சினிமா முதல் அரசியல் வரை அடிக்கடி பேசப்படும் திரிஷா - யார் இவர்?

திரிஷா

பட மூலாதாரம், TrishaKrishnan/Instagram

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

நடிகை திரிஷா சமீப காலமாக திரையுலகம் மட்டுமின்றி, அரசியல் வட்டாரங்களிலும் அதிகம் பேசப்படும் நபராக உள்ளார்.

'மிஸ் சென்னை' பட்டம் வென்று இளம் மாடலாக பயணத்தைத் தொடங்கிய திரிஷா, தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய திரைப்பட உலகின் முன்னணி நடிகைகளுள் ஒருவராக உயர்ந்துள்ளார். வெற்றிப் படங்கள், பல தலைமுறை முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிப்பு, காலத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்ட அணுகுமுறை ஆகியவை அவரது திரைப் பயணத்தை தனித்துவமாக்கியுள்ளன.

தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகைகளுள் ஒருவராக உள்ள திரிஷாவின் வாழ்க்கையில் நடந்த முக்கிய தருணங்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.

யார் இந்த திரிஷா?

லேசா லேசா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார் திரிஷா.

பட மூலாதாரம், TrishaKrishnan/Instagram

படக்குறிப்பு, லேசா லேசா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார் திரிஷா.

தமிழ்நாட்டு எல்லையில் உள்ள, கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த கிருஷ்ணன் - உமா தம்பதியினரின் மகள் திரிஷா. சிறுவயதிலேயே அவருடைய குடும்பம் சென்னைக்கு குடிபெயர்ந்தது. அவருடைய தந்தை பல பிரபல உணவகங்களில் மேலாளராக இருந்தவர். அம்மா சில தனியார் நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.

இளம்வயதில் திரிஷாவை தனது ஜோடி படத்தில் கதாநாயகி சிம்ரனுடைய தோழியாக நடிக்க வைத்தார் இயக்குனர் பிரவீன் காந்தி. இது குறித்து அவர் கூறுகையில், "1999-ஆம் ஆண்டில் அந்த படப்பிடிப்பு கோடை விடுமுறையில் நடந்தது. அப்போது கதாநாயகி சிம்ரனின் தோழியாக நடிக்க இளம்பெண்கள் தேவைப்பட்டனர். அச்சமயத்தில் பள்ளி விடுமுறையில் இருந்த திரிஷா நடிக்க வந்தார். சினிமா எப்படி இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளவே அவர் அந்த படத்தில் நடித்தார். பின்னர் மாடலிங்கில் ஈடுபட்டார்."

பின்னர், பிரியதர்ஷன் இயக்கிய 'லேசா லேசா' படத்தின் மூலம் கதாநாயகி ஆனார் திரிஷா .

கதாநாயகியாக அறிமுகம்

இயக்குனர் பிரவீன் காந்தியின் கூற்றுப்படி, ஜோடி படத்தில் திரிஷா வாங்கிய சம்பளம் ஆயிரம் ரூபாய்க்கும் குறைவு. அந்த படத்தில் நடித்ததற்காக அவர் பெயர் கூட டைட்டிலில் இடம்பெறவில்லை.

சென்னை சர்ச் பார்க் பள்ளியில் படிப்பை முடித்தவர், எத்திராஜ் கல்லூரியில் சேர்ந்து, கிரிமினல் சைக்காலஜி படிக்க ஆசைப்பட்டார். ஆனால் வேறு சில காரணங்களுக்காக பிபிஏ படித்தார். அந்த சமயத்தில் மாடலிங் துறையில் கவனம் செலுத்தினார்.

1999-ஆம் ஆண்டில் 'மிஸ் சென்னை' போட்டியில் கலந்துகொண்டு பட்டம் பெற்று வெற்றியாளரானார். அதன் மூலம் கிடைத்த வாய்ப்பால் பிரபல நிறுவனங்களில் மாடலாக இணைந்தார். அப்போது இயக்குனர் பிரியதர்ஷன் மூலமாக லேசா லேசா படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படம் வெளியாகும் முன்பு அமீர் இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக 'மெளனம் பேசியதே' திரைக்கு வந்தது. இப்படம் மூலம் பிரபலமான திரிஷாவுக்கு பல படங்களில் வாய்ப்புகள் கிடைத்தன.

வெற்றி படங்களான சாமி, கில்லி

திரிஷா நடித்த சாமி, கில்லி ஆகிய படங்கள் அவரது திரைப்பயணத்தில் முக்கியமான இடத்தை பெற்று தந்தது.

பட மூலாதாரம், TrishaKrishnan/Instagram

படக்குறிப்பு, திரிஷா நடித்த சாமி, கில்லி ஆகியவை அவரது திரைப்பயணத்தில் முக்கிய படங்களாக அமைந்தன

ஹரி இயக்கத்தில் விக்ரம் ஜோடியாக நடித்த சாமி, தரணி இயக்கத்தில் விஜய் ஜோடியாக நடித்த கில்லி படங்கள் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவரானார் திரிஷா.

தெலுங்கில் அவர் நடித்த வர்ஷம், நுவ்வொஸ்தானண்டே நேனொத்தண்டானா படங்கள் வெற்றி பெற்ற நிலையில், அங்கும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார்.

மலையாளம், கன்னடம் என தென்னிந்திய திரைத்துறையில் முன்னணி நடிகையாக வலம் வரத் தொடங்கினார். பிறகு இந்தியில் அவர் நடித்த கட்டாமிட்டா படம் வெற்றி பெறவில்லை. அதனால் மீண்டும் தென்னிந்திய மொழிகளில் கவனம் செலுத்தினார். கடந்த 25 ஆண்டுகளில் 70க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார் திரிஷா.

அவர் நடித்த படங்களில் சாமி, விண்ணைத் தாண்டி வருவாயா, மங்காத்தா, அபியும் நானும், கொடி, 96, பொன்னியின் செல்வன் போன்ற படங்கள் அவருக்கு தனிப்பட்ட முறையில் புகழை பெற்றுக் கொடுத்தன. சினிமா தவிர வெப் சீரிஸ்களிலும், ராங்கி, நாயகி போன்ற கதாநாயகிகளை மையமாகக் கொண்ட படங்களிலும் திரிஷா நடித்துள்ளார். எனினும், அப்படங்கள் அதிக வரவேற்பை பெறவில்லை.

காதல், நிச்சயதார்த்தம்

பிரபல தொழிலதிபர் வருண்மணியனுக்கும் திரிஷாவுக்கும் சென்னையில் 2015ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. எனினும், அந்த திருமணம் நடக்கவில்லை.

திருமணம் குறித்து திரிஷா

சரியான நபர் அமையும் வரை திருமணத்திற்கு அவசரப்பட மாட்டேன் என திரிஷா ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

பட மூலாதாரம், TrishaKrishnan/Instagram

படக்குறிப்பு, "சரியான நபர் அமையும் வரை திருமணத்துக்கு அவசரப்பட மாட்டேன்" என திரிஷா ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

திருமணம் தொடர்பாக ஒருமுறை பேட்டியில் பேசிய திரிஷா, "திருமணம் என்பது கட்டாயமான அல்லது தவிர்க்க முடியாத ஒரு விஷயம் என நான் நினைக்கவில்லை. சரியான துணை, சரியான நபர் அமையும் வரை அவசரப்பட மாட்டேன். மகிழ்ச்சியற்ற திருமண வாழ்வில் இருக்க விரும்பவில்லை," எனத் தெரிவித்தார்.

விவாகரத்து மீது நம்பிக்கை இல்லாததால் திருமணம் குறித்து ஆழ்ந்து யோசித்து முடிவு எடுப்பதாக அந்த பேட்டியில் திரிஷா குறிப்பிட்டிருந்தார்.

தனது நிச்சயதார்த்தம் நின்றது குறித்து ஒரு பேட்டியில் பேசிய அவர், "எனது திருமணம் குடும்பத்தினரால் நிச்சயிக்கப்பட்டது. நானும் சம்மதித்தேன். அனைத்து ஏற்பாடுகளும் நடந்தன. ஆனால் திருமணத்தின் போது பல நிபந்தனைகள் இருந்தன. அது எனக்கு சரியாக தோன்றவில்லை. எனவே திருமணத்தை ரத்து செய்தோம். இது போன்று நடப்பது பொதுவான விஷயமே. எனக்கும் கலாசாரம் தெரியும். நமது கலாசாரம், பண்பாடு மீது எனக்கும் நம்பிக்கைகள் இருக்கின்றன. எனக்கு என்ன தேவை என்பது குடும்பத்தினருக்கு தெரியும். அதே சமயம் எனக்கு பொருத்தமான மாப்பிள்ளைகளும் நிறைய பேர் உள்ளனர். நிச்சயமாக அவர்களில் சரியான நபரை தேர்ந்தெடுத்த பின்னர் திருமணம் செய்வது உறுதி," எனக் கூறினார்.

சமீபகாலமாக அவர் பேட்டி அளிப்பதையே தவிர்த்துவிட்டார். பொன்னியின் செல்வன், தக் லைஃப் படங்களுக்குப் பின் அவர் ஊடகங்களுடன் பேசுவதையும் பெருமளவில் குறைத்துவிட்டார்.

பீட்டா சர்ச்சையும் விளக்கமும்

நடிகை திரிஷா பீட்டா அமைப்பின் ஆதரவாளராக பல ஆண்டுகள் இருந்தார். வெளிநாட்டு நாய்களை வாங்கி வளர்க்காமல் தெரு நாய்களை எடுத்து வளர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி பீட்டா ஏற்பாடு செய்திருந்த விளம்பரப் படத்தில் திரிஷா நடித்தார். இதனால் ஜல்லிக்கட்டு போராட்டங்கள் சமயத்தில் அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

2017-ஆம் ஆண்டு பீட்டா ஆதரவாளர் எனக் கூறி அவர் நடித்த கர்ஜனை படப்பிடிப்பு சிவகங்கையில் நடந்தபோது ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். அதனால் படப்பிடிப்பு ரத்தானது.

இதனால் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. அப்போது அவர் அம்மா உமா கிருஷ்ணன் சென்னை காவல்துறையில் புகார் அளித்திருந்தார். "திரிஷா குறித்து ட்விட்டர் (தற்போது எக்ஸ்) தளத்தில் தவறான தகவல் பதிவிட்டவர்களைக் கண்டுபிடிக்கவும், திரிஷாவின் படப்பிடிப்புக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்றும் அவரது புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.

அப்போது இந்த சர்ச்சைக்கு பதிலளித்த அவரின் தாய் உமா, "பீட்டாவால் இவ்வளவு பிரச்னை வரும் என்று தெரிந்திருந்தால் அவ்வாறு செய்திருக்க மாட்டார். மற்றபடி, பீட்டா அமைப்புடன் சேர்ந்து பெரிய அளவில் திரிஷா செயல்படவில்லை. தற்போது பீட்டாவை விட்டு விலகியே இருக்கிறார். நாங்களும் தமிழர்கள்தான். நாங்கள் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவர்கள் அல்ல. இப்பிரச்னை குறித்து நடிகர் சங்கத் தலைவரிடமும் பேசியுள்ளேன், '' என்று கூறினார்.

'முதலமைச்சர் ஆக ஆசை'

நடிகை திரிஷா

பட மூலாதாரம், trishakrishnan

கடந்த 2004ஆம் ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் திரிஷா கொடுத்த பேட்டி அண்மையில் பேசுபொருளானது. அந்த பேட்டியில் "எனக்கு முதலமைச்சர் ஆக வேண்டுமென்று ஆசை இருக்கிறது, இன்னும் 10 ஆண்டுகளில் பார்ப்போம்," என்று சிரித்துக்கொண்டே பேசினார்.

மன்சூர் அலிகான் பேச்சு

2023ஆம் ஆண்டு நடிகர் மன்சூர் அலிகான் திரிஷா குறித்து பேசிய ஒரு சர்ச்சை கருத்து பலரால் கண்டனத்துக்கு உள்ளானது.

அவரின் கருத்துக்கு நடிகர் சங்கம், லோகேஷ் கனகராஜ், சிரஞ்சீவி உட்பட பலர் கண்டனம் தெரிவித்தனர். தேசிய மகளிர் ஆணையமும் கண்டனம் தெரிவித்தது. இதற்காக மன்சூர் அலிகான் மீது வழக்கு தொடரப்பட்டது. கடைசியில் மன்சூர் அலிகான் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்க, திரிஷாவும் அதை ஏற்றுக்கொண்டார்.

நடிகர் பார்த்திபனின் பேச்சு

ஒரு நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபன், நடிகை திரிஷா தொடர்பாக பேசியது சர்ச்சையானது.

பலரும் பார்த்திபன் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். "சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் என்னிடம் ஒரு தகவலைத் தெரிவித்தனர். ஒரு தனிநபரின் வேண்டுகோளின் பேரில், அவருடைய உதவியாளர் மூலமாகத் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில், கடைசி நேரத்தில் என்னுடைய பெயரும் புகைப்படமும் அந்த நிகழ்ச்சியில் சேர்க்கப்பட்டதாகக் கூறினர்.

கையில் மைக் இருப்பதால் மட்டும் ஒருவருடைய கருத்து அறிவார்ந்ததாகவோ அல்லது நகைச்சுவையானதாகவோ மாறிவிடாது. அது முட்டாள்தனத்தை இன்னும் சத்தமாக வெளிப்படுத்த மட்டுமே உதவும். அறிவில்லாமல் பேசப்படும் அநாகரிகமான வார்த்தைகள், யார் குறித்துப் பேசப்படுகிறதோ அவரை விட, பேசுபவரின் தரத்தைப் பற்றியே அதிகம் வெளிச்சம் போட்டுக் காட்டும்" இவ்வாறு திரிஷாவும் கண்டனம் தெரிவித்தார்.

பிறகு பார்த்திபன் வருத்தம் தெரிவிக்க, அந்த விவகாரம் முடிவுக்கு வந்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு