குழந்தையின் தொப்புள்கொடி ரத்தத்தை சேமித்து வைப்பது எதிர்காலத்தில் நோய்களை குணப்படுத்த உதவுமா?

ஸ்டெம் செல்கள், ஸ்டெம் செல் வங்கி, தொப்புள் கொடி திசுக்கள், தொப்புள்கொடி ரத்தம், சிகிச்சை, மருத்துவ ஆய்வு, நோய், ஆரோக்கியம்
படக்குறிப்பு, ஸ்டெம் செல்கள் என்பவை, உடலின் பல்வேறு சிறப்புச் செல்களாக உருவெடுக்கும் தனித்துவமான திறன் கொண்ட அடிப்படைச் செல்களாகும்
    • எழுதியவர், மருத்துவர் ஹிமானி, கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணர்
    • பதவி, பிபிசிக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 11 நிமிடங்கள்

ஒரு குழந்தை பிறக்கும்போது, அந்தக் குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் எதிர்காலம் குறித்து பெற்றோருக்குப் பல கனவுகளும் எதிர்பார்ப்புகளும் இருக்கும்.

எதிர்காலத்தில் குழந்தைக்கு எந்தவித நோய்களும் வரக்கூடாது என்றும், அப்படியே ஏதேனும் உடல்நலப் பிரச்னைகள் ஏற்பட்டாலும் அவற்றைச் சமாளிக்க முன்கூட்டியே ஏதாவது செய்ய வேண்டும் என்றும் பெற்றோர் விரும்புகின்றனர்.

இதுபோன்ற எண்ணங்களால் தற்போது பல பெற்றோர், குழந்தை பிறக்கும் நேரத்தில் சேகரிக்கப்படும் தொப்புள் கொடி ரத்தம் மற்றும் தொப்புள் கொடி திசுக்களை ஸ்டெம் செல் வங்கிகளில் சேகரித்து, பாதுகாத்து வைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். இந்தச் செயல்முறை 'ஸ்டெம் செல் வங்கி சேமிப்பு' என்று அழைக்கப்படுகிறது.

இவ்வாறு சேகரித்துப் பாதுகாக்கப்படும் செல்கள் எதிர்காலத்தில் ரத்தப் புற்றுநோய், தலசீமியா, சில வகையான ரத்தக் குறைபாடுகள், நோய் எதிர்ப்பு மண்டலக் கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படக்கூடும் என்று கூறி இதை ஒரு வகையான உயிரியல் முதலீடு எனத் தனியார் ஸ்டெம் செல் வங்கிகள் விளம்பரப்படுத்துகின்றன. இருப்பினும், இது தொடர்பாக சில முக்கியமான கேள்விகள் எழுகின்றன.

பிறக்கும்போதே சேகரித்துப் பாதுகாக்கப்படும் ஸ்டெம் செல்கள் எதிர்காலத்தில் அனைத்துவிதமான நோய்களையும் குணப்படுத்த முடியுமா? ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தையின் தொப்புள் கொடி ரத்தம் மற்றும் திசுக்களைப் பாதுகாப்பது அவசியமா? தனியார் ஸ்டெம் செல் வங்கிகளுக்குப் பணம் செலுத்தி இவற்றைச் சேமித்து வைப்பது உண்மையிலேயே பயனளிக்குமா? அல்லது இது தேவையற்ற செலவா?

இப்படியான கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. ஸ்டெம் செல் சேமிப்பின் மருத்துவப் பயன்கள், அதன் வரம்புகள் மற்றும் பெற்றோர் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்னென்ன? இங்கு விரிவாகப் பார்ப்போம்.

ஸ்டெம் செல்கள் என்றால் என்ன?

மருத்துவத்தில் ஸ்டெம் செல்கள் எனப்படும் ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை நிரூபிக்கப்பட்ட பலன்களை வழங்கினாலும், தனியார் தொப்புள்கொடி ரத்த வங்கி தொடர்பான குறிப்பிடத்தக்க வரம்புகளும் உள்ளன. அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் இவற்றைத் புரிந்துகொள்வது அவசியம்.

ஸ்டெம் செல்கள் என்பவை, சிறப்புச் செயல்பாடுகளைக் கொண்ட செல்களாக மாறக்கூடிய அடிப்படை உயிரணுக்கள். இவை உடலில் உள்ள பல்வேறு திசுக்கள் மற்றும் உறுப்புகளின் வளர்ச்சி மற்றும் பழுதுபார்ப்பில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

ஸ்டெம் செல்கள் இரண்டு முதன்மையான பண்புகளைக் கொண்டுள்ளன. அவை:

  • முதலாவது உயிரணு புதுப்பித்தல், அதாவது அவை தங்களைப் போன்ற புதிய ஸ்டெம் செல்களை மீண்டும் உருவாக்கிக்கொள்ளும் திறன் கொண்டவை.
  • இரண்டாவது வேறுபடுதல், அதாவது தேவைக்கேற்ப அவை சிறப்பு வாய்ந்த உயிரணுக்களாக மாறும் திறன் கொண்டவை.

குழந்தை பிறந்த பிறகு, தொப்புள்கொடி மற்றும் நஞ்சுக்கொடியில் எஞ்சியுள்ள ரத்தம் 'தொப்புள்கொடி ரத்தம்' என்று அழைக்கப்படுகிறது.

ஸ்டெம் செல்கள், ஸ்டெம் செல் வங்கி, தொப்புள் கொடி திசுக்கள், தொப்புள்கொடி ரத்தம், சிகிச்சை, மருத்துவ ஆய்வு, நோய், ஆரோக்கியம்
படக்குறிப்பு, குழந்தை பிறந்த பிறகு தொப்புள்கொடி மற்றும் நஞ்சுக்கொடியில் எஞ்சியிருக்கும் ரத்தம் 'தொப்புள்கொடி ரத்தம்' என்று அழைக்கப்படுகிறது

தொப்புள்கொடி ரத்தம் மற்றும் தொப்புள்கொடி திசு

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

பல்வேறு வகையான ஸ்டெம் செல்கள் இருந்தாலும், குழந்தை பிறக்கும்போது தொப்புள் கொடி ரத்தத்தில் இருந்து சேகரித்துப் பாதுகாக்கப்படுபவை பெரும்பாலும் ஹீமோபாய்டிக் ஸ்டெம் செல்கள் ஆகும். இவை சிவப்பு ரத்த அணுக்கள், வெள்ளை ரத்த அணுக்கள் மற்றும் ரத்தத் தட்டுகள் எனப் பல்வேறு வகையான ரத்த அணுக்களை உருவாக்கும் திறன் கொண்டவை.

இந்த ஸ்டெம் செல்கள், ரத்தம் சார்ந்த புற்றுநோய்கள், மரபணு சார்ந்த சில வகை ரத்தக் கோளாறுகள் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலக் குறைபாடுகள் உள்ளிட்ட பாதிப்புகளுக்கான சிகிச்சையில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

1. தொப்புள் கொடி ரத்தம்

குழந்தை பிறந்த பிறகு, தொப்புள் கொடி மற்றும் நஞ்சுக்கொடியில் எஞ்சியிருக்கும் ரத்தமே தொப்புள் கொடி ரத்தம் எனப்படுகிறது. இதில் ஹீமோபயோடிக் ஸ்டெம் செல்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இவை சேகரிக்கப்பட்டு, பரிசோதிக்கப்பட்டு, ஒரு சிறப்புச் செயல்முறையின் மூலம் மிகக் குறைந்த வெப்பநிலையில் பாதுகாக்கப்படுகின்றன.

2. தொப்புள் கொடி திசு

தொப்புள் கொடியில் 'வார்டன்ஸ் ஜெல்லி' (Wharton's Jelly) எனப்படும் ஜெல்லி போன்ற திசு உள்ளது. இதில் மீசென்கைமல் ஸ்டெம் செல்கள் (Mesenchymal Stem Cells – MSCs) காணப்படலாம்.

இந்த செல்கள், எலும்பு, குருத்தெலும்பு மற்றும் கொழுப்புத் திசுக்கள் போன்ற பல்வேறு வகையான செல்களாக மாறும் திறன் கொண்டவை. இதன் காரணமாக, திசுக்களைப் பழுதுபார்த்தல் மற்றும் மீளுருவாக்கம் தொடர்பான மருத்துவ ஆய்வுகளில் இவை முக்கியத்துவம் பெற்றுள்ளன.

இருப்பினும், தொப்புள் கொடி திசுவிலிருந்து பெறப்படும் மீசென்கைமல் ஸ்டெம் செல்களை சேமித்து வைப்பதால், எதிர்காலத்தில் இதய நோய், பக்கவாதம், நீரிழிவு, ஆட்டிசம் அல்லது நரம்பியல் கோளாறுகள் போன்ற பாதிப்புகளைக் குணப்படுத்த முடியும் என்று உறுதியாகக் கூற முடியாது. இது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

ஸ்டெம் செல்கள் எவ்வாறு சேமிக்கப்படுகின்றன?

பிரசவத்தின்போது குழந்தை பிறந்ததும் தொப்புள் கொடி துண்டிக்கப்பட்டதும், அதில் எஞ்சியிருக்கும் ரத்தம் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட, கிருமி நீக்கம் செய்யப்பட்ட பையில் சேகரிக்கப்படுகிறது. இந்தச் செயல்முறை பொதுவாக பிரசவத்துக்குப் பிறகு உடனடியாக மேற்கொள்ளப்படுகிறது. இந்தச் சேகரிப்பு முறையால் தாய்க்கோ, குழந்தைக்கோ கூடுதல் வலி ஏதும் ஏற்படுவதில்லை.

இவ்வாறு சேகரிக்கப்படும் ரத்தம் பின்னர் ஆய்வகத்துக்கு அனுப்பப்படுகிறது. அங்கு ரத்தத்தில் உள்ள செல்களின் எண்ணிக்கை, அவற்றின் தரம், தொற்று பாதிப்புகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பரிசோதிக்கப்படுகின்றன. உரிய தரநிலைகளைப் பூர்த்தி செய்யும் மாதிரிகள் மட்டுமே நீண்டகால சேமிப்புக்குத் தேர்வு செய்யப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரிகள் 'கிரையோபிரசர்வேஷன்' (Cryopreservation) எனப்படும் உறைநிலைப் பாதுகாப்பு முறையில் சேமிக்கப்படுகின்றன.

இவை நைட்ரஜனை பயன்படுத்தும் பிரத்யேக சேமிப்பு அமைப்பில் இவற்றில் சுமார் மைனஸ் 196 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில் சேகரித்து வைக்கப்படுகின்றன. இவ்வாறு சேமித்து வைக்கப்படும் செல்கள் நீண்ட காலம் பிழைத்திருக்கும் சாத்தியங்கள் உள்ளன. ஆனால் ஒவ்வொரு மாதிரியும் எதிர்கால சிகிச்சைக்குப் பயன்படும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை.

ஸ்டெம் செல்கள், ஸ்டெம் செல் வங்கி, தொப்புள் கொடி திசுக்கள், தொப்புள்கொடி ரத்தம், சிகிச்சை, மருத்துவ ஆய்வு, நோய், ஆரோக்கியம்
படக்குறிப்பு, குழந்தை பிறக்கும்போது சேகரித்துப் பாதுகாக்கப்படும் தொப்புள் கொடி ரத்த ஸ்டெம் செல்கள், குறிப்பிட்ட நோய்களுக்கான சிகிச்சையில் எதிர்காலத்தில் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது

தொப்புள் கொடி ரத்த ஸ்டெம் செல்களால் எந்தெந்த நோய்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும்?

தொப்புள்கொடி ரத்த மாற்று சிகிச்சைக்கு தற்போது நிரூபிக்கப்பட்ட மருத்துவப் பயன்பாடுகள் உள்ளன. குறிப்பாக, பொருத்தமான ஸ்டெம் செல்களை கொண்டு மேற்கொள்ளப்படும் மாற்று சிகிச்சை, ரத்தப் புற்றுநோய்கள், பீட்டா தலசீமியா மேஜர், சிக்கிள் செல் அனீமியா, சில வகையான நோய் எதிர்ப்பு மண்டலக் குறைபாடுகள் மற்றும் மரபணு சார்ந்த வளர்சிதை மாற்றக் கோளாறுகள் போன்ற நோய்களுக்குச் சிகிச்சை அளிக்க உதவுகிறது.

இருப்பினும், தொப்புள் கொடி ரத்த ஸ்டெம் செல்கள் அனைத்து வகையான நோய்களுக்கும் தீர்வாக அமைந்துவிடாது. இது நோயின் தன்மை, நோயாளியின் வயது, திசுப் பொருத்தம், சேகரிக்கப்பட்டுள்ள ஸ்டெம் செல்களின் எண்ணிக்கை மற்றும் தரம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவக் காரணிகளைக் கவனத்தில் கொண்டு முடிவு செய்யப்படுகிறது.

ஸ்டெம் செல்களை சேமித்து வைப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

1. எதிர்கால மருத்துவ சிகிச்சைக்கான வாய்ப்பு

குழந்தை பிறக்கும்போது சேகரிக்கப்படும் ஸ்டெம் செல்கள் தேவைகளுக்கு ஏற்ப சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படலாம்.

2. எளிமையான மற்றும் பாதுகாப்பான சேகரிப்பு முறை

சுகப் பிரசவம் அல்லது சிசேரியன் அறுவை சிகிச்சை என இரண்டு வகையான பிரசவங்களின்போதும் தொப்புள் கொடி ரத்தத்தைச் சேகரிக்க முடியும். இந்தச் செயல்முறையால், தாய்க்கோ குழந்தைக்கோ கூடுதல் ஆபத்து ஏற்படுவதில்லை.

3. ஹெச்.எல்.ஏ பொருத்தத்தில் உள்ள சாதகம்

தொப்புள் கொடி ரத்தத்தில் இருந்து பெறப்படும் ஸ்டெம் செல்களை, அந்தக் குழந்தைக்கோ அல்லது ஹெச்.எல்.ஏ திசுப் பொருத்தம் உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கோ பயன்படுத்தலாம். சில நேரங்களில், எலும்பு மஜ்ஜையைவிட தொப்புள் கொடி ரத்தம் சில ஹெச்.எல்.ஏ பொருந்தாமைகளை சிறப்பாகத் தாங்கிக்கொள்ளும்.

4. குடும்பத்தில் ஏற்கெனவே நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் உதவலாம்

ஒரு குடும்பத்தில் ஏற்கெனவே ஒரு குழந்தை தலசீமியா, சிக்கிள் செல் நோய் அல்லது ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை மூலம் குணப்படுத்தக்கூடிய வேறு ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அடுத்து பிறக்கும் குழந்தையின் தொப்புள் கொடி ரத்தம் சிகிச்சைக்குப் பயன்பட வாய்ப்புள்ளது. இத்தகைய சூழல்களில், ஹெச்.எல்.ஏ பொருத்தம் மற்றும் மரபணுப் பரிசோதனைகளைச் செய்துகொள்வதன் மூலம் முன்கூட்டியே திட்டமிடுவது அவசியம்.

5. எதிர்கால மருத்துவ ஆராய்ச்சிகளில் பயன்படும் வாய்ப்பு

இதயத் திசுக்களில் இருந்து பெறப்பட்ட என்.எஸ்.சி-க்கள் மற்றும் பிற செல்கள் குறித்து, மீளுருவாக்க மருத்துவத் துறையில் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

ஸ்டெம் செல்கள், ஸ்டெம் செல் வங்கி, தொப்புள் கொடி திசுக்கள், தொப்புள்கொடி ரத்தம், சிகிச்சை, மருத்துவ ஆய்வு, நோய், ஆரோக்கியம்
படக்குறிப்பு, குழந்தை பிறக்கும்போது சேகரிக்கப்படும் தொப்புள் கொடி ரத்தத்தில் உள்ள ஸ்டெம் செல்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும்

ஸ்டெம் செல்களை சேமித்து வைப்பதில் உள்ள குறைபாடுகள் என்னென்ன?

ஸ்டெம் செல் வங்கி சேமிப்பு மீதான ஆர்வம் அதிகரித்து வந்தாலும், தனியார் ஸ்டெம் செல் வங்கிகள் விளம்பரப்படுத்தும் அனைத்து மருத்துவப் பயன்களுக்கும் போதுமான அறிவியல் ஆதாரங்கள் இல்லை. இதில் சில கட்டுப்பாடுகளும் இருக்கவே செய்கின்றன.

1. சேமிக்கப்பட்ட ஸ்டெம் செல்களை அதே குழந்தைக்குப் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்படலாம்

ஒரு குழந்தைக்குப் பிற்காலத்தில் மரபணு சார்ந்த நோய் ஏதேனும் ஏற்பட்டால், அந்தக் குழந்தையின் சொந்த தொப்புள்கொடி ரத்தத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட ஸ்டெம் செல்களையே சிகிச்சைக்குப் பயன்படுத்துவது பொருத்தமானதாக இருக்காது. ஏனெனில், நோயை ஏற்படுத்தும் மரபணுக் குறைபாடு சேமிக்கப்பட்ட ஸ்டெம் செல்களிலும் ஏற்கெனவே இருக்கக்கூடும்.

2. லுகீமியா பாதிப்பு ஏற்பட்டால் சொந்த ஸ்டெம் செல்களை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்படலாம்

ஒரு குழந்தைக்குப் பிற்காலத்தில் லுகீமியா எனப்படும் ரத்தப் புற்றுநோய் ஏற்பட்டால், பிறக்கும்போது சேகரித்துப் பாதுகாக்கப்பட்ட அதன் சொந்தத் தொப்புள்கொடி ரத்தத்தை சிகிச்சைக்குப் பொதுவாகப் பயன்படுத்துவதில்லை. ஏனெனில், நோயுடன் தொடர்புடைய ஆரம்பக்கட்ட அசாதாரண உயிரணுக்கள் அந்த ரத்த மாதிரியிலேயே இருந்திருக்க வாய்ப்புள்ளது.

3. சேகரிக்கப்படும் ஸ்டெம் செல்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம்

பிறக்கும்போது தொப்புள்கொடி ரத்தத்தில் இருந்து சேகரிக்கப்படும் ஸ்டெம் செல்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். ஒரு சிறு குழந்தைக்குப் பயனுள்ளதாக இருக்கும் ஒரு மாதிரி, அதே நபர் வளர்ந்த பிறகு அவருக்குத் தேவையான எண்ணிக்கையிலான செல்களை வழங்காமல் போகலாம். பெரியவர்களைப் பொறுத்தவரை, தேவைப்படும் பட்சத்தில், மற்ற நன்கொடையாளர்களிடம் இருந்து செல்களை சேகரிக்க வேண்டியிருக்கலாம் அல்லது மாற்று அறுவை சிகிச்சைக்கான பிற முறைகளைக் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கலாம்.

4. சேகரிக்கப்படும் அனைத்து மாதிரிகளும் சிகிச்சைக்குப் பயன்படுத்தத் தகுதியானவை அல்ல

சேகரிக்கப்பட்ட ரத்தத்தில் போதுமான எண்ணிக்கையிலான ஸ்டெம் செல்கள் இல்லாமல் இருக்கலாம். தொற்று, மாசுபடுதல் அல்லது சேமிப்பின்போது ஏற்படும் தொழில்நுட்பச் சிக்கல்கள் போன்ற காரணங்களால், அந்த மாதிரியைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படலாம்.

5. நீண்டகால சேமிப்புக்கு அதிக செலவாகும்

தனியார் ஸ்டெம் செல் வங்கிகள், தொப்புள் கொடி ரத்தம் மற்றும் திசுக்களைச் சேகரித்தல், ஆய்வகத்தில் பரிசோதனை செய்தல், செயலாக்கம், நீண்டகாலப் பாதுகாப்பு ஆகியவற்றுக்குக் கட்டணம் வசூலிக்கின்றன. இதனுடன் ஆண்டுதோறும் சேமிப்புக் கட்டணமும் செலுத்த வேண்டியிருக்கலாம்.

எனவே, பல ஆண்டுகளுக்குத் தொடர்ந்து நீடிக்கும் இந்தச் செலவு, குடும்பத்தின் பொருளாதார நிலையைப் பொறுத்து குறிப்பிடத்தக்க நிதிச் சுமையாக மாறலாம்.

6. அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் என்பதற்கு உத்தரவாதம் ஏதுமில்லை

பார்கின்சன் நோய், அல்ஜைமர் நோய், ஆட்டிசம், நீரிழிவு, இதய நோய், பக்கவாதம் போன்ற பல்வேறு நோய்களுக்குத் தொப்புள்கொடி ரத்தம் அல்லது திசுக்களில் இருந்து பெறப்படும் ஸ்டெம் செல்களை பயன்படுத்தி சிகிச்சை அளிக்க முடியும் என்று சில தனியார் நிறுவனங்கள் விளம்பரப்படுத்துகின்றன. ஆனால், இந்த நோய்களுக்கான சிகிச்சையில் ஸ்டெம் செல்களை பயன்படுத்துவது தொடர்பான ஆய்வுகள் இன்னும் பல்வேறு கட்டங்களில் உள்ளன. இவற்றில் பலவற்றுக்கு ஸ்டெம் செல் சிகிச்சை இன்னும் நிரூபிக்கப்பட்ட, வழக்கமான மருத்துவ சிகிச்சையாக அங்கீகரிக்கப்படவில்லை.

எனவே, ஸ்டெம் செல்களை சேமித்து வைப்பதன் மூலம் எதிர்காலத்தில் எந்தவொரு நோயையும் குணப்படுத்திவிட முடியும் என்று கருதுவது தவறானது.

ஸ்டெம் செல்கள், ஸ்டெம் செல் வங்கி, தொப்புள் கொடி திசுக்கள், தொப்புள்கொடி ரத்தம், சிகிச்சை, மருத்துவ ஆய்வு, நோய், ஆரோக்கியம்
படக்குறிப்பு, பொது வங்கி முறை, அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கு ஸ்டெம் செல்களை கிடைக்கச் செய்கிறது

ஸ்டெம் செல் வங்கிகளில் எத்தனை வகைகள் உள்ளன?

1. தனியார் ஸ்டெம் செல் வங்கி

இந்த முறையில், பெற்றோர் குறிப்பிட்ட கட்டணத்தைச் செலுத்தி, தங்கள் குழந்தை பிறக்கும்போது சேகரிக்கப்படும் தொப்புள்கொடி ரத்தத்தைத் தங்கள் குடும்பத்தின் எதிர்காலப் பயன்பாட்டுக்காகப் பிரத்யேகமாகச் சேமித்து வைக்கின்றனர். இதன் மூலம், எதிர்காலத்தில் மருத்துவத் தேவை ஏற்பட்டால், சேமிக்கப்பட்ட ரத்த மாதிரியைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. இருப்பினும், அந்த மாதிரி சிகிச்சைக்குப் பொருத்தமானதாக இருக்க வேண்டும்.

2. பொது ஸ்டெம் செல் வங்கி

இந்த முறையில், பெற்றோர் தங்கள் குழந்தையின் தொப்புள்கொடி ரத்தத்தைப் பொது வங்கிக்கு நன்கொடையாக வழங்குகின்றனர். சேகரிக்கப்பட்ட ரத்தம் உரிய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, தேவையான தரநிலைகளைப் பூர்த்தி செய்தால், ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை தேவைப்படும் பிற நோயாளிகளின் பயன்பாட்டுக்காகப் பாதுகாக்கப்படுகிறது.

இந்த முறையின் மூலம், தானமாக வழங்கப்படும் ஸ்டெம் செல்கள் பல்வேறு நோயாளிகளுக்குப் பயன்படும் வாய்ப்பு உருவாகிறது. இதனால், மருத்துவ நிபுணர்கள் தனிப்பட்ட குடும்பப் பயன்பாட்டுக்கான தனியார் சேமிப்பைக் காட்டிலும், பொதுத் தொப்புள்கொடி ரத்த வங்கி முறையைப் பல சந்தர்ப்பங்களில் ஊக்குவிக்கின்றனர். இருப்பினும், இந்தியாவில் பொதுத் தொப்புள்கொடி ரத்த வங்கிகளின் எண்ணிக்கையும் அவற்றின் சேவை வசதிகளும் இடத்துக்கு இடம் மாறுபடுகின்றன.

இந்தியாவில் ஸ்டெம் செல் சேமிப்பு வசதிகள்

இந்தியாவில் குழந்தை பிறக்கும் நேரத்தில் தொப்புள்கொடி ரத்தத்தைச் சேகரித்தல், ஆய்வகத்தில் பரிசோதனை செய்து பதப்படுத்துதல் மற்றும் மிகக் குறைந்த வெப்பநிலையில் நீண்டகாலத்திற்குப் பாதுகாத்தல் போன்ற சேவைகளை வழங்கும் பல தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சில நிறுவனங்கள் தொப்புள்கொடி ரத்தத்தை மட்டுமின்றி, தொப்புள் கொடி திசுக்களையும் சேகரித்துப் பாதுகாக்கும் வசதியையும் வழங்குகின்றன.

ஸ்டெம் செல்கள், ஸ்டெம் செல் வங்கி, தொப்புள் கொடி திசுக்கள், தொப்புள்கொடி ரத்தம், சிகிச்சை, மருத்துவ ஆய்வு, நோய், ஆரோக்கியம்
படக்குறிப்பு, குழந்தையின் ஸ்டெம் செல்களை ஸ்டெம் செல் வங்கியில் சேமிப்பது குறித்து முடிவெடுக்கும்போது, ​​உங்கள் குடும்பத்தின் தனிப்பட்ட சூழலைக் கருத்தில் கொள்வதே சிறந்தது

ஸ்டெம் செல் வங்கியைத் தேர்வு செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய காரணிகள் யாவை?

ஸ்டெம் செல் வங்கியைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு கவனிக்க வேண்டியவை:

  • அந்த நிறுவனத்திற்கு சி.டி.எஸ்.சி.ஓ/டி.சி.ஜி.ஐ அமைப்புகளிடம் இருந்து தேவையான உரிமங்கள் மற்றும் அனுமதிகள் உள்ளனவா?
  • அந்தச் சேமிப்பு மையத்திற்கு ஏஏபிபி, எஃப்.ஏ.சி.டி அல்லது என்.ஏ.பி.எல் போன்ற அங்கீகாரங்கள் உள்ளனவா? அவை குறிப்பிட்ட எந்த மையத்திற்கும், எந்தச் சேவைக்கும் வழங்கப்பட்டுள்ளன?
  • தொப்புள்கொடி ரத்தம் சேகரிக்கப்படும் இடத்திலிருந்து ஆய்வகத்திற்குப் பாதுகாப்பாக எடுத்துச் செல்ல என்னென்ன போக்குவரத்து நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன?
  • மாதிரியில் உள்ள மொத்த அணுக்கரு கொண்ட செல்களின் எண்ணிக்கை டி.என்.சி, சிடி34+ செல்களின் எண்ணிக்கை மற்றும் செல்களின் உயிர் வாழும் திறன் ஆகியவை பரிசோதிக்கப்படுகின்றனவா?
  • எச்.ஐ.வி, ஹெபடைடிஸ் பி, ஹெபடைடிஸ் சி போன்ற தொற்றுகளைக் கண்டறிவதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றனவா?
  • சேகரிக்கப்பட்ட மாதிரி மாசுபட்டிருந்தாலோ அல்லது தேவையான தரநிலைகளைப் பூர்த்தி செய்யாவிட்டாலோ, நிறுவனம் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்?
  • சேமிப்பகத்தில் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் வசதி, 24 மணிநேரக் கண்காணிப்பு, மின்தடை ஏற்பட்டால் செயல்படும் மாற்று மின்சார வசதி ஆகியவை உள்ளனவா?
  • எதிர்காலத்தில் நிறுவனம் மூடப்பட்டாலோ அல்லது தனது செயல்பாடுகளை நிறுத்திக் கொண்டாலோ, ஏற்கெனவே சேமிக்கப்பட்டுள்ள மாதிரிகளின் நிலை என்னவாகும்?
  • சேமிப்புக் காலம், ஆண்டுக் கட்டணம், கூடுதல் கட்டணங்கள் மற்றும் சேமிக்கப்பட்ட மாதிரியைத் திரும்பப் பெறுவதற்கான நடைமுறைகள் என்ன?

ஏஏபிபி அல்லது எஃப்.ஏ.சி.டி போன்ற அமைப்புகளின் அங்கீகாரம், அந்தச் சேமிப்பு மையம் குறிப்பிட்ட தரக் கட்டுப்பாட்டு நடைமுறைகளைப் பின்பற்றுகிறது என்பதைக் காட்டுகிறது. இருப்பினும், இத்தகைய அங்கீகாரங்கள் மட்டுமே அங்கு சேமிக்கப்படும் ஒவ்வொரு மாதிரியும் எதிர்காலத்தில் மருத்துவ சிகிச்சைக்குப் பயன்படும் என்பதற்கு உத்தரவாதம் அளிப்பதில்லை.

இந்திய குடும்பங்கள் எப்போது ஸ்டெம் செல் சேமிப்பைத் தேர்ந்தெடுக்கலாம்?

இந்திய குடும்பங்களைப் பொறுத்தவரை, ஸ்டெம் செல் சேமிப்பைத் தேர்ந்தெடுப்பது என்பது அவர்களின் குடும்பச் சூழலைப் பொறுத்து அமைய வேண்டும். குடும்பத்தில் மரபணு சார்ந்த நோய்களோ அல்லது ரத்தம் தொடர்பான பாதிப்புகளோ இல்லாத ஆரோக்கியமான பெற்றோர், தங்களது முதல் குழந்தை பிறக்கும்போது தனியார் தொப்புள்கொடி ரத்த வங்கியில் சேமிக்கலாமா என்று யோசிக்கலாம்.

ஆனால், எதிர்காலத்தில் எப்போதாவது பயன்படலாம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே கணிசமான தொகையைச் செலவிட்டு இந்தச் சேவையைப் பெறுவது அவசியமானதல்ல. பொதுவாக, மருத்துவக் காரணங்கள் இல்லாத குடும்பங்கள் வழக்கமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தனியார் தொப்புள் கொடி ரத்தத்தைச் சேமித்து வைக்க வேண்டும் என்று முக்கிய மருத்துவ அமைப்புகள் பரிந்துரைப்பதில்லை.

மாறாக, ஒரு குடும்பத்தில் ஏற்கெனவே தலசீமியா அல்லது வேறு ஏதேனும் மரபணு சார்ந்த ரத்தக் கோளாறால் பாதிக்கப்பட்ட குழந்தை இருந்தால், அடுத்து பிறக்கவிருக்கும் குழந்தையின் தொப்புள் கொடி ரத்தத்தைச் சேமிப்பது மருத்துவ ரீதியாகப் பயனுள்ளதாக இருக்கலாம். இத்தகைய சூழலில், குழந்தை பிறப்பதற்கு முன்பே எச்.எல்.ஏ திசுப் பொருத்தப் பரிசோதனை, தேவையான மரபணுப் பரிசோதனைகள் ஆகியவற்றை மேற்கொண்டு, ரத்தவியல் நிபுணர் மற்றும் ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை நிபுணர்களிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.

அதேநேரத்தில், பிறக்கவிருக்கும் குழந்தையின் ஆரோக்கியமும் நலனுமே முதன்மையானதாக இருக்க வேண்டும். குடும்பத்தில் லுகீமியா அல்லது பிற ரத்தப் புற்றுநோய்கள் இருந்தன என்பதற்காகவே, ஒரு குழந்தையின் தொப்புள்கொடி ரத்தத்தைச் சேமித்து வைக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஒரு ரத்தவியல் நிபுணர், நோயின் வகை, மரபணு ஆபத்து மற்றும் நன்கொடையாளராகச் செயல்படுவதற்கான சாத்தியக்கூறு போன்ற காரணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஆராய்ச்சிகள் எதிர்காலத்தில் புதிய சாத்தியக்கூறுகளை உருவாக்கக்கூடும். ஆனால், தற்போதைய செலவினங்களை நியாயப்படுத்துவதற்கு, இதுவரை நிரூபிக்கப்படாத சிகிச்சைகளைச் சான்றாகக் காட்டுவது அறிவியல் ரீதியாகச் சரியானதல்ல.

ஸ்டெம் செல்கள், ஸ்டெம் செல் வங்கி, தொப்புள் கொடி திசுக்கள், தொப்புள்கொடி ரத்தம், சிகிச்சை, மருத்துவ ஆய்வு, நோய், ஆரோக்கியம்
படக்குறிப்பு, ஸ்டெம் செல்களை சேமித்து வைப்பது, குறிப்பிட்ட சில ரத்தம் மற்றும் மரபணு நோய்களுக்கு மட்டுமே எதிர்காலத்தில் பயன்படும் என நிரூபிக்கப்பட்டுள்ளது

இந்தியாவில் ஸ்டெம் செல் வங்கி சேவைக்கான கட்டணம் எவ்வளவு?

ஸ்டெம் செல் சேமிப்புக்கான கட்டணம், நிறுவனம் மற்றும் அது வழங்கும் சேவைகளைப் பொறுத்து மாறுபடும். இதில் தொப்புள் கொடி ரத்தம் சேகரிப்பதற்கான உபகரணங்கள், பிரசவத்தின்போது மேற்கொள்ளப்படும் சேகரிப்புச் சேவை, மாதிரியை ஆய்வகத்துக்கு எடுத்துச் செல்வதற்கான போக்குவரத்துச் செலவு, ஆய்வகச் செயலாக்கம், விருப்பத்தின் அடிப்படையில் தொப்புள்கொடி ரத்தத்தைப் பாதுகாத்தல் மற்றும் தொப்புள் கொடி திசுவைச் சேமித்தல் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்கள் அடங்கும். இதனுடன் வருடாந்திர பராமரிப்புக் கட்டணம் மற்றும் சேமிப்புக் காலத்தை நீட்டிப்பதற்கான கூடுதல் கட்டணங்களும் வசூலிக்கப்படலாம்.

சில நிறுவனங்கள் 21 ஆண்டுகள் வரையிலான சேமிப்பை உள்ளடக்கிய ஒருமுறை கட்டணத் திட்டங்களை வழங்குகின்றன. வேறு சில நிறுவனங்கள் ஆரம்பக்கட்ட சேவைகளுக்கான கட்டணத்தைத் தனியாகவும், அதன் பிறகு ஒவ்வோர் ஆண்டும் சேமிப்புக் கட்டணத்தைத் தனியாகவும் வசூலிக்கின்றன.

எனவே, அனைத்து நிறுவனங்களுக்கும் ஒரே மாதிரியான கட்டண முறை கிடையாது. ஸ்டெம் செல் சேமிப்பைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு, வெவ்வேறு நிறுவனங்களின் கட்டண விவரங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதுடன், கூடுதல் செலவுகள் ஏதேனும் உள்ளனவா என்பதையும் நேரடியாகக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.

சேமிப்புக் காலம், ஆண்டுக் கட்டணம், சேவை விதிமுறைகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் நிறுவனத்திடம் இருந்து எழுத்துபூர்வமாகப் பெறுவது நல்லது.

தொப்புள் கொடியைத் தாமதமாக வெட்டுவது ரத்தச் சேகரிப்பைப் பாதிக்குமா?

குழந்தை பிறந்த உடனேயே தொப்புள் கொடியை வெட்டாமல், சிறிது நேரம் கழித்து வெட்டுவதற்கு 'தாமதமான தொப்புள் கொடி துண்டிப்பு' என்று பெயர். இந்த நடைமுறையின்போது, தொப்புள் கொடியை வெட்டுவதற்கு முன்பு நஞ்சுக்கொடியில் இருந்து குழந்தையின் உடலுக்குக் கூடுதல் ரத்தம் செல்வதற்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. இதன் மூலம் குழந்தைக்குக் கூடுதல் இரும்புச்சத்து கிடைப்பதுடன், குறிப்பாகக் குறைமாதக் குழந்தைகளுக்குப் பல்வேறு உடல்நல நன்மைகளும் கிடைக்கக்கூடும்.

இருப்பினும், தொப்புள்கொடியை வெட்டுவதில் தாமதம் ஏற்படும்போது, பின்னர் சேகரிக்கக் கிடைக்கும் தொப்புள்கொடி ரத்தத்தின் அளவு குறையலாம். இதனால் ஸ்டெம் செல் சேமிப்புக்குத் தேவையான அளவு ரத்தத்தைச் சேகரிப்பதில் சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, ஸ்டெம் செல் சேமிப்புக்காகக் குழந்தைக்குப் பயனளிக்கும் தாமதமான தொப்புள்கொடி துண்டிப்பு நடைமுறையைத் தவிர்க்கவோ, தேவையற்ற வகையில் மாற்றியமைக்கவோ கூடாது. எந்தச் சூழலிலும் தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கே முதலிடம் அளிக்கப்பட வேண்டும்.

ஸ்டெம் செல்கள், ஸ்டெம் செல் வங்கி, தொப்புள் கொடி திசுக்கள், தொப்புள்கொடி ரத்தம், சிகிச்சை, மருத்துவ ஆய்வு, நோய், ஆரோக்கியம்
படக்குறிப்பு, ஸ்டெம் செல் வங்கிச் சேமிப்பு குழந்தைக்கு ஏதேனும் ஆபத்தை விளைவிக்கும் என்ற கருத்து வெறும் தவறான புரிதல் மட்டுமே என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்

ஸ்டெம் செல் சேமிப்பு: நம்பிக்கைகளும் உண்மைகளும்

ஸ்டெம் செல் சேமிப்பு குறித்து பெற்றோரிடையே பல்வேறு கருத்துகளும் எதிர்பார்ப்புகளும் நிலவுகின்றன. அவற்றில் எவை தவறான நம்பிக்கைகள், எவை உண்மை என்பதைப் பார்ப்போம்.

தவறான நம்பிக்கை 1: ஸ்டெம் செல்களை சேமித்து வைத்தால் எதிர்காலத்தில் எந்த நோயையும் குணப்படுத்த முடியும்.

உண்மை: தொப்புள்கொடி ரத்த ஸ்டெம் செல்களின் மருத்துவப் பயன்பாடு குறிப்பிட்ட சில ரத்தப் புற்றுநோய்கள், மரபணு சார்ந்த ரத்தக் கோளாறுகள் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலக் குறைபாடுகள் போன்ற நோய்களுக்காக நிரூபிக்கப்பட்டுள்ளது. அனைத்து வகையான நோய்களையும் குணப்படுத்தும் திறன் இவற்றுக்கு இல்லை.

தவறான நம்பிக்கை 2: குழந்தைக்கு லுகீமியா ஏற்பட்டால், அதன் சொந்தத் தொப்புள்கொடி ரத்தத்தையே சிகிச்சைக்குப் பயன்படுத்தலாம்.

உண்மை: பொதுவாக, லுகீமியா பாதித்த குழந்தைக்குச் சிகிச்சை அளிக்க அதன் சொந்தத் தொப்புள்கொடி ரத்தம் பயன்படுத்தப்படுவதில்லை. ஏனெனில், நோயுடன் தொடர்புடைய ஆரம்பக்கட்ட அசாதாரண செல்கள் அந்த மாதிரியிலேயே இருந்திருக்க வாய்ப்புள்ளது. இத்தகைய சூழலில், பொருத்தமான தானதாரரிடம் இருந்து ஸ்டெம் செல்களை பெறுவது பரிசீலிக்கப்படுகிறது.

தவறான நம்பிக்கை 3: தொப்புள்கொடி திசுக்களைச் சேமித்து வைத்தால் பக்கவாதம் அல்லது ஆட்டிசம் போன்ற பாதிப்புகளைக் குணப்படுத்தலாம்.

உண்மை: தொப்புள்கொடி திசுக்களில் இருந்து பெறப்படும் மீசென்கைமல் ஸ்டெம் செல்கள் தொடர்பாகப் பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும், பக்கவாதம், ஆட்டிசம் போன்ற பாதிப்புகளைக் குணப்படுத்த இவற்றைப் பயன்படுத்துவதற்குப் போதுமான மருத்துவ ஆதாரங்கள் இதுவரை இல்லை.

தவறான நம்பிக்கை 4: ஒவ்வொரு குழந்தைக்கும் தனியார் ஸ்டெம் செல் வங்கியில் செல்களை சேமித்து வைப்பது அவசியம்.

உண்மை: மருத்துவக் காரணங்கள் இல்லாத சராசரி குடும்பங்களுக்கு, தனியார் தொப்புள் கொடி ரத்தச் சேமிப்பை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பரிந்துரைப்பது வழக்கமில்லை. குடும்பத்தின் மருத்துவப் பின்னணி மற்றும் எதிர்காலத் தேவைகளைப் பொறுத்தே இந்த முடிவை எடுக்க வேண்டும்.

தவறான நம்பிக்கை 5: ஸ்டெம் செல்களை 21 ஆண்டுகள் சேமித்து வைத்தால், அவை எதிர்காலத்தில் நிச்சயம் மருத்துவப் பயன்பாட்டுக்கு உதவும்.

உண்மை: சேமிப்புக் காலம் மட்டுமே ஸ்டெம் செல்களின் மருத்துவப் பயன்பாட்டைத் தீர்மானிப்பதில்லை. மாதிரியின் தரம், உயிருடன் இருக்கும் செல்களின் எண்ணிக்கை, அவற்றின் செயல்திறன் மற்றும் சிகிச்சை தேவைப்படும் நோயின் தன்மை போன்ற பல்வேறு காரணிகளும் முக்கியமானவை. நீண்டகாலம் சேமித்து வைப்பது மட்டும் எதிர்காலப் பயன்பாட்டுக்கு உத்தரவாதம் அளிக்காது.

தவறான நம்பிக்கை 6: தொப்புள் கொடி ரத்தத்தைச் சேகரிப்பதால் தாய் அல்லது குழந்தைக்கு எந்தவிதமான ஆபத்தும் ஏற்படாது.

உண்மை: குழந்தை பிறந்து தொப்புள் கொடி துண்டிக்கப்பட்ட பிறகு மேற்கொள்ளப்படும் ரத்த சேகரிப்பு பொதுவாகப் பாதுகாப்பானது. இருப்பினும், இந்தச் செயல்முறைக்காக பிரசவ மேலாண்மையில் மாற்றம் செய்யக்கூடாது. குறிப்பாக, குழந்தைக்குப் பயனளிக்கும் தாமதமான தொப்புள்கொடி துண்டிப்பு போன்ற நடைமுறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். தாய் மற்றும் குழந்தையின் நலனே எப்போதும் முதன்மையானது.

ஸ்டெம் செல்கள், ஸ்டெம் செல் வங்கி, தொப்புள் கொடி திசுக்கள், தொப்புள்கொடி ரத்தம், சிகிச்சை, மருத்துவ ஆய்வு, நோய், ஆரோக்கியம்
படக்குறிப்பு, ஸ்டெம் செல் வங்கி, ஸ்டெம் செல் சிகிச்சை ஆகிய இரண்டும் ஒன்றல்ல

ஸ்டெம் செல் சேமிப்பு குறித்து மருத்துவ நிபுணர்கள் கூறுவது என்ன?

அமெரிக்க மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவக் கல்லூரி, அமெரிக்க குழந்தை மருத்துவ அகாடமி ஆகியவற்றின் வழிகாட்டுதல்களின்படி, மருத்துவ ரீதியாகக் குறிப்பிட்ட தேவைகள் இல்லாத குடும்பங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தனியார் தொப்புள் கொடி ரத்த சேமிப்பை மேற்கொள்வதற்குப் போதுமான அறிவியல் ஆதாரங்கள் இல்லை.

குடும்பத்தில் ஏற்கெனவே ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை மூலம் குணப்படுத்தக்கூடிய நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் இருந்தால், தனியார் சேமிப்பு முறையைப் பரிசீலிக்கலாம். மற்ற குடும்பங்களுக்கு, பொதுத் தொப்புள் கொடி ரத்த வங்கியில் நன்கொடை அளிப்பது சிறந்த தேர்வாக இருக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

இந்திய மருத்துவ நிபுணர்களும் இதே கருத்தை வலியுறுத்துகின்றனர். 2018ஆம் ஆண்டில் இந்திய குழந்தை மருத்துவ அகாடமி வெளியிட்ட கருத்தொற்றுமை அறிக்கையிலும், பொதுத் தொப்புள் கொடி ரத்த வங்கி முறையை ஊக்குவிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குடும்பத்தில் ஏற்கெனவே ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை தேவைப்படும் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் இருந்தால் மட்டுமே, தனியார் சேமிப்பு முறையைப் பரிசீலிக்கலாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்டெம் செல்களை பாதுகாத்து வைப்பது மருத்துவ அறிவியலின் முக்கியமான முன்னேற்றங்களில் ஒன்று. குறிப்பாக, ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை மூலம் ரத்தப் புற்றுநோய்கள், தலசீமியா மற்றும் சில மரபணு சார்ந்த நோய் எதிர்ப்பு மண்டலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்குப் புதிய வாழ்வுக்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

இருப்பினும், ஸ்டெம் செல் சேமிப்பும் ஸ்டெம் செல் சிகிச்சையும் வெவ்வேறானவை என்பதை பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டும். ஸ்டெம் செல்களை சேமித்து வைப்பதால் மட்டுமே, எதிர்காலத்தில் அனைத்து வகையான நோய்களுக்கும் சிகிச்சை பெற முடியும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

எனவே, ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குடும்பத்தின் மருத்துவப் பின்னணி, எதிர்காலத் தேவைகள், பொருளாதாரச் சூழல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும். குடும்பத்தில் மரபணு அல்லது ரத்தம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால், மருத்துவ நிபுணர்களுடன் கலந்தாலோசித்து, தனியார் ஸ்டெம் செல் சேமிப்பின் அவசியத்தை மதிப்பிடலாம்.

அத்தகைய குறிப்பிட்ட மருத்துவத் தேவைகள் இல்லாத குடும்பங்கள், விளம்பரங்கள், அச்சங்கள் அல்லது எதிர்காலத்தில் ஏதேனும் ஒரு நோய்க்கு சிகிச்சை கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மட்டும் இந்த முடிவை எடுக்கக்கூடாது.

பெற்றோர் தங்கள் குழந்தைக்கு ஆரோக்கியமான எதிர்காலத்தை வழங்க விரும்புவது இயல்பானதே. ஆனால், அந்த நோக்கத்திற்காக எடுக்கும் முடிவுகள் அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையிலும், மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையுடனும் அமைவதே உண்மையான முதலீடாக இருக்கும்.

(குறிப்பு: இந்தக் கட்டுரையின் ஆசிரியர் ஒரு மருத்துவர். மருத்துவ நடைமுறைகள் மற்றும் சிகிச்சைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம். உடல்நலம் தொடர்பான எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்பு தகுதியான மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு