20 லிட்டர் பால், 6 கோழிகள் - பிரிட்டிஷ் இந்தியாவின் புகழ் பெற்ற காமா பயில்வானின் உணவுப்பழக்கம் என்ன?

பட மூலாதாரம், Vintage poster
- எழுதியவர், வகார் முஸ்தாபா
- பதவி, பத்திரிகையாளர் மற்றும் ஆராய்ச்சியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 10 நிமிடங்கள்
கடந்த 1928 ஜனவரி 28 அன்று பஞ்சாப் சமஸ்தானத்தின் பட்டியாலாவில் நடைபெற்ற அந்த மல்யுத்தப் போட்டியைக் காண பல இந்திய சமஸ்தானங்களின் மன்னர்கள் மற்றும் பிரிட்டிஷ் அதிகாரிகள் உள்பட ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.
அனைவரையும் கவர்ந்த இந்தப் போட்டியில் 'ஜபிஷ்கோ' என்று அழைக்கப்பட்ட போலந்து மல்யுத்த வீரர் ஸ்டானிஸ்லாஸ் சைகானிவோவிச் மற்றும் 'காமா' என்று பிரபலமாக அறியப்பட்ட பிரிட்டிஷ் இந்தியாவின் மல்யுத்த வீரர் குலாம் ஹுசைன் ஆகியோர் களம் கண்டனர்.
காமாவின் அசல் பெயர் குலாம் முகமது எனச் சிலர் கருதுகின்றனர், ஆனால் சையது அகா அஷார் லக்னவியின் 'காமா கமக்' புத்தகம், ஃபஹீமுத்தீன் ஃபஹ்மி எழுதிய காமாவின் சுயசரிதையான 'ருஸ்தம்-ஏ-ஜமா காமா' மற்றும் அக்தர் உசேன் ஷேக்கின் 'தாஸ்தான்-ஏ-தாரிக்-ஏ-பஹல்வானி' ஆகிய புத்தகங்களின் மூலம் காமாவின் அசல் பெயர் குலாம் ஹுசைன் என்பது தெரிய வருகிறது.
இந்தப் புத்தகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்துத் தகவல்களும் சமஸ்தானத்தின் அரசு ஆவணங்கள் மற்றும் வருவாய்த் துறைப் பதிவுகளில் இருந்து பெறப்பட்டவை. மேலும், காமாவிடம் இருந்தும், அவரது நெருங்கிய உறவினர்கள் மற்றும் அவரது ரசிகர்களிடம் இருந்தும் சேகரிக்கப்பட்டு, சரிபார்க்கப்பட்ட தகவல்களும் இந்தப் புத்தகங்களில் இடம்பெற்றுள்ளன.
குலாம் ஹுசைன் என்கிற காமா, 1878 மே 22 அன்று அஜீஸ் (முழு பெயர் அப்துல் அஜீஸ் அல்லது அஜீஸ் பக்ஷ்) என்பவருக்கு மகனாகத் தற்போது மத்திய பிரதேசத்தின் ஒரு பகுதியாக இருக்கும் ததியா சமஸ்தானத்தில் பிறந்தார். காஷ்மீரில் இருந்து அமிர்தசரஸுக்கு சென்று குடியேறிய அஜீஸின் தந்தை அஜீஸ் பக்ஷ், ததியா சமஸ்தானத்தின் மல்யுத்த வீரராக இருந்தார்.
காமாவுக்கு ஆறு வயது ஆவதற்கு சில மாதங்கள் முன்னதாகவே அவரது தந்தை இறந்துவிட்டார். அதற்குள்ளாகவே அவர் தனது மகனுக்கு மல்யுத்தத்தை அறிமுகம் செய்து வைத்தார்.
காமாவின் தந்தை இறந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு காமாவுக்கு இமாம் பக்ஷ் என்ற தம்பி பிறந்தார். தனது தாய்வழி தாத்தா நூன்-இன் (அமீர் பக்ஷ்) அரவணைப்பில் வளர்ந்ததால், 'காமா நூன் வாலா' என்ற பெயராலும் காமா அறியப்பட்டார்.
தனது தாத்தா நூன் படுகொலை செய்யப்பட்ட பிறகு, தாய்மாமா ஈதா பயில்வானின் பொறுப்பில் காமா வளர்ந்தார்.
பிரசாந்த் கிடம்பி தனது 'கிரிக்கெட் கன்ட்ரி: ஆன் இந்தியன் ஒடிஸி இன் தி ஏஜ் ஆஃப் எம்பயர்' என்ற புத்தகத்தில், "காமாவை அவருடைய தந்தை விரும்பியபடியே ஒரு சாம்பியன் மல்யுத்த வீரராக உருவாக்குவேன் என்று ஈதா சபதம் எடுத்ததாகக் கூறப்படுகிறது" என்று எழுதியுள்ளார்.
காமா, தனது தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக மிகவும் கடினமான உடற்பயிற்சிகளைச் செய்வதை வழக்கமாக்கிக் கொண்டார்.
பத்து வயதில் 400 மல்யுத்த வீரர்களில் அதிக தண்டால்களை எடுத்த காமா
ஜோசப் ஆல்டர் தனது 'காந்திஸ் பாடி' (Gandhi's Body) புத்தகத்தின் 'காமா தி கிரேட்' என்ற அத்தியாயத்தில், காமா தனது பத்து வயதிலேயே 400 மல்யுத்த வீரர்களுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் மிக அதிக எண்ணிக்கையிலான தண்டால்களை எடுத்தார் என்று எழுதியுள்ளார். ரோனோஜாய் சென் எழுதும்போது, இந்தப் போட்டியில் கலந்து கொண்ட நானூற்றுக்கும் மேற்பட்ட மல்யுத்த வீரர்களில், இறுதியில் இருந்த சிறந்த பதினைந்து வீரர்களில் காமாவும் ஒருவராக இருந்தார் என்று குறிப்பிடுகிறார். காமாவின் திறமையைப் பார்த்த ஜோத்பூர் மகாராஜா ஜஸ்வந்த் சிங் அவரை வெற்றியாளராக அறிவித்ததுடன் அவரைத் தனது சமஸ்தானத்தில் இணைத்துக்கொண்டு ஆதரவளித்தார்.
நானூறு வீரர்களில் ஒருவராக தண்டால்கள் எடுத்த நிகழ்வைப் பற்றித் தனது முதிய காலத்தில் பேசும்போது காமா இவ்வாறு குறிப்பிட்டார்: "நான் எத்தனை தண்டால்கள் எடுத்தேன் என்று எனக்கு சரியாக நினைவில்லை, ஆனால் என் உடலின் அனைத்து தசைகளும் பிடித்துக் கொண்டன, அதன் பிறகு ஒரு வாரம் வரை என்னால் கட்டிலை விட்டு எழவே முடியவில்லை."
ஜோத்பூரில் வசித்து வந்த காமாவின் மற்றொரு தாய்மாமாவான பூட்டா பயில்வான், ராஜா ஜஸ்வந்த் சிங்கின் ஆலோசனையின் பேரில் காமா மற்றும் இமாம் பக்ஷ் இருவரையும் உஸ்தாத் மாதோ சிங்கின் சீடர்களாக சேர்த்துவிட்டார் என்று குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர்களுக்கு நான்கு ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்பட்டது. ஜோத்பூர் ராஜாவின் மறைவுக்குப் பிறகு, காமா மீண்டும் ததியா சமஸ்தானத்துக்கே திரும்பினார்.

பட மூலாதாரம், The Daily Mirror
தினசரி பதினைந்து மணிநேர உடற்பயிற்சி
ததியாவுக்கு வெளியே அமைந்திருந்த அரசுக்கு சொந்தமான பீலி கோட்டி என்ற மிகப்பெரிய பண்ணைத் தோட்டத்தில் காமா தனது மல்யுத்த பயிற்சிக் களத்தை அமைத்திருந்தார் என்று லக்னவி குறிப்பிடுகிறார்.
"தனது கால்கள் மற்றும் இடுப்பு தசைகளை வலுப்படுத்துவதற்காக காமா தினசரி இரண்டாயிரம் தண்டால்கள் எடுப்பார், ஐயாயிரம் பாஸ்கிகள் (ஸ்குவாட்ஸ்) செய்வார் மற்றும் இரண்டாயிரம் முறை கார்லாக் கட்டையைச் சுழற்றுவார்."
"தோராயமாக 180-200 கிலோ எடையுள்ள கல் பலகை ஒன்றைத் தனது கழுத்தில் மாட்டிக்கொண்டு சுமார் ஒரு மைல் சுற்றளவு கொண்ட அந்த பண்ணைத் தோட்டம் முழுவதையும் ஒருமுறை சுற்றி ஓடி வருவார். காமா தனது உடலுக்கு எண்ணெய் மசாஜ் செய்துகொள்வது மிகவும் குறைவு."
இந்திய மல்யுத்த வீரர் பர்கத் அலி தனது 'பஹல்வானோ கி துனியா' என்ற புத்தகத்தில், காமா நாள்தோறும் அதிகாலை இரண்டு மணி முதல் பத்து மணி வரை உடலின் கீழ் பகுதிக்கும், மதியம் இரண்டு மணி முதல் மாலை ஏழு மணி வரை உடலின் மேல் பகுதிக்கும் தேவையான உடற்பயிற்சிகளைச் செய்வார் என்று குறிப்பிட்டுள்ளார்.
"அத்துடன், தினசரி மாலைவேளையில் இரண்டு மணிநேரம் நடைபயிற்சி செய்வார். அவர் ஒட்டுமொத்தமாக ஒரு நாளின் 24 மணிநேரத்தில் 15 மணிநேரம் உடற்பயிற்சி செய்து வந்தார் என்று சொல்லலாம்."
உணவுமுறை: இருபது லிட்டர் பால், ஆறு கோழிகள் மற்றும்...
பிரசாந்த் கிடம்பியின் கூற்றுப்படி, இவ்வளவு கடுமையான உடற்பயிற்சிகளைச் செய்யும் காமா தனது உடலை வலுப்படுத்த இறைச்சி மற்றும் எலும்புகளைக் கொண்டு தயாரிக்கப்படும் 'யக்னி' என்ற ஒரு வகையான சூப்பை அதிக அளவில் அருந்தி வந்தார். இது தவிர, தினமும் 20 லிட்டர் பால், அரை லிட்டர் நெய், முக்கால் கிலோ வெண்ணெய் மற்றும் நான்கு கிலோ பழங்களை அவர் உட்கொண்டார்.
அக்தர் உசேன் ஷேக்கின் கூற்றுப்படி, காமா தனது சிறு வயதில் தினமும் 500 தண்டால்களும் அதே எண்ணிக்கையிலான பாஸ்கிகளும் செய்து வந்தார். பதினைந்து வயதில் இருந்து மூவாயிரம் பாஸ்கிகளும் அதே எண்ணிக்கையிலான தண்டால்களும் செய்யத் தொடங்கினார். இருபது வயதில் இந்த எண்ணிக்கை அதிகரித்து, ஐயாயிரம் தண்டால்கள் மற்றும் மூவாயிரம் முதல் நாலாயிரம் பாஸ்கிகள் வரை உயர்ந்தது. 25 முதல் 50 வயது வரை, அவர் நாள்தோறும் ஆறாயிரம் பாஸ்கிகளும் ஐயாயிரம் தண்டால்களும் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
"அவரது தினசரி உணவில் ஆறு கோழிகள், சுமார் 4.5 கிலோ ஆட்டிறைச்சியில் செய்யப்பட்ட யக்னி சூப்புடன் சுமார் 250 கிராம் நெய், 20 லிட்டர் பால், அரை லிட்டர் நெய், முக்கால் கிலோ வெண்ணெய், கால் கிலோ பாதாம் மற்றும் பல வகையான இனிப்பு பதார்த்தங்கள் இடம் பெற்றிருந்தன."
போபாலுக்கு அருகிலுள்ள ரீவா சமஸ்தானத்தின் அரசர் பிரதாப் சிங்கும் காமாவுக்கு ஆதரவளித்தார். அங்கு மீரான் சிங் பக்கி வாலா என்பவர் காமாவின் மல்யுத்தத் திறமையை மேலும் மெருகேற்றினார்.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில், ததியா சமஸ்தானத்தின் அரசவையில் மல்யுத்த வீரராக காமா நியமிக்கப்பட்டார் என்று கிடம்பி எழுதியுள்ளார். அவர் பல சமஸ்தானங்களின் புகழ்பெற்ற மல்யுத்த வீரர்களைத் தொடர்ந்து தோற்கடித்து பெரும் புகழைப் பெற்றார்.
"அவரது மிக முக்கியமான வெற்றி குலாம் மொஹியுதீனுக்கு எதிரானது ஆகும், அவரும் அந்தக் காலகட்டத்தின் மிகவும் பிரபலமான மற்றும் திறமையான மல்யுத்த வீரராகத் திகழ்ந்தார்."
"அந்தக் காலகட்டத்தில், ரஹீம் சுல்தானி வாலா மட்டுமே காமாவை உறுதியுடன் எதிர்த்து நின்ற ஒரே மல்யுத்த வீரர் ஆவார். 1907 மற்றும் 1909ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், இந்த இரு வீரர்களுக்கும் இடையே மூன்று போட்டிகள் நடைபெற்றன, ஆனால் யாராலும் தெளிவான வெற்றியைப் பெற முடியாமல் போட்டிகள் டிராவில் முடிந்தன. இருப்பினும், அந்த தசாப்தத்தின் இறுதிக்குள், பெரும்பாலான விமர்சகர்கள் காமாவை இந்தியாவின் மிகச் சிறந்த மல்யுத்த வீரராக ஏற்றுக்கொள்ளத் தொடங்கினர்."
லக்னவியின் கூற்றுப்படி, காமா தனது மல்யுத்த வாழ்க்கையின் முக்கிய 16 போட்டிகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, தனது 12வது வயதிலேயே முதல் மல்யுத்தப் போட்டியில் வெற்றி பெற்றதாகக் கூறியுள்ளார்.
குலாம் மொஹியுதீனுக்கு எதிரான இந்த மல்யுத்தப் போட்டியை மல்யுத்த ஆசான்கள் 'அரை நிமிட' போட்டி என்று அழைக்கிறார்கள் என ஷேக் எழுதியுள்ளார்.
இந்த வெற்றிக்காக, ததியா சமஸ்தானத்தின் ஆட்சியாளர் காமாவுக்கு இருபதாயிரம் ரூபாயும், 22 சேர் ( 6.16 கிலோகிராம்) எடையுள்ள வெள்ளி கதாயுதத்தையும் பரிசாக வழங்கினார்.

பட மூலாதாரம், Getty Images
'ரஹீம் சுல்தானி வாலா மட்டுமே ஈடுகொடுத்துப் போராடினார்'
காமா, ரஹீம் சுல்தானி வாலாவுடனான தனது முதல் போட்டி சமனில் முடிந்ததை 'ஒரு வகையான வெற்றி' என்றே குறிப்பிட்டிருந்தார். ஏனெனில், அவரது கூற்றுப்படி, "அந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் ரஹீம் சுல்தானி வாலாவுக்கு இணையான வேறு எந்த மல்யுத்த வீரருமே இருக்கவில்லை."
அதன் பிறகு இந்தோர் மற்றும் லாகூரிலும் அவருடனான போட்டி சமமாக இருந்தது. ஆனால், அலகாபாத்தில் நடந்த போட்டியைப் பற்றிக் குறிப்பிடுகையில், "இறைவன் எனக்கு வெற்றியைத் தந்தான், இந்தியாவின் சாம்பியனுக்கு வழங்கப்படும் 'ருஸ்தம்-இ-ஹிந்த்' சாம்பியன் கதாயுதமும் எனக்குக் கிடைத்தது" என்று காமா தெரிவித்தார்.
ஷேக் இவ்வாறு எழுதுகிறார்: "ரஹீம், உலக சாம்பியன் காமாவின் பிடிக்குள் சிக்கிக் கொண்டார். அந்த உத்திரீதியிலான தாக்குதல் வெற்றிகரமாகவும், அடி மிகவும் ஆழமாகவும் இருந்தது. எதிராளி தனது இணையற்ற திறமையையும் மீறி மல்யுத்தக் களத்தின் மண்தரையில் மல்லாக்க விழுந்தார். இருவரில் யாருக்கு வெற்றி என இழுபறியாக இருந்த பல ஆண்டுக்கால கேள்விக்கு நல்ல பதில் கிடைத்தது. மல்யுத்தப் போட்டியின் 45வது நிமிடத்தில் ரஹீம் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார்."
காமா கூறுகையில், "எனக்கு யாராவது ஈடுகொடுத்தார்கள் என்றால், அது ரஹீம் பக்ஷ் மட்டும்தான். அவர் மூலமாகவே நான் புகழ்பெற்றேன்" என்றார்.
"ஹுசைன் பக்ஷ் முல்தானியை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை தோற்கடித்துள்ளேன். வேல்ஸ் இளவரசர் லாகூர் வந்திருந்தபோது, ஹாதூ கான் முல்தானியுடன் மல்யுத்தப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, ஆனால் அவர் போட்டிக்கு வரவில்லை. இளவரசர் பகதூர் 'ருஸ்தம்-இ-ஹிந்த்' எனப்படும் இந்திய மல்யுத்த சாம்பியன் பட்டத்தை எனக்கு வழங்கினார்" என்றார் காமா.
'வெளிநாட்டுப் போட்டிகளிலும் ஒருபோதும் தோற்றதில்லை'
காமா உலக அளவிலும் தனது பெயரை நிலைநாட்டி, தோல்வியே காணாதவராக விளங்கினார். 1910ஆம் ஆண்டு, 'ஜான் புல் வேர்ல்ட் சாம்பியன்ஷிப்' போட்டியில் பங்கேற்பதற்காக காமா லண்டனுக்கு அனுப்பப்பட்டார்.
காமா, அவரது சகோதரர் மற்றும் வேறு இரண்டு மல்யுத்த வீரர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சரத் குமார் மித்ரா என்ற வங்காள செல்வந்தர் செய்திருந்தார். துரதிர்ஷ்டவசமாக, காமாவின் உயரம் மிகக் குறைவாக இருந்ததால், போட்டியின் அதிகாரபூர்வ வேட்பாளராக அவர் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று ஆல்டர் எழுதியுள்ளார்.
"இருப்பினும், உள்ளூர் நாடக அரங்கம் ஒன்று அவருக்கு வாராந்திர ஊதியமாக 250 பவுண்ட் ஸ்டெர்லிங் வழங்குவதாகக் கூறி, காட்சிப் போட்டிகளில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தது. அந்த மேடையில் இருந்தபடி, லண்டனில் இருந்த உலகத்தரம் வாய்ந்த மல்யுத்த வீரர்கள் அனைவருக்கும் காமா சவால் விடுத்தார். தனக்கு முன்னால் எவர் ஐந்து நிமிடங்கள் வரை தாக்குப்பிடித்து நின்றாலும், அவருக்கு ஐந்து பவுண்டுகள் தருவதாக அவர் அறிவித்தார்."
"போட்டிக் களத்தில் இறங்கிய அனைத்து மல்யுத்த வீரர்களையும் காமா மிகக் குறைந்த நேரத்தில் வீழ்த்தி தோற்கடித்தார். இதன் மூலம் அவருக்கு அதிகாரபூர்வமான முதன்மைத் தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது, அங்கு அவர் உலக சாம்பியனான ஜபிஷ்கோவை எதிர்கொண்டார்."
கிடாம்பியின் கூற்றுப்படி, இரு மல்யுத்த வீரர்களும் நேருக்கு நேர் சந்தித்தவுடன், போலந்து நாட்டு வீரர் தரையில் படுத்துக்கொண்டு, முறையாக மல்யுத்தம் செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் தவிர்த்தார்.
காமா கடுமையாக முயற்சி செய்து பார்த்தார், மைதானத்தில் இருந்த சுமார் எட்டாயிரம் பார்வையாளர்களும் முழக்கங்களை எழுப்பினார்கள், ஆனால் போலந்து மல்யுத்த வீரர் தரையில் இருந்து எழமாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தார். இறுதியாக, இரண்டரை மணிநேரத்துக்கும் மேலாக எடுத்த முயற்சிகள் தோல்வியைத் தழுவிய நிலையில் 'முடிவேதும் எட்டப்படாத' அந்தப் போட்டி முடித்துக்கொள்வதாக அறிவிக்கப்பட்டது. இதனால் கோபமடைந்த பார்வையாளர்கள் குழு ஒன்று எதிர்ப்பு தெரிவிக்க மைதானத்துக்குள் நுழைந்தபோது, ஒரு முடிவை எட்டும் முயற்சியாக அடுத்த வாரம் மறுபோட்டி நடத்த முடிவு செய்யப்பட்டது."
"மறுபோட்டியில் கலந்துகொள்ள காமா குறிப்பிட்ட நேரத்துக்கு வந்து சேர்ந்தார், ஆனால் போலந்து மல்யுத்த வீரர் ஜபிஷ்கோ அங்கு வரவில்லை. எனவே, காமா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு, அவருக்கு 250 பவுண்டு தொகை பரிசாக வழங்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் ஹோரஷியோ பாட்டம்லி அவருக்கு 'ஜான் புல் கோல்டன் பெல்ட்' வழங்கினார், இது உலக சாம்பியன் என்பதற்கான சான்றிதழாகக் கருதப்பட்டது."
காமா மற்றும் அவரது சகாக்கள் 1912 முதல் பட்டியாலா மன்னர் பூபிந்தர் சிங்கின் அரசவையில் பணியில் சேர்ந்தனர். காமாவின் மாதச் சம்பளம் 500 ரூபாயாகவும், மற்ற மல்யுத்த வீரர்களின் சம்பளம் முப்பது முதல் நூறு ரூபாய் வரையிலும் நிர்ணயிக்கப்பட்டது.
'பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஜபிஷ்கோவின் சவால்'
பட்டியாலாவில் காமாவை எதிர்கொள்ளாமல் மல்லாந்து படுத்துக் கொண்ட ஜபிஷ்கோ, அதற்கு 18 ஆண்டுகளுக்குப் பிறகு, போட்டி ஏற்பாடு செய்யுமாறு சவால் விடுத்தார். அதையடுத்து மீண்டும் மல்யுத்தப் போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
அப்போது, இந்தப் போட்டிக்காகக் கட்டப்பட்ட மைதானத்தில் 'ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள்' கோஷமிட்டுக் கொண்டிருந்ததாக 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' எழுதியது.
ஜோசப் ஆல்டர் தனது 'காந்திஸ் பாடி' புத்தகத்தின் 'காமா தி கிரேட்' அத்தியாயத்தில், போட்டி மாலை நான்கு மணிக்குத் தொடங்க வேண்டியிருந்தது, ஆனால் ஜபிஷ்கோ தாமதமாக வந்ததால் நான்கு பதினைந்துக்குத் தொடங்கியது என்று எழுதியுள்ளார்.
"போட்டி தொடங்கிய உடனே, முன்னூறு பவுண்ட் எடையுள்ள போலந்து நாட்டு மல்யுத்த வீரர் ஜபிஷ்கோவின் ஒரு காலை காமா பிடித்தார், மற்றொரு காலை தரையிலிருந்து தூக்கினார். அடுத்த சில நொடிகளில் ஜபிஷ்கோ மல்லாக்க விழுந்து கிடந்தார்."
தனது 'நேஷன் அட் ப்ளே: எ ஹிஸ்டரி ஆஃப் ஸ்போர்ட் இன் இந்தியா' என்ற புத்தகத்தில் ரோனோஜாய் சென், "காமா சிங்கம் போலப் பாய்ந்து, முப்பது விநாடிகளில் ஜபிஷ்கோவை தரையில் சாய்த்துவிட்டார்" என்று எழுதினார்.
"மைதானத்தில் இருந்து பலத்த மற்றும் தொடர்ச்சியான முழக்கங்களின் சத்தம் விண்ணைத் தொட்டது. அரை நிமிட நேரம் வரை ஜபிஷ்கோவின் மேல் அமர்ந்திருந்த காமாவை, நடுவர் வெற்றியாளர் என்றும் உலக சாம்பியன் என்றும் அறிவித்தார்."
ஆல்டரின் கூற்றுப்படி, "பட்டியாலா மகாராஜா காமாவை கட்டிப்பிடித்து, தனது கழுத்தில் இருந்த விலையுயர்ந்த முத்துகள் பதித்த ஆரத்தைக் கழற்றி அவருக்கு அணிவித்தார்."
அதன் பிறகு பிரமாண்டமான வெற்றி ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மகாராஜாவின் யானை மீது அமர்ந்திருந்த காமா ஊர்வலத்துக்குத் தலைமை தாங்கினார். அவருக்கு ஒரு வெள்ளி கதாயுதமும், ஆண்டுக்கு ஆறாயிரம் ரூபாய் உதவித்தொகையும், ஒரு கிராமமும் பரிசாக வழங்கப்பட்டன.
இந்த வெற்றிக்காக காமா நாளிதழ்களில் புகழப்பட்டார். "காமா, நீங்கள் உண்மையிலேயே ஒரு சிங்கம்" என்ற ஸ்விஷ்கோவின் வார்த்தைகள் நாளிதழ்களில் முக்கிய இடத்தைப் பிடித்தன.
காமாவின் உலக சாம்பியன் பட்டத்தை உறுதி செய்த இந்தப் போட்டி, எதிர்பார்த்ததைவிட மிகக் குறுகிய நேரத்தில் முடிந்துபோனது.
மல்யுத்த வரலாற்றாசிரியர் அக்தர் ஹுசைன் ஷேக்கின் கூற்றுப்படி, கண் இமைக்கும் நேரத்தில் போட்டி முடிந்துவிட்டது என்பதை காமா இவ்வாறு கூறுவார்: "யாரெல்லாம் கடிகாரத்தைப் பார்த்தார்களோ, யாரெல்லாம் சிகரெட்டை பற்ற வைத்தார்களோ அவர்களால் மல்யுத்தப் போட்டியை பார்க்க முடியவில்லை."
ஒருவேளை இந்தப் போட்டியானது 1910ஆம் ஆண்டு லண்டனில் நடந்த போட்டியைப் போல் இரண்டு மணிநேரத்துக்கும் மேலாக நீடித்தால் வெளிச்சம் தேவைப்படும் என்று கருதிய அமைப்பாளர்கள் மின் விளக்குகளையும் பொருத்தியிருந்தனர் என்று ரோனோஜாய் சென் எழுதியுள்ளார்.

பட மூலாதாரம், Google
பீட்டர்சனின் வீழ்ச்சி
பட்டியாலா போட்டிக்குப் பிறகு, தன்னை உலக சாம்பியன்களுக்கு எல்லாம் சாம்பியன் என்று அழைத்துக்கொண்ட ஜெஸ் பீட்டர்சன், 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளிதழின் ஆசிரியருக்கு ஒரு கடிதம் எழுதி அதன் மூலம் காமாவுக்கு சவால் விடுத்தார்.
தான் ஜபிஷ்கோவை மூன்று முறை தோற்கடித்துள்ளதாக பாரீஸில் வசித்து வந்த பீட்டர்சன் கூறினார். அவர், காமாவுடன் தான் மோதத் தயாராக இருப்பதாக மகாராஜாவிடம் கூறி, போட்டிக்கு ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுத்தார்.
அதை ஏற்றுக்கொண்ட மகாராஜா, 1929ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பட்டியாலாவில் ஏற்பாடு செய்திருந்த போட்டியைப் பார்ப்பதற்காக பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் மற்றும் பட்டியாலா மற்றும் அதன் சுற்றுவட்டார சமஸ்தானங்களின் அரச குடும்பத்தினர் கலந்துகொண்டனர். இந்தப் போட்டியிலும் காமா மிக எளிதாக வெற்றியைத் தன்வசமாக்கினார்.
இதுபோலப் பல சவால்கள் காமாவுக்கு உள்நாட்டில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வந்துகொண்டே இருந்தன, ஆனால் காமா எப்போதும் தோல்வியறியாத வெற்றியாளராகவே திகழ்ந்தார்.
கடந்த 1912 ஏப்ரல் முதல் நாள், லாகூரில் உள்ள மின்டோ பூங்காவில் நடைபெற்ற போட்டியில், காமா மற்றும் புத்து பிராமண் என்ற மல்யுத்த வீரருக்கும் இடையே போட்டி நடந்தது.
இதுகுறித்து அக்தர் ஷேக் இவ்வாறு எழுதுகிறார்: "இருவரும் கைகளைக் கோர்த்த அடுத்த கணமே, காமா ஒற்றைக்கால் பிடி உத்தியைப் பயன்படுத்தி தனது எதிராளியின் காலைப் பற்றிக்கொண்டு, அவரது சமநிலையைக் குலைத்து, மிகுந்த லாகவத்துடன் அவரைத் தரையில் வீழ்த்தி பிடித்துக்கொண்டார்."
காமா, 55 முதல் 65 வயது வரையிலான காலகட்டத்தில் தனது உடற்பயிற்சிகளில் சிலவற்றை சற்றே குறைத்துக் கொண்டார் என்று பர்கத் அலி கூறுகிறார்.
லக்னவியின் கூற்றுப்படி, 1940இல் 'மேன்செஸ்டர் கார்டியன்' இதழில் எழுதிய ஜேக் வுட், தற்போதைய காலகட்டத்தின் மிகச் சிறந்த மல்யுத்த வீரர் காமா என்று எழுதினார். அப்போது காமாவுக்கு அறுபது வயது.
"அவர் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்று, ஒன்றில்கூட தோல்வியடையாதவர் என்ற உலக சாதனையைப் படைத்துள்ளார்."
காமா சில காலம் லாகூரிலும், சில காலம் பட்டியாலாவிலும் வசித்து வந்தார். 1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்து பாகிஸ்தான் உருவானபோது, காமா பட்டியாலாவில் இருந்து லாகூருக்கு சென்றார்.
காமாவுடன் அவரது சகோதரர் இமாம் பக்ஷ் மற்றும் மருமகன்களான போலு சகோதரர்களும் லாகூருக்கு சென்றனர். ஒரு கட்டத்தில், காமாவின் சகோதரர் இமாம் பக்ஷ், உலக சாம்பியன் பட்டத்தின் பாதுகாவலராக மாறினார்.
காமா லாகூருக்கு வந்ததும், பட்டியாலாவில் இருந்த அவரது வீடு மல்யுத்த வீரர் கேசர் சிங்குக்கு வழங்கப்பட்டது, அவர் பிற்காலத்தில் இந்திய சாம்பியன் ஆனார்.

பட மூலாதாரம், Newspaper archives
'காமாவின் இறுதிக் காலம்'
காமாவுக்கும், ஃபஹீமுதீன் ஃபஹ்மியின் தாய்வழித் தாத்தாவான கரீம் பக்ஷுக்கும் இடையே ஆழ்ந்த நட்பு இருந்தது. நீண்ட காலத்துக்குப் பிறகு நண்பர்கள் கராச்சியில் சந்தித்தனர். அப்போது கராச்சியில் காமா போக்குவரத்து சேவை தொழிலைத் தொடங்கியிருந்தார். அந்தத் தொழிலை நிர்வகிக்க, அவர் ஃபஹ்மியை மேலாளராக நியமித்தார்.
ஃபஹ்மி இவ்வாறு எழுதுகிறார்: "சிலர் அவரது பெயரை குலாம் முகமது என்று கூறுகிறார்கள், சிலர் குலாம் பக்ஷ் என்று நம்புகிறார்கள், ஆனால் அவரது உண்மையான பெயர் குலாம் ஹுசைன்."
"போக்குவரத்து சேவைத் தொழிலுக்காக 'அகதிகள் மறுவாழ்வு நிதி நிறுவனத்திடம் இருந்து' அவர் பத்தாயிரம் ரூபாய் கடன் வாங்கியபோது, அனைத்து ஆவணங்களிலும் 'குலாம் ஹுசைன் என்கிற காமா' என்ற பெயரே பயன்படுத்தப்பட்டது."
கடந்த 1954ஆம் ஆண்டில், காமாவுக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டது. கராச்சியில் இருந்த தொழிலை மூடிவிட்டு அவர் லாகூருக்கு திரும்பினார். அப்போது தன்னுடன் ஃபஹ்மியையும் அழைத்துச் சென்றார்.
அவருக்கு முதல் மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு, கடைசி முறையாக உலகிலுள்ள அனைத்து மல்யுத்த வீரர்களுக்கும் மல்யுத்தப் போட்டிக்கான சவால் லாகூரில் இருந்து விடுக்கப்பட்டது. ஃபஹ்மி, லாகூரில் காமா மல்யுத்த வீரர் உடனே தங்கியிருந்து அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதி முடித்தார்.
இலக்கியம், கவிதைகளின் மீது தீராத ஆர்வம் கொண்டவர்
ஃபஹ்மியின் கூற்றுப்படி, காமா பெரும்பாலும் மிகவும் குறும்போடும் பெருமிதத்தோடும் தன்னை ஆரம்பப் பள்ளியிலேயே தோல்வியடைந்தவன் என்று கூறிக்கொள்வாராம். ஆனால், அவர் உருது பேசினால் அது அத்தனை நயமாக இருக்கும், அவர் பேசும் பஞ்சாபி மொழி வட்டார வழக்கிலும் இருக்கும். லண்டனில் நான்கு மாதங்கள் தங்கியிருந்ததால், தனக்கு ஆங்கில மொழியும் ஓரளவு புரியத் தொடங்கியிருந்ததாக காமா குறிப்பிட்டிருந்தார்.
"நான் உலக சாம்பியன் காமா உடன் இருந்தவரை, அவர் அதிகாலை நான்கு மணிக்கே எழுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வானிலை எப்படி இருந்தாலும், மல்யுத்த களத்துக்குச் சென்றுவிடுவார். பயிற்சியை முழுமையாக முடித்த பிறகு, குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு, அதன் பின்னரே மற்ற வேலைகளில் கவனம் செலுத்துவார்" என்று ஃபஹ்மி எழுதுகிறார்.
லக்னவியின் கூற்றுப்படி, "பிற்காலத்தில் ராவி நதிக்கரையில் வைக்கோல் வேயப்பட்ட ஒரு பெரிய கூரை வீட்டைக் கட்டியிருந்தார். குளிர்காலத்தில், ஒரு மரத்தின் நிழலில் படுத்து ஓய்வெடுப்பார்."
உடல்நலம் குன்றியிருந்த காமாவை லாகூரில் சந்தித்த ஏ.பி. ராஜ்புத், 'இலஸ்ட்ரேட்டட் வீக்லி ஆஃப் பாம்பே' என்ற ஆங்கில வார இதழின் 1960 பிப்ரவரி 7ஆம் தேதி பதிப்பில் எழுதியதாவது: "தனது மல்யுத்தத் திறமையால் ஒட்டுமொத்த உலகையே வியப்பில் ஆழ்த்திய ஒரு சுடர் விளக்கு, இப்போது தனது இறுதி மூச்சை இழுத்துக்கொண்டிருக்கிறது."
காமாவின் உடல்நலக் குறைவு குறித்த செய்தியைக் கேள்விப்பட்ட ஜபிஷ்கோ, அவரது நலம் விசாரித்து ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர், "நான் ஆயிரக்கணக்கான மல்யுத்த வீரர்களுடன் போட்டியிட்டுள்ளேன், ஆனால் காமா என்னை நிலைகுலையச் செய்தது போல் எளிதாக வேறு யாராலும் அப்படிச் செய்ய முடியவில்லை" என்று குறிப்பிட்டிருந்தார்.
ஜபிஷ்கோவின் கடிதத்துக்கு காமா பதில் கடிதம் எழுதி, தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

பட மூலாதாரம், Getty Images
காமாவுக்கும் குல்சூம் நவாஸுக்கும் என்ன உறவு?
காமாவின் முதல் மனைவி காலமான பிறகு, அவரது இரண்டாவது மனைவி வசீர் பேகம் மூலம் ஐந்து மகன்கள் பிறந்தபோதிலும் அவர்களில் யாரும் உயிரோடு இருக்கவில்லை. அவர்களுக்கு நான்கு மகள்கள் இருந்தனர்.
காமாவின் மகள்களில் ஒருவரான ரஜியா பேகம் - டாக்டர் முஹமது ஹஃபீஸின் மகள், அதாவது காமாவின் பேத்தி குல்சூம், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபை மணந்தார்.
அக்தர் ஷேக் இவ்வாறு எழுதுகிறார்: 1960 மே 22 அன்று, காமாவின் மனைவி ராவி நதிக்கு அப்பால் உள்ள தோட்டத்துக்குச் செல்ல வேண்டியிருந்தது. அப்போது காமாவின் அருகில் அவரது மகள் கீதி ஆரா இருந்தார். தனக்குப் பிறகு தன்னுடைய மனைவியை கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும், அவர் முன்னிலையில் கண்ணீர் சிந்தி அழக் கூடாது என்றும் காமா அவரிடம் வாக்குறுதி வாங்கினார். பின்னர், காமா தனது கைகளை உயர்த்தி அவருக்கு ஆசி வழங்கினார்.
'இரண்டு லட்டுகள் சாப்பிட்டார்'
காமா, தன்னுடைய மகளிடம் வாக்குறுதி வாங்கியதும் வசீர் பேகமும் அங்கு வந்து சேர்ந்தார். மிகவும் நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று கூறிய காமா, குளித்துத் தயாராக வேண்டும் எனக் கூறினார். குளித்துவிட்டு தயாரான காமா, குடும்பத்தினரின் உதவியுடன் ஆடைகளை மாற்றிக்கொண்டார்; மகள் கீதி ஆரா அவரது தலைமுடியைச் சீவி விட்டார். இனிமேல் மருந்துகள் எதுவும் வேண்டாம் என்று கூறிய காமா, மிகுந்த ஆசையுடன் இரண்டு லட்டுகளை உண்டார்.
1960 மே 23 அன்று, காமா வழக்கம்போல் அதிகாலை தொழுகைக்கான பாங்கு ஒலிப்பதற்கு முன்பாகவே எழுந்து தண்ணீர் குடித்தார். பின்னர் தனது மகளிடம், "நீ போய் தூங்கு, இனிமேல் நான் யாரையும் தொந்தரவு செய்ய மாட்டேன்" என்றார்.
இவைதான் மல்யுத்த உலக சாம்பியனின் இறுதி வார்த்தைகளாக இருந்தன. அதன்பின் மூன்று முறை நீண்ட மூச்சை இழுத்து விட்டார். அவருக்கு அருகில் வந்த வசீர் பேகம், மிகவும் சிரமமாக இருந்தால் படுத்துக்கொள்ளுமாறு கூறினார்.
வாழ்க்கையில் ஒருபோதும் மல்யுத்தக் களத்தில் மல்லாந்து படுக்காத (தோல்வியைக் காணாத) வீரன் அப்போது மல்லாக்கப் படுத்தார், அதன்பின் அவர் மீண்டும் எழவேயில்லை.
லாகூரில் உள்ள 'தர்பார் பீர் மக்கி'க்கு அருகில் உள்ள கல்லறையில், 'குலாம் ஹுசைன் என்கிற காமா நூன் வாலா' நல்லடக்கம் செய்யப்பட்டார். அங்கு ஒருபுறம் 'சிங்கம் போன்ற' காமாவின் தம்பி இமாம் பக்ஷ் ருஸ்தம் உறங்கிக்கொண்டிருக்கிறார் என்றால், மறுபுறம் ஹமீதா ரஹ்மானி வாலா மீளாத்துயரில் உறங்குகிறார்.
அதற்கு அருகிலேயே, 'குலாம் முகமது' என்ற இயற்பெயரைக் கொண்ட காமாவின் கல்லறையும் உள்ளது.
1879-ஆம் ஆண்டு பிறந்த மல்யுத்த வீரர் ஜபிஷ்கோ, காமாவின் சமகாலத்தவர். அவர், 1967 இல் அதாவது காமாவின் மறைவுக்கு ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு காலமானார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































