ஆபாச குறுஞ்செய்தி புகார்: தவெக எம்எல்ஏவை அழைத்துச் சென்ற காவல்துறை - என்ன நடந்தது?

பட மூலாதாரம், PTI
(இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)
ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகாரில் கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்ஏ. அருள் விக்னேஷை விசாரணை அதிகாரி சிருஷ்டி சிங் தலைமையிலான காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் உள்ள அவரது வீட்டின் முன்பு இன்று மாலை காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். வீட்டின் முன்பு கூடியிருந்த தவெகவினரை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். பின்னர், வீட்டிற்குள் சென்ற காவல்துறையினர் சுமார் 6.30 மணியளவில் அருள் விக்னேஷை தங்களது வேனில் அழைத்துச் சென்றனர்.
ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக பெண் ஐபிஎஸ் அதிகாரியும் திருப்பூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளருமான ஷ்ருஷ்டி சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் நவம்பர் 24-ஆம் தேதி தெரிவித்துள்ளது.
உள் புகார்கள் குழு விசாரணை

பெண் அதிகாரியின் புகார் தொடர்பாக விசாரணை நடத்த உள் புகார்கள் குழுவை (Internal Complaints Committee – ICC) அமைத்து தமிழ்நாடு அரசு நவம்பர் 24-ஆம் தேதி அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு அமைத்துள்ள உள் புகார்கள் குழுவின் தலைவராக கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா நியமிக்கப்பட்டுள்ளார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறைச் செயலாளர் எஸ். மதுமதி, சட்டத்துறைச் செயலாளர் பி. சுமதி மற்றும் வெளிப்புற உறுப்பினராக சுனிதா ஜோ ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்
இந்தக் குழு புகார் மீதான விசாரணையை 60 நாட்களுக்குள் முடிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும், பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம், 2013-ன்படி அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசின் தலைமைச் செயலாளர் சாய் குமார் வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டாலின், பழனிசாமி விமர்சனம்
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது வேறு வழியின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு
அவர் தனது எக்ஸ் பதிவில், "ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்கள் என்பது போல, கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரின் ஒழுங்கீனத்தை மறைத்து, அவரைப் பாதுகாக்க பொய் மேல் பொய்களைக் கூறினார்கள். அமைச்சர்கள் முதல் கூட்டணிக்கட்சித் தலைவர்கள் வரை வரிந்து கட்டிக் கொண்டு புகாரை மறுத்து, அருள் விக்னேஷுக்கு நடத்தைச் சான்று வழங்கும் வேலையில் இறங்கினார்கள்.
பாதிக்கப்பட்ட அதிகாரியை மனதளவில் உடைக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் இழிவான பிரசாரம் மேற்கொண்டார்கள். அத்தனை அழுத்தங்களையும் எதிர்கொண்டு, அந்த இரும்புப் பெண்மணி தைரியமாகப் புகார் அளித்தார்." என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், "119 நாட்களாக இதில் நடவடிக்கை எடுக்காமல், சமரசமாகச் செல்ல அழுத்தம் கொடுத்தவர்களும் நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டும். சட்டப்படி நியாயமான நீதி விசாரணை நடத்தப்பட்டு, தவறிழைத்த அனைவரும் தண்டிக்கப்படும் வரை நாங்கள் ஓயமாட்டோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
தவெக எம்எல்ஏ மீதான நடவடிக்கை அஇஅதிமுக-வின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் பதிவில், "இந்த வழக்கில், "அப்படி ஒன்று நடக்கவே இல்லை" என்று வதந்தி பரப்பி பொய் சொன்னவர், அவரை பொய்யை சொல்ல வைத்தவர் என அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வோம். இந்த குற்றத்தை மறைப்பதற்காக அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண் அதிகாரிக்கு நீதியும் பெற்றுத் தருவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































