'5 லட்சம் பேர், 151 கார்கள், 6 ஹெலிபேட்கள், கூட்டத்தால் ஒத்திவைக்கப்பட்ட குதிரை பந்தயம்' - பேசுபொருளான பிகார் எம்எல்ஏ மகள் திருமணம்

ஷிவாங்கி சிங் – ரிஷிகேஷ் குமார் திருமணம் புதன்கிழமை நடைபெற்றது.
படக்குறிப்பு, ஷிவாங்கி சிங் – ரிஷிகேஷ் குமார் திருமணம் புதன்கிழமை நடைபெற்றது.
    • எழுதியவர், கீதா பாண்டே
    • பதவி, பிபிசி
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

இந்தியாவின் ஏழ்மையான மாநிலமான பிகாரில், அரசியல்வாதி ஒருவரின் மகளுக்காக நடத்தப்பட்ட ஆடம்பரத் திருமணக் கொண்டாட்டங்கள் தலைப்புச் செய்திகளாகியுள்ளன.

பிகார் சட்டப்பேரவை உறுப்பினரான அனந்த் சிங்கின் மகள் ஷிவாங்கி சிங்கின் திருமணம், பல நாட்களாக நடைபெற்ற பிரமாண்டக் கொண்டாட்டங்களுக்குப் பிறகு புதன்கிழமை நிறைவடைந்தது. இதில் குதிரைப் பந்தயம் நடத்தவும் திட்டமிடப்பட்டிருந்தது.

பாட்னா நகரில் இருந்து சுமார் 65 கி.மீ. தொலைவில் உள்ள நாடவா கிராமத்தில், அனந்த் சிங்கின் பூர்வீக வீட்டில் புதன்கிழமை நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில், முக்கிய அரசியல்வாதிகள் உட்பட லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

மோகாமா தொகுதியிலிருந்து ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனந்த் சிங், இந்த மாதத் தொடக்கத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது, "அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிகாரில் இருந்து மட்டுமல்ல, இந்தியா முழுவதிலும் இருந்து, பாகிஸ்தானில் இருந்தும்கூட அழைத்திருக்கிறோம்" என்று கூறியிருந்தார்.

நேற்று அங்கிருந்து வெளியான செய்திகளின்படி, அவர் கூறியதைப் போலவே உண்மையிலேயே அனைவரும் வந்துவிட்டதாகத் தோன்றியது.

திருமணத்தில் சுமார் ஐந்து லட்சம் பேர் கலந்துகொண்டதாக ஊடகச் செய்திகள் மதிப்பிட்டுள்ளன. இதனால் அந்தக் கிராமமே பெரிய திருவிழா களம்போல மாறியது. பாட்னாவுக்குச் செல்லும், அங்கிருந்து வரும் சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

முக்கிய விருந்தினர்களை வரவேற்க கிராமத்தில் ஆறு ஹெலிகாப்டர் தளங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தற்காலிகச் சமையலறைகளில் நூற்றுக்கணக்கான சமையல்காரர்கள், எட்டு மில்லியன் இனிப்புத் துண்டுகள் உட்பட 150-க்கும் மேற்பட்ட உணவு வகைகளைத் தயாரித்திருந்தனர்.

புதன்கிழமை திருமண நிகழ்ச்சியின் முக்கிய ஈர்ப்பாகக் குதிரைப் பந்தயம் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக 52 குதிரைகள் கொண்டுவரப்பட்டிருந்தன. ஆனால், பந்தயத்தைக் காண வந்த கூட்டம் மிக அதிகமாக இருந்ததால், பலர் பந்தய மைதானத்துக்குள்ளேயே வந்துவிட்டனர். இதையடுத்து, கடைசி நேரத்தில் குதிரைப் பந்தயம் ஒத்திவைக்கப்பட்டது.

மணமகளின் தந்தையான அனந்த் சிங் சர்ச்சைக்குரிய அரசியல்வாதி ஆவார்.
படக்குறிப்பு, மணமகளின் தந்தையான அனந்த் சிங் சர்ச்சைக்குரிய அரசியல்வாதி ஆவார்.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

குதிரைப் பந்தயத்துக்கான பயிற்சியின்போது எடுக்கப்பட்ட காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது. அதில், பந்தயத்தைக் காணப் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். அவர்களில் பல நூறு பேர், நன்றாகப் பார்ப்பதற்காக மின்சாரக் கோபுரத்தின் உச்சியில் ஏறி நின்றிருந்தனர்.

கடந்த வாரம், அனந்த் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் வெள்ளை நிற எஸ்யூவி காரின் காணொளி ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அதன் மதிப்பு ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை இருக்கும். குதிரைப் பந்தயத்தில் வெற்றி பெறுபவருக்கு அந்தக் கார் பரிசாக வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்திருந்தார். இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடிப்பவர்களுக்கு ஒரு மோட்டார் சைக்கிளும் ஒரு ஸ்கூட்டரும் பரிசாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இறுதிப் போட்டி தற்போது வியாழக்கிழமை நடைபெறும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.

டெல்லிப் பல்கலைக்கழகத்தில் படித்த மணமகள் ஷிவாங்கி, லேண்ட் க்ரூஸர் காரில் திருமண நிகழ்ச்சிக்கு வந்தார். அட்லாண்டாவில் உள்ள ஜார்ஜியா மாகாணப் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்த மணமகன் ரிஷிகேஷ் குமார், 151 கார்களுடன் அணிவகுத்து வந்தார்.

அனந்த் சிங்கும் பிரமாண்டமாகத் திருமண நிகழ்ச்சிக்கு வந்தார். ஆதரவாளர்கள் கூட்டம் சூழ்ந்திருந்த எஸ்யூவி காரின் சன்ரூப் வழியாக அவர் வெளியே எழுந்து நின்றபடி வந்ததாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது. "மகளின் திருமணத்துக்கு வந்த அவர், எந்த மணமகனின் வருகையையும் மிஞ்சும் வகையில் வந்தார்" என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மணமகளின் குடும்பத்தினர், மணமகனுக்கு ரூ.2.3 கோடி மதிப்புள்ள கார், தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களைப் பரிசாக வழங்கியதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும், இந்தத் திருமணத்துக்கு எவ்வளவு செலவானது என்பதை அனந்த் சிங் வெளியிடவில்லை.

ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானியின் 2024-ஆம் ஆண்டு திருமணக் கொண்டாட்டங்களுடன் ஒப்பிடும் அளவுக்கு இந்தத் திருமணத்தின் பிரமாண்டம் இல்லை.

ஆனால், பிகாரில் நடத்தப்பட்ட இந்த ஆடம்பரத் திருமணம் பெரும் பேசுபொருளாகியுள்ளது. இந்தத் திருமணம் "அரச குடும்பத் திருமணம்" என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.

அனந்த் சிங்கின் அரசியல் போட்டியாளர்களில் ஒருவரும், பிகார் சட்ட மேலவை உறுப்பினருமான நீரஜ் குமார், இந்தத் திருமணத்துக்கான பணம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து விசாரணை அமைப்புகள் விசாரிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

பிகாரில் ஷிவாங்கி சிங்கின் ஆடம்பரத் திருமணம் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
படக்குறிப்பு, பிகாரில் ஷிவாங்கி சிங்கின் ஆடம்பரத் திருமணம் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

இருப்பினும், இந்தத் திருமணம் மணமக்களை விட, மணமகளின் தந்தையான சர்ச்சைக்குரிய அரசியல்வாதி அனந்த் சிங்கின் காரணமாகவே அதிகக் கவனம் பெற்றுள்ளது.

''சிறிய அரசு'' என்று பிரபலமாக அழைக்கப்படும் அனந்த் சிங், "பாகுபலி" என்று அடிக்கடி வர்ணிக்கப்படுகிறார். இந்தியாவின் பல பகுதிகளில் செல்வாக்கும் அதிகாரமும் கொண்ட உள்ளூர் தலைவர்களைக் குறிக்க இந்தச் சொல் பயன்படுத்தப்படுகிறது.

தனது சமூக வலைதளப் பக்கங்களில் அவர் வெளியிடும் காணொளிகளில், மீசையின் நுனியை முறுக்கிவிடும் காட்சிகள் அடிக்கடி இடம்பெறுகின்றன.

அவர் 20 முதல் 25 கார்கள் கொண்ட அணிவகுப்புடன் பயணம் செய்வதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். ஒருமுறை, வரி அதிகாரிகள் அவரைச் சந்திக்க வந்தபோது, கழுத்தில் உயிருள்ள பாம்புகளைச் சுற்றிக்கொண்டு அவர்களை விரட்டியடித்ததாக உள்ளூர் செய்தியாளர் ஒருவர் கூறியுள்ளார்.

2005-ஆம் ஆண்டு முதன்முறையாக மோகாமா தொகுதியில் வெற்றி பெற்ற அனந்த் சிங், அதன்பிறகு 2010, 2015, 2020 மற்றும் 2025 தேர்தல்களிலும் அந்தத் தொகுதியைத் தக்கவைத்தார்.

கடந்த ஆண்டு தேர்தலுக்கு முன்பாகத் தேர்தல் ஆணையத்திடம் அவர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், தன்னை ஒரு சமூக சேவகர் என்றும், தனக்குத் தொழில் நிறுவனங்களும் விவசாய நிலங்களும் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

தனக்கும் தனது மனைவிக்கும் சேர்த்து ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாகவும், தனக்கு எதிராக இரண்டு டஜனுக்கும் அதிகமான குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். அவற்றில் கொலை, கொலை முயற்சி, பணம் பறித்தல், கலவரத்தில் ஈடுபடுதல் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளும் அடங்கும்.

அவர் பலமுறை சிறையில் இருந்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த இரண்டு தசாப்தங்களில் அவர் சட்டமன்ற உறுப்பினராக இல்லாத ஒரே காலகட்டம் 2022-ஆம் ஆண்டு. அப்போது, 2019-ஆம் ஆண்டு வழக்கு ஒன்றில் அவருக்குப் பத்தாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவரது வீட்டில் ஏகே-47 ரகத் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் வெடிமருந்துகளும் கைப்பற்றப்பட்ட வழக்கு அது.

இதையடுத்து, பிகார் சட்டப்பேரவை அவரைத் தகுதி நீக்கம் செய்தது. எனினும், அவர் பிணையில் வெளியில் இருந்ததுடன், நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடும் செய்தார். கடந்த ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர் மீண்டும் சட்டப்பேரவைக்குத் திரும்பினார்.

கடந்த ஆண்டு தேர்தலின்போது நடந்த கொலை வழக்கு ஒன்றிலும் அவர் முக்கியக் குற்றச்சாட்டுக்குரிய நபராகச் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் டிசம்பர் 1-ஆம் தேதிக்குள் சரணடைய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அவருக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மூன்று மாதங்கள் சிறையில் இருந்த அனந்த் சிங், நீதிமன்ற உத்தரவுக்குக் கட்டுப்படுவேன் என்று நேர்காணல்களில் தெரிவித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு