இந்தியாவில் 'ஆசியாவின் தூய்மையான கிராமம்' எங்குள்ளது தெரியுமா? ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா பயணிகளுக்கு ஏன் தடை?

பட மூலாதாரம், Jamie Fullerton
- எழுதியவர், ஜேமி ஃபுல்லர்டன்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
சுற்றுலா மவ்லின்னாங் கிராமத்தின் வாழ்க்கையை முற்றிலும் மாற்றியது. ஆனால், பல தசாப்தங்களாக சுற்றுலாப் பயணிகளை வரவேற்ற பிறகு, வாரத்தில் ஒரு நாள் தங்களுக்காக மட்டுமே இருக்க வேண்டும் என்று கிராம மக்கள் முடிவு செய்தனர்.
இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள மவ்லின்னாங் கிராமத்தில் வெறும் 600 பேர் வசிக்கின்றனர். ஆனால், ஒவ்வொரு சனிக்கிழமையும் 1,000 பேர் வரை சுற்றுலாப் பயணிகள் அந்தக் கிராமத்துக்கு வருகின்றனர்.
மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தெருக்களில் உலா வரவும், சுத்தமாக இருக்கும் வீதிகளில் செல்ஃபி எடுக்கவும், மேலும் இந்தியா முழுவதும் இந்த கிராமத்தைப் புகழ்பெறச் செய்த "ஆசியாவின் தூய்மையான கிராமம்" என்ற பட்டத்திற்கு இது உண்மையிலேயே தகுதியானதா என்பதைப் பார்க்கவும் அவர்கள் வருகின்றனர்.
ஆனால், 2026 ஜனவரி முதல், கிராமத்துக்குச் செல்லும் ஒரே சாலையில் அமைக்கப்பட்டுள்ள கருப்பு நிற இரும்புக் கதவுகள் வாரத்தில் ஒரு நாள் மூடப்பட்டு, காவலுடன் பாதுகாக்கப்படுகின்றன.
ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு நாள் சுற்றுலா வரும் பயணிகளை கிராமத்துக்குள் அனுமதிக்க வேண்டாம் என்று மக்கள் எதிர்பாராத முடிவை எடுத்துள்ளனர். இதன் மூலம், சுற்றுலாப் பயணிகளிடமிருந்து கிடைக்கும் வருமானத்தையும் அந்த ஒரு நாளில் அவர்கள் இழக்கின்றனர்.
சுற்றுலா மூலம் பொருளாதார ரீதியாக பெரும் மாற்றத்தைச் சந்தித்த ஒரு கிராமம், வாரத்தில் ஒரு நாள் தன்னைத்தானே வெளி உலகத்திலிருந்து ஏன் துண்டித்துக்கொள்ள விரும்புகிறது?
கிராம மக்களின் கூற்றுப்படி, தாங்கள் "உண்மையான கிராம வாழ்க்கை" என்று அழைக்கும் வாழ்க்கை முறையை மீண்டும் பெறுவதற்கான முயற்சியே இந்தத் தடை.

பட மூலாதாரம், Jamie Fullerton
சுத்தத்தைப் பேணும் கலாசாரம்
இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில், வங்கதேச எல்லையில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் மவ்லின்னாங் அமைந்துள்ளது. 2003-ஆம் ஆண்டு டிஸ்கவர் இந்தியா இதழ், மவ்லின்னாங்கை "ஆசியாவின் மிகவும் சுத்தமான கிராமம்" என்று குறிப்பிட்ட பிறகு, அது பிரபலமான சுற்றுலாத் தலமாக மாறியது.
இது சாதாரண சாதனையல்ல. ஆனால் மவ்லின்னாங்கில், சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு சுத்தத்தைப் பேணும் பழக்கம் கற்றுக்கொடுக்கப்படுகிறது.
பல குழந்தைகள் தினமும் காலையில் பள்ளிக்குச் செல்வதற்கு முன்பு தெருக்களில் இறங்கி, உதிர்ந்த இலைகளைப் பெருக்கி அகற்றுவதுடன், காலியாகிய குப்பைத் தொட்டிகளையும் சுத்தம் செய்கின்றனர். கிராம மக்களே மக்கும் கழிவுகளை முறையாக அகற்றுவதுடன், பொது இடங்களில் மரங்கள் மற்றும் செடிகளை வளர்த்து அழகாகப் பராமரிப்பதிலும் பெருமை கொள்கின்றனர்.
2014-ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோதி தனது நாடு தழுவிய "தூய்மை இந்தியா" பிரசாரத்தைத் தொடங்கிய சிறிது காலத்துக்குப் பிறகு, வானொலி உரையொன்றிலும் இந்தக் கிராமத்தைப் பற்றி குறிப்பிட்டார்.
"தூய்மையைப் பராமரிப்பது இங்குள்ள மக்களின் பழக்கமாகிவிட்டது. சக குடிமக்களின் முயற்சிகளால் நமது நாடும் நிச்சயமாகத் தூய்மையானதாக மாறும் என்ற நம்பிக்கையை இவை அனைத்தும் நமக்குள் ஏற்படுத்துகின்றன," என்று அவர் கூறினார்.
இந்தப் பாராட்டுகள் மவ்லின்னாங்கை இந்தியா முழுவதும் பிரபலமாக்கின. இதையடுத்து, கிராம மக்கள் விவசாயப் பணிகளில் இருந்து சுற்றுலாத் துறையை நோக்கி தங்கள் வாழ்வாதாரத்தை மாற்றத் தொடங்கினர்.
விருந்தினர் இல்லங்களையும் உணவகங்களையும் தொடங்கினர். மேலும், நினைவுப் பொருட்கள் மற்றும் தேநீர் விற்பனை செய்யும் கடைகள் சூழ்ந்த வாகன நிறுத்துமிடத்தையும் அமைத்தனர். அங்கு தினந்தோறும் சுற்றுலாப் பயணிகள் நிரம்பிய வாகனங்கள் வரிசையாக வந்து சென்றன.

பட மூலாதாரம், Jamie Fullerton
'முன்பு கடைகள் இருக்காது’
சுற்றுலாப் பயணிகள் மவ்லின்னாங் கிராமத்துக்கு வரத் தொடங்கி இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு, சமூக வலைதளங்கள் மூலம் புதிய தலைமுறை சுற்றுலாப் பயணிகளும் வரத் தொடங்கிய நிலையில், சுற்றுலாவுக்கும் கிராம மக்களின் வாழ்க்கைக்கும் இடையே மீண்டும் சமநிலை தேவை என்று கிராமக் குழு முடிவு செய்தது. இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு நாள் மட்டும் சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு தடை விதித்தது.
இந்தத் தடைக்கான முக்கிய காரணம், பெரும்பான்மையாக கிறிஸ்தவர்கள் வசிக்கும் கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலாப் பயணிகளைக் கவனிப்பதற்குப் பதிலாக தேவாலயத்துக்குச் சென்று வழிபடுவதற்கான நேரத்தைப் பெற வேண்டும் என்பதுதான் என்று அவர்கள் தெரிவித்தனர்.
கிராமக் குழு உறுப்பினர் பிரீஷியஸ் கோங்டுப், இந்த முடிவு "கிராமத்தின் கலாசார அடையாளத்தையும், ஆரம்பத்தில் மவ்லின்னாங்கை தனித்துவமாக்கிய ஒழுக்கத்தையும் பாதுகாப்பதற்காக" எடுக்கப்பட்டதாக இந்திய ஊடகத்திடம் தெரிவித்தார்.
கிராமத்தின் மையப்பகுதியில் உள்ள பெரிய மூங்கில் நடைபாதையை கடக்க சுற்றுலாப் பயணிகளிடம் 30 ரூபாய் வசூலிக்கும் உள்ளூர் குடியிருப்பாளரான ஃபெஸ்டிவல் காரிம்பா" இது எங்களுக்கு நல்லது. தேவாலயத்துக்குச் செல்லவும், வழிபாட்டில் பங்கேற்கவும், பிரார்த்தனை செய்யவும் எங்களுக்கு நேரம் கிடைக்கிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலாப் பயணிகள் இங்கு இருந்தால், அது எங்களுக்கு பிரச்னையாக இருக்கும்," என்று கூறினார்.
இந்தத் தடை அமலுக்கு வருவதற்கு முன்பே, பெரும்பாலான சுற்றுலாத் தொழில் நிறுவனங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படாமல் இருந்தன. அந்த நாளில் இரண்டு உணவகங்கள் மட்டுமே திறந்திருக்கும் என்றும், இதனால் சுற்றுலாப் பயணிகள் கிராமத்தைச் சுற்றிப் பார்க்க முடிந்தாலும், உணவு அல்லது பானங்கள் வாங்குவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்காது என்றும் கோங்டுப் தெரிவித்தார்.
"சுற்றுலாப் பயணிகள் அசௌகரியமாக உணர வேண்டும் என்று நாங்கள் விரும்பவில்லை. தடை அமலுக்கு வருவதற்கு முன்பு ஞாயிற்றுக்கிழமைகளில் யாராவது தண்ணீர் பாட்டில் வாங்க விரும்பினால்கூட, எல்லாக் கடைகளும் மூடப்பட்டிருந்ததால் அவர்களால் வாங்க முடியாது. சுற்றுலாப் பயணிகள் கிராம மக்களின் விருந்தோம்பலை அனுபவிக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஞாயிற்றுக்கிழமைகளில் நாங்கள் கடைகளை மூடுகிறோம்," என்று அவர் கூறினார்.

பட மூலாதாரம், Jamie Fullerton
வெற்றியின் விலை
சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்களுக்கும் மவ்லின்னாங்கில் உள்ள விருந்தினர் இல்லங்களில் அறை முன்பதிவு செய்யும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த ஞாயிற்றுக்கிழமைத் தடை பொருந்தாது. இந்த விதிவிலக்கைப் பயன்படுத்தி, கிராமத்தின் நிலைமையைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள நானும் ஒரு வார இறுதியை அங்கு கழிக்க முடிவு செய்தேன்.
கிராமத்துக்குச் சென்றதும், வாகன நிறுத்துமிடத்திலிருந்து கிராமத்தின் மையப்பகுதியை நோக்கி நடந்து சென்றேன். வழியில் மரத்தால் செய்யப்பட்ட இருக்கைகளையும், "எச்சில் துப்பக்கூடாது" என்ற எச்சரிக்கைப் பலகைகளையும் கடந்து சென்றேன். அவற்றில், விதியை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
நான் நடந்து சென்றபோது, புதர்களை வெட்டிச் சீரமைத்துக்கொண்டிருந்த ஆண்களைக் கடந்து சென்றேன். அவர்கள் பயன்படுத்திய கத்தரிக்கோலின் மெதுவான சத்தம் என் நடைப்பயணத்துக்கு பின்னணி இசையைப் போல இருந்தது.
அப்போது சிவப்பு நிற ஆடை அணிந்திருந்த ஒரு சுற்றுலாப் பயணி, தோட்டப் பணியாளரிடம் அவர் வெட்டிய கிளைகளை வாங்கிக்கொள்ளலாமா என்று கேட்டார்.
"சிலவற்றை இலவசமாகவே எடுத்துக்கொள்ளுங்கள்!" என்று கூறிய அவர், ஒரு கைப்பிடி அளவு கிளைகளை அந்தப் பெண்ணிடம் கொடுத்தார்.
பின்னர், 1902-ஆம் ஆண்டு நிறுவப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்த பெரிய தேவாலயம் ஒன்றைக் கடந்து சென்றேன்.
இந்தியாவின் 150 கோடி மக்கள்தொகையில் சுமார் 80 சதவீதம் பேர் இந்துக்கள். ஆனால் 19-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் மேகாலயாவிற்கு வந்த ஐரோப்பிய கிறிஸ்தவ மிஷனரிகளின் தாக்கத்தால், மாநிலத்தின் மிகப்பெரிய பழங்குடியின சமூகமான காசி மக்களிடையே கிறிஸ்தவம் வலுவாக வேரூன்றியது.
கிராம மக்களின் வாழ்க்கையில் தேவாலயம் முக்கியப் பங்கு வகிப்பது, சுற்றுலா மூலம் கிடைக்கும் வருமானத்தைவிட வழிபாட்டுக்கு முன்னுரிமை அளிக்க அவர்கள் ஏன் தயாராக இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது.
அதே நேரத்தில், ஒரு தலைமுறைக்கு முன்பு கற்பனை செய்துகூட பார்க்க முடியாத அளவுக்கு சுற்றுலா மவ்லின்னாங் கிராமத்தையும் மாற்றியுள்ளது.
''2003-ஆம் ஆண்டுக்கு முன்பு மவ்லின்னாங் அருகிலுள்ள கிராமங்களுடன் முறையான சாலை வசதியால் இணைக்கப்படவில்லை. தனிமைப்படுத்தப்பட்ட கிராமமாக இருந்த அது, அழகான சுற்றுலாத் தலமாக மாறிய விதம் மிகவும் வேகமாக இருந்தது.'' என்கிறார் கோங்டுப்
இந்த மாற்றம் கிராம மக்களுக்கு நன்மை அளித்ததா என்று நான் கேட்டபோது, சுற்றுலா மூலம் கிடைத்த வருமானத்தில் கட்டப்பட்டதாக அவர் கூறிய சில புதிய கான்கிரீட் வீடுகளைச் சுட்டிக்காட்டினார்.
ஒரு தலைமுறைக்கு முன்பு, இங்குள்ள பல குடும்பங்களால் புல் மற்றும் ஓலைகளால் வேயப்பட்ட வீடுகளையே கட்ட முடிந்தது என்றும் அவர் கூறினார்.
தேவாலயத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தத் தடை, வார இறுதி நாட்களில் கிடைக்கும் வருமானத்தைக் கட்டுப்படுத்துவதால் சில சுற்றுலாத் தொழில் உரிமையாளர்கள் அதிருப்தியில் இருக்கக்கூடும் என்று நான் எண்ணினேன். ஆனால், அத்தகைய எதிர்ப்பு இருப்பதாக என்னிடம் யாரும் தெரிவிக்கவில்லை.
தேவாலயத்திற்கு வெளியே சந்தித்த உள்ளூர் நபர் ஒருவர், கிராமத்தின் மக்கள் தொகை "100 சதவீதம் கிறிஸ்தவர்கள்" என்றும், ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு அனைவரும் ஒருமனதாக ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்தார்.
சுற்றுலா கொண்டு வந்த நன்மைகளை கோங்டுப் உடனடியாக ஒப்புக்கொண்டார். ஆனால், கிராம மக்கள் கடவுளை வழிபடுவதற்கு அதிக நேரம் கிடைப்பதுடன், மவ்லின்னாங்கின் கலாசாரத்தில் ஆழமாகப் பதிந்துள்ள தூய்மை விதிகளை மதிக்காத சுற்றுலாப் பயணிகளிடமிருந்தும் ஓய்வு பெறுவதற்கான வாய்ப்பை ஞாயிற்றுக்கிழமைத் தடை வழங்குகிறது.
எனது பயணத்தின்போது பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் உள்ளூர் மக்களின் தூய்மைப் பழக்கத்தைப் பின்பற்றுவதைக் காண முடிந்தது. கிராமத்தின் நடைபாதைகள் முழுவதும் வைக்கப்பட்டிருந்த கையால் செய்யப்பட்ட மூங்கில் கூடைகளில் அவர்கள் குப்பைகளை கவனமாகப் போட்டனர்.
ஆனால், ஞாயிற்றுக்கிழமைத் தடை அறிமுகப்படுத்தப்பட்ட காலகட்டத்தில், சுற்றுலாப் பயணிகள் மவ்லின்னாங் முழுவதும் வீசியெறிந்திருந்த பிளாஸ்டிக் பாட்டில்கள் தொடர்பான ஒரு காணொளி சமூக வலைதளங்களில் வைரலானது.
"எங்கள் அழகான வடகிழக்குப் பகுதியைச் சுத்தமாக வைத்திருக்க முடியவில்லை என்றால்... தயவுசெய்து இங்கு வராதீர்கள்" என்று அந்தக் காணொளியில் ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார்.
தேவாலயத்துக்குச் செல்வதைத் தாண்டி, ஞாயிற்றுக்கிழமைத் தடைக்கு வேறு காரணங்கள் என்ன என்று கேட்டபோது, இரண்டு தசாப்தங்களாகத் தினமும் சுற்றுலாப் பயணிகள் வந்து சென்ற நிலையில், அவர்களின் வருகையிலிருந்து கட்டாயமாக ஓய்வு எடுக்க வேண்டிய நிலையை கிராம மக்கள் இறுதியாக அடைந்துவிட்டதாக கோங்டுப் தெரிவித்தார்.
தலையில் கோப்ரோ கேமராக்களை கட்டிக்கொண்டு சுற்றித் திரியும் சுற்றுலாப் பயணிகளையும், தரையில் பிளாஸ்டிக் பாட்டில்களை வீசுவதையும் மக்கள் பார்க்காத ஒரு காலத்துக்கு, குறைந்தபட்சம் சிறிது காலத்துக்காவது திரும்பிச் செல்லும் வாய்ப்பாகவும் இந்தத் தடை அமைந்துள்ளது.
"எங்களுக்கு ஓர் இடைவெளி தேவை. சுற்றுலாப் பயணிகளுக்காக ஒரு நாள் கிராமத்தை மூடினால், அப்போது எங்களால் உண்மையான கிராம வாழ்க்கையை வாழ முடியும்," என்று கோங்டுப் கூறினார்.

பட மூலாதாரம், Jamie Fullerton
ஞாயிற்றுக்கிழமைகள் கிராம மக்களுக்கே
ஞாயிற்றுக்கிழமை காலை, சுற்றுலாப் பயணிகள் யாரும் தென்படவில்லை. மவ்லின்னாங் கிராமத்தின் நடைபாதைகளில் நான் பார்த்தவர்கள் அனைவரும் உள்ளூர் மக்கள்தான். கையில் பைபிளுடன், ஞாயிற்றுக்கிழமைக்கான சிறப்பு உடைகளை அணிந்துகொண்டு அவர்கள் தேவாலயத்தை நோக்கி நடந்து சென்றுகொண்டிருந்தனர்.
நினைவுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளின் முன்புறம் மரப் பலகைகள் பொருத்தப்பட்டு பூட்டப்பட்டிருந்தன. வாகன நிறுத்துமிடம் காலியாக இருந்தது. கிராமத்தின் நுழைவாயிலை நோக்கி நான் நடந்தபோது, வீடுகளில் இருந்து பாடல்கள் மெல்லியதாக ஒலித்துக்கொண்டிருந்தன.
விடுமுறையைக் கழிப்பதற்காக மேகாலயாவைச் சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்த டெல்லியைச் சேர்ந்த மொழிப் பேராசிரியர் விஜயா தேப்நாத்தை சந்தித்தேன்.
நுழைவாயிலில் இருந்த காவலர், அவரையும் அவரது கணவரையும் மரியாதையுடனும் அதே நேரத்தில் உறுதியுடனும் திருப்பி அனுப்பியிருந்தார்.
சில சுற்றுலாப் பயணிகள் இந்தத் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வார இறுதி நாளுக்குப் பதிலாக ஒரு வார நாளில் இந்தத் தடையை அமல்படுத்தியிருக்க வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர். ஆனால், கிராம மக்களுக்கு தேவாலயத்துக்குச் செல்லும் நேரம் முக்கியமானது என்பதை தான் புரிந்துகொள்வதாக தேப்நாத் கூறினார்.
"இந்த மக்கள் தொடர்ந்து இந்தக் கிராமத்தை இவ்வளவு நேர்த்தியாகவும் தூய்மையாகவும் வைத்திருக்கிறார்கள். அதைப் பார்க்கவே நாங்கள் விரும்பினோம். இங்கு இதுபோன்ற ஒன்றைப் பார்ப்பது மிகவும் வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது," என்று அவர் கூறினார்.
மவ்லின்னாங் என்ற கிராமம் இருப்பதைப் பற்றித் தெரிந்துகொண்டபோது, பொதுச் சுகாதாரம் மற்றும் தூய்மை குறித்து இந்தியாவுக்கு இருக்கும் எதிர்மறையான பிம்பம் ஒருநாள் மாறக்கூடும் என்ற நம்பிக்கையைத் தனக்கு அளித்ததாக தேப்நாத் கூறினார்.
"இந்த உதாரணத்தின் மூலம் நாம் கற்றுக்கொள்ள முடியும். நம்மால் இடங்களைச் சுத்தமாக வைத்திருக்க முடியும்; உண்மையில், அவ்வாறு வைத்திருக்க வேண்டும்," என்றார் அவர்.
மவ்லின்னாங்கை மீண்டும் பார்க்க வருவேன் என்றும், ஆனால் கிராம மக்கள் ஓய்வெடுக்கத் தேர்ந்தெடுத்துள்ள இந்தப் புதிய நாளில் மட்டும் வரமாட்டேன் என்றும் அவர் கூறினார்.
அவர் வாடகைக் காரில் மீண்டும் ஏறிச் சென்றபோதும், மூடப்பட்ட உணவகங்களைக் கடந்து, கிராமத்தின் நுழைவாயில் கம்பிகளுக்கு இடையே மெல்லிய மகிழ்ச்சியான பாடல்கள் கேட்டுக்கொண்டிருந்தன.
வாரத்தின் ஆறு நாட்கள் மவ்லின்னாங் தனது விருந்தினர்களுக்காக இயங்குகிறது. ஏழாவது நாளில் அது ஓய்வெடுக்கிறது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































