திருப்பரங்குன்றம் தீபம்: உச்ச நீதிமன்ற உத்தரவின் 8 முக்கிய அம்சங்கள்

திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் உள்ள தீபத்தூணில் நாளை (நவம்பர் 28) தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் நாளை (நவம்பர் 28) தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் அறங்காவலர் குழுவை சஸ்பெண்ட் செய்துள்ள உச்சநீதிமன்றம் தீபம் ஏற்றுவதை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகளை நியமித்தும் உத்தவிட்டுள்ளது.

இந்த வழக்கில் தலைமை செயலாளர், டிஜிபி உள்ளிட்ட 13 பேர் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய ரிசர்வ் காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவும் உச்சநீதிமன்றம் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவு நிறைவேற்றப்படாதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று(நவம்பர் 27) விசாரணைக்கு வந்தது. உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு இதனை விசாரித்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இறுதியில் உத்தரவுகளைப் பிறப்பித்தனர். இந்த வழக்கு டிசம்பர் 15-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

இன்றைய விசாரணையில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் இடம் பெற்றிருந்த 8 முக்கிய அம்சங்கள் என்ன?

1. மலை உச்சியில் நாளை தீபமேற்ற உத்தரவு

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் நாளை (நவம்பர் 28) தீபம் ஏற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தூணில் இந்த கார்த்திகை தீப தினத்தன்று (நவம்பர் 24) ஒருமுறை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருந்த நிலையில், அன்றைய தினம் வழக்கம் போல் உச்சிப் பிள்ளையார் கோவில் அருகே உள்ள தீப மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டது.

2. பக்தர்கள் தீபம் ஏற்ற அனுமதி

உச்சநீதிமன்றம் தீபம் ஏற்ற உத்தரவிட்டுள்ள திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூண்
படக்குறிப்பு, உச்சநீதிமன்றம் தீபம் ஏற்ற உத்தரவிட்டுள்ள திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூண்

மலை உச்சியில் நடைபெறவுள்ள தீபமேற்றும் நிகழ்வில் அனைத்து பக்தர்களும் பங்கேற்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் தர்காவிலிருந்து 50 மீட்டர் தொலைவில் பக்தர்கள் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

3. சிஆர்பிஎஃப் பாதுகாப்புக்கு உத்தரவு

திருப்பரங்குன்றம் கோயில் மற்றும் சிக்கந்தர் தர்காவின் பாதுகாப்பை மத்திய ரிசர்வ் காவல் படை உறுதிசெய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

4. கோயில் அறங்காவலர் குழு இடைநீக்கம்

சுப்பிரமணிய சுவாமி கோயிலின் அறங்காவலர் குழுவின் செயல்பாட்டை உச்ச நீதிமன்றம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
படக்குறிப்பு, சுப்பிரமணிய சுவாமி கோயிலின் அறங்காவலர் குழுவின் செயல்பாட்டை உச்ச நீதிமன்றம் சஸ்பெண்ட் செய்துள்ளது.

சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் குழுவை உச்ச நீதிமன்றம் இடை நீக்கம் செய்துள்ளது.

கோயில் நிர்வாகத்தைப் பொறுப்பேற்கவும் நீதிமன்ற உத்தரவுகளைச் செயல்படுத்துவதை உறுதிசெய்யவும் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன், வி. பார்த்திபன் ஆகியோர் நியமனம் செய்யப்படுவதாக நீதிமன்ற உத்தவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5. உயர் நீதிமன்ற உத்தரவுக்கான தடை நீக்கம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளதாக லைவ் லா செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் உள்ள தூணில் கார்த்திகை தீப விழாவின் போது தீபம் ஏற்ற வேண்டும் என்பதே சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பாகும்.

6. தமிழக அரசு அதிகாரிகளுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்

தமிழகத் தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர், இந்து சமய அறநிலையத் துறை செயலாளர் மற்றும் ஆணையர், மதுரை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கோயில் செயல் அலுவலர் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 13 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை ஏன் தொடங்கக் கூடாது என்று விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

நோட்டீஸ் அனுப்பப்பட்ட 13 அதிகாரிகள் விவரம்:

  • டாக்டர் எம். சாய் குமார் – தமிழ்நாடு தலைமைச் செயலாளர்.
  • டாக்டர் மகேஷ்குமார் அகர்வால் – தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்.
  • வி. ராஜாராம் – இந்து சமய அறநிலையத் துறை செயலாளர்.
  • டி.ஜி. வினய் – இந்து சமய அறநிலையத் துறை ஆணையர்.
  • நிஷாந்த் கிருஷ்ணா – மதுரை மாவட்ட ஆட்சியர்.
  • எல். தேவநாதன் – மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
  • ஆர். பொன் சுவாமிநாதன் – மதுரை இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர்.
  • ஜி. செல்வி – சுப்பிரமணிய சுவாமி கோயில் செயல் அலுவலர்.
  • வி. சண்முகசுந்தரம் – கோயில் அறங்காவலர் குழுத் தலைவர்.
  • சி. ராஜபாண்டியன் – அறங்காவலர்.
  • கே. அழகப்பன் – அறங்காவலர்.
  • கே. ரெஜினா தேவி – அறங்காவலர்.
  • கே. சித்ரா – அறங்காவலர்.

7. தமிழக நிர்வாகம் குறித்து உச்ச நீதிமன்றம் விமர்சனம்

திருப்பரங்குன்றம் தீபம்: உச்ச நீதிமன்ற உத்தரவின் 8 முக்கிய அம்சங்கள் என்ன?

தமிழ்நாட்டில், குறிப்பாக மதுரை மாவட்டத்தில், "நிர்வாகச் சீர்குலைவு" நிலவுவதாக உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

அரசு அதிகாரிகள் தங்கள் அரசியல் எஜமானர்களின் உத்தரவுப்படி செயல்பட்டது போல் தோன்றுவதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

8. டிசம்பர் 15ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள அதிகாரிகள் டிசம்பர் 15ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு