எவரெஸ்டில் 30 ஆண்டாக உள்ள இந்தியர் உடலை கீழே கொண்டு வருவது ஏன் சவாலானது? குடும்பம் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Supplied
- எழுதியவர், ஜஹாங்கீர் அலி
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
'கிரீன் பூட்ஸ்' என அழைக்கப்படும் ஒரு சடலம், எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியிலிருந்து சிறிது தூரத்தில் உள்ள பனிப்பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாகக் கிடக்கிறது.
பாறையின் கீழ் சிக்கி உயிரிழந்த இந்திய மலையேற்ற வீரர் ஒருவருக்கு இந்தப் பெயர் வழங்கப்பட்டது. அவரது பச்சை நிறக் காலணிகள் இன்னும் அவரது கால்களில் உள்ளன. அதன் பின்னர், சிகரத்தை நோக்கிச் செல்பவர்களுக்கு இந்தக் காலணிகள் ஒரு அச்சமூட்டும் "அடையாளமாக" மாறிவிட்டன.
இப்போது, அவரது உடலை மீட்பதற்கான குழுவை இந்தியா தேடி வருகிறது.
அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டால், அவர்களின் துயரத்திலிருந்து ஓரளவுக்காவது மீள்வதற்கு அது உதவக்கூடும்.
1996-ஆம் ஆண்டு எவரெஸ்டின் வடக்குப் பகுதியான திபெத் வழியாகச் சிகரத்தை ஏறுவதற்கான பயணத்தில் பங்கேற்கப் புறப்படுவதற்கு முந்தைய இரவு, டோர்ஜே மோருப் லடாக்கில் உள்ள தனது வீட்டில் மனைவி கொன்சாக் யாங்ஸ்கிட்டுடன் நேரத்தைச் செலவிட்டார்.
தான் ஒரு ஹீரோவாகத் திரும்பி வந்து நாட்டுக்குப் பெருமை சேர்ப்பேன் என்று அவர் தனது மனைவியிடம் வாக்குறுதி அளித்தார்.
"குழந்தைகளைக் கவனித்துக்கொண்டு, நான் திரும்பி வரும்போது என்னை வரவேற்க விமான நிலையத்துக்கு வாருங்கள்," என்று அவர் கூறியதாக, இமயமலைப் பகுதியில் உள்ள தனது வீட்டிலிருந்து அவரது மனைவி யாங்ஸ்கிட் பிபிசியிடம் தெரிவித்தார்.
அப்போது தனக்கு ஒரு வித்தியாசமான அச்ச உணர்வு ஏற்பட்டதாக அவர் கூறுகிறார். மீண்டும் அவரைப் பார்க்க முடியுமா என்று அவர் யோசித்தார்.
அதே ஆண்டு மே 10-ஆம் தேதி, நேபாளத்துக்கும் சீன நிர்வாகத்தின் கீழ் உள்ள திபெத் பகுதிக்கும் இடையிலான எல்லையில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான சிகரத்தை அடைய முயன்ற இந்தியாவின் எவரெஸ்ட் பயணக் குழுவில் இடம்பெற்ற ஆறு மலையேற்ற வீரர்களில் மோருப்பும் ஒருவர்.
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கு பெரும்பாலான மலையேற்ற வீரர்கள் நேபாளப் பகுதி அல்லது தெற்குப் பாதையைத் தேர்வு செய்கின்றனர். ஏனெனில் வடக்குப் பகுதியான திபெத் பாதை அதிக செங்குத்தானதாகவும் அதிக ஆபத்தானதாகவும் உள்ளது.

பனிப்புயல் காரணமாக அந்தப் பயணக் குழுவில் இருந்த ஆறு பேரில் மூவர் திரும்பிச் சென்றனர். ஆனால் மோருப்பும், இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை (ITBP) குழுவைச் சேர்ந்த மற்ற இருவரான சேவாங் சமன்லா மற்றும் சேவாங் பால்ஜோரும் தொடர்ந்து சிகரத்தை நோக்கிச் சென்றனர்.
திரும்பி வரும்போது, மோருப் பனிப்புயலில் சிக்கி உயிரிழந்தார்.
தோல்வியடைந்த அந்த இந்தியப் பயணக் குழுவைச் சேர்ந்த மற்ற இருவரின் உடல்கள் ஒருபோதும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதேசமயம் "கிரீன் பூட்ஸ்" என்று அறியப்பட்ட மூன்றாவது நபரின் உடல், கடந்த மூன்று தசாப்தங்களாகப் பனியில் முகம் குப்புறக் கிடக்கிறது.
எவரெஸ்டில் ஏற முயன்றதில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பலரின் உடல்கள் இன்னும் மலையில் உள்ளன.

சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை அந்த உடலை மீட்டுக் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளைப் பரிசீலிக்கத் தொடங்கியது.
பல ஆண்டுகளாக, 'கிரீன் பூட்ஸ்' என்று அழைக்கப்படும் உடல் சேவாங் பால்ஜோருடையது என்று நம்பப்பட்டு வந்தது. ஆனால், 2024-ஆம் ஆண்டு அதிகாரிகள் தங்களது நிலைப்பாட்டை மாற்றினர்.
1996-ஆம் ஆண்டு நடந்த அந்தப் பயணத்தில் உயிர் பிழைத்த உறுப்பினர்களின் வாக்குமூலங்கள் மற்றும் மலையேற்ற வீரர்களுடனான கடைசி வானொலி தொடர்பு நடைபெற்ற இடம் ஆகியவற்றைத் தொடர்ந்து இந்த விவகாரம் மறுபரிசீலனை செய்யப்பட்டது. தற்போது அந்த உடல் மோருப்புடையது என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.
"அவரது உடைகள் மற்றும் உடைமைகள் அவரை அடையாளம் காண உதவின" என்று பெயர் குறிப்பிட விரும்பாத ஐடிபிபி அதிகாரி ஒருவர் பிபிசி நியூஸ் ஹிந்தியிடம் தெரிவித்தார்.
அந்த அதிகாரியின் கூற்றுப்படி, உடலை மீட்கும் நடவடிக்கையைத் தொடங்குவதற்கு முன்பு, அதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வது பெரும் சவாலாக இருந்தது.
"நாங்கள் அவரை ஒருபோதும் மறக்கவில்லை. அது காலத்தின் விஷயமாக மட்டுமே இருந்தது. உடலைக் கண்டுபிடித்து, அனைத்து நடைமுறைகளும் முடிந்ததும், குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்படும்" என்று அவர் கூறினார்.
'அவர் இறந்துவிட்டார் என்பதை என் இதயம் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை'.

எவரெஸ்டில் இருந்து 1,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில், லடாக்கில் உள்ள ஸ்குர்புச்சான் கிராமத்தைச் சேர்ந்தவர் மோருப். இந்தியா-சீனா எல்லையின் பெரும்பகுதியைப் பாதுகாக்கும் காவல் படையான இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையில் (ஐடிபிபி ) அவர் லான்ஸ் நாயக்காகப் பணியாற்றினார்.
1948-ஆம் ஆண்டு விவசாயக் குடும்பத்தில் பிறந்த மோருப், வறுமையில் இருந்து தப்புவதற்காக 1969-ஆம் ஆண்டு ஐடிபிபி -யில் சேர்ந்தார். 1971-ஆம் ஆண்டு யாங்ஸ்கிட்டைத் திருமணம் செய்துகொண்டார்.

தற்போது சுமார் 75 வயதாகும் யாங்ஸ்கிட்டுக்கு நீரிழிவு நோய் மற்றும் காது கேளாமை உள்ளது. தனது திருமண நாள் கூட அவருக்கு இப்போது தெளிவாக நினைவில் இல்லை.
ஆனால், விபத்துக்குப் பிந்தைய நாட்கள் அவரது நினைவில் இன்னும் தெளிவாக உள்ளன.
"ஆரம்பத்தில், குடும்பத்தில் யாரும் என்னிடம் எதுவும் கூறவில்லை" என்று அவர் நினைவுகூருகிறார்.
பின்னர், மோருப் இறந்திருக்கக் கூடும் என்று ஐடிபிபி குழுவினர் குடும்பத்தினருக்குத் தெரிவித்தனர்.
"அவரது உடலுக்கு என்ன ஆனது என்று அதிகாரிகளிடம் கேட்டபோது, அதைத் திரும்பக் கொண்டு வருவது சாத்தியமில்லை என்று அவர்கள் கூறினர்," என்கிறார் மோருப்பின் சகோதரரும் ஓய்வுபெற்ற இந்திய ராணுவ வீரருமான தாஷி சோனம்.
பின்னர், மோருப்பின் உறவினர்கள் அவரது உடல் இல்லாமலேயே இறுதிச் சடங்குகளை நடத்த முடிவு செய்தனர்.
யாங்ஸ்கிட் ஒருபோதும் பள்ளிக்குச் சென்றதில்லை. தனது கணவர் மேற்கொண்ட பயணத்தில் இருந்த ஆபத்துகள் குறித்தும் அவருக்கு தெரியாது.
"மலையில் புயல் வீசுகிறது என்பது மட்டுமே எனக்குத் தெரிந்திருந்தது. நாங்கள் வீட்டிலேயே இறுதிப் பிரார்த்தனைகளைக்கூட செய்தோம். ஆனால் அவர் இறந்துவிட்டார் என்பதை என் மனம் ஏற்றுக்கொள்ளவில்லை" என்று அவர் உணர்ச்சிப் பெருக்குடன் கூறுகிறார்.
"நான் அவரது உடலைப் பார்க்கவில்லை. அதனால், அவர் இறந்துவிட்டார் என்பதை நம்புவது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது" என்று அவர் கூறுகிறார்.
உடலைத் திரும்பக் கொண்டு வருவது எவ்வளவு கடினமாக இருக்கும்?

எவரெஸ்ட் சிகரம் உலகின் மிக உயரமான சிகரமாகும். இது 8,849 மீட்டர் உயரம் கொண்டது. அந்த உடல் 8,500 மீட்டர் உயரத்தில் கிடக்கிறது. செப்டம்பர் மாதத்துக்குள் அந்த உடலை மீட்டுக் கொண்டுவர இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை (ITBP) திட்டமிட்டுள்ளது.
இலையுதிர் கால மலையேற்றப் பருவமான செப்டம்பரில் உடலை மீட்க வேண்டுமெனில், கயிறுகள் உள்ளிட்ட தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியிருக்கும். இதனால் இந்தப் பணி மேலும் கடினமாகும் என்று ஷெர்பா வட்டாரங்கள் பிபிசி நியூஸ் நேபாளியிடம் தெரிவித்தன.
மலையேற்ற வீரர்கள் பொதுவாக மார்ச் முதல் மே வரை நீடிக்கும் வசந்தகால மலையேற்றப் பருவத்தில்தான் எவரெஸ்ட்டில் ஏற விரும்புகின்றனர்.
"மரண மண்டலம்" என்று அழைக்கப்படும் பகுதியில் இருந்து உடல்களை மீட்பது ஆபத்தானதும் அதிக செலவு பிடிப்பதுமான பணியாகும். இந்தப் பகுதியில் வெப்பநிலை -40 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும். கடல் மட்டத்துடன் ஒப்பிடும்போது இங்கு ஆக்சிஜன் அளவு மூன்றில் ஒரு பங்கு குறைவாக இருக்கும். பெரும்பாலான குடும்பங்களால் இதற்கான செலவை ஏற்க முடியாது.
நிபுணர்களின் கூற்றுப்படி, உடல்களைக் கீழே கொண்டு வருவதற்கு 40,000 முதல் 80,000 அமெரிக்க டாலர் வரை செலவாகலாம்.
உடல்களை கீழே சுமந்து வர வேண்டும் என்பதால் இந்தப் பணியும் மிகவும் கடினமானது. இதற்கு ஆறு முதல் 10 அல்லது அதற்கும் அதிகமான ஷெர்பாக்கள் கொண்ட குழு தேவைப்படலாம்.

பட மூலாதாரம், Family handout
நேபாளத்தின் முன்னணி மலையேற்ற வீரரும் பயணக் குழு வழிகாட்டியுமான சேரிங் ஜாங்பு ஷெர்பா, மலையின் சரிவுகளில் 30 ஆண்டுகளாகப் பனியில் உறைந்த நிலையில் இருக்கும் உடலை மீட்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று நம்புகிறார்.
அவர் பிபிசி நியூஸ் ஹிந்தி-யிடம் கூறுகையில், "வானிலை மற்றும் பனி நிலவரங்கள் மிகவும் முக்கியமானதாக இருக்கும். வடக்குப் பகுதியில் பிளவுகள் குறைவாக உள்ளன. ஆனால் அது அதிக ஆபத்தானது. நேபாளப் பகுதியில் எதிர்பாராத ஏதாவது நடந்தால், ஹெலிகாப்டர் மூலம் விரைவாக உங்களை வெளியேற்ற முடியும். ஆனால் சீனப் பகுதியில் இதுபோன்ற ஏற்பாடு இல்லை" என்றார்.
உடலை மீட்டுக் கொண்டு வருவதற்கான திட்டத்தை வகுக்கும்போது, அதன் தற்போதைய உடல் நிலையும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று தடயவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
உடலை மீட்பது தங்களுக்கு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து மோருப்பின் குடும்பத்தினர் இன்னும் கவலையுடன் உள்ளனர். உடலின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான டிஎன்ஏ ஒப்பீடு இன்னும் மேற்கொள்ளப்படவில்லை.
மோருப்பின் மகன்களில் ஒருவரான டோர்ஜாய், பிபிசி நியூஸ் ஹிந்தியிடம் பேசுகையில், "சில ஆண்டுகளுக்கு முன்பு ஐடிபிபி எங்களது ரத்த மாதிரிகளை எடுத்துச் சென்றது. ஆனால் சமூக ஊடகங்களில் நடந்த விவாதங்களைத் தவிர, யாரும் எங்களிடம் எதுவும் தெரிவிக்கவில்லை" என்றார்.

பட மூலாதாரம், Family handout
இன்று, மோருப்பின் வீட்டில் அவரை நினைவுபடுத்தும் பொருட்களாக அவரது பதக்கங்களும் கோப்பைகளும், அவர் மேற்கொண்ட சில மலையேற்றப் பயணங்களின் பழைய புகைப்படங்களும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் அவர் வாங்கிய ஒரு கண்ணாடிக் கோப்பையும் மட்டுமே உள்ளன.
அவற்றில் மிக முக்கியமானது சீன அரசு வழங்கிய சான்றிதழாகும். 1996 மே 10-ஆம் தேதி 17:30 மணிக்கு மோருப் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்ததாக அந்தச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திபெத் பகுதி வழியாக மோருப் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்திருந்தார். அவரது சாதனையை அங்கீகரிக்கும் வகையில் சீன அரசு அவருக்கு இந்தச் சான்றிதழை வழங்கியது.
'இத்தனை வருடங்களாக நீங்கள் எங்கே இருந்தீர்கள்?'

ஒவ்வோர் ஆண்டும் மே 10-ஆம் தேதி, மோருப்பின் நினைவாக அவரது குடும்பத்தினர் சிறப்பு பௌத்த பிரார்த்தனைகளை நடத்துகின்றனர்.
உடலை மீட்கும் நடவடிக்கை வெற்றியடைந்தால், லடாக்கின் தலைநகரான லேவில் உள்ள தியாகிகள் பூங்காவுக்கு அருகில் மோருப்பின் உடலைத் தகனம் செய்ய குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளதாக அவரது மகன் பஞ்சோக் டோர்ஜாய் பிபிசியிடம் தெரிவித்தார்.
"எனது தந்தை நாட்டுக்காகத் தனது உயிரைக் கொடுத்தார். அவர் ஒரு தியாகியாக நினைவுகூரப்பட வேண்டும்" என்று கூறிய டோர்ஜாய், அதே நேரத்தில் உயிரிழந்த அவரது சக வீரர்களுக்கும் அதே அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்றார்.
மோருப் சிகரத்தை அடைந்ததற்கான சான்றிதழுடன், அவரது நினைவாக ஒரு பொருளை வீட்டில் பெருமையுடன் வைத்திருக்க குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார். "கிரீன் பூட்ஸை எங்களுடன் வைத்திருக்கத் திட்டமிட்டுள்ளோம்" என்று அவர் கூறினார்.
உடலை மீட்கும் நடவடிக்கை வெற்றியடைந்து, மோருப்பின் உடல் இறுதியாக வீட்டுக்குக் கொண்டு வரப்படும் என்று யாங்ஸ்கிட், சோனம் மற்றும் குடும்பத்தினர் நம்புகின்றனர்.
மலையில் முப்பது ஆண்டுகளைக் கழித்துள்ள நிலையில், உடலை அடையாளம் காண முடியுமா என்பது குறித்தும் அவர்கள் கவலைப்படுகின்றனர்.
"அவர் வீட்டுக்கு வந்ததும், 'இத்தனை ஆண்டுகளாக எங்கே இருந்தீர்கள்?' என்று அவரிடம் கேட்பேன்" என்கிறார் யாங்ஸ்கிட்.
கூடுதல் தகவல்கள்: பிபிசி நியூஸ் நேபாளி செய்தியாளர் பிரதீப் பாஷ்யால்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































