'மோதி, ஷா, பகவத், ஞானேஷை விட மாட்டோம்' - இரண்டாவது நாளும் தடுக்கப்பட்ட ராகுல் கூறியது என்ன?

பட மூலாதாரம், Sajjad HUSSAIN / AFP via Getty Images
தேர்தல் ஆணையம் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லியில் எதிர்க்கட்சிகள் நடத்தி வரும் போராட்டம் புதன்கிழமையும் தொடர்ந்தது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி ஆகியோர் எதிர்க்கட்சி எம்.பி.க்களுடன் இணைந்து போராட்டம் நடத்துவதற்காக ஜந்தர் மந்தருக்குச் செல்ல முயன்றபோது காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டதாக அங்கிருந்த பிபிசி செய்தியாளர் தில்நவாஸ் பாஷா தெரிவித்தார்.
காவலில் வைக்கப்பட்ட பிறகு ராகுல் காந்தி பேசுகையில், "நரேந்திர மோதி, அமித் ஷா, மோகன் பகவத் மற்றும் ஞானேஷ் குமார் ஆகியோர் என்ன செய்தாலும், நாங்கள் அவர்களை விடமாட்டோம். அவர்கள் நால்வரையும் சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்று நான் உறுதியளிக்கிறேன்," என்றார்.
தடுத்து வைக்கப்பட்டிருந்த ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை காவல்துறையினர் இரவு சுமார் 8.30 மணியளவில் விடுவித்தனர். பாரகம்பா காவல் நிலையத்திலிருந்து ராகுல் காந்தி வெளியேறியதை பார்க்க முடிந்தது.
காவல்துறையினர் மோசமாக நடந்துகொண்டதாகப் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டினார்.
அவர் கூறுகையில், "தேர்தல் ஆணையரைச் சந்திக்கச் செல்லும் எம்.பி.க்களிடம் அவர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள்? எம்.பி.க்களான எங்களையே அவர்கள் அடிக்கிறார்கள். காவல்துறையினர் என் உடலில் பல இடங்களில் கீறினர். எங்களைத் தள்ளிவிட்டு கீழே விழச் செய்தனர். இப்போது நாங்கள் இங்கிருந்து நகரப் போவதில்லை. நான் இங்கிருந்து நகர மாட்டேன்," என்று கூறினார்.

பட மூலாதாரம், Congress

பட மூலாதாரம், Congress
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன.
செவ்வாய்க்கிழமை தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி நடத்தப்பட்ட பேரணி மற்றும் அதைத் தொடர்ந்து அகில இந்திய வானொலி நிலைய வளாகத்தில் நடத்தப்பட்ட நீண்ட நேர தர்ணாவைத் தொடர்ந்து இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
வாக்காளர் பட்டியலில் உள்ள முறைகேடுகள் காரணமாக "வாக்குகள் திருடப்படுவதாக" ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இந்தக் குற்றச்சாட்டுகளைத் தேர்தல் ஆணையமும் பாஜகவும் மறுத்துள்ளன.
எஸ்ஐஆர் (வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம்) செயல்முறையில் முறைகேடுகள் நடப்பதாகக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன; ஞானேஷ் குமார் பாஜகவுடன் கைகோர்த்து அக்கட்சிக்குச் சாதகமாகச் செயல்பட முயல்வதாகவும் அக்கட்சிகள் விமர்சிக்கின்றன.

பட மூலாதாரம், Rahul Gandhi FB
மதிய உணவுக்குப் பிறகு ஜந்தர் மந்தர் நோக்கிப் புறப்பட்ட ராகுல் காந்தி
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, புதன்கிழமை டெல்லி ஜன்பத் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் 'இண்டியா' கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மதிய விருந்து அளித்தார்.
மதிய உணவுக்குப் பிறகு, ராகுல் காந்தியும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜந்தர் மந்தர் நோக்கிப் புறப்பட்டனர்.
ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேருந்தில் ஜந்தர் மந்தர் சென்றனர்.

பட மூலாதாரம், ANI
"ஞானேஷ் குமார் சரியான தலைமை தேர்தல் ஆணையர் அல்ல": ராகுல் காந்தி
மதிய உணவுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மூன்று தேர்தல் ஆணையர்களையும் சந்திக்க முயன்றதாகவும், ஆனால் அவர்களைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்ற தனது கோரிக்கையை அவர் மீண்டும் வலியுறுத்தினார். மேலும், ஞானேஷ் குமாரை "சட்டபூர்வமான தலைமைத் தேர்தல் ஆணையராக" தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் கூறினார்.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போராட்டத்தைத் தொடர்ந்து, அகில இந்திய வானொலி நிலைய வளாகத்திற்குள் அனுமதியின்றி நுழைந்ததாகக் கூறி ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வத்ரா மற்றும் 'இந்தியா' கூட்டணியைச் சேர்ந்த சில தலைவர்கள் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதன்கிழமை பேசிய ராகுல் காந்தி, தன் மீது ஏற்கெனவே 45 எஃப்.ஐ.ஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த எண்ணிக்கை 100-ஐ எட்ட வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் கூறினார்.
"ஒவ்வொரு எஃப்.ஐ.ஆரும் எனக்கு ஒரு பதக்கம் போன்றது" என்றும் அவர் கூறினார்.
இந்த விவகாரத்தில் தானும் எதிர்க்கட்சிகளும் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்றும் ராகுல் காந்தி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

பட மூலாதாரம், ANI
செவ்வாய்க்கிழமை என்ன நடந்தது?
செவ்வாய்க்கிழமை சுமார் 300 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர். அவர்களைத் தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு அருகே காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வத்ரா உள்ளிட்ட சில தலைவர்கள் அகில இந்திய வானொலி நிலைய வளாகத்திற்குள் சென்று அங்கேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பல மணி நேரம் நீடித்த போராட்டத்துக்குப் பிறகு, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களை காவல்துறையினர் காவலில் எடுத்தனர்.
பின்னர், இரவு சுமார் 10 மணியளவில் ராகுல் காந்தி விடுவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வத்ரா உள்ளிட்டோர் மீது டெல்லி காவல்துறை எஃப்.ஐ.ஆர். பதிவு செய்தது.
இதற்கிடையில், செவ்வாய்க்கிழமையே தேர்தல் ஆணையம் தனது 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தேர்தல் ஆணையர்களைச் சந்திப்பதற்காக முன்கூட்டியே எந்த நேரத்தையும் கோரவில்லை என்று தெரிவித்தது.
"மாலை 4 மணி வரை, எந்தவொரு அரசியல் கட்சியும் தனது அதிகாரப்பூர்வ பிரதிநிதி மூலம் ஆணையத்தைச் சந்திப்பதற்கான நேரத்தைக் கோரவில்லை. அதன்பிறகுதான், ராகுல் காந்தி தலைமையிலான எம்.பி.க்கள் குழு ஆணையத்தைச் சந்தித்து மனு அளிக்க விரும்புவதாக டெல்லி காவல்துறையிடம் தெரிவிக்கப்பட்டது" என்று தேர்தல் ஆணையம் கூறியது.
மேலும், 240 எம்.பி.க்கள் அடங்கிய குழுவுடன் நாடாளுமன்ற இணைப்புக் கட்டடத்தில் கூட்டம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வழக்கத்துக்கு மாறானது என்றும், அது நடைமுறையில் உள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டது அல்ல என்றும் ஆணையம் தெரிவித்தது.
இதற்குப் பதிலாக, மனுவைப் பெற்றுக்கொள்ள தனது மூத்த அதிகாரி ஒருவரை அனுப்ப ஆணையம் முன்வந்ததாகவும், ஆனால் அந்த வாய்ப்பையும் எம்.பி.க்கள் ஏற்கவில்லை என்றும் கூறியது.
நாட்டின் நாடாளுமன்ற மற்றும் ஜனநாயக நடைமுறைகளைத் தான் மதிப்பதாகத் தெரிவித்த தேர்தல் ஆணையம், எந்தவொரு அரசியல் கட்சியும் தன்னைச் சந்திக்கக் கோரிக்கை விடுக்கலாம் என்றும், தனது வசதிக்கேற்ப சந்திப்புக்கான நேரத்தைத் தீர்மானிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Sajjad HUSSAIN / AFP via Getty Images
பாஜக என்ன சொல்கிறது?
மறுபுறம், பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பாத்ரா, காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளை விமர்சித்தார்.
"சிறப்பு தீவிரத் திருத்தப் பணியை எதிர்ப்பதன் மூலம், வாக்காளர் பட்டியலில் 2.8 கோடி உயிரிழந்தவர்களின் பெயர்களைத் தொடர்ந்து இடம்பெறச் செய்ய காங்கிரஸ் விரும்புகிறதா? ராகுல் காந்தியும் சோனியா காந்தியும் 'வாக்குத் திருட்டு' மூலம்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்களா? எஸ்.ஐ.ஆர் சட்டவிரோதமானது என்றால், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள காங்கிரஸ் அரசுகளும் சட்டவிரோதமானவையா?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.
பாஜக எம்.பி. சுதான்ஷு திரிவேதியும் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்தார். எஸ்.ஐ.ஆர் குறித்து ராகுல் காந்தி "தவறான, ஆதாரமற்ற மற்றும் முரண்பாடான" கருத்துகளைத் தொடர்ந்து தெரிவித்து வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































