மைக்ரேன் அல்லது ஒற்றை தலைவலி ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிப்பது ஏன்?

ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு ஒற்றைத் தலைவலி தாக்குதல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு மூன்று மடங்கு அதிகம்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒற்றைத் தலைவலி மனநலத்தையும் பாதிக்கக் கூடும் (மாதிரிப் படம்)
    • எழுதியவர், சாரா பெல்
    • பதவி, குளோபல் ஹெல்த், பிபிசி உலக சேவை
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

யாரோ ஒருவர் நெற்றியைத் துளையிடுவது போன்ற கூர்மையான வலியுடன், இருண்ட அறையில் படுத்திருப்பது...

மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்படும் பலருக்கும் இது மிகவும் வலிமிகுந்த, பழக்கமான சூழ்நிலையாக இருக்கக்கூடும்.

இத்தகைய வலியை ஏற்படுத்தும் நோய், உறவுகள், வேலை மற்றும் மனநலம் ஆகியவற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

குறிப்பாக பெண்களையே இது அதிகம் பாதிக்கிறது. ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு ஒற்றைத் தலைவலி அதிகம் வருவதற்கான வாய்ப்பு மூன்று மடங்கு அதிகம்.

ஒற்றைத் தலைவலி ஏன் ஏற்படுகிறது? அதை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?

பிரிட்டனைச் சேர்ந்த மைக்ரேன் அறக்கட்டளையின் (Migraine Trust) கூற்றுப்படி, உலகளவில் சுமார் ஏழு பேரில் ஒருவர் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்படுகின்றனர். அதாவது, 100 கோடிக்கும் அதிகமான மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது ஒரு மரபியல் மற்றும் நரம்பியல் நோயாகும். இதில் ஏற்படும் மாற்றங்களுக்கு மூளை அதிக உணர்திறன் கொண்டதாகிறது.

பிரிட்டனில் உள்ள தேசிய மைக்ரேன் மையத்தின் மைக்ரேன் சிறப்பு மருத்துவர் கேட்டி முன்ரோ கூறுகையில், "சிலருக்கு ஒற்றைத் தலைவலி தொடர்பான மரபணுக்கள் இருக்கலாம். ஆனால், அவை ஒருபோதும் செயல்படாமல் இருக்கலாம். அத்தகையவர்கள் சிக்கலின்றி தங்கள் வாழ்க்கையை வாழ்கின்றனர்"என்கிறார்.

மற்றவர்களுக்கு வெவ்வேறு வெளிப்புற காரணிகள் மூளையில் உள்ள குறிப்பிட்ட பாதைகளைச் செயல்படுத்தி, ஒற்றைத் தலைவலி அறிகுறிகளை ஏற்படுத்தும் நரம்பியல் வேதிப்பொருட்களை வெளியிடக்கூடும்.

இதில் தலைவலி மட்டுமின்றி, வாந்தி, தலைச்சுற்றல் மற்றும் மூளை மந்தநிலை ஆகியவையும் ஏற்படலாம்.

"சில நேரங்களில் ஒருவருக்கு ஒரு வகையான அறிகுறிகள் இருக்கலாம். அடுத்த முறை அவர்களுக்கு முற்றிலும் வேறுபட்ட அறிகுறிகள் ஏற்படலாம். இது வெவ்வேறு குடும்ப உறுப்பினர்களிடையே மாறுபடலாம். வாழ்நாள் முழுவதும் நிச்சயமாக மாறக்கூடும்" என ஒற்றைத் தலைவலி குறித்து "ஹெட்ஸ் அப்" என்ற பாட்காஸ்ட்டை நடத்தி வரும் மருத்துவர் முன்ரோ கூறுகிறார்.

ஒற்றை தலைவலிக்கு என்ன காரணம்?

"சில நேரங்களில் ஒருவருக்கு ஒரு வகையான அறிகுறிகள் இருக்கலாம். அடுத்த முறை அவர்களுக்கு முற்றிலும் வேறுபட்ட அறிகுறிகள் ஏற்படலாம். இது வெவ்வேறு குடும்ப உறுப்பினர்களிடையே மாறுபடலாம். மேலும், வாழ்நாள் முழுவதும் நிச்சயமாக மாறக்கூடும்" என ஒற்றைத் தலைவலி குறித்து "ஹெட்ஸ் அப்" என்ற பாட்காஸ்ட்டை நடத்தி வரும் மருத்துவர் முன்ரோ கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒற்றைத் தலைவலியின் அறிகுறிகளில் தலைவலி, வாந்தி, தலைச்சுற்றல் மற்றும் சிந்திக்கும் திறன் குறைதல் ஆகியவை அடங்கும்.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

ஒரே ஒரு காரணியால் மட்டுமே ஒற்றைத் தலைவலி ஏற்படுவது அரிது.

பல சிறிய தூண்டுதல்கள் ஒன்றுசேர்ந்து, இறுதியில் அந்த நபரின் அதிகபட்ச வலி தாங்கும் அளவை எட்டும்போது, மைக்ரேன் வலி ஏற்படலாம்.

இதில் ஹார்மோன் மாற்றங்கள், ரத்தத்தில் சர்க்கரையின் அளவில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள், போதிய தூக்கம் இல்லாமை அல்லது அதிகமாகத் தூங்குவது ஆகியவை அடங்கும்.

இதில் மன அழுத்தம் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால், மன அழுத்தம் நிறைந்த காலகட்டத்துக்குப் பிறகு ஏற்படும் அமைதியான காலகட்டம்கூட மைக்ரேன் தாக்குதலைத் தூண்டக்கூடும்.

இது குறிப்பாக பெண்களுக்கு அதிகமாக ஏற்படுவதாக மருத்துவர் முன்ரோ கூறுகிறார். "பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்வது, எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தி வைத்திருப்பது, குடும்பத்தில் உள்ள அனைவரின் அட்டவணையையும் கவனித்துக்கொள்வது என பலவற்றை பெண்கள்தான் சமாளித்துக் கொண்டிருக்கிறார்கள்" என அவர் கூறுகிறார்.

வானிலையில் ஏற்படும் மாற்றங்களும், உதாரணமாக வெப்பநிலை, வளிமண்டல அழுத்தம் மற்றும் ஈரப்பதத்தில் ஏற்படும் மாற்றங்களும் ஒற்றைத் தலைவலியைத் தூண்டக்கூடும். காற்றழுத்தத்தில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற வானிலை மாற்றங்களின் நேரடி தாக்கம் உடலில் ஏற்படுவதாலும் அல்லது நீர்ச்சத்து குறைதல் போன்ற அதனுடன் தொடர்புடைய விளைவுகளாலும் இது ஏற்படலாம்.

உடலில் இரும்புச்சத்து குறைவாக இருப்பது, செலியாக் நோய் அல்லது தைராய்டு சுரப்பி குறைவாகச் செயல்படுவது போன்ற உடல்நலப் பிரச்னைகளும் ஒற்றைத் தலைவலியைத் தூண்டக்கூடும்.

ஹார்மோன்கள் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன?

ஒற்றைத் தலைவலி பாதிப்பு குழந்தைகளில் சுமார் 10 சதவீதம் பேருக்கு ஏற்படுகிறது. இதில் ஆண், பெண் குழந்தைகள் சம அளவில் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், பருவமடைந்த பிறகு, பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி தொடங்கும்போது இந்த நிலை மாறுகிறது.

"இந்த வயதுக்குப் பிறகு பெண் குழந்தைகளுக்கு மைக்ரேன் அதிகரிப்பதற்கும், ஆண்களைவிட அதிகமான பெண்கள் மைக்ரேன் தாக்குதலால் பாதிக்கப்படுவதற்கும் இதுவும் ஒரு காரணம்" எனக் கூறும் மருத்துவர் முன்ரோ, "இந்த நிலை மாதவிடாய் முற்றிலும் நின்றுவிடும் மெனோபாஸ் காலம் வரை நீடிக்கிறது"என்கிறார்.

ஹார்மோன்களில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் ஒற்றைத் தலைவலிக்கு முக்கிய காரணமாக உள்ளன.

ஒரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சி தொடங்குவதற்கு சற்று முன்பு ஈஸ்ட்ரோஜன் அளவில் ஏற்படும் திடீர் வீழ்ச்சி, ஒற்றைத் தலைவலியை தொந்தரவானதாக மாற்றக்கூடும்.

பெரிமெனோபாஸ் காலத்தில் ஹார்மோன் அளவுகளில் ஏற்படும் விரைவான மாற்றங்கள் ஒற்றைத் தலைவலியை மேலும் மோசமாக்கக்கூடும். பெரிமெனோபாஸ் என்பது ஒரு பெண்ணின் மாதவிடாய் முற்றிலும் நிற்பதற்கு முந்தைய காலமாகும்.

"ஹார்மோன்கள் முற்றிலும் நிலையற்றதாகிவிடுகின்றன. பெரிமெனோபாஸ் காலத்தில் மைக்ரேன் ஒரு பெரிய பிரச்னையாக உள்ளது. பல பெண்களுக்கு இது ஒரு பெரிய சிக்கலாக இருக்கிறது" என அவர் கூறுகிறார்.

ஆனால், இது ஹார்மோன்களால் மட்டும் ஏற்படுவதில்லை. "நீங்கள் ஒரே நேரத்தில் பதின்பருவ குழந்தைகளையும் வயதான பெற்றோரையும் கவனித்துக்கொண்டிருக்கலாம். மெனோபாஸ் அறிகுறிகள் காரணமாக உங்களுக்கு தூங்குவதில் சிரமம் ஏற்படுவதும் இதற்குக் காரணமாக இருக்கலாம்" என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

மாதவிடாய் நின்ற பிறகு, ஹார்மோன் அளவுகள் நிலையாக மாறுவதால், ஒற்றைத் தலைவலித் தாக்குதல்களின் தீவிரம் மற்றும் எண்ணிக்கை குறையக்கூடும்.

ஒற்றைத் தலைவலி ஏற்பட்டிருக்கிறதா என்பதை எப்படி அறிவது?

மாதவிடாய் நின்ற பிறகு, ஹார்மோன் அளவுகள் நிலையாக மாறுவதால், ஒற்றைத் தலைவலித் தாக்குதல்களின் தீவிரம் மற்றும் எண்ணிக்கை குறையக்கூடும்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தலைவலி கணிசமாகக் குறைந்த பிறகும், அது ஓரிரு நாட்களுக்கு நீடிக்கலாம் (மாதிரிப் படம்).

ஒற்றைத் தலைவலி நான்கு கட்டங்களாக ஏற்படுகிறது. முதல் கட்டம், அறிகுறிக் கட்டம் அல்லது ஆரம்ப எச்சரிக்கைக் கட்டம் எனப்படுகிறது.

இந்த காலகட்டத்தில், மூளையில் ஏற்படும் மாற்றங்கள் படிப்படியாக அதிகரிக்கின்றன. சிலருக்கு கொட்டாவி, அதிகப்படியான சோர்வு அல்லது கழுத்து வலி போன்ற எச்சரிக்கை அறிகுறிகள் ஏற்படலாம்.

அடுத்த கட்டம் ஆரா எனப்படுகிறது. இது ஒரு மணி நேரம் வரை நீடிக்கலாம். பொதுவாக, கண் முன்னே வளைந்த கோடுகள் அல்லது வெள்ளைப் புள்ளிகள் தோன்றுவது போன்ற பார்வைக் கோளாறுகள் இதில் ஏற்படும். ஒற்றைத் தலைவலி கொண்ட நோயாளிகளில் சுமார் மூன்றில் ஒருவருக்கு இது ஏற்படுகிறது.

இதற்குப் பிறகு தலைவலி அல்லது மிகக் கடுமையான நிலை ஏற்படுகிறது. இது 4 முதல் 72 மணி நேரம் வரை நீடிக்கலாம். இந்த நேரத்தில் சிலருக்கு குமட்டல் மற்றும் வாந்தியும் ஏற்படலாம்.

இறுதிக் கட்டம் தலைவலிக்குப் பிந்தைய அல்லது தலைவலித் தணிவு நிலை எனப்படுகிறது. தலைவலி பெருமளவு குறைந்த பிறகும்கூட, இந்தக் கட்டம் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் வரை நீடிக்கலாம்.

"கனமான நீராவி உருளை ஒன்று உங்கள் மீது உருண்டு சென்றது போன்ற உணர்வு ஏற்படும்" என விவரிக்கும் மருத்துவர் முன்ரோ,

"நீங்கள் மெதுவாக உங்களை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வந்து, வேலைக்குத் திரும்புவீர்கள். பொதுவாக, இந்தக் கட்டத்தில்தான் மக்கள் வேலைக்குத் திரும்புகின்றனர். ஆனால், அவர்களால் முழுமையாக இயல்பாகச் செயல்பட முடியாமல் போகலாம்" என்று குறிப்பிடுகிறார்.

ஒற்றை தலைவலியை கட்டுப்படுத்த என்னென்ன வாழ்க்கைமுறை மாற்றங்கள் உதவும்?

ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்படுபவர்கள், காஃபின் அல்லது சாக்லேட் போன்ற மைக்ரேனைத் தூண்டக்கூடிய காரணிகளைத் தவிர்க்க வேண்டும் என பாரம்பரியமாக அறிவுறுத்தப்பட்டு வந்தது. அதற்குப் பதிலாக, நமது அன்றாட நடைமுறையை முடிந்தவரை சீராக வைத்துக்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும் என மருத்துவர் முன்ரோ கூறுகிறார்.

ஒற்றைத் தலைவலி தொடங்குவதற்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பு என்ன மாற்றம் ஏற்பட்டது என்பதை யோசித்துப் பார்ப்பது உதவியாக இருக்கும் என அவர் கூறுகிறார்.

மைக்ரேன் தொடர்பான துப்பறிவாளரைப் போல செயல்பட்டு, இதுபோன்ற காரணிகளை அடையாளம் காண்பதன் மூலம், அவற்றைத் தவிர்க்க முயற்சி செய்யலாம்.

ஆனால், வாழ்க்கை எப்போதும் திட்டமிட்டபடி அமைவதில்லை. "நாம் அனைவரும் சரியானவர்களாக இருக்க முடியாது. எனவே, உங்களை நீங்களே குறை கூறிக்கொள்ளாமல், உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்" என மருத்துவர் முன்ரோ அறிவுறுத்துகிறார்.

சரியான நேரத்தில் உணவு சாப்பிடுவதும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையாமல் பார்த்துக்கொள்வதும் முக்கியம். அதேபோல், இரவில் நன்றாகத் தூங்க முயற்சி செய்வதும் அவசியம். முடிந்தவரை, தினமும் ஒரே நேரத்தில் தூங்கச் சென்று, ஒரே நேரத்தில் எழுந்திருக்க முயற்சி செய்ய வேண்டும்.

உடற்பயிற்சி அனைவருக்கும் முக்கியமானது. ஆனால், அதுவும் கூட ஒற்றைத் தலைவலியைத் தூண்டக்கூடும். எனவே, ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்படுபவர்கள் போதுமான அளவு உணவு உட்கொள்வதையும், உடலில் போதுமான நீர்ச்சத்து இருப்பதையும் உறுதி செய்துகொள்ள வேண்டும்.

இந்த அணுகுமுறை, வார இறுதி நாட்கள் ஏன் நமக்கு ஆபத்தானதாக இருக்கக்கூடும் என்பதை விளக்க உதவும் என மருத்துவர் முன்ரோ கூறுகிறார்.

வெள்ளிக்கிழமைகளில் நாம் என்ன வித்தியாசமாகச் செய்கிறோம்?

"வேலையை முடிப்பதற்காக நீங்கள் அவசரமாக இருக்கலாம். மாலையில் ஓய்வெடுக்கும்போது, வழக்கமாக வார நாட்களில் அருந்தாத ஒரு கிளாஸ் ஒயின் அருந்தலாம். வழக்கத்தைவிட சற்று தாமதமாகத் தூங்கச் செல்லலாம்" என அவர் கூறுகிறார்.

அதேபோல், "எதை மாற்றிக் கொண்டிருக்கிறோம், எதை இன்னும் சீராக வைத்துக்கொள்ள முடியும் என்பதைத்தான் நாம் சிந்திக்க வேண்டும்" என்றும் குறிப்பிடுகிறார்.

எந்தெந்த உணவுகளும் மருந்துகளும் பயனுள்ளதாக இருக்கும்?

இந்த அணுகுமுறை, வார இறுதி நாட்கள் ஏன் நமக்கு ஆபத்தானதாக இருக்கக்கூடும் என்பதை விளக்க உதவும் என மருத்துவர் முன்ரோ கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒற்றைத் தலைவலி நான்கு கட்டங்களில் ஏற்படுகிறது (மாதிரி படம்)

ஒற்றைத் தலைவலிக்கு ஆரம்ப நிலையிலேயே பயனுள்ள மருந்துகளைக் கொண்டு சிகிச்சையளிக்கப்படுவதை உறுதி செய்வது மிகவும் முக்கியம்.

வலி எந்த அளவுக்கு தீவிரமாகப் போகிறது என்பதைப் பார்க்கலாம் என நினைத்து, பலர் மருத்துவரை அணுகுவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்கிறார்கள் என மருத்துவர் முன்ரோ கூறுகிறார்.

"அதற்குள், அதன் தாக்கங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அதிகரித்து, நீங்கள் என்ன செய்தாலும் அதைத் தடுக்க முடியாத நிலையை அடைந்துவிடும். ஆரம்பத்திலேயே மருந்து எடுத்துக்கொள்வது அந்தத் தாக்கம் பெரிதாகாமல் தடுக்க உதவுகிறது" என அவர் கூறுகிறார்.

குமட்டலைத் தடுக்கும் மாத்திரைகள் மற்றும் இபுபுரூஃபன் அல்லது ஆஸ்பிரின் போன்ற வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்ளலாம் என மருத்துவர் முன்ரோ கூறுகிறார்.

பாராசிட்டமால் குறைவான செயல்திறன் கொண்டது. கோடீனைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு டாக்டர் முன்ரோ எச்சரிக்கிறார். ஏனெனில், அது தலைவலியை மேலும் மோசமாக்கக்கூடும்.

டிரிப்டான்களும் ஒரு சிகிச்சை வாய்ப்பாக உள்ளன. இவை ஒற்றைத் தலைவலிக்கென பிரத்யேகமாகப் பயன்படுத்தப்படும் மருந்துகள். இவற்றை மருத்துவர் பரிந்துரைக்கலாம்.

மெக்னீசியம் மற்றும் வைட்டமின் பி2 போன்ற ஊட்டச்சத்து மாத்திரைகள் மைக்ரேன் தாக்குதல்களைக் குறைக்க உதவக்கூடும் என்பதற்குச் சில ஆதாரங்கள் இருப்பதாக மருத்துவர் முன்ரோ கூறுகிறார்.

மாதவிடாய் காலத்தில் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்படும் பெண்கள், ஹார்மோன் ஏற்ற இறக்கங்களைச் சீர்படுத்த கருத்தடை மாத்திரைகள் உதவுவதாகக் கருதுகின்றனர். பெரிமெனோபாஸ் காலத்திலும் ஹார்மோன் மாற்று சிகிச்சை (HRT) உதவக்கூடும்.

எந்தெந்த நரம்பியல் வேதிப்பொருட்கள் முக்கியமானவை என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். சிலருக்கு சிஜிஆர்பி (CGRP) எனப்படும் ஒரு பெப்டைட் முக்கியப் பங்கு வகிக்கிறது. தற்போது, அதன் செயல்பாட்டைத் தடுக்கும் சிகிச்சைகள் கிடைக்கின்றன.

மற்ற சிகிச்சைகளில் போடோக்ஸும் அடங்கும். வலியை ஏற்படுத்தும் வேதிப்பொருட்களை இது தடுக்கக்கூடும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். அக்குபஞ்சர், யோகா, டாய் சி மற்றும் வலியை மறுபரிசீலனை செய்யும் சிகிச்சை போன்ற சிகிச்சைகளும் உதவக்கூடும்.

மக்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான விஷயம், மைக்ரேன் குறித்து மேலும் தெரிந்துகொள்வதுதான் என்கிறார் மருத்துவர் முன்ரோ.

"நம்பிக்கைக்கு நிறைய இடம் உள்ளது. எனவே, நீங்கள் எல்லாவற்றையும் முயற்சி செய்துவிட்டதாக எண்ணி நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள், ஏனெனில், அது அப்படி நடக்காது" என்றும் அவர் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு