தமிழ்நாட்டில் புற்றுநோய் அதிகரிப்பு: நீங்கள் புறக்கணிக்க கூடாத அறிகுறிகள் என்ன? 7 முக்கிய விஷயங்கள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
தமிழ்நாட்டில் புற்றுநோய் தொடர்பான புள்ளிவிவரங்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் (ICMR) அதன்கீழ் இயங்கும் தேசிய தொற்றாநோய்கள் நோய்ப்பரவலியல் நிறுவனமும் சமீபத்தில் வெளியிட்டிருகின்றன.
அதன்படி, இந்தாண்டு இதுவரை 19 வயதுக்கு மேற்பட்டவர்களிடையே 93,876 புதிய புற்றுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இது, 2030ஆம் ஆண்டு 99,478 ஆக அதிகரிக்கக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
2015-2017 தரவுகளை வைத்து மதிப்பிடுகையில் தமிழ்நாட்டில் தங்கள் வாழ்நாளில் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு ஆண்களில் 12 பேரில் ஒருவருக்கும் பெண்களில் 11 பேரில் ஒருவருக்கும் இருக்கக்கூடும் என அந்த ஆய்வு கூறுகிறது.
இந்த தரவுகள் தமிழ்நாட்டில் புற்றுநோய் பாதிப்பு ஆண்டுதோறும் அதிகரித்துவருவதைக் காட்டினாலும் விழிப்புணர்வு அதிகரித்துள்ளதன் காரணமாக மக்கள் பரிசோதனை செய்துகொள்வதை எடுத்துக் காட்டுவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
புற்றுநோய் குறித்து புறக்கணிக்கக் கூடாத அறிகுறிகள் என்ன? அதற்கான பரிசோதனைகள் என்ன என்பதை மருத்துவர்களிடம் கேட்டோம்.
1. புற்றுநோய் என்பது என்ன?
முதலில் புற்றுநோய் என்பது என்ன என்பதை அறிவது அவசியம்.
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் புற்றுநோய் அறுவை சிகிச்சை பேராசிரியர் சுரேஷ் குமார் கூறுகையில், "புற்றுநோய் என்பது உடலில் உள்ள சில செல்கள் தங்களின் இயல்பான கட்டுப்பாட்டை இழந்து, தேவைக்கு அதிகமாகப் பெருகி, சரியான நேரத்தில் அழியாமல் தொடர்ந்து வளர்வதால் ஏற்படும் நிலையாகும். அபரிமிதமாக செல்கள் உருவாகும், ஆனால் குறிப்பிட்ட கால இடைவெளியில் அழியாது அல்லது புதிதாக உருவாகும் செல்கள் அழியாமல் இருக்கும். இதில் செல்கள் உருவாதல் மற்றும் அழிதல் ஆகியவற்றை அவற்றுக்கென அமையப்பெற்ற ஜீன்கள் கட்டுப்படுத்தும். இதனால் தான் 10-15% புற்றுநோய்கள் மரபணு ரீதியாக ஏற்படுகின்றன. மீதி உள்ளவர்களுக்கு ஏன் வருகிறது என்பதை தெளிவாக சொல்ல முடியாது." என்றார்.
2. புற்றுநோய் அதிகரிப்புக்கு என்ன காரணம்?
மருத்துவர் சுரேஷ் குமார் கூறுகையில், "தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் தேசிய, சர்வதேச அளவிலும் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மனிதரின் சராசரி வாழ்நாள் அதிகரித்துள்ளதும் இதற்கு ஒரு காரணம். வாழ்நாள் அதிகரித்துள்ளதால் முதியவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதும் அதிகமாக உள்ளது. அதேபோன்று, மக்கள் தற்போது பரிசோதனை செய்ய முன்வருகின்றனர், இதுவும் ஒரு காரணம்." என்றார்.
"சுற்றுச்சூழல் காரணிகள், உணவுப்பழக்கம், புகைப்பிடித்தல் உள்ளிட்டவை காரணமாக இருக்கலாம். எந்தவொரு ஆபத்து காரணிகளும் புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்தை அதிகரிக்கும், ஆனால் அந்த காரணி இல்லாவிட்டால் புற்றுநோய் வராது என்று சொல்ல முடியாது." என்று அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
3. தமிழ்நாட்டில் பெண்களிடம் எந்த புற்றுநோய் அதிகம் உள்ளது?
ஐசிஎம்ஆர் ஆய்வறிக்கையின்படி,
1. மார்பக புற்றுநோய்
2. கர்ப்பப்பை வாய் புற்றுநோய்
3. சினைப்பை புற்றுநோய்
4. வாய் புற்றுநோய்
5. பெருங்குடல் புற்றுநோய்
4. தமிழ்நாட்டில் ஆண்களிடம் எந்த புற்றுநோய் அதிகம் உள்ளது?
ஐசிஎம்ஆர் ஆய்வறிக்கையின்படி,
1. வாய் புற்றுநோய்
2. வயிற்று புற்றுநோய்
3. நுரையீரல் புற்றுநோய்
4. பெருங்குடல் புற்றுநோய்
5. உணவுக்குழாய் புற்றுநோய்
5. புற்றுநோய் தொடர்பாக புறக்கணிக்கக் கூடாத அறிகுறிகள் என்ன?
மருத்துவர் சுரேஷ் குமார் கூறுகையில், "எந்த அறிகுறியையும் புற்றுநோய் அறிகுறி என பொதுவானதாக கூற முடியாது. எந்தவொரு குறிப்பிட்ட புற்றுநோய்க்கும் அதற்கேற்ப குறிப்பாகத்தான் அறிகுறிகள் இருக்கும். உதாரணமாக, பெண்களிடையே மார்பக புற்றுநோய் அதிகமாக காணப்படுகிறது. அதற்கு மார்பகத்தில் வலியில்லாத கட்டியோ, வீக்கமோ தென்பட்டால் இருக்கும்போது அதை பரிசோதிக்க வேண்டும்.
வாய்ப்புண் சாதாரணமாக இருந்தால் அது நம் உடல் செயல்பாட்டில் சில நாட்களில் தானாகவே சரியாகிவிடும். ஆனால், அது குணமாகாமல் இருந்தால் வாய் புற்றுநோயாக இருக்க வாய்ப்புண்டு. இப்படி குறிப்பாகத்தான் அறிகுறிகள் இருக்கும்." என்றார்.
அவர் கூற்றின்படி, "பொதுவாக, பசியின்மை, உடல் எடை குறைதல், உணவு உண்டபின் அசௌகரியம் ஏற்படுதல் போன்றவை ஏற்படலாம். எனவே, அந்தந்த புற்றுநோய்களுக்கான அறிகுறிகள் குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்." என தெரிவித்தார்.
காஞ்சிபுரத்தில் உள்ள அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையின் புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் ஐயப்பா கூற்றின்படி,
- தொடர் காய்ச்சல் போன்ற அறிகுறிகளை புறக்கணிக்கக் கூடாது.
- கால், கைகளின் மூட்டுப் பகுதிகளில் , கணுக்கால் உள்ளிட்டவற்றில் அடிப்படாமலேயே வீக்கமோ அல்லது கட்டியோ தென்பட்டால் அதனை பரிசோதித்துப் பார்க்க வேண்டும். அது, எலும்புப் பகுதிகளில் ஏற்படும் புற்றுநோயாக இருக்கலாம்.

பட மூலாதாரம், Getty Images
6. என்னென்ன பரிசோதனைகள் செய்ய வேண்டும்?
ஆரம்ப நிலையிலேயே அறிகுறிகள் தென்படும்போது, மருத்துவரின் அறிவுரைக்கு ஏற்ப ரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே, பயாப்ஸி உள்ளிட்ட பரிசோதனைகள் உள்ளன. சிறிய புற்றுநோய் கட்டிகளைக் கூட ஆரம்பத்திலேயே கண்டறியும் அளவுக்கு மருத்துவம் வளர்ந்துள்ளது என்கிறார் மருத்துவர் ஐயப்பன். மேலும்,
- ஓரிடத்தில் அடிபடாமல் வீக்கம் வந்தாலே அதை எக்ஸ்ரே எடுத்து எலும்பியல் மருத்துவரை பார்க்க வேண்டும்.
- 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஸ்க்ரீனிங் மேமோகிராம் ஓராண்டுக்கு ஒருமுறை எடுக்க வேண்டும்.
- அதேபோன்று, கர்ப்பப்பை வாய் பரிசோதனையையும் பெண்கள் செய்துகொள்ள வேண்டும்.
- அரசு மருத்துவமனைகளில் அனைத்துவித புற்றுநோய்களுக்கும் அதற்கேற்ப பரிசோதனைகள் உள்ளன.
7. என்னென்ன சிகிச்சைகள் உள்ளன?
மருத்துவர் சுரேஷ் குமார் கூறுகையில், "எந்த அறிகுறியையும் புறக்கணிக்கக் கூடாது. ஆரம்பநிலையிலேயே கண்டறிந்தால் முற்றிலும் குணப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம். அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை, கீமோதெரபி என ஏதேனும் ஒன்றை மேற்கொள்ளலாம். இதன்மூலம் பொருளாதார ரீதியாகவும் நோயாளிகள் சமாளிக்க முடியும். தீவிரமானால் பல சிகிச்சைகள் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். சிகிச்சை முறைகள் நன்கு வளர்ந்திருக்கின்றன. உதாரணமாக, மார்பக புற்றுநோய் என்றால் மார்பகங்களையே அகற்றும் நிலை இருந்தது, இப்போது புற்றுநோய் உள்ள பகுதியை சுற்றி மட்டும் அகற்றப்படுகின்றன. எந்த நிலையில் புற்றுநோய் இருக்கிறது என்பதை பொறுத்து சிகிச்சை முறைகள் மேம்பட்டிருக்கின்றன." என்றார்.
அதேபோன்று மருத்துவர் ஐயப்பன் கூறுகையில்,
- ஆரோக்கியமான வாழ்வியல் முறையை கடைப்பிடிக்க வேண்டும்.
- உடல் பருமனாக இருக்கும்போது அழற்சி ஏற்பட அதிக வாய்ப்புண்டு என்பதால், அதுவும் புற்றுநோய்க்கான ஒரு காரணியாக திகழ்கிறது. எனவே, உடல் எடையைக் குறைக்க வேண்டும்.
- கர்ப்பப்பை வாய் புற்றுநோயை ஏற்படுத்தும் ஹெச்பிவி வைரஸிலிருந்து தற்காத்துக் கொள்ள ஹெச்பிவி தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































