You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'மரத்தை வேரோடு சாய்க்கும் அளவுக்கு பலம்'; தூத்துக்குடி சுழல் காற்று குறித்து விளக்கும் நிபுணர்கள்
2026, ஜூன் 21 அன்று, தூத்துக்குடி விமான நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புனல் வடிவ சுழல்காற்று தோன்றி சில இடங்களில் சேதங்களை ஏற்படுத்தியது தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் வைரலானது.
இதில் 6 பேர் பலத்த காயமடைந்ததாக, ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்திருந்தது.
இது ஒரு சூறாவளியாக இருக்கலாம் என யூகங்கள் எழுந்த நிலையில், இது குறித்து விளக்கமளித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், 'இது சூறாவளி அல்ல. இடியுடன் கூடிய மழையுடன் தொடர்புடைய ஒரு வெப்பச்சலன சுழல் அல்லது தற்காலிக புனல் மேக அமைப்பின் விளைவு' எனக் கூறியுள்ளது.
ஆனால், ஏற்பட்டுள்ள சேதங்களையும், வானிலை சூழல்களையும் வைத்துப் பார்க்கும்போது, தூத்துக்குடியில் உருவானது ஒரு சூறாவளி தான் என, தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
நடந்தது என்ன?
தூத்துக்குடி விமான நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஜூன் 21ஆம் தேதி மாலை 5 மணி அளவில் புனல் வடிவ சுழல்காற்று வீசியது. இதனால் வாகைக்குளம் சுங்கச்சாவடி, சில கட்டடங்கள், மரங்கள் போன்றவை சேதமடைந்தன என்றும் இதில் 6 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.
புதுக்கோட்டை (தூத்துக்குடி) போலீசார் இதுதொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்றும் அச்செய்தி குறிப்பிடுகிறது.
"அன்று நேரில் பார்த்ததை இப்போதும் என்னால் நம்ப முடியவில்லை. அந்த சுழல்காற்று மெதுவாக தான் நகர்ந்தது, ஆனால் உள்ளே சுழன்ற காற்றின் வேகம் மிக அதிகமாக இருந்தது. ஒரு மரத்தையே வேரோடு சாய்க்கும் அளவுக்கு அது பலமாக இருந்தது" என்கிறார் தூத்துக்குடி, முத்தையாபுரத்தைச் சேர்ந்த பொறியியல் மாணவரான ஜான்சன் ஜெனிஷ்.
வாகைக்குளம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கும் இவர், "இப்படி ஒரு நிகழ்வை எங்கள் பகுதியில் இதற்கு முன் பார்த்ததில்லை. ஆனால் சில நிமிடங்கள் தான் நீடித்தது. அன்று கல்லூரி விடுமுறை என்பதால் அப்பகுதியில் பெரிய சேதம் இல்லை. ஒருவேளை கல்லூரி நாட்களில் மாலை வேளையில் மாணவர்கள் வீட்டுக்கு திரும்பும்போது இப்படி நடந்திருந்தால், விளைவுகள் மோசமாக இருந்திருக்கும்" என்கிறார்.
"வாகைக்குளம் சுங்கச் சாவடி, அதன் அருகே இருந்த ஒரு தனியார் பூங்கா ஆகியவை அதிக சேதங்களை எதிர்கொண்டன. பலத்த இடியுடன் மழையும் பெய்தது. எங்கள் பகுதியில் இருந்த ஒரு உணவகம் முற்றிலும் சேதமடைந்துவிட்டது. அன்று நாங்கள் எடுத்த காணொளிகள் கூட வைரலாகின." என்கிறார் ஜான்சன்.
பிபிசி தமிழிடம் பேசிய தூத்துக்குடி முத்தையாபுரத்தைச் சேர்ந்த செல்வி, "அந்த சுழல் காற்றைப் பார்த்ததும், நாங்கள் வீட்டுக்குள் சென்று கதவுகளை பூட்டிக்கொண்டோம். எங்கள் பகுதிக்கு மிக அருகில் அது நகர்ந்தது. பலத்த இடி சத்தமும் கேட்டது. வீடுகள் அதிர்வது போல உணர்ந்தோம். ஒரு சில நிமிடங்களில் அது மறைந்துபோனது" என்று கூறினார்.
"தமிழ்நாட்டில் இத்தகைய நிகழ்வுகள் அபூர்வமானது. அதேசமயம், சுழல்காற்று அருகே சென்று காணொளிகள், புகைப்படங்கள் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்" என எச்சரிக்கிறார் சென்னை மண்டல வானிலை மையத்தின் வானிலை ஆய்வுத் துறை கூடுதல் தலைமை இயக்குநராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற பாலச்சந்திரன்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "காணொளிகள் எடுக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் சுழல்காற்றைத் துரத்திச் செல்வது கூடாது. அதுவும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சூழலில் மக்கள் வெட்டவெளியில் நிற்பதை அறவே தவிர்க்க வேண்டும்" என்கிறார்.
வானிலை ஆய்வு மையம் கூறியது என்ன?
"ஜூன் 21, 2026 அன்று மாலை தூத்துக்குடி விமான நிலையப் பகுதியில் புனல் போன்ற மேக அமைப்பும், சுழன்று எழும்பும் தூசி மண்டலமும் காணப்பட்டன. தென் தமிழகத்தில் நிலவிய மேலடுக்கு சுழற்சியால் உருவான கியுமுலோனிம்பஸ் (Cumulonimbus) மேகங்களின் தீவிர வெப்பச்சலன காற்றோட்டமே தரையிலிருந்த தூசியை மேலே இழுத்து இந்தப் புனல் போன்ற தோற்றத்தை உருவாக்கியது" என வானிலை ஆய்வு மையம் ஜூன் 22 அன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
"சூறாவளி உருவாவதற்குத் தேவையான வளிமண்டல அழுத்த வேறுபாடுகளோ, பிற தீவிர காரணிகளோ தூத்துக்குடியில் அன்று நிலவவில்லை. எனவே, இது உண்மையான சூறாவளி (Tornado) இல்லை, இடியுடன் கூடிய மழையுடன் தொடர்புடைய ஒரு தற்காலிக புனல் மேகம்" என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
"தென்மேற்கு பருவமழைக் காலத்தில் இப்பகுதியில் சூறாவளி ஏற்பட வாய்ப்பு மிகவும் குறைவு. வானிலை ஆய்வு மையம் நிலைமையைத் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. மக்கள் அச்சப்படத் தேவையில்லை" என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் ஏற்பட்டது சூறாவளி தானா?
"கடந்த ஞாயிறுக்கிழமை அன்று தூத்துக்குடியில் ஏற்பட்டது நிச்சயம் சூறாவளி தான்" என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.
"சென்னையில் உத்தண்டி பகுதியில் 2013ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி இதேபோன்ற சூழல் உருவான போது, அந்தப் புனல் வடிவ மேகம் தரையைத் தொட்டதா என்பதைக் கண்டறிவது கடினமாக இருந்தது. ஆனால், முழுமையான ஆய்வுக்குப் பிறகு அது ஒரு சூறாவளிதான் என இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
"ஜூன் 2026-ல் தூத்துக்குடியில் நிகழ்ந்த சம்பவம் ஒரு சூறாவளி அல்ல என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இத்தகைய அசாதாரண நிகழ்வு ஏன் ஏற்பட்டது மற்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி நிகழக்கூடுமா என்பது குறித்து விரிவான ஆய்வுகள் நடத்த வேண்டும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
"கண்ணுக்குத் தெரியும் புனல் வடிவ மேகம், இந்தச் சம்பவத்தில் 6 பேர் காயமடைந்தது, கட்டடங்கள் சேதமடைந்தது, மரங்கள் வேரோடு சாய்ந்தது, இது தீவிர இடியுடன் கூடிய மழைச் சூழலில் நிகழ்ந்தது ஆகியவற்றைப் பார்க்கும்போது இத்தகைய நிகழ்வுகளை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று பிரதீப் ஜான் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
'பலம் குறைந்த சூறாவளி'
"தூத்துக்குடியில் ஏற்பட்டது ஒரு பலம் குறைந்த சூறாவளி அல்லது தரைசுழற்காற்று (Land spout)" என்கிறார் தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரி நிலத்தியல் துறை உதவி பேராசிரியர், முனைவர் சே. செல்வம்.
'தரைசுழற்காற்று என்பது, இடியுடன் கூடிய மழை மேகம் வளர்ந்து கொண்டிருக்கும்போதே உருவாகும் ஒரு சூறாவளி ஆகும். இதன் சுழற்சி இயக்கம் தரைக்கு அருகிலேயே தொடங்குகிறது. இது குறுகிய, புனல் மேக அமைப்பைக் கொண்டிருக்கும்' என அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் (NOAA) வானிலை ஆராய்ச்சி ஆய்வகம் தெரிவிக்கிறது.
"பலத்த இடியுடன் கூடிய மழைச் சூழல் மற்றும் மேகத்திலிருந்து தரை நோக்கி ஒரு புனல் வடிவில் வரும் காற்றழுத்தம், அதேசமயம் தரையிலிருந்து எழும் தூசியுடன் கூடிய காற்று. இதுவே காணொளிகளில் நாம் கண்டது" என்று கூறுகிறார் முனைவர் சே. செல்வம்.
"தூத்துக்குடி ஒரு கடலோரப் பகுதி என்பதால் ஈரப்பதமான கடல்சார் காற்று, அதாவது கடல்களின் மீது உருவாகி, அதிக அளவு நீராவியை உள்வாங்கிக்கொள்ளும் காற்று, அதிகமாக இருக்கும்."
"இந்த ஈரமான காற்று மேலே எழுந்து, மேல்மட்டத்தில் இருந்து கீழே வரும் குளிர்ந்த காற்றுடன் மோதியதால் வளிமண்டலத்தில் ஏற்பட்ட சீரற்ற தன்மையே இதற்கு முக்கியக் காரணம்" என விளக்கினார் செல்வம்.
"காற்றின் வேகமும் திசையும் மாறியதால் உருவான இந்தச் சுழற்சி, மேகத்திலிருந்து ஒரு புனல் வடிவில் செங்குத்தாக இறங்கி தரையைத் தொட்டது." என்று குறிப்பிட்ட அவர்,
"பொதுவாக இதுபோன்ற சுழல்காற்றுகள் இந்தியாவின் கிழக்குக் கடற்கரை மாநிலங்களான மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் மட்டுமே பரவலாகக் காணப்படும். தென்னிந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் இது நிகழ்வது மிகவும் ஆச்சரியமான ஒன்றாகும்" என்றார்.
கடலோரப் பகுதிகளில் நிலவும் அதிகப்படியான ஈரப்பதம், சுட்டெரிக்கும் வெப்பநிலை, மற்றும் தீவிரமான இடி மேகங்கள் ஆகிய மூன்றும் ஒரே நேரத்தில் இணையும் போது, தமிழ்நாட்டிலும் இதுபோன்ற சுழல்காற்றுகள் உருவாக வாய்ப்புள்ளது என்பதை இந்த நிகழ்வு ஆணித்தரமாக நிரூபித்துள்ளது என்று செல்வம் கூறுகிறார்.
2026ஆம் ஆண்டில் எல் நினோவின் தாக்கம் மேலும் வலுவடையக் கூடும் என்றும், இது உலகின் பெரும்பாலான பகுதிகளில் வானிலையில் இன்னும் பரவலான மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்றும் ஐ.நா எச்சரித்துள்ளது.
இதைச் சுட்டிக்காட்டும் செல்வம், "இத்தகைய சம்பவங்கள் குறித்து இன்னும் அதிகமான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். நிச்சயமாக தூத்துக்குடி நிகழ்வும் எல் நினோவின் தாக்கம் தான்" என்கிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு