அறிமுகமே இல்லாத இளைஞர்களால் பல முறை காரால் மோதப்பட்ட மருத்துவ மாணவி - ஆந்திராவில் என்ன நடந்தது?

மருத்துவ மாணவி பிரியங்கா

பட மூலாதாரம், UGC

    • எழுதியவர், கரிகிபதி உமாகாந்த்
    • பதவி, பிபிசிக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

"என் மகள் என்ன பாவம் செய்தாள்? அவளை காரால் மோதிக் கொன்றுவிட்டார்கள். நாளை அவர்கள் மீண்டும் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு இன்னொருவரை தாக்கினால் என்ன சொல்வது? இத்தகைய அநீதி யாருக்கும் நடக்கக் கூடாது," என்று முதுநிலை மருத்துவ மாணவி பிரியங்காவின் தந்தை வெங்கடேஷ் பிபிசியிடம் தெரிவித்தார்.

"ஆகஸ்ட் 3-ஆம் தேதி, இருசக்கர வாகனத்தின் பின்புறத்தில் அமர்ந்து சென்றுகொண்டிருந்த பிரியங்காவை, ராஜமகேந்திரவரத்தில் (ஆந்திரா) இரண்டு இளைஞர்கள் காரில் பின்தொடர்ந்து மூன்று முறை மோதினர். இதில் அவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் மூளைச்சாவு நிலையில் உள்ளார். சிகிச்சைக்கு உடல் ஒத்துழைக்கவில்லை," என்று வெங்கடேஷ் கூறினார்.

"நான் ஒரு விவசாயி. தெலங்கானாவின் கட்வால் என் சொந்த ஊர். சமீபத்தில்தான் ஹைதராபாத்துக்கு குடிபெயர்ந்தோம். என் மகள் கடுமையாக உழைத்து முதுநிலை மருத்துவப் படிப்பில் இடம் பெற்றார். தற்போது முதல் ஆண்டு படித்து வந்தார். அன்று நண்பர்களுடன் திரைப்படம் பார்க்கச் சென்றார். படம் முடிந்த பிறகு மகள் அழைப்பார் என்று காத்திருந்தேன். ஆனால், வேறொருவர் அழைத்து 'உங்கள் மகளுக்கு விபத்து ஏற்பட்டுள்ளது' என்று தெரிவித்தார்," என்றார்.

"நாங்கள் உடனடியாக ராஜமகேந்திரவரம் சென்றோம். பின்னர் அவரை வென்டிலேட்டர் உதவியுடன் ஹைதராபாத்திலுள்ள கிம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றினோம். உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு ஒரு சதவீதம் மட்டுமே இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். எந்தத் தந்தையும் இவ்வளவு கொடூரமான சூழ்நிலையை எதிர்கொள்ளக் கூடாது," என்று அவர் வேதனையுடன் கூறினார்.

மேலும், "இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதை காவல்துறை உறுதி செய்ய வேண்டும்," என்று அவர் வலியுறுத்தினார்.

என்ன நடந்தது?

ஆகஸ்ட் 3-ஆம் தேதி, ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் ராஜமகேந்திரவரத்தில், மதுபோதையில் இருந்த இரண்டு இளைஞர்கள் முதுநிலை மருத்துவ மாணவர்கள் இருவரை காரால் மோதிய சம்பவம் குறித்து பிரகாஷ்நகர் சரக காவல் ஆய்வாளர் பாஜிலால் பிபிசியிடம் விவரித்தார்.

"ஆகஸ்ட் 3-ஆம் தேதி இரவு, ராஜமகேந்திரவரத்தைச் சேர்ந்த சூரவரப்பு தஸ்வந்த் மற்றும் ஆண்ட்ரூ ஜோசப் எட்வர்ட் ஆகிய இருவரும் ஏவிஏ சாலையில் உள்ள பிரசாத் ஆதித்யா மாலில் இரண்டாம் காட்சி திரைப்படத்தைப் பார்க்க வந்தனர். பாதுகாப்பு நுழைவாயிலில் நடத்தப்பட்ட மூச்சுப் பரிசோதனையில் இருவரும் மது அருந்தியிருந்தது தெரியவந்தது. மது அருந்தியவர்களை திரையரங்குக்குள் அனுமதிக்க முடியாது என்று பாதுகாப்புப் பணியாளர்கள் தெரிவித்தனர். இதனால் அவர்களுக்கும் பாதுகாப்புப் பணியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியில் அனுமதி மறுக்கப்பட்டதால், அவர்கள் தங்கள் காரை நிறுத்துமிடத்தில் இருந்து எடுத்துக்கொண்டு வெளியேறத் தொடங்கினர்," என்று பாஜிலால் கூறினார்.

"அப்போது, முதல் காட்சித் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த மருத்துவர்கள் உமேஷ் மற்றும் பிரியங்கா ஆகியோர் அந்தக் காரின் முன்புறத்தில் இருந்தனர். இந்த இரு இளைஞர்களும் முதலில் தங்கள் காரால் அவர்களின் இருசக்கர வாகனத்தை மோதினர். அதன்பிறகு, மீண்டும் வேகமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதினர். அந்த நேரத்தில் பின்புறத்தில் அமர்ந்திருந்த பிரியங்கா கீழே விழுந்தார். இருந்தபோதிலும், காரை ஓட்டிய இளைஞர் மீண்டும் காரால் மோதிவிட்டு தப்பிச் சென்றனர்.

படுகாயமடைந்த பிரியங்காவும், காயமடைந்த உமேஷும் அப்பகுதி மக்களின் உதவியுடன் ராஜமகேந்திரவரம் சுதந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்," என்று அவர் விளக்கினார்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த உமேஷ் மருத்துவமனையில் அளித்த வாக்குமூலம் மற்றும் திரையரங்கு மேலாளர் விஜய் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக காவல் ஆய்வாளர் தெரிவித்தார்.

சூரவரப்பு தஸ்வந்த் மற்றும் ஆண்ட்ரூ ஜோசப் எட்வர்ட் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, இம்மாதம் 21-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

படுகாயமடைந்த பிரியங்காவின் உடல்நிலை மோசமடைந்ததால், அவர் ராஜமகேந்திரவரத்தில் இருந்து ஹைதராபாத்திலுள்ள கிம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக காவல் ஆய்வாளர் பாஜிலால் தெரிவித்தார்.

உமேஷ் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பியதாகவும் அவர் கூறினார்.

பிரியங்கா முதுநிலை தோல் மருத்துவம் பயின்று வந்தார். உமேஷும் மருத்துவம் படித்து வந்தார்.

மருத்துவ மாணவி பிரியங்கா

பட மூலாதாரம், UGC

'எந்தத் தொடர்பும் இல்லை'

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

சம்பவம் ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடந்திருந்தாலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் 6-ஆம் தேதிதான் கைது செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. மேலும், கார் இருசக்கர வாகனத்தை மோதும் காணொளியும் வைரலானது.

இதுகுறித்து கிழக்கு கோதாவரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிஷோர் பிபிசியிடம், "காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். ஆரம்பத்தில் இது ஒரு விபத்து என்று நினைத்தோம். ஆனால், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, திட்டமிட்டு மோதியிருப்பது தெரியவந்தது. அதனால்தான் கொலை முயற்சி வழக்காகப் பதிவு செய்தோம்," என்றார்.

மேலும், "எங்களது விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் முன்பாக எந்த அறிமுகமோ தொடர்போ இல்லை என்பது தெரியவந்தது. வழக்குப் பதிவு செய்வதிலோ அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்வதிலோ எந்த தாமதமும் ஏற்படவில்லை.

வழக்குப் பதிவு செய்தல், விசாரணை நடத்துதல் மற்றும் தலைமறைவாக இருந்த குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்தல் ஆகிய நடைமுறைகளுக்கு குறுகிய கால அவகாசம் மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆகஸ்ட் 6-ஆம் தேதி அவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்," என்று கிஷோர் தெரிவித்தார்.

இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் பிபிசி கருத்து கேட்க முயன்றது. ஆனால் அவர்கள் பதில் அளிக்கவில்லை.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

படுகாயமடைந்த பிரியங்காவுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

துணை முதலமைச்சர் பவன் கல்யாணும் இந்தச் சம்பவம் குறித்து ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு