You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'அமெரிக்கா - இரான் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது': ஹோர்மூஸ் பற்றி டிரம்ப் கூறியது என்ன?
அமெரிக்கா - இரான் இடையே அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டு விட்டதாக மத்தியஸ்தராகச் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "தீவிர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, அமெரிக்காவுக்கும் இரான் இஸ்லாமியக் குடியரசுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாகவும் நிரந்தரமாகவும் நிறுத்துவதாக இரு தரப்பினரும் அறிவித்துள்ளனர்.
இதற்கான அதிகாரப்பூர்வ கையெழுத்திடும் நிகழ்ச்சி ஜூன் 19, வெள்ளிக்கிழமை சுவிட்சர்லாந்தில் நடைபெறும். மோதலுக்கு இராஜதந்திர ரீதியிலான தீர்வைக் காண்பதில் காட்டிய உறுதிப்பாட்டிற்காக அமெரிக்கா மற்றும் இரான் இஸ்லாமியக் குடியரசுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்." என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர், "இந்த ஒப்பந்தத்தை எட்டுவதில் ஆதரவளித்த, மத்தியஸ்த முயற்சியில் எங்கள் சகோதரர்களாகத் திகழும் கத்தார் நாட்டின் சிறந்த தலைமைத்துவத்திற்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதில் பெரும் பங்காற்றிய சௌதி அரேபியா மற்றும் துருக்கி குடியரசின் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமைத்துவத்திற்கும் நான் குறிப்பாக நன்றி கூறுகிறேன்.
மத்தியஸ்தர்கள் இந்த வாரம் தொடர்ச்சியான கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்வார்கள். இந்தச் செயல்பாட்டிற்கு முந்தைய விவாதங்கள், தொழில்நுட்பப் பேச்சுவார்த்தைகள் மற்றும் அதிகாரப்பூர்வ கையெழுத்திடும் நிகழ்வுக்கான அடித்தளத்தை அமைக்கும்," என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இரானுடன் ஒப்பந்தம் - டிரம்ப் உறுதிப்படுத்தினார்
அமெரிக்கா- இரான் இடையே ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது என்ற பாகிஸ்தானின் தகவலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.
"இரான் இஸ்லாமியக் குடியரசுடனான ஒப்பந்தம் இப்போது முழுமையடைந்துள்ளது," என்று அவர் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் எழுதியுள்ளார்.
"ஹோர்மூஸ் நீரிணை வழியே கட்டணமில்லா கப்பல் போக்குவரத்து தொடங்கவும், அமெரிக்கக் கடற்படையின் முற்றுகையை உடனடியாக நீக்கவும் ஆவன செய்கிறேன்," என்று அவர் கூறியுள்ளார்.
"கப்பல்களே, உங்கள் இயந்திரங்களை இயக்கத் தொடங்குங்கள். எண்ணெய் பாயட்டும்!"
வெள்ளிக்கிழமை அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதும் 'எண்ணெய் சந்தைக்குள் தாராளமாக வரும்' என்று டிரம்ப் கூறுகிறார்
மற்றவர்கள் தோல்வியடைந்த இடத்தில் தான் வெற்றி பெற்றுள்ளதாக அமெரிக்கா-இரான் ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அடுத்ததாக மேலும் ஒரு பதிவை இட்டுள்ளார்.
"இந்தச் சிறந்த ஒப்பந்தம் இப்பகுதி முழுமைக்கும் அமைதியையும் பாதுகாப்பையும் கொண்டு வரும்," என்று அவர் 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் எழுதியுள்ளார்.
"பல அதிபர்கள் இரானுடன் அமைதியை ஏற்படுத்த முயன்றனர், ஆனால் எனக்கு முன் அனைவரும் தோல்வியடைந்தனர். உண்மையான அமைதியை அடையத் தங்களுக்கு உதவக்கூடிய ஒரு அதிபரை இப்பகுதித் தலைவர்கள் முதன்முறையாகக் கண்டறிந்துள்ளனர்."
"வெள்ளிக்கிழமை ஒப்பந்தம் கையெழுத்தானதும், கண்ணிவெடிகளை அகற்றும் பணிக்காக அந்த நீரிணை (Strait) திறக்கப்படும்; இதனால் இப்பகுதிக்கும் உலகிற்கும் மீண்டும் இரு முனைகளிலிருந்தும் எண்ணெய் விநியோகம் நடைபெறும்!"
இரான் தரப்பில் கூறப்படுவது என்ன?
அமெரிக்காவுடனான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும், அதற்கான அதிகாரப்பூர்வ கையெழுத்திடும் நிகழ்வு வெள்ளிக்கிழமை சுவிட்சர்லாந்தில் நடைபெறும் என்றும் அரசுத் தொலைக்காட்சியில் பேசிய இரானின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் காசெம் கரிபாபாடி (Kazem Gharibabadi) உறுதிப்படுத்தினார்.
"லெபனான் உள்ளிட்ட பல்வேறு முனைகளில் நடைபெற்று வரும் போர் மற்றும் ராணுவ நடவடிக்கைகளுக்கு உடனடி மற்றும் நிரந்தரமான முடிவு இன்று இரவு அறிவிக்கப்படும்," என்று அவர் கூறினார்.
இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகையும் இன்று இரவு நீக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அமெரிக்கா மற்றும் இரானுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்த வரைவு குறித்து உடன்பாட்டை எட்டுவதற்காக, கத்தார் நாட்டு மத்தியஸ்தர்கள் டெஹ்ரானில் "சுமார் 14 முதல் 15 மணிநேரம் வரை நீண்ட பேச்சுவார்த்தைகளை" நடத்தியதாக காசெம் கரிபாபாடி தெரிவித்தார்.
அரசு ஊடகத்திடம் அவர் பேசுகையில்"இரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான 'இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்' வாசகம் குறித்த விவாதங்களுக்கு இறுதி வடிவம் கொடுக்க, கத்தார் நாட்டுப் பிரதிநிதிகள் குழு ஒன்று நேற்று டெஹ்ரானில் இருந்தது.
"சுமார் 14 முதல் 15 மணிநேரம் வரை நீண்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன; அப்போது, அந்த ஒப்பந்த வாசகத்தில் இரான் இஸ்லாமியக் குடியரசு முன்வைத்த இறுதித் திருத்தங்களை நாங்கள் சமர்ப்பித்தோம். இயல்பாகவே, அந்தத் திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வாசகம் இறுதி செய்யப்பட்டது."
இறுதி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் 60 நாள் காலப்பகுதியில் நடைபெறும் என்றும், இதில் இரான் "பல விவகாரங்கள் குறித்துத் தீர்வு காண வேண்டியுள்ளது" என்றும், குறிப்பாகத் தங்கள் நாட்டின் மீதான அனைத்துத் தடைகளையும் நீக்குவதே மிக முக்கிய முன்னுரிமையாக இருக்கும் என்றும் துணை அமைச்சர் காசெம் கரிபாபாடி கூறினார்.
ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வில் வான்ஸ் பங்கேற்பார் - ஏஎஃப்பி (AFP)
ஜெனிவாவில் வெள்ளிக்கிழமை நடைபெறும் அமெரிக்கா - இரான் ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வில் அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் (JD Vance) பங்கேற்கத் திட்டமிட்டுள்ளதாகவும், டிரம்பும் இதில் கையெழுத்திட வாய்ப்புள்ளதாகவும் ஏஎஃப்பி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஒப்பந்தத்தில் நேரில் கையெழுத்திடச் செல்லக்கூடிய நபராக வான்ஸ் இருப்பார் என்றும், அந்த நிகழ்வு வியன்னாவில் நடைபெறும் என்றும் கடந்த சில நாட்களாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இதனால், துணை அதிபரின் பயண நடவடிக்கைகள் மற்றும் அமெரிக்க விமானங்களின் நிலைப்பாடு ஆகியவற்றை உன்னிப்பாகக் கவனிக்கும் சூழல் ஏற்பட்டது.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் 14 அம்சங்கள் - இரானிய அரசு ஊடகம் தகவல்
அமெரிக்கா - இரான் இடையிலான 14 அம்சங்களைக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வரைவு விவரங்கள் என்று கூறப்படுபவற்றை இரானிய அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது.
இந்தக் குறிப்பிட்ட அம்சங்கள் குறித்து இரு நாடுகளும் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
அந்த ஒப்பந்தத்தில் இடம்பெறும் அம்சங்களாக இரானின் அரசு தொடர்புடைய செய்தி நிறுவனமான 'மெஹர்' (Mehr News Agency) குறிப்பிட்டுள்ள 14 அம்சங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
- லெபனான் உள்ளிட்ட அனைத்து முனைகளிலும் நிரந்தரமான போர் நிறுத்தம்
- இரானின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட மாட்டோம் என்ற அமெரிக்காவின் உறுதிமொழி
- 30 நாட்களுக்குள் அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை நீக்குதல்
- இரானிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுதல்
- "இரானின் ஏற்பாடுகளின் கீழ்" 30 நாட்களுக்குள் ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் திறத்தல்
- குறைந்தது 300 பில்லியன் டாலர் மதிப்பிலான இரானுக்கான மறுசீரமைப்புத் திட்டங்களை அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் வழங்குதல்
- இரானிய எண்ணெய் மற்றும் எரிசக்திப் பொருட்கள் மீதான தடைகளை நீக்குதல்
- அணு ஆயுதங்களைத் தயாரிக்க மாட்டோம் என்ற இரானின் உறுதிமொழியை மீண்டும் வலியுறுத்துதல்
- இப்பகுதியில் படைகளை அதிகரிக்க மாட்டோம் மற்றும் புதிய தடைகளை விதிக்கமாட்டோம் என்ற அமெரிக்காவின் உறுதிமொழி
"இரானின் முடக்கப்பட்ட நிதியில் பாதி விடுவிக்கப்பட்டு, எண்ணெய் மீதான தடைகள் இடைநிறுத்தப்பட்டு, கடற்படை முற்றுகை நீக்கப்படும் வரை இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தைகள் தொடங்காது" என்றும் மெஹர் செய்தி வெளியிட்டுள்ளது.
இறுதி ஒப்பந்தம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் தீர்மானம் மூலம் அங்கீகரிக்கப்படும் என்று அது தெரிவித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு