவுத் தாகம். இலக்கியம், பகுத்தறிவு, சாதி, கூட்டாட்சி, மொழி, வறுமை, சமூகச் சீர்திருத்தம் போன்ற கருத்துகளை, மக்களிடம் கொண்டு சென்றனர்.

மேடை இப்போதும் இருக்கிறது. மைக்கிரோஃபோனின் பரப்பும் அளவிட முடியாத வகையில் விரிவடைந்துள்ளது. ஆனால், ஒரு காலத்தில் அந்த இரைச்சலுக்கும் ஆரவாரத்திற்கும் நியாயம் வழங்கிய அரசியல் வாதம், அவற்றோடு சேர்ந்து இன்னும் உயிரோடு இருக்கிறதா என்ற கேள்வி இருப்பதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு