'நான் கர்ப்பமாக இருப்பதை எனக்கு முன்பே என் உடல்நல கண்காணிப்பு கருவி கண்டுபிடித்தது'

'நான் அறியும் முன்பே நான் கர்ப்பமாக இருப்பதை என் உடல்நலக் கண்காணிப்பு கருவி கண்டுபிடித்தது'

பட மூலாதாரம், Ravika

படக்குறிப்பு, ராவிகா
    • எழுதியவர், அஷிதா நாகேஷ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

விடுமுறைக்காக தனது கணவருடன் சுற்றுலா சென்றிருந்த ரவிகா, தனது பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருந்தபோது, உடல்நல கண்காணிப்பு சாதனத்திலிருந்து எதிர்பாராத ஒரு செய்தியை பெற்றார்.

அவர் அணிந்திருந்த ஓரா ரிங், அவரது உடல்நல மதிப்பெண் குறைவாக இருப்பதாகக் காட்டியது. இதயத் துடிப்பு அதிகரித்திருந்தது, உடல் வெப்பநிலை உயர்ந்திருந்தது. இதயத் துடிப்பு வழக்கத்தை விட குறைவான மாறுபாட்டுடன் இருந்தது. ஆனால், ரவிகா தனக்கு எந்த உடல்நலப் பிரச்னையும் இருப்பதாக உணரவில்லை.

ஒரு வாரம் கடந்தும் அந்த அளவீடுகளில் முன்னேற்றம் இல்லாததால், பிரிட்டனை சேர்ந்த 34 வயதான வழக்கறிஞரான ரவிகா இணையத்தில் தேடத் தொடங்கினார். அப்போது, தங்களது உடல்நல கண்காணிப்பு சாதனங்கள் சேகரித்த தரவுகளின் அடிப்படையில், கர்ப்பமாக இருப்பதற்கான அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிந்ததாகக் கூறிய பெண்கள் பலர் இடம்பெற்றிருந்த ஓர் இணையக் குழுவை அவர் கண்டுபிடித்தார்.

ஒரு வாரத்திற்குப் பிறகு, அவர்பரிசோதனை செய்தபோது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

ஆனால், சில நாட்களுக்குப் பிறகு வயிற்றுப் பிடிப்பு ஏற்பட்டதுடன், அவரது உடல் அதிக அழுத்தத்துக்கு உள்ளாகியிருப்பதாகக் கூறும் அறிவிப்பும் கைப்பேசியில் வந்தது. இதையடுத்து அவர் மருத்துவரை அணுகினார். கர்ப்பம் ஆரோக்கியமாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்துவதற்காக, 10 நாட்களுக்குப் பிறகு மீண்டும் பரிசோதனைக்காக வருமாறு மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அந்தக் காத்திருப்பு காலம் அவருக்கு மிகவும் வேதனையானதாக இருந்தது. இதனால் அவர் தனது உடல்நல கண்காணிப்பு சாதனத்தின் தரவுகளை மீண்டும் மீண்டும் பார்க்கத் தொடங்கினார்.

"ஒவ்வொரு நாளும் அதிகாலை 4 மணிக்கு விழித்துக்கொண்டு, என் செயலியில் உள்ள தகவல்களை புதுப்பித்துப் பார்ப்பேன். என் உடல்நல மதிப்பெண்கள் இன்னும் குறைவாக உள்ளனவா, உடல் வெப்பநிலை இன்னும் உயர்ந்திருக்கிறதா என்று தொடர்ந்து சரிபார்த்துக்கொண்டே இருந்தேன். இந்தக் கர்ப்பம் ஆரோக்கியமானதாக இருக்கும் என்ற நம்பிக்கையையில் இருந்தேன்" என்று ரவிகா கூறுகிறார்.

ஒரு கட்டத்தில், அந்த உடல்நலத் தரவுகளைப் பார்ப்பது தனது "பைத்தியக்காரமான ஈடுபாடாக" மாறிவிட்டதாக அவர் கூறுகிறார். இருப்பினும், "என்னைப் பொறுத்தவரை அது உண்மையிலேயே மிக முக்கியமான விஷயமாகவே தோன்றியது," என அவர் தெரிவித்தார்.

'நான் அறியும் முன்பே நான் கர்ப்பமாக இருப்பதை என் உடல்நலக் கண்காணிப்பு கருவி கண்டுபிடித்தது'
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

பல பெண்களுக்கு, கர்ப்பமாக இருக்கக்கூடும் என்ற முதல் அறிகுறி எதிர்பார்த்த நேரத்தில் மாதவிடாய் வராமல் இருப்பதுதான். பொதுவாக அதே காலகட்டத்தில்தான் கர்ப்பப் பரிசோதனை செய்வதும் சாத்தியமாகிறது. சில பரிசோதனைகள் கர்ப்பத்தை முன்கூட்டியே கண்டறிய முடியும் என்று கூறினாலும், பெரும்பாலான கர்ப்பப் பரிசோதனைகள் மாதவிடாய் தவறிய முதல் நாள்வரை ஹார்மோன் மாற்றங்களை துல்லியமாகக் கண்டறிய முடியாது.

ஆனால், ரவிகா போன்ற நூற்றுக்கணக்கான பெண்கள், தங்களது உடல்நல கண்காணிப்பு சாதனங்கள் சேகரித்த தரவுகளின் மூலம், இதைவிட முன்பே கர்ப்பத்தின் அறிகுறிகளை கண்டறிந்ததாக இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

ஸ்மார்ட் ரிங்குகள், ஸ்மார்ட் வாட்ச்கள் மற்றும் மார்பில் அணியும் உடல்நலக் கண்காணிப்பு கருவிகள் உள்ளிட்ட ஃபிட்னஸ் டிராக்கர்கள், பிரிட்டனில் கடந்த சில ஆண்டுகளில் மிக வேகமாகப் பிரபலமடைந்துள்ளன. யூகோவ் ஆய்வின்படி, 2026 ஜனவரியில் பிரிட்டனில் பெரியவர்களில் 36 சதவீதம் பேர் ஃபிட்னஸ் டிராக்கர்களை பயன்படுத்தி வந்தனர். இது 2019 ஜூலையுடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகமாகும்.

ஸ்மார்ட் ரிங் சந்தையில், பின்லாந்து–அமெரிக்க நிறுவனமான ஓரா அதிக விற்பனையைப் பெற்றுள்ளது. இந்தச் சந்தையில் இந்தியாவைச் சேர்ந்த அல்ட்ராஹியூமன் மற்றும் ஹாங்காங் நிறுவனமான ரிங் கான் ஆகியவையும் முக்கிய பங்காற்றி வருகின்றன.

'நான் அறியும் முன்பே நான் கர்ப்பமாக இருப்பதை என் உடல்நலக் கண்காணிப்பு கருவி கண்டுபிடித்தது'
படக்குறிப்பு, ராவிகாவுக்கு, தனது உடல்நலக் கண்காணிப்புக் கருவியின் தரவுகளை மீண்டும் மீண்டும் சரிபார்ப்பது ஒரு பழக்கமாக மாறியது

கருச்சிதைவையும் முன்கூட்டியே கணிக்க முடியுமா?

கர்ப்பத்தின் முக்கிய அறிகுறிகளில் ஒன்று உடல் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றமாகும். அதனால்தான், உடல் வெப்பநிலையை அளவிடக்கூடிய உடல்நல கண்காணிப்பு சாதனங்கள், கருத்தரிக்க முயற்சிக்கும் பெண்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன.

பொதுவாக ஒரு மாதவிடாய் சுழற்சியில், மாதவிடாய் தொடங்குவதற்கு முன்புவரை உடல் வெப்பநிலை சற்று உயர்ந்த நிலையில் இருக்கும். பின்னர் அது திடீரெனக் குறையும். ஆனால், கர்ப்பத்தின் ஆரம்பகட்டத்தில் உடல் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்தே காணப்படும். உடல் வெப்பநிலையை அளவிடும் உடல்நல கண்காணிப்பு சாதனங்கள், இந்த ஆரம்ப அறிகுறியை முன்கூட்டியே கண்டறியக்கூடும்.

தனது உடல்நலத் தரவுகளை கவனித்துக்கொண்டிருந்த ரவிகா, ரெடிட் தளத்திலும் பல பெண்களின் அனுபவங்களைப் படிக்கத் தொடங்கினார். அவர்களில் சிலர், தங்களது ஓரா ரிங் கர்ப்பத்தை மட்டுமல்ல, கருச்சிதைவையும் முன்கூட்டியே சுட்டிக்காட்டியதாக பகிர்ந்திருந்தனர். குறிப்பாக, அந்த சாதனத்தில் தோன்றிய "உடலில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள்" குறித்த அறிவிப்புகள் இதற்கு காரணமாக இருந்ததாக அவர்கள் கூறினர்.

32 வயதான சோஃபியா அத்தகைய பெண்களில் ஒருவராக இருந்தார். தற்போது ஐந்து மாத ஆண் குழந்தையின் தாயான அவர், அதற்கு முன்பு இரண்டு முறை கர்ப்பத்தை இழந்துள்ளார். அந்த இரண்டு கர்ப்பங்களையும், பின்னர் ஏற்பட்ட கருச்சிதைவுகளையும், தனது ஓரா ரிங் தரவுகள் மூலமே முதலில் கவனித்ததாக அவர் கூறுகிறார்.

கடந்த ஆண்டு முதன்முதலில் கர்ப்பமானபோது, ஒவ்வொரு காலையிலும் விழித்தவுடன் தனது செயலியைப் பார்ப்பது சோஃபியாவின் வழக்கமாக இருந்தது.

"உடல் வெப்பநிலையைக் காட்டும் கோடு தொடர்ந்து உயர்ந்து கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால் ஒரு நாள் காலை, அது திடீரெனக் குறைந்திருப்பதை கவனித்தேன். அப்போதே ஏதோ சரியில்லை என்று எனக்குத் தோன்றியது," என்று அவர் கூறுகிறார்.

"பின்னர் கருச்சிதைவு ஏற்பட்டபோது, நான் ஏற்கனவே மனதளவில் அதற்குத் தயாராகிவிட்டிருந்தேன். காரணம், அந்தத் தரவுகள் முன்பே எச்சரித்துவிட்டன," என அவர் நினைவுகூர்கிறார்.

அதே சம்பவம் மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் நடந்தது. இதையடுத்து, அவரும் அவரது கணவரும் சில காலம் குழந்தைக்காக முயற்சிப்பதை நிறுத்த முடிவு செய்தனர். ஆனால், அந்த இடைவெளியிலேயே அவரது ஓரா ரிங் "சிறிய அளவிலான உடல் அழுத்தத்தின் அறிகுறிகள்" இருப்பதாக அறிவிப்பு அனுப்பியது. அதே சமயம், உடல் வெப்பநிலையும் மீண்டும் உயர்ந்திருப்பதை அவர் கவனித்தார்.

இதையடுத்து அவர் கர்ப்பப் பரிசோதனை செய்தபோது, முடிவு நேர்மறையாக வந்தது.

இந்த முறை கர்ப்பம் ஆரோக்கியமாக இருந்தாலும், ஆரம்ப வாரங்கள் முழுவதும் அவர் கடும் பதற்றத்தில் இருந்ததாகக் கூறுகிறார். அதன் காரணமாக, தனது உடல்நலத் தரவுகளை அடிக்கடி சரிபார்த்துக்கொண்டே இருந்தார்.

"'மீண்டும் இதே விஷயம் நடக்கப் போகிறதோ?' என்ற பயம் எப்போதும் இருந்தது. அதிகாலை நான்கு அல்லது ஐந்து மணிக்கு விழித்துவிட்டு, என் உடல் வெப்பநிலை மீண்டும் குறைந்துவிட்டதா என்று செயலியைத் திறந்து பார்ப்பேன்," என்று சோஃபியா கூறுகிறார்.

"அந்த ஒரு தரவின் மீதே நான் அதிக கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டேன். இறுதியில், கர்ப்பத்தின் ஏழாவது அல்லது எட்டாவது வாரத்தில், மோதிரத்தை (டிவைஸ்) கழற்றி வைத்துவிட்டேன். முதல் மூன்று மாதங்கள் முழுவதும் அதை அணியவே இல்லை," என்று அவர் கூறுகிறார்.

'நான் அறியும் முன்பே நான் கர்ப்பமாக இருப்பதை என் உடல்நலக் கண்காணிப்பு கருவி கண்டுபிடித்தது'

பட மூலாதாரம், Getty Images

அதிகரிக்கும் பதற்றம்

லண்டனில் உள்ள யுனிவர்சிட்டி காலேஜ் மருத்துவமனையின் இனப்பெருக்க மருத்துவ ஆலோசகர் ஸ்டூவர்ட் லாவரி, "கர்ப்பத்தைத் திட்டமிடும் பலரின் வாழ்க்கையில் இது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் விஷயமாக இருப்பதால், மக்கள் இந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தங்கள் உடலை மேலும் நன்றாகப் புரிந்துகொள்ளவும், மாற்றங்களை முடிந்தவரை ஆரம்பத்திலேயே கண்டறியவும் முயற்சிப்பது இயல்பானதே," என்றார்.

ஆனால், "நாம் இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளாத விஷயங்களை முன்கூட்டியே நம்பத் தொடங்கிவிட்டோமோ என்ற கவலையும் உள்ளது," என்று அவர் எச்சரிக்கிறார்.

"இந்தத் தரவுகள் எவ்வளவு நம்பகமானவை என்பது குறித்து இன்னும் அதிகமான ஆய்வுகளும் ஆதாரங்களும் தேவை. இல்லையெனில், மக்களின் பதற்றம் அளவுக்கு மீறி அதிகரிக்கக்கூடும்," என்றார்.

"எதிர்காலத்தில் மேலும் அதிகமானோர் செயலிகள் மற்றும் உடலில் அணியும் கண்காணிப்பு சாதனங்களைப் பயன்படுத்தி இத்தகைய விஷயங்களை முன்கூட்டியே கண்டறிய முயற்சிப்பார்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அவற்றின் துல்லியத்தை முழுமையாக நம்ப முடியாது என்பதற்கான தெளிவான எச்சரிக்கையும் அதனுடன் இருக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.

கர்ப்பத்தின் ஆரம்பகட்டத்தில் தங்கள் சாதனங்களில் கிடைத்த தரவுகளை தொடர்ந்து கண்காணித்ததால் பெண்களுக்கு ஏற்பட்ட பதற்றம் குறித்து பிபிசி நியூஸ் கேட்டபோது, *ஓரா* நிறுவனத்தின் பெண்கள் உடல்நலப் பிரிவின் மருத்துவ இயக்குநர் டாக்டர் கிறிஸ் கரி பதிலளித்தார்.

"உடல்நல கண்காணிப்பு சாதனங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும், கர்ப்பம் என்பது பல பெண்களுக்கு நிச்சயமற்ற ஒரு காலகட்டமாகவே இருக்கும். குறிப்பாக முதல் முறையாக கர்ப்பமாகும் பெண்களுக்கு, எந்த அறிகுறிகள் இயல்பானவை என்பது பற்றிய தெளிவு குறைவாக இருக்கலாம்," என்று அவர் கூறினார்.

மேலும், "தரவுகள் காரணமாக ஒருவர் மன அழுத்தம் அடைகிறார் என்று உணர்ந்தால், செயலியை சில காலம் பயன்படுத்தாமல் ஓய்வு எடுக்குமாறு நாங்கள் ஊக்குவிக்கிறோம். அதே நேரத்தில், *ஓரா ரிங்* தொடர்ந்து தரவுகளை சேகரித்து, பின்னர் பயனுள்ள தகவல்களை வழங்கும்," என்றார்.

"இந்த மோதிரம் ஒரு உதவிக் கருவி மட்டுமே; அது உங்கள் மருத்துவக் குழுவுக்கு மாற்றாக இருக்க முடியாது," என்றும் அவர் வலியுறுத்தினார்.

துரதிர்ஷ்டவசமாக, ரவிகாவுக்கு பின்னர் கருச்சிதைவு ஏற்பட்டது.

எனினும், எதிர்காலத்தில் மீண்டும் கர்ப்பம் தரிக்க முயற்சிக்கத் திட்டமிட்டுள்ள அவர், அப்போது தனது உடல்நல கண்காணிப்பு சாதனத்தை அணிவதா என்பது குறித்து மறுபரிசீலனை செய்து வருகிறார்.

"நான் என்னை ஒரு பதற்றமான மனிதராக ஒருபோதும் நினைத்ததில்லை. ஆனால் இனிமேல், நான் கர்ப்பமாக இருக்கலாம் என்ற எண்ணம் வந்தாலும், என் உடல்நலத் தரவுகள் தொடர்ந்து குறைவாக இருப்பதைப் பார்த்தாலும், கர்ப்பப் பரிசோதனையில் நேர்மறை முடிவு வந்த உடனேயே அந்த மோதிரத்தை கழற்றி வைப்பதுதான் எனக்கு நல்லது என்று நினைக்கிறேன்," என்று ரவிகா கூறுகிறார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு