இயேசுவின் உயிர்த்தெழுதலை முதலில் கண்டதாக கூறப்படும் பெண் யார்? பைபிளின் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தின் கதை

காலப்போக்கில், மக்தலேனாவின் பெயர் வெவ்வேறு விவிலியக் கதாபாத்திரங்கள் மற்றும் வரலாற்றுக் கருத்துகளின் கலவையைக் குறிக்கும் ஒன்றாக மாறியது. அவற்றில் சில, பைபிளில் இடம்பெறும் குறிப்புகளை விட அவருடன் மிகவும் வலுவாகத் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன.
    • எழுதியவர், பிரெஷியஸ் அடேசினா
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

"அப்போஸ்தலர்களின் அப்போஸ்தலர்" என்று அழைக்கப்படும், சர்ச்சைக்குரிய மற்றும் பன்முகத் தன்மை கொண்ட புனித மேரி மக்தலேனா, புராணங்களாலும் மர்மங்களாலும் சூழப்பட்டுள்ளார்.

அவரைப் பற்றிய இந்தக் கலைப்படைப்புகள் என்ன வெளிப்படுத்துகின்றன?

கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை முதன்முதலில் நேரில் பார்த்து, அந்தச் செய்தியைப் பகிர்ந்தவர் என்று கூறப்படும் மேரி மக்தலேனாவைப் போல சமூகத்தின் கவனத்தை ஈர்த்த விவிலியக் கதாபாத்திரங்கள் மிகச் சிலரே என்று கூறப்படுகிறது

இயேசுவைப் பின்பற்றியவரும், "அப்போஸ்தலர்களின் அப்போஸ்தலர்" என்று அழைக்கப்படுபவருமான மக்தலேனா, பைபிளில் அவரைப் பற்றிய குறிப்புகள் ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தபோதிலும், பல நூற்றாண்டுகளாக மத மற்றும் மதச்சார்பற்ற சமூகங்களிடையே தொடர்ந்து பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தி வந்துள்ளார்.

இதன் விளைவாக, அவரைச் சுற்றியுள்ள புராணக் கதைகள், அவர் உண்மையில் யார் என்பதை மறைத்துவிட்டன.

காலப்போக்கில், மக்தலேனாவின் பெயர் வெவ்வேறு விவிலியக் கதாபாத்திரங்கள் மற்றும் வரலாற்றுக் கருத்துகளின் கலவையைக் குறிக்கும் ஒன்றாக மாறியது.

அவற்றில் சில, பைபிளில் இடம்பெறும் குறிப்புகளைவிட அவருடன் மிகவும் வலுவாகத் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன.

இதைத்தான் ஃபிராங்க்ஃபர்ட்டில் உள்ள ஸ்டெடெல் அருங்காட்சியகத்தில் நடைபெறும் 'Mary Magdalene. Sin. Pray. Love'('மேரி மக்தலேனா . பாவம். ஜெபம். அன்பு') என்ற கண்காட்சி ஆராய்கிறது.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

"அடிப்படையில், ஒரே நபருக்குள் மூன்று மேரி மக்தலேனாக்கள் இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம்" என்று இந்தக் கண்காட்சியை இணைந்து ஒருங்கிணைத்த கலை வரலாற்றாசிரியர் பாஸ்டியன் எக்லெர்சி கூறுகிறார்.

"ஒருவர் பெயரற்ற பாவி, மற்றொருவர் பெத்தானியாவைச் சேர்ந்த மேரி, மூன்றாவது விவிலியத்தில் குறிப்பிடப்படும் மேரி மக்தலேனா"என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

கண்காட்சியின் தலைப்பு குறிப்பிடுவது போலவே, மக்தலேனா மூன்று முக்கிய வழிகளில் எவ்வாறு சித்தரிக்கப்பட்டுள்ளார் என்பதையும் இந்தக் கண்காட்சி ஆராய்கிறது.

"பல நூற்றாண்டுகளாக மக்தலேனா குறித்த பார்வையை வடிவமைத்த பாவி மற்றும் மனம் வருந்தியவரின் உருவத்தை 'பாவம்' குறிக்கிறது. புனிதராகவும் இயேசுவின் சீடராகவும் மேரி மக்தலேனாவை 'ஜெபம்' குறிக்கிறது; அவருடன் தொடர்புபடுத்தப்படும் பல்வேறு வகையான அன்பு, பக்தி மற்றும் நெருக்கம் குறித்த கருத்துகளை 'அன்பு' குறிக்கிறது" என்று எக்லெர்சி பிபிசியிடம் கூறுகிறார்.

இங்கே, மக்தலேனா குறித்த வெவ்வேறு பார்வைகளையும், காலப்போக்கில் பெண்கள் குறித்த மாறிவரும் கண்ணோட்டங்களையும் எடுத்துக்காட்டும் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள 10 கலைப்படைப்புகளைப் பார்க்கலாம்.

 புனிதர் மேரி மக்தலேனாவின் விண்ணேற்றம்
படக்குறிப்பு, ஆல்ப்ரெக்ட் டியூரர் வரைந்த புனித மேரி மக்தலேனாவின் விண்ணேற்றம் (சுமார் 1504–05)

ஆல்ப்ரெக்ட் டியூரர் வரைந்த புனித மேரி மக்தலேனாவின் விண்ணேற்றம் (சுமார் 1504–05)

ஜெர்மன் கலைஞர் ஆல்ப்ரெக்ட் டியூரர் காகிதத்தில் உருவாக்கிய மரச்செதுக்கு அச்சுப் படைப்பில், ஆடை எதுவுமின்றி இருக்கும் மக்தலேனா, ஆறு தேவதைகளால் வானத்தை நோக்கித் தூக்கிச் செல்லப்படுகிறார்.

இந்தக் காட்சி, 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இத்தாலிய வரலாற்றாசிரியரும் பேராயருமான ஜேக்கபஸ் டி வோராஜின் எழுதிய 'தி கோல்டன் லெஜண்ட்' என்ற நூலால் ஈர்க்கப்பட்டது.

அந்த நூலில் இடம்பெறும் பிரபலமான கதைகளில் ஒன்றின்படி, தனிமையைத் தேடி மேரி தெற்கு பிரான்சுக்கு செல்கிறார்.

"அங்கு வனப்பகுதியில் உணவு எதுவும் கிடைக்கவில்லை. அதனால், ஒரு நாளைக்கு ஏழு முறை தேவதைகள் அவரைத் தூக்கிச் சென்று, அவர்களின் இசையைக் கேட்பதற்காக சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்றனர். அதுவே அவருக்கு உணவாக இருந்தது" என்கிறார் எக்லெர்சி.

இத்தாலிய கலைஞர் ஜியோவானி ஜிரோலாமோ சவோல்டோ வரைந்த இந்த ஓவியம் மக்தலேனாவைச் சித்தரிக்கிறது என்பது முதல் பார்வையில் தெளிவாகத் தெரியாது. ஆனால், நிபுணர்களைப் பொறுத்தவரை, ஓவியத்தின் இடது மூலையில் காணப்படும் சிறிய குவளையும், வெள்ளி நிற சாட்டின் மேலாடைக்கு அடியில் தெரியும் சிவப்பு நிற ஆடையும் அவரை அடையாளம் காண உதவுகின்றன.

ஜியோவானி ஜிரோலாமோ சவோல்டோ வரைந்த கல்லறையில் மேரி மக்தலேனா (சுமார் 1535–40)

இத்தாலிய கலைஞர் ஜியோவானி ஜிரோலாமோ சவோல்டோ வரைந்த இந்த ஓவியம் மக்தலேனாவைச் சித்தரிக்கிறது என்பது முதல் பார்வையில் தெளிவாகத் தெரியாது.

ஆனால், நிபுணர்களைப் பொறுத்தவரை, ஓவியத்தின் இடது மூலையில் காணப்படும் சிறிய குவளையும், வெள்ளி நிற சாட்டின் மேலாடைக்கு அடியில் தெரியும் சிவப்பு நிற ஆடையும் அவரை அடையாளம் காண உதவுகின்றன. சிவப்பு நிறம் பொதுவாக உணர்ச்சி மற்றும் ஆபத்துடன் தொடர்புபடுத்தப்படுகிறது.

"தெளிவாக அடையாளம் காணக்கூடிய குறிப்புகள் அதிகம் இல்லாததால், இது மேரி மாதாவாக [கிறிஸ்துவின் தாய்] இருக்கலாம் என்று சிலர் கூறியுள்ளனர். ஆனால், இதில் வெள்ளை நிற அலபாஸ்டர் குவளை இருப்பதால், இது மேரி மக்தலேனா தான் என்று நான் கருதுகிறேன்" என்கிறார், பிரிட்டனில் உள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் கிறிஸ்தவ ஆய்வுகள் துறை விரிவுரையாளரான சிவோன் ஜாலி.

2027-ஆம் ஆண்டு தொடங்க உள்ள மேரி மக்தலேனா குறித்த தேசியக் காட்சியகத்தின் பயணக் கண்காட்சியை அவர் ஒருங்கிணைத்து வருகிறார்.

பைபிளில் பெயர் குறிப்பிடப்படாத பெண் "பாவி", இயேசுவின் பாதங்களில் அபிஷேகம் செய்ததுடன் தொடர்புடையவராக அந்தக் குவளை கருதப்படுகிறது என்று அவர் குறிப்பிடுகிறார்.

பல நூற்றாண்டுகளாக மக்தலேனாவைச் சித்தரிக்கும் கலைப்படைப்புகள், உண்மையில் அவர் எப்படிப்பட்ட தனிநபராக இருந்தார் என்பதைப் பற்றி அதிகம் தெரிவிப்பதில்லை என்பது ஜாலியின் கருத்து.

"என்னைப் பொறுத்தவரை, வெவ்வேறு கலாசாரங்கள் பெண்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்பியுள்ளன என்பதைப் பற்றித்தான் அவை அதிகம் கூறுகின்றன" என்கிறார் அவர்.

இயேசுவை தோட்டக்காரர் என்று மேரி தவறாக அடையாளம் காணும் விவிலியக் காட்சியை ஃபோண்டானா நேரடியாகக் குறிப்பிடுகிறார்.

லவினியா ஃபோண்டானா வரைந்த மேரி மக்தலேனாவுக்குக் காட்சியளிக்கும் கிறிஸ்து (1581)

இத்தாலிய மேனரிஸ்ட் ஓவியரான லவினியா ஃபோண்டானா, தனது தனித்துவமான சிவப்பு நிற ஆடையில் மக்தலேனாவை வரைந்துள்ளார்.

ஒரு பெண் கலைஞரால் உருவாக்கப்பட்ட புனிதரான மக்தலேனாவின் ஆரம்பகால ஓவியங்களில் இதுவும் ஒன்றாகும்.

"பெண்ணின் பார்வை என்று ஒன்றை நீங்கள் எதிர்பார்க்கலாம். ஆனால், அப்படியான ஒன்றை எங்களால் கண்டறிய முடியவில்லை" என்கிறார் எக்லெர்சி.

இயேசுவை தோட்டக்காரர் என்று மேரி தவறாக அடையாளம் காணும் விவிலியக் காட்சியை ஃபோண்டானா நேரடியாகக் குறிப்பிடுகிறார்.

அந்த ஓவியத்தில், அவர் அகலமான விளிம்புகளைக் கொண்ட தொப்பி மற்றும் அங்கி அணிந்த ஒரு பாரம்பரிய 16-ஆம் நூற்றாண்டு இத்தாலியத் தொழிலாளியாக உடையணிந்துள்ளார்.

வூயே வரைந்த ஓவியத்தில், பைபிளில் இடம்பெறாத ஒரு கற்பனைக் காட்சியில், மக்தலேனா அலங்கார மேசையின் முன் இருக்கிறார்.

சைமன் வூயே வரைந்த தனது கர்வமிக்க சகோதரி மேரி மக்தலேனாவைக் கண்டிக்கும் மார்த்தா (1621)

மக்தலேனா குறித்த பல்வேறு வரலாற்றுக் கருத்துகளும், சமகாலக் கருத்துகளும் பைபிளில் இடம்பெறும் வெவ்வேறு கதாபாத்திரங்களை ஒன்றுடன் ஒன்று இணைத்துப் பார்க்கின்றன.

இதில், இயேசுவின் பாதங்களில் அபிஷேகம் செய்த பெயர் குறிப்பிடப்படாத "பாவம் செய்த பெண்", பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண், மேலும் பைபிளில் இடம்பெறும் மற்ற இரு கதாபாத்திரங்களான மார்த்தா மற்றும் லாசரஸின் உறவினரான பெத்தானியாவைச் சேர்ந்த மேரி ஆகியோரும் அடங்குவர்.

"இதைத்தான் [கலை வரலாற்றாசிரியர்] மரினா வார்னர் 'மேரிகளின் குழப்பம்' என்று அழைக்கிறார்.

அதாவது, ஓவியத்திலோ அல்லது கதையிலோ ஒரு கருத்தைச் சொல்வதற்குத் தேவையான பணியை அந்தக் கதாபாத்திரம் செய்துவிட்டால், கலைஞர்கள் வெவ்வேறு மேரிகளுக்கு இடையே வேறுபாடு காட்டுவதில்லை" என்கிறார் ஜாலி.

வூயே வரைந்த ஓவியத்தில், பைபிளில் இடம்பெறாத ஒரு கற்பனைக் காட்சியில், மக்தலேனா அலங்கார மேசையின் முன் இருக்கிறார்.

அங்கு அவர் மிகவும் தற்பெருமை கொண்டவராக இருப்பதற்காகத் தன் சகோதரி மார்த்தாவால் கண்டிக்கப்படுகிறார்.

கக்னாச்சியின் ஓவியத்தில், மக்தலேனா ஒரு மண்டை ஓட்டைக் கையில் வைத்திருக்கிறார். கலை வரலாற்றில், வாழ்க்கை குறுகியது என்பதையும், கடவுளைச் சந்திக்க நமது ஆன்மாக்களைத் தயார்படுத்த வேண்டும் என்பதையும் நினைவூட்டுவதற்காக மண்டை ஓடு பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.

கைடோ கக்னாச்சி வரைந்த மனம் வருந்தும் மக்தலேனா (1626–27)

மக்தலேனா தனது தவறுகளுக்காக வருந்தும் நிலையில் சித்தரிக்கப்படுவது கலை வரலாற்றில் பிரபலமான ஒரு உருவகமாகும்.

"ஆண், பெண் என இருபாலருக்கும் மனம் வருந்தி பாவமன்னிப்பு கோருபவர்களுக்கான முன்மாதிரியாக அவர் மாறியுள்ளார்" என்கிறார் எக்லெர்சி.

குறிப்பாக மேற்கத்திய மரபுகளில், மக்தலேனா பாலியல் பாவத்துடன் படிப்படியாகத் தொடர்புபடுத்தப்பட்டுள்ளார். கக்னாச்சியின் ஓவியம் போன்ற பல ஓவியங்களில் இது தெளிவாகத் தெரிகிறது. அதில் பாலியல் விருப்பம் தொடர்பான கருத்துகளைத் தவிர்க்க முடியாத வகையில் காண முடிகிறது.

பெயர் குறிப்பிடப்படாத "பாவம் செய்த பெண்" செய்த தவறு என்ன என்பதை நேரடியாகக் குறிப்பிடும் எந்த விவிலிய வசனமும் இல்லை. இருப்பினும், அது பாலியல் தொடர்பானதாக இருக்க வேண்டும் என்று பலர் கருதியுள்ளனர்.

"குறிப்பாகப் பழைய நூல்களில், அவர் பாலியல் தொழிலாளியாகச் சித்தரிக்கப்படுவதை அடிக்கடி கேட்க முடியும். ஆனால், விவிலிய ஆவணங்களில் அதற்கான உண்மையான ஆதாரம் எதுவும் இல்லை" என்கிறார் ஜாலி.

"கலைஞர்களைப் பொறுத்தவரை, புனிதமான ஓர் உருவத்தை சற்று கவர்ச்சிகரமாகச் சித்தரிக்க இது ஒரு வாய்ப்பாக இருந்தது. மற்ற புனிதர்களை அவ்வாறு சித்தரிக்க முடியாத நிலையில், மக்தலேனாவை கவர்ச்சியானவராக அல்லது சற்றே பாலியல் தன்மை கொண்டவராகச் சித்தரிப்பதில் அவர்கள் தப்பித்துக்கொள்ள முடியும் என்பது அவர்களுக்குத் தெரியும்."

கக்னாச்சியின் ஓவியத்தில், மக்தலேனா ஒரு மண்டை ஓட்டைக் கையில் வைத்திருக்கிறார். கலை வரலாற்றில், வாழ்க்கை குறுகியது என்பதையும், கடவுளைச் சந்திக்க நமது ஆன்மாக்களைத் தயார்படுத்த வேண்டும் என்பதையும் நினைவூட்டுவதற்காக மண்டை ஓடு பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.

அவரது ஓவியங்கள், கலைப்படைப்புகளில் பெண்களை அலங்காரப் பொருளாகவோ அல்லது பாலியல் ரீதியாகவோ சித்தரிக்கும் பாரம்பரிய முறைகளை நிராகரிப்பதாகக் கூறலாம்.

அர்னால்ட் பெக்லின் வரைந்த கிறிஸ்துவின் உடலுக்காகத் துக்கம் அனுசரிக்கும் மக்தலேனா (1867)

சுவிஸ் ஓவியர், இயேசுவின் உயிரற்ற உடலுக்கு அருகில் நிற்கும் மக்தலேனாவை நாடகத்தன்மையுடன் சித்தரிக்கிறார்.

மக்தலேனாவை அமைதியானவராகவோ அல்லது வெளிப்படையான பாலியல் தன்மை கொண்டவராகவோ சித்தரிக்கும் பாரம்பரிய முறைகளுக்குப் பதிலாக, பெக்லின் தீவிரமான உணர்வுகளை வெளிப்படுத்த அனுமதிக்கப்பட்ட இந்தக் கதாபாத்திரத்தை உருவாக்குகிறார்.

இதனால், அவர் இயேசுவுக்காகத் தீவிரமாகத் துக்கம் அனுசரிக்கிறார்.

"ஒரு வகையில், கன்னி மரியாவின் பாத்திரத்தை மேரி மக்தலேனா ஏற்றுக்கொள்கிறார். உங்களால் வெளிப்படுத்தக்கூடிய உச்சபட்ச துயரத்தை அவர் வெளிப்படுத்துகிறார்" என்கிறார் எக்லெர்சி.

“ஒரு வகையில், கன்னி மேரியின் பாத்திரத்தை மேரி மக்தலேனா ஏற்றுக்கொள்கிறார். உங்களால் வெளிப்படுத்தக்கூடிய உச்சபட்ச துயரத்தை அவர் வெளிப்படுத்துகிறார்” என்கிறார் எக்லெர்சி.

மேக்ஸ் பெக்மன் வரைந்த கிறிஸ்துவும் பாவியும் (1917)

'கிறிஸ்துவும் பாவியும்' அல்லது 'கிறிஸ்துவும் பாலியல் தொழிலில் பிடிபட்ட பெண்ணும்' என்ற இரு தலைப்புகளிலும் அழைக்கப்படும் இந்த ஓவியம், பெயர் குறிப்பிடப்படாத ஒரு பெண்ணை கல்லால் அடித்துக் கொல்ல முயன்ற கோபமடைந்த கூட்டத்தை இயேசு தடுத்து நிறுத்தும் பிரபலமான விவிலியக் காட்சியைச் சித்தரிப்பதாகக் கூறப்படுகிறது.

காலப்போக்கில் இந்தக் கதை மக்தலேனாவுடன் தொடர்புபடுத்தப்பட்டது.

மக்தலேனா அளவுக்கு அதிகமாக பாலியல் தன்மை கொண்டவராக சித்தரிக்கப்பட்ட முந்தைய படைப்புகள் குறித்து, "ஒரு பெண்ணைப் பற்றிய மிக மோசமான விஷயம் என்னவாக இருக்க முடியும் என்று மக்கள் கற்பனை செய்கிறார்கள் என்பதைப் பற்றியே அவை நமக்கு அதிகம் கூறுகின்றன" என்கிறார் ஜாலி.

அதற்குப் பதிலாக, பெக்மன் இந்தக் கதைக்கு மிகவும் மென்மையான தன்மை கொண்ட விளக்கத்தை வழங்குகிறார்.

பெக்மன் இந்தக் கதைக்கு மிகவும் மென்மையான தன்மை கொண்ட விளக்கத்தை வழங்குகிறார்.

மார்லீன் டூமா வரைந்த மேரி மக்தலேனாவாக நவோமி கேம்ப்பெல் (1996)

தென்னாப்பிரிக்கக் கலைஞர், மக்தலேனாவை நவோமி கேம்ப்பெல் ஆகச் சித்தரிப்பதன் மூலம் ஒரே நேரத்தில் பல கருத்துகளை முன்வைக்கிறார்.

"இது புகழ் மற்றும் நற்பெயர் குறித்து ஏதோ ஒன்றைக் கூறுகிறது. இதைத்தான் மேரி மக்தலேனா காலம் முழுவதும் எதிர்கொண்டுள்ளார்.

அதே நேரத்தில், நாம் அழகை இனத்தின் அடிப்படையில் எவ்வாறு வரையறுக்கிறோம் என்பது குறித்தும் சிந்திக்க வைக்கிறது"என்கிறார் ஜாலி.

பைபிளில் மக்தலேனாவின் உடல் தோற்றம் குறித்து மிகக் குறைவாகவே விவரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மேற்கத்தியக் கலைகளில், இந்தப் புனிதர் பெரும்பாலும் இளம் வயதுடையவராகவும் வெள்ளை நிறத்தவராகவும் சித்தரிக்கப்படுகிறார்.

டூமா இதற்கு மாறான ஒன்றைச் சிந்திக்க நமக்கு வாய்ப்பளிக்கிறார்.

"இந்தப் படைப்பு, பார்வையாளர்களுக்குச் சமூகத்தின் மீது ஒரு கண்ணாடியாகத் தெரிகிறது" என்று ஜாலி மேலும் கூறுகிறார்.

மக்தலேனாவைப் பற்றி மிகக் குறைவாகவே தெரிந்திருந்தாலும், மக்கள் அவரைப் பற்றி தங்களுக்குத் தெரியும் என்று அடிக்கடி உணர்கிறார்கள் என்பதையும் அவர் குறிப்பிடுகிறார்.

"மக்கள் மேரி மக்தலேனாவுடன் மனதளவில் தானாகவே உணர்வுபூர்வமாக ஏற்படுத்திக் கொள்ளும் உறவைக் கொண்டுள்ளனர். பிரபலமான கலாச்சாரத்திலும் கலைப்படைப்புகளிலும் அவர்கள் எதிர்கொள்ளும் மக்தலேனா குறித்த ஒரு புரிதல் அவர்களுக்கு உள்ளது.

ஆனால் அது விவிலியக் கதாபாத்திரம் குறித்த அறிவின் அடிப்படையிலோ அல்லது அதைப் பற்றிய உண்மையான ஆர்வத்தின் அடிப்படையிலோ அமைந்தது அல்ல"என்றும் அவர் கூறுகிறார்.

நிவெஸ் கோன்சாலஸ் வரைந்த லா ஸ்ஃபிடா (தி சேலஞ்ச்) (2025)

மேரி மக்தலேனா : பாவம், ஜெபம், அன்பு ('Mary Magdalene: Sin. Pray. Love') கண்காட்சி, ஃபிராங்க்ஃபர்ட்டில் உள்ள ஸ்டெடெல் அருங்காட்சியகத்தில் 2026 செப்டம்பர் 17 முதல் 2027 ஜனவரி 17 வரை நடைபெறுகிறது.

ஸ்பானிய காட்சிக் கலைஞர் நிவெஸ் கோன்சாலஸ், மக்தலேனாவின் பல அடையாளங்களைத் தக்கவைத்துக்கொள்கிறார்.

அவரது செம்பழுப்பு-பொன்னிற தலைமுடி, சிவப்பு நிற ஆடை மற்றும் கையில் வைத்திருக்கும் மண்டை ஓடு ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன.

அதே நேரத்தில், பெரிய அளவிலான பஃபர் ஜாக்கெட்டை அணிவித்ததன் மூலம் இந்தப் பிரபலமான கதாபாத்திரத்தை நவீனப்படுத்துகிறார்.

கோன்சாலஸ், "மிகவும் தன்னம்பிக்கை கொண்ட இளம் பெண்ணைச் சித்தரிக்கிறார்" என்று எக்லெர்சி கருதுகிறார்.

மக்தலேனா பார்வையாளரை நோக்கிப் பார்க்கும் விதத்தில் எந்தவித மன்னிப்புக் கோரும் உணர்வும் இல்லை.

"இது தன்னாட்சி மற்றும் உரிமை குறித்த படைப்பு. 'என்னைப் பற்றி நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?' என்று அவர் உங்களிடம் கேட்பதைப் போன்ற உணர்வு ஏற்படுகிறது" என்கிறார் ஜாலி.

மேரி மக்தலேனா : பாவம், ஜெபம், அன்பு ('Mary Magdalene: Sin. Pray. Love') கண்காட்சி, ஃபிராங்க்ஃபர்ட்டில் உள்ள ஸ்டெடெல் அருங்காட்சியகத்தில் 2026-ஆம் ஆண்டு செப்டம்பர் 17 முதல் 2027-ஆம் ஆண்டு ஜனவரி 17 வரை நடைபெறுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு