'6 வயதில் 80 வயது தோற்றம்': இந்த கேரள சிறுமிக்கு என்ன பிரச்னை?

- எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
"என் குழந்தையை பார்ப்பவர்கள் பலவிதமான கருத்துகளை கூறுவார்கள். எதற்கு இந்த குழந்தையை வெளியே அழைத்து வருகிறீர்கள், வீட்டிலேயே இருக்கக் கூடாதா என கேட்பார்கள். ஆனால், என் குழந்தை இப்படித்தான். அவள் வெளியே செல்ல வேண்டும். மக்கள் அவளை காண வேண்டும்." என்கிறார் அஞ்சலி.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மானந்தவாடி எனும் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி அஞ்சலி - அகில். இவர்களின் 6 வயதான தக்கு என்கிற ஐஸா தனக்கு ஏற்பட்டுள்ள அரிதான மரபணு நோயால் சமூகத்தில் பலவிதமான கேலி, கிண்டல்களுக்கு ஆளாகியுள்ளார்.
அவற்றை புறந்தள்ளி மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார் ஐஸா. தங்கள் மகளின் கனவை நிறைவேற்ற வேண்டும் என அவரின் பெற்றோரும் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கின்றனர்.
க்யூட்டிஸ் லாக்ஸா எனப்படும் அரிதான மரபணு நோயால் ஐஸா பாதிக்கப்பட்டுள்ளார்.
ஐஸாவின் தாய் அஞ்சலி கூறுகையில், "தக்கு 6 மாத குழந்தையாக இருந்தபோது அவள் உடம்பில் இருந்த சுருக்கங்கள் மறையவில்லை. அதனால் நாங்கள் மருத்துவமனைக்கு சென்று காண்பித்தோம். என்ன பிரச்னை என கண்டறிய மரபணு பரிசோதனை செய்ய வேண்டும் என்றார்கள். ஒரு மாதம் கழித்து பரிசோதனை முடிவு வந்தது. குழந்தைக்கு க்யூட்டிஸ் லாக்ஸா எனப்படும் அரிய நோய் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்." என்றார்.

இரண்டரை வயதிலேயே 2 அறுவை சிகிச்சைகள்
இந்த நோய் காரணமாக, ஐஸாவுக்கு அடிக்கடி சளி, இருமல், காய்ச்சல் என உடல்நல பிரச்னைகள் ஏற்படும் என்றும், ஒரு மாதத்தில் பல நாட்கள் மருத்துவமனையிலேயே தான் இருக்க வேண்டியிருப்பதாகவும் கூறுகிறார் அஞ்சலி. "ஒவ்வொரு மாதமும் இரண்டு முதல் மூன்று மருத்துவமனைகள் வரை சென்று பார்ப்போம்" என்கிறார் அஞ்சலி.
ஐஸாவுக்கு இரண்டரை வயதாக இருந்தபோதே ஹெர்னியா (குடலிறக்கம்) மற்றும் ஒரு கண்ணில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியிருந்ததாகவும் அஞ்சலி தெரிவிக்கிறார்.
ஐஸாவின் மருத்துவர் அஞ்சனா கூறுவதன்படி, இந்த நோய் உள்ளவர்களுக்கு சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள், இதய பிரச்னைகள் உள்ளிட்டவை ஏற்படலாம். பலவித க்யூட்டிஸ் லாக்ஸா உள்ளன. "எந்த வகை என்பதை பொறுத்தும் அது உள்ளுறுப்புகளை எப்படி பாதிக்கிறது என்பதை பொறுத்தும் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் ஆயுட்காலம் அமைகிறது. அறிகுறிகளை மேம்படுத்தும் வகையிலேயே சிகிச்சைகள் உள்ளன. முற்றிலும் குணப்படுத்த சிகிச்சை இல்லை" என்று மருத்துவர் அஞ்சனா தெரிவித்தார்.
க்யூட்டிஸ் லாக்ஸா இண்டர்நேஷனல் எனும் சர்வதேச லாபநோக்கற்ற அமைப்பின்படி, உலகம் முழுவதும் சுமார் 400 பேர் அல்லது 20 லட்சம் பேரில் ஒருவர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அமைப்பு இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனநல ஆதரவை வழங்கிவருகிறது. மேலும், அக்குடும்பங்களுக்கு இதுதொடர்பான ஆலோசனைகளையும் வழங்குகிறது.

ஐஸாவின் அண்டை வீட்டில் மருத்துவர் அஞ்சனா வசிக்கிறார். அவரைப் போல தானும் மருத்துவர் ஆக வேண்டும் என லட்சியம் கொண்டுள்ளார் ஐஸா. ஐஸாவுக்கு நடனம், ஓவியம், பாடுவது போன்றவை மிக பிடித்தமான செயல்கள். ஓவியம் வரைய சொன்னால் உடனேயே ஒரு மருத்துவரை வரைகிறார். அது யார் என கேட்டால் அஞ்சனாவை குறிப்பிடுகிறார் ஐஸா.
"எதிர்காலத்தில் தக்குவுக்கு தசைவலி ஏற்படலாம். ஓடுவது, குதிப்பது என எதையும் செய்ய முடியாத நிலை ஏற்படலாம். நடனம் ஆடுவது, பாடுவது, வரைவது என எந்த விஷயங்களையும் செய்வது கடினமாகலாம்." என்கிறார் ஐஸாவின் தாய் அஞ்சலி.
"ஏற்றுக்கொள்வது கடினமாக இருந்தது"
ஐஸாவின் தந்தை அகில் தனியார் நிறுவனமொன்றில் காவலாளியாக பணிபுரிகிறார்.
'ஆரம்பத்தில் இதை ஏற்றுக்கொள்வது கடினமாக இருந்தது. ஏனெனில் இதுபோன்று நாங்கள் கேள்விப்பட்டதும் இல்லை, பார்த்ததும் இல்லை. இது எங்களுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது. குழந்தையின் உடலில் ஒரு 70-80 வயது மூதாட்டியை பார்ப்பது போன்று இருந்தது. அந்த சமயத்தில், என் மகளை மருத்துவரிடம் அழைத்து சென்றபோது இதை குணப்படுத்த எந்த சிகிச்சையும் இல்லை என்று கூறிவிட்டனர். அது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது." என கூறினார்.
மாதாந்திர சம்பளத்தை வைத்து சிகிச்சை செலவுகளை சமாளிப்பது கடினமாக இருப்பதாக ஐஸாவின் தந்தை கூறுகிறார்.

"நாங்கள் எங்கள் வருமானத்தை வைத்துதான் சமாளிக்கிறோம். சிகிச்சைக்காக எங்கள் செலவுகளை குறைத்துக்கொள்கிறோம். பெரும்பாலான சிகிச்சைகள் கேரளாவில் தான் மேற்கொள்ளப்படுகின்றன." என கூறுகிறார் அகில்.
மேலும் அவர், "தக்குவின் கனவு குறித்து நான் பெருமையாக கருதுகிறேன். அவள் மருத்துவராக வேண்டும் என நினைக்கிறாள். எங்கள் பக்கத்து வீட்டை சேர்ந்த சகோதரி ஒருவர் மருத்துவர், அவரை பார்த்துதான் தக்குவும் மருத்துவராக வேண்டும் என நினைத்தாள். அவரிடமிருந்து தான் தக்கு ஊக்கம் பெற்றாள். அவள் மருத்துவராக வேண்டும் என கூறுவதை கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது." என கூறினார்.
ஐஸா தற்போது வீட்டின் அருகில் உள்ள அரசுப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்துவருகிறார். எந்த பாடம் பிடிக்கும் என கேட்டால், "கணக்கு" என கூறிவிட்டு உடனேயே கூட்டல் கணக்குகளை நோட்டில் எழுதி அதற்கான விடைகளையும் எழுதி காண்பிக்கிறார்.
ஐஸாவின் தாய் கூறுகையில், "ஐஸாவுக்கு இப்போது அவளுக்கு என்ன பிரச்னை என்பது தெரியாது. ஆனால் சில சமயங்களில் "ஏன் என்னை எல்லோரும் இப்படி பார்க்கின்றனர்? என்னிடம் ஏன் யாரும் நண்பர்களாவதில்லை?" என கேட்கிறாள். முதன்முறையாக பள்ளி சென்றபோது அவளுக்கு அப்படியொரு அனுபவம் ஏற்பட்டது. எல்லோரும் அவளை "அம்மும்மா" (பாட்டி) என அழைத்தனர். அதன்பின் நாங்கள் பள்ளிக்கு சென்று நடந்ததை பள்ளி முதல்வரிடம் தெரிவித்தோம். அதன்பின், பள்ளி முதல்வர் மற்ற மாணவர்களுக்கு இந்நோய் குறித்து எடுத்துக் கூறினார். அதன்பின் அந்த நிலை மாறிவிட்டது." என கூறினார்.

"திறமையான குழந்தை"
ஐஸா மிகவும் திறமையான குழந்தை என, அவருடைய ஆசிரியர் ஐஸ்வர்யா கூறுகிறார்.
ஆசிரியர் ஐஸ்வர்யா கூறுகையில், "தக்கு எல்லா விஷயங்களிலும் மிகவும் புத்திசாலி. நண்பர்களுக்கு உதவுவதிலும் சரி, மற்ற விஷயங்களிலும் சரி, எல்லாவற்றிலும் திறமையாகச் செயல்படுவாள். ஆரம்பத்தில் பள்ளியில் சில மாணவர்கள் அவளை கேலி செய்தனர், இப்போது எல்லோரும் அவளிடம் நட்புடன் பழகுகின்றனர். மருத்துவராகி இதுபோன்று வரும் மற்ற குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என கூறுவாள். அதைக் கேட்கும்போது அவளுடைய கனவு நனவாக வேண்டும் என மனதார பிரார்த்திக்கிறேன்." என்றார்.

ஐஸாவுக்கு இன்ஸ்டாகிராமில் 25,000க்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர். ஐஸாவுக்கு நடனம் மீதான விருப்பத்தை பார்த்தபோது அண்டை வீட்டை சேர்ந்த அர்ஜுன் என்பவர் சமூக ஊடகங்களில் அதை பதிவிடலாம் என்ற யோசனையை முன்வைத்துள்ளார். குழந்தையின் மகிழ்ச்சிக்காக அதை அவர்களும் ஏற்றுக்கொண்டனர். 2024ம் ஆண்டு இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கியுள்ளனர், தற்போது வரை அந்த கணக்கை அர்ஜுன் தான் நிர்வகிக்கிறார்.
அர்ஜுன் கூறுகையில், "ஆரம்பத்தில் அதிகமான எதிர்மறையான கருத்துகளை பதிவிட்டனர். அதை ஏற்றுக்கொள்வது மிகுந்த சிரமமாக இருந்தது. எதிர்மறையான கருத்துகளை மற்றவர்கள் பார்ப்பதற்கு முன்பு நீக்கிவிடுவது என் வழக்கம்.
தக்கு பற்றி ஆரம்பத்தில் மற்றவர்கள் பரிதாபமாக நினைத்தார்கள். பின்னர் அவளை ஏற்றுக்கொண்டு நேர்மறையாக பார்க்கின்றனர். தக்கு ஒருமுறை என்னிடம், "நான் பிரபலமாகிவிட்டேன், எனக்கு ஒரு பாதுகாவலர் வேலைக்கு வேண்டும்" என என்னிடம் கேட்டாள்." என்றார்.

ஆனால், ஏற்கெனவே அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தையை இவ்வளவு இளம்வயதில் சமூக ஊடகங்களுக்கு பழக்கப்படுத்துவது அவரை மேலும் மன அழுத்தத்துக்கு ஆழ்த்தும் என மனநல மருத்துவர் கிருபாகர் எச்சரிக்கிறார். இதுகுறித்து கேட்டபோது, ரீல்ஸ்கள் ஐஸாவை நேர்மறையான வழியில் வெளியுலகுக்குக் காட்டும் என்றும் எதிர்மறையான கருத்துகளை குறைக்கும் என்றும் ஐஸாவின் பெற்றோர் நம்பிக்கை தெரிவித்தனர்.
எல்லாவற்றையும் கடந்து ஐஸா, தங்கள் வாழ்வில் மகிழ்ச்சியை வரவழைக்கும் குழந்தை என்கின்றனர் அவரின் பெற்றோர்.
"அவள் மருத்துவராக வேண்டும் என விரும்புகிறாள், எங்களால் முடிந்தளவில் அவளுக்கு நல்ல உயர்கல்வியை வழங்குவோம்." என கூறுகிறார் அஞ்சலி.
தந்தை அகில், "என் மகள் தான் என்னுடைய உயிர்." என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































