தருமபுரியில் 13 ஆண்டுகளாகக் கிடைக்காத மகனை ஏஐ உதவியுடன் கண்டுபிடித்து தாயுடன் சேர்த்து வைத்த போலீஸ்

தருமபுரியில் தனது தாயிடம் கோபித்துக் கொண்டு, 13 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறி தொடர்பின்றி இருந்த மகன், காவல்துறையினரால் திருப்பூரில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டு தாயுடன் சேர்த்து வைக்கப்பட்டார்.
ஓர் ஆண்டுக்குள் அடுத்தடுத்து கணவர் மற்றும் தாயை இழந்து வேதனையில் இருந்த தனக்குத் தனது மகன் மீண்டும் கிடைத்தது பெருமகிழ்ச்சியாக இருப்பதாக பிபிசியிடம் தெரிவித்தார் தாய் கிரிஜா.
ஆனால் தனது குடும்பத்துடன் சேர்ந்ததில் மகிழ்ச்சியாக இருந்தாலும், தந்தை இறந்துவிட்ட தகவல் தன்னைப் பெரிதும் பாதித்திருப்பதாக பிபிசியிடம் கூறினார் மகன் தீபக் ராஜா.
நவீன ஏஐ தொழில்நுட்பத்தால் காணாமல் போனவரின் தற்போதைய வயதுக்குரிய புகைப்படத்தை வரைந்து அதன் அடிப்படையில் குறிப்பிட்ட ஆதார் எண்ணுக்குப் பெறப்பட்ட சிம் கார்டை வைத்து, அந்த எண்ணை வைத்து அவரைக் கண்டுபிடித்ததாக இவர்களை இணைப்பதற்கு முக்கியக் காரணமாக இருந்த காவல்துறையினர் பிபிசியிடம் தெரிவித்தனர்.

திட்டியதால் 17 வயதில் சென்ற மகனை 30 வயதில் மீண்டும் சந்தித்த தாய்
தருமபுரி காந்தி நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி கிரிஜா. இந்தத் தம்பதியினருக்கு, 2 மகன்கள், ஒரு மகள் இருந்தனர். இவர்களின் இரண்டாவது மகன் தீபக்ராஜா, கடந்த 2014ஆம் ஆண்டில் வீட்டைவிட்டு கோபித்துக் கொண்டு வெளியே சென்றவர், திரும்பி வரவேயில்லை.
அவருடைய தந்தை ராஜேந்திரன், தர்மபுரி பி1 காவல் நிலையத்தில் இது பற்றிப் புகார் அளித்தார். ஆனால் எங்கு தேடியும் மகன் கிடைக்கவே இல்லை. ராஜேந்திரனும், கிரிஜாவும் அவ்வப்போது காவல் நிலையம் சென்று தனது மகன் பற்றி ஏதாவது தகவல் கிடைத்ததா என்று கேட்டு வந்துள்ளனர்.
கடந்த ஆண்டில் உடல்நலக் குறைவால் ராஜேந்திரன் உயிரிழந்தார். அதன் பிறகு தீபக் ராஜா குறித்து ஏதாவது தகவல் வந்துள்ளதா என்று காவல்துறையினரிடம் கிரிஜா தொடர்ந்து விசாரித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த அக்டோபர் 13ஆம் தேதியன்று, தர்மபுரி பி1 காவல்துறையினர், கிரிஜாவை தொடர்பு கொண்டு, தங்கள் மகன் தீபக் ராஜாவை கண்டுபிடித்துவிட்டதாகவும், திருப்பூரில் இருந்து அவரை அழைத்து வந்து கொண்டிருப்பதாகவும் தகவல் கூறியுள்ளனர்.
தருமபுரி காவல் நிலையத்தில் அன்றிரவு, தாயுடன் மகனை சேர்த்து வைத்துள்ளனர். ஏறத்தாழ 13 ஆண்டுகளுக்கு முன்பு, பிரிந்து போய் தற்போது மீண்டும் சந்தித்துள்ள அந்த தாய்–மகனின் சந்திப்பு தருணத்தில் எடுக்கப்பட்ட காணொளி நெகிழ்ச்சியூட்டுவதாக உள்ளது.
இருவரும் கண்ணீர் சிந்தி, கட்டிப்பிடித்து அழும் காட்சிகளும், இருவரையும் வாழ்த்தி அறிவுரை கூறி தருமபுரி பி1 காவல் நிலைய அதிகாரிகள் அனுப்பி வைக்கும் காட்சிகளும் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

காணாமல் போன ஒருவரை நவீன தொழில்நுட்பத்தால் எப்படிக் கண்டுபிடித்தனர் என்பது குறித்து தமிழ்நாடு காவல்துறை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள விளக்கப்படமும் வாழ்த்துகளைப் பெற்று வருகிறது.
பிபிசியிடம் பேசிய தீபக்ராஜாவின் தாயார் கிரிஜா, ''என் மகன் பத்தாம் வகுப்பு முடித்ததும் பாலிடெக்னிக் கல்லூரியில் இசிஇ டிப்ளமோ சேர்த்தோம். முதலாம் ஆண்டு படித்து முடித்த அவன், இரண்டாம் ஆண்டு துவக்கத்தில் ஏதோவொரு காரணத்துக்காக நான் திட்டியதும் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டுச் சென்று விட்டான். காலேஜ் போவதாகச் சென்றவன் திரும்பி வரவேயில்லை. அப்போது என் கணவர் இருந்தார். அவர்தான் புகார் கொடுத்தார். ஊர் ஊராகச் சென்று அவனைத் தேடினோம். எங்கேயுமே கிடைக்கவில்லை'' என்றார்.
கிரிஜா பகிர்ந்த தகவலின்படி, அவருடைய தந்தை ஜெகநாதன், ஓய்வு பெற்ற காவல் துணை கண்காணிப்பாளர். தற்போது கோவையில் வசித்து வருகிறார். பர்னிச்சர் கடை நடத்தி வந்த கிரிஜாவின் கணவர் ராஜேந்திரன், கடந்த ஆண்டில் உடல் நலக்குறைவால் இறந்த பிறகு, கிரிஜா தற்போது தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். ராஜேந்திரன்-கிரிஜா தம்பதியினரின் மகள் கோவையிலுள்ள பொறியியல் கல்லூரியில் பிஇ மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். மூத்த மகன் நிக்லேஷ், கோவையில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.
''அவன் காணாமல் போன பின்பு, விபத்தில் அடையாளம் தெரியாதவர்கள் யார் இறந்திருந்தாலும் அந்தப் புகைப்படங்களை போலீசார் எங்களிடம் காட்டுவார்கள். ஆனால் அவனைப் பற்றி எந்தத் தகவலுமே கிடைக்கவில்லை. அவன் சிறுவனாக இருந்தபோது அவனுக்கு ஆதார் எடுத்ததால், மொபைல் எண்ணை தொடர்பு எண்ணாகக் கொடுத்திருந்தோம். இரு ஆண்டுகளுக்கு முன்பு, அவனுடைய ஆதார் எண்ணுக்கு ஓடிபி அனுப்பியபோது, அது என்னுடைய மொபைல் எண்ணுக்கு வராமல் வேறு எண்ணுக்குச் சென்றது. அதுபற்றி போலீசில் கூறினேன். அவர்கள் அதை வைத்து மீண்டும் விசாரிப்பதாகக் கூறினர்'' என்றார் கிரிஜா.
மேலும், "அந்த நேரத்தில் என் கணவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டதால் என்னால் காவல்துறையைத் தொடர்ந்து அணுக முடியவில்லை. ஓராண்டுக்கு முன்பு கணவர் இறந்துவிட்டார். அடுத்த சில நாட்களிலேயே எனது தாயாரும் இறந்துவிட்டார். என் கணவர் இறந்த பிறகு கடையை நடத்த முடியாமல் கொடுத்துவிட்டேன். என் மகளின் படிப்புக்காக வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் இருந்ததால் மீண்டும் போலீசாரிடம் சென்று எதையும் கேட்க முடியவில்லை'' என்றார்.
காணாமல் போனவரை கண்டுபிடிக்க உதவிய ஏஐ, சமூக ஊடகம், ஆதார் எண்

பட மூலாதாரம், TNPOLICE/INSTAGRAM
தருமபுரி பி1 காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வரும் சுந்தரமூர்த்தி என்பவர்தான் தீபக்ராஜா காணாமல் போன வழக்கைப் பற்றி பல ஆணடுகளாக விசாரித்து வந்துள்ளார். அவர் இடையில் வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்டு, சமீபத்தில் அதே பி1 காவல் நிலையத்துக்கு மீண்டும் வந்தபோது, தீபக் ராஜா ஆதார் எண் பற்றிய விபரங்களை கிரிஜாவிடம் கேட்டு வாங்கியுள்ளார்.
''எஸ்ஐ சுந்தரமூர்த்தியிடம் எனது மகனின் ஆதார் அட்டை நகலைக் கொடுத்தேன். அதற்கு அனுப்பிய ஓடிபி சென்ற எண்ணின் கடைசி எண்களை வைத்து அவர் அதுபற்றி விசாரித்து வந்துள்ளார். அவரும், மற்ற காவல் துறையினரும் பல்வேறு முயற்சிகள் எடுத்து என் மகனைக் கண்டுபிடித்து மீண்டும் என்னுடன் சேர்த்துள்ளனர். ஓராண்டுக்குள் அடுத்தடுத்து கணவர், தாயாரை இழந்து துயரத்தில் இருந்த எனக்கு என் மகன் மீண்டும் கிடைத்ததில் பெரிய மகிழ்ச்சி'' என்று பிபிசியிடம் தெரிவித்தார் கிரிஜா.
ஆதார் எண்ணை வைத்து, தீபக்ராஜாவை கண்டுபிடித்தது குறித்து பிபிசியிடம் விளக்கினார் தர்மபுரி பி1 காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி.
''நான் கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்து தீபக்ராஜா காணாமல் போன வழக்கைக் கையாண்டு வந்தேன். பல்வேறு விவரங்களையும் சேகரித்துக் கொண்டிருந்த சூழலில், வேறு காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டேன். மீண்டும் இங்கு சமீபத்தில் மாறி வந்தபோது, ஆதார் எண் ஓடிபி மாறிச் செல்வது தெரிய வந்தது. அந்த எண் 618 என்ற எண்ணில் முடிவது மட்டும் தெரிந்தது. அந்த எண்ணைக் கேட்டு UIDAI (Unique Identification Authority of India) அதிகாரிகளிடம் கோரியும் கைரேகை இல்லாமல் எண்ணைத் தர முடியாது என்று மறுத்துவிட்டனர்'' என்றார் அவர்.
அதற்குப் பிறகு, தேசிய அளவில் புலனாய்வு அமைப்புகளுக்கான கட்டமைப்பு பயன்படுத்தும் ஏஐ தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி (Natgrid Tool) தீபக்ராஜாவின் சிறுவயது புகைப்படத்தை வைத்து, 2 ஆண்டுகளுக்கு முன்பு அவர் எப்படி இருந்திருப்பார் என்று ஒரு புகைப்படத்தை காவல்துறையினர் தயார் செய்துள்ளனர். அந்த புகைப்படத்தை வைத்து, சிம் கார்டு வாங்கியுள்ள நபரைக் கண்டுபிடிக்க முயன்றுள்ளனர்.

அந்தப் புகைப்படத்தை வைத்து ஏதாவது சமூக ஊடகக் கணக்கு ஒத்துப் போகிறதா என்று பார்த்துள்ளனர்.
அதில் தீபக்ராஜா வைத்திருந்த சமூக ஊடகக் கணக்கு ஒன்று தெரிய வந்துள்ளது. அத்துடன் திருப்பூரில் அந்தப் புகைப்படத்தை வைத்து சிம்கார்டு வாங்கப்பட்டதும், அந்த எண் 618 என்ற எண்ணில் முடிவதையும் காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். அந்த சிம்கார்டு வைத்துள்ள நபர், திருப்பூரில் உள்ள ஒரு தனியார் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருவதையும் அவருடைய பெயர் தீபக்ராஜா என்பதையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். பிறகு, அவரைத் தேடி தருமபுரி எஸ்ஐ சுந்தரமூர்த்தி தலைமையில் 2 காவலர்கள் அடங்கிய குழுவினர், கடந்த அக்டோபர் 13 ஆம் தேதியன்று திருப்பூர் சென்றுள்ளனர்.
''நாங்கள் தீபக்ராஜாவை தேடிச்சென்றபோது, அவருடைய எண் இருந்த லொகேஷன் தொடர்ந்து மாறிக் கொண்டே இருந்தது. அதன்பின் அவருடன் அடிக்கடி பேசும் நண்பர் ஒருவரைப் பிடித்து, அவரிடம் லோக்கல் போலீஸ் என்று கூறி, தீபக்ராஜா போனில் இருந்து தொடர்ந்து மெசேஜ் வருவதாகக் கூறி, அவரையும் அழைத்துக் கொண்டு தீபக்ராஜா இருக்குமிடத்திற்கே சென்றோம்.
அவரைப் பார்த்த பிறகே தருமபுரி போலீஸ் என்பதையும், அவரைத் தேடி வந்த தகவலையும் கூறி தருமபுரிக்கு அழைத்துச் சென்று, அவரது தாயிடம் ஒப்படைத்தோம். இந்த தொழில் நுட்பம் முன்பே இருந்திருந்தால் பல ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்திருக்கலாம். தொழில்நுட்பம் பெரிதும் கைகொடுத்ததுடன் எங்கள் குழுவின் கடும் முயற்சி இதைச் சாத்தியமாக்கியது'' என்றார் எஸ்ஐ சுந்தரமூர்த்தி.
தாயார் தன்னைத் திட்டியதால் கோபத்தில் வீட்டை விட்டு வெளியே சென்ற தனது மகன் தீபக்ராஜா, பல நாட்கள் கழித்து திரும்பிச் சென்றாலும் தான் திட்டுவோம் என்று நினைத்தே வராமல் இருந்து விட்டதாகத் தன்னிடம் தெரிவித்ததாகக் கூறினார் கிரிஜா.
கடந்த அக்டோபர் 13ஆம் தேதியன்று தருமபுரியில் தன் மகனைச் சந்தித்த கிரிஜா, மறுநாள் கோவைக்கு அழைத்து வந்து தன் மகளையும் சந்திக்க வைத்துள்ளார். தற்போது தீபக்ராஜா தன்னுடைய மூத்த மகன் வீட்டில் இருப்பதாகவும் ஆயுத பூஜைக்கு தருமபுரி வரவிருப்பதாகவும் தெரிவித்தார் கிரிஜா.
''என் மகள் யுகேஜி படிக்கும்போது, என் மகன் வீட்டைவிட்டுப் போய்விட்டான். அதனால் அவளுக்கு சின்ன அண்ணனின் முகமே மறந்துவிட்டது. இருவரும் சந்தித்துக் கொண்டபோது, அவனைப் பார்த்ததும் அப்பாவை பார்ப்பது போலவே இருப்பதாகக் கூறி கதறி அழுதுவிட்டாள்'' என்றார் கிரிஜா.
தனது தாயாரையும், குடும்பத்தினரையும் சந்தித்தது குறித்து பிபிசியிடம் பேசிய தீபக்ராஜா, ''ஏதேதோ நடந்துவிட்டது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு என் அம்மாவையும், அண்ணன், தங்கையையும் பார்த்ததில் மகிழ்ச்சி. ஆனால் என் தந்தை இறந்து விட்டார் என்பதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால் இப்போது நான் பேசக்கூடிய சூழ்நிலையில் இல்லை'' என்று வேதனையுடன் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































