தாய்மாமன் தங்க மோதிர திட்டம்: யாருக்கெல்லாம் கிடைக்கும்? தவெக அரசுக்கு உள்ள சவால்கள் என்ன?

  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ரூ.755.83 கோடி மதிப்பில் 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்' தொடங்கி வைக்கப்பட உள்ளதாக, ஜூன் 23ஆம் தேதியன்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

திட்டத்தின்படி, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது. 'அரசின் கடன் சுமை அதிகரித்துள்ள நிலையில், இதுபோன்ற திட்டங்களுக்குக் காலவரையறை அவசியம்' என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் குறித்து அரசின் உத்தரவில் என்ன கூறப்பட்டுள்ளது? திட்டத்தைத் தொடர்வது சாத்தியமா?

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலின்போது தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 'மகளிர் நலன்' என்ற தலைப்பில் சில வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன.

அதன்படி, "தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தங்க மோதிரம், மென்மையான துணி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய 'தாய்மாமன் சீர் பெட்டகம்' வழங்கப்படும்" என்ற வாக்குறுதி இடம்பெற்றிருந்தது.

சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தவெக ஆட்சிப் பொறுப்பேற்று 40 நாட்களுக்கும் மேல் கடந்துவிட்ட நிலையில், 'தாய்மாமன் தங்க மோதிர திட்டம்' என்ற பெயரில் அது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வெற்றித் தமிழகம் தொலைநோக்குத் திட்டத்தில்' முக்கியமானதாக 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்' உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் எனவும், கடந்த ஜூன் 22ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகள் பயன்பெறுவார்கள் எனவும் அரசு அறிவித்துள்ளது.

தமிழர் பாரம்பரியத்தில் தாய்மாமன் சீர் என்ற மரபின்படி, தாயின் சகோதரர் புதிதாகப் பிறந்த குழந்தையை வரவேற்று வாழ்த்தும் வகையில் தங்கம் உள்ளிட்ட பரிசுகளை வழங்குவது வழக்கம். அதைப் பிரதிபலிக்கும் வகையில் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படுவதாக, அரசின் செய்திக் குறிப்பு கூறுகிறது.

முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதியன்று இந்தத் திட்டத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைக்கவுள்ளார்.

'ஆண்டுக்கு 4.2 லட்சம் பிரசவங்கள்'

ஜூன் 23ஆம் தேதியன்று இதுதொடர்பாக விரிவான உத்தரவை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டது. அந்த உத்தரவில், மாநிலத்தில் ஆண்டுதோறும் 7.8 லட்சம் பிரசவங்கள் நடக்கின்றன. இதில் 99.9% மருத்துவமனைகளில் நடப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவற்றில், அரசு சுகாதார நிலையங்களில் 4.2 லட்சம் பிரசவங்கள் நடப்பதாகவும், தாய் மற்றும் குழந்தை நல சேவையில் பொது சுகாதார அமைப்பின் முக்கியப் பங்கை இது பிரதிபலிப்பதாகவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகளில் பிரசவத்திற்கான சராசரி செலவாக 63,473 ரூபாய் உள்ளதாகவும் அரசு மருத்துவமனைகளில் அது 1,364 ரூபாய் என்ற அளவில் இருப்பதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

பொது சுகாதார சேவைகள் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தும் வகையில் 'தாய்மாமன் தங்க மோதிர திட்டம்' வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக, அரசின் உத்தரவு கூறுகிறது.

இது ஒரு நிலையான சொத்தாகவும் அரசு நிறுவனங்களுக்கு நீடித்த நற்பெயரைப் பெற்றுத் தருவதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

யாருக்கெல்லாம் கிடைக்கும்?

இதற்கான வழிமுறைகள் குறித்தும் அரசின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, தங்க மோதிரம் பெறுவதற்கான தகுதி வரம்புக்கு உட்பட்ட பயனாளிகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு சுகாதார நிலையங்களில் பிரசவம் மேற்கொள்ளும் அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களும் தகுதியுடையவர்கள்.
  • பொது சுகாதாரத் துறையின் பிஐசிஎம்இ (PICME pregnancy and infant cohort monitoring and evaluation) பதிவு செய்து ஆர்.சி.ஹச் (RCH ID) அடையாள எண்ணைப் பெற்றிருக்க வேண்டும்.
  • திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் பயனாளிகள், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, தொழிலாளர் நல வாரியங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, அஞ்சல் துறையால் வழங்கப்பட்ட முகவரி சான்று அல்லது பிறப்பிடச் சான்றிதழை வழங்க வேண்டும்.
  • பிறப்பு வரிசை (Birth order) எதுவாக இருந்தாலும் அனைத்து பச்சிளம் குழந்தைகளையும் இந்தத் திட்டம் உள்ளடக்கியுள்ளது.
  • பலமுறை பிரசவித்த தாய்மார்களும் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் பலன்களைப் பெறலாம்.
  • தங்க மோதிரங்கள் வழங்குவதில் பாலினப் பாகுபாடு எதுவுமின்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

'24 மணிநேர பாதுகாப்பு'

திட்டத்தைச் செயல்படுத்தும் பொறுப்பாளர்கள் குறித்தும் அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அதன் துறைத் தலைவர் (Dean), மாவட்ட துணை மருத்துவமனைகளில் தலைமை மருத்துவ அதிகாரி அல்லது மருத்துவ கண்காணிப்பாளர் பொறுப்பாளர்களாக இருப்பார்கள்.

பொருட்கள் அனைத்தும் 24 மணிநேரமும் செயல்படும் சிசிடிவி கண்காணிப்பு மற்றும் வலுவான இரு அடுக்கு மின்காப்பு அமைப்பு கொண்ட பாதுகாப்புப் பெட்டகங்களில் வைக்கப்படும். சிறிய மருத்துவ நிலையங்களுக்கு 94 மையங்கள் விநியோக மையங்களாகச் செயல்படும் எனவும் அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், "தங்க மோதிரங்களைக் கொள்முதல் செய்யும் பணிகள் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் சேவைக் கழகம் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், ஆண்டு தேவை பட்டியலின் அடிப்படையில் தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட உள்ளதாக" அரசு தெரிவித்துள்ளது.

மருத்துவப் பணிகள் சேவைக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர் மூலம் மாநிலம் முழுவதும் விநியோக மையங்களாக நிர்ணயிக்கப்பட்ட 94 மருத்துவமனைகளுக்கு அவை நேரடியாக விநியோகம் செய்யப்படவுள்ளது.

ஒரு தங்க மோதிரம் வழங்க எவ்வளவு செலவாகும்?

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தவும் கண்காணிக்கவும் பிரத்யேக நிர்வாக அமைப்பு அமைக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. மேலும், தங்க மோதிரங்களைக் கொள்முதல் செய்வதற்கு ஆகும் செலவுகளைப் பற்றி அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

ஒரு கிராம் தங்க மோதிரம் வாங்குவதற்கு தலா 17 ஆயிரம் ரூபாய் எனக் கணக்கிட்டு 4,41,667 பிரசவங்களுக்கான கணக்கு வெளியிடப்பட்டது. இத்துடன் நிர்வாக செலவையும் கணக்கிட்டு 755.83 கோடி ரூபாய் என திட்டச் செலவு மதிப்பிடப்பட்டுள்ளது.

நிர்வாக செலவில் கண்காணிப்பு, போக்குவரத்து, மதிப்பீடு, பயன்பாட்டுப் பொருட்கள், மென்பொருள் ஆகியவை அடங்கும் எனவும் அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

ஆண்டு முழுவதும் தங்கம் விலை தொடர்பாக சந்தையில் நிலவும் மாறுபாடுகளைக் கணக்கிட்டு இந்த விலையைக் குறிப்பிட்டிருக்கலாம் எனக் கருதுவதாகக் கூறுகிறார் சென்னை தங்க நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி.

"தற்போது ஒரு கிராம் தங்கத்தின் விலை 13,350 ரூபாய் (ஜூன் 24 காலை நிலவரப்படி) என்ற அளவில் உள்ளது. செய்கூலி, சேதாரம், வரி ஆகியவற்றைக் கணக்கிட்டால் மோதிரத்தின் விலை 15 ஆயிரம் ரூபாய் வரை வரும்," எனவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

'தாலிக்கு தங்கம்' முதல் 'தாய்மாமன் மோதிரம்' வரை

கடந்த 1989ஆம் ஆண்டு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம் என்ற பெயரில் ரூ.5 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது.

அந்தத் தொகை, 2009ஆம் ஆண்டில் ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 50 ஆயிரம் ரூபாயாக நிதியுதவி வழங்கப்பட்டது. அதனுடன், ஏழைப் பெண்களுக்கு நான்கு கிராம் தங்கம் வழங்கப்பட்டது.

அது எட்டு கிராம் தங்கம் என மாற்றப்பட்டு 2016ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வந்தது. 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இந்தத் திட்டம் நிறுத்தப்பட்டுவிட்டது.

இதுதொடர்பாக, 2022ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் நடந்த விவாதத்தில், 2018-2019ஆம் ஆண்டில் இருந்து தங்கம் வழங்குவது நிறுத்தப்பட்டுவிட்டதாக சமூக நலத்துறை அமைச்சராக இருந்த கீதா ஜீவன் தெரிவித்தார்.

தங்கம் விலை ஏற்ற இறக்கம் காரணமாக ஒப்பந்தம் எடுப்பதற்கு யாரும் முன்வரவில்லை எனவும் கொரோனா காலம் என்பதால் இரண்டு ஆண்டுகளாக எந்தப் பணியும் நடக்கவில்லை எனவும் கீதா ஜீவன் விமர்சித்தார்.

திட்டத்தின் பெயரை மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என்ற பெயரில் மாற்றி, உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை அப்போது முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதைக் குறிப்பிட்டு, "அதிமுக ஆட்சியில் ஒப்பந்தம் எடுப்பதற்கு யாரும் முன்வராததால் திட்டம் முடங்கியது. இதேபோல், தங்க மோதிரம் வழங்குவதிலும் சிக்கல் ஏற்படுமா?" என்று ஜெயந்திலால் சலானியிடம் கேட்டபோது, "அதிமுக ஆட்சியில் சுமார் நான்காயிரம் கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் செயல்படுத்தப்பட இருந்தது. ஆனால், தங்கத்தை விநியோகம் செய்வதில் வியாபாரிகள் இடையே தயக்கம் ஏற்பட்டது," என்றார்.

தற்போதைய சூழலில், தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தில் பங்கேற்பதற்கு போட்டி அதிகம் இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதாகக் கூறும் ஜெயந்திலால் சலானி, "ஓர் ஆண்டில் தங்கம் விலையில் ஏற்ற-இறக்கம் இருந்தாலும் அரசு நிர்ணயிக்கும் விலை போதுமானதாக உள்ளது" என்கிறார்.

'நிதிரீதியாக பல்வேறு சவால்கள்'

தமிழ்நாடு அரசின் கடன் சுமை பத்து லட்சம் கோடி ரூபாயாக உள்ளதாக, நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் கூறியுள்ள நிலையில், தங்க மோதிரம் திட்டத்தைச் செயல்படுத்துவதில் நிதிரீதியாகப் பல்வேறு சவால்கள் உள்ளதாகக் கூறுகிறார், முதலீட்டு ஆலோசகர் நாகப்பன்.

"தங்கம் கொடுக்க வேண்டுமா, மாணவர்களுக்கு ஸ்மார்ட் பலகை போன்ற வசதிகளைக் கொடுக்க வேண்டுமா என்பது அரசு எடுக்க வேண்டிய முடிவு. ஆனால் நடுத்தர மக்கள் மத்தியில் இதுதொடர்பாக விமர்சனங்கள் வரலாம்" என்கிறார் அவர்.

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சைக்கிள், லேப்டாப் போன்றவை மிக முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களாக பார்க்கப்படுவதாகக் கூறும் நாகப்பன், "இவை எதுவும் திரும்பிப் வரப் போவதில்லை என்றாலும் படிப்பு முடிந்தவுடன் பொருள் ஈட்டுவதற்கும் குடும்பத்தைக் கவனிப்பதற்கும் இவை பெரும் உதவியாக உள்ளதாக" குறிப்பிட்டார்.

மேலும், "தங்க மோதிரம் திட்டம் அப்படியான ஒன்று அல்ல" எனக் கூறிய அவர், "இதுபோன்ற திட்டங்களுக்கு காலவரையறையை நிர்ணயிக்க வேண்டும். அதற்குள் மக்கள் தங்கள் சொந்தப் பணத்தில் தங்கம் வாங்கும் சூழலை அரசு உருவாக்க வேண்டும்" என்றார்.

'காலவரையறை அவசியம்'

அதேவேளையில், தாய்மாமன் தங்க மோதிர திட்டம் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும்போது, அடுத்து வரும் தேர்தல்களில் கூடுதலாக தங்கம் வழங்குவோம் என அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளைக் கொடுப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

"அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்களை மட்டும் இலக்காக வைத்துச் செயல்படுத்தப்பட உள்ளது என்பதால் இத்திட்டம் அனைத்து தரப்பினருக்கும் சென்றடையாது" எனவும் நாகப்பன் தெரிவித்தார்.

"வரவுக்குள் செலவு இருக்க வேண்டும் என்பது முக்கியமானது. அதற்காக மக்கள் நலன் சார்ந்த திட்டங்களைத் தள்ளிப் போட முடியாது. அதேநேரம், மக்களே தங்கள் சொந்த செலவில் பொருட்களை வாங்கும் அளவுக்கு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் அரசின் செயல்பாடுகள் அமைய வேண்டும்," என்று வலியுறுத்தினார் நாகப்பன்.

'இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' - திருமாவளவன்

இந்த நிலையில், தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்களை ஒப்பிட்டுக் கூறும்போது, "கட்டணம் அதிகம் என்றாலும், ஏழை எளிய குடும்பத்தினர்கூட தாய்-சேய் பாதுகாப்பு கருதி தனியார் மருத்துவமனைகளையே நாடுகின்றனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில், "தங்க மோதிரம் வழங்குவதற்காக செலவு செய்யும் இந்த 755 கோடி ரூபாயைக் கொண்டு அரசு மருத்துவமனைகள் ஒவ்வொன்றிலும் தனியார் மருத்துவமனைகளைப் போல் அனைத்து உயரிய வசதிகளையும் கொண்ட 'பிரசவ வார்டுகளை' உருவாக்குவதுடன், தேவையான மருத்துவப் பணியாளர்களையும் நியமிப்பது அனைத்து தரப்பினருக்கும் பயன் அளிப்பதாக அமையும்."

மேலும், "இத்திட்டத்தின் மூலம் பிறந்த குழந்தைக்கு போடப்படும் தங்க மோதிரம் ஒரு சில மாதங்களிலேயே அக்குழந்தைகளின் கைகளுக்குப் பொருந்தாமலும் போய்விடும். எனவே, தமிழ்நாடு அரசு இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு