மாநிலங்களவைத் தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜனின் வேட்புமனு ரத்து செய்யப்பட்டது ஏன்?

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

மத்திய பிரதேசத்தில் ஜூன் 18ஆம் தேதி நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலின் அரசியல் கணக்கு, காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜனின் வேட்புமனு பரிசீலனையின்போது நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாறியுள்ளது.

பாஜகவின் எதிர்ப்பை ஏற்றுக்கொண்ட தேர்தல் அலுவலர் அரவிந்த் சர்மா, காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜனின் வேட்புமனுவை ரத்து செய்தார்.

தெலங்கானாவில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கு பற்றிய தகவலை மீனாட்சி நடராஜன் தனது வேட்புமனுவில் குறிப்பிடவில்லை என்று பாஜக குற்றம் சாட்டியது.

இந்த முடிவு சட்டவிரோதமானது என்று கூறியுள்ள காங்கிரஸ், போதிய எண்ணிக்கையில் பலம் இல்லாதபோதும், மூன்றாவது மாநிலங்களவை இடத்தை கைப்பற்ற பாஜக சதி செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது.

தேர்தல் விதிகளின்படி, வேட்புமனு பரிசீலனை செயல்முறையின் போது தேர்தல் அலுவலர் எடுத்த முடிவை தேர்தல் ஆணையத்தால் மாற்றியமைக்க முடியாது.

பாஜக தனது மூன்றாவது வேட்பாளராக மகேஷ் கேவட்டை களம் இறக்கி ஆச்சரியத்தை ஏற்படுத்தியதால், இந்தத் தேர்தலில் ஏற்கனவே எதிர்பார்ப்புகள் மிக அதிகமாக இருந்தன.

எம்.எல்.ஏ-க்களை பாஜக தன் பக்கம் இழுத்துவிடக்கூடும் என்று அஞ்சி, காங்கிரஸ் தனது எம்.எல்.ஏ-க்களை பெங்களூருக்கு மாற்றியிருந்தது. ஆனால் சூழல் வேறுவிதமாக மாறியது .

காங்கிரஸின் இந்த அச்சத்தின் பின்னணியில் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்தின் அனுபவம் உள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டில், ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கட்சியை விட்டு விலகி பாஜகவில் இணைந்ததை அடுத்து, மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான அரசு கவிழ்ந்தது.

அந்தச் சம்பவம் மாநில அரசியலின் ஒட்டுமொத்த சமன்பாட்டையும் மாற்றி, பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர வழிவகுத்தது.

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அரசியல் பின்னடைவுகளில் ஒன்றாக இது இன்னும் கருதப்படுகிறது.

இதன் காரணமாகவே, மாநிலங்களவை தேர்தலின் போது, ​​ஏற்படக்கூடிய பிளவு, கட்சி மாறி வாக்களிப்பது அல்லது அரசியல் அழுத்தம் ஆகியவற்றைத் தவிர்க்க காங்கிரஸ் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வந்தது.

230 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் பாஜகவுக்கு 164 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர், இதன் காரணமாக அக்கட்சியால் இரண்டு இடங்களை எளிதாக வெல்ல முடியும்.

வெற்றி பெற, ஒரு வேட்பாளருக்கு 58 வாக்குகள் தேவை.

எனவே, மூன்றாவது வேட்பாளரின் வெற்றி கூடுதல் வாக்குகள், கட்சி மாறி வாக்களிப்பது அல்லது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாக்கெடுப்பைப் புறக்கணிப்பது ஆகியவற்றைப் பொறுத்தே அமைந்திருந்தது.

இந்த ஒட்டுமொத்த விவகாரம் குறித்து மீனாட்சி நடராஜன் கூறுகையில், "தேவையான வாக்குகள் இல்லாதபோதும் பாஜக மூன்றாவது வேட்பாளரைக் களம் இறக்கியது, மேலும் வழியில் தடைகள் உருவாக்கப்படும் என்பதை நாங்கள் ஏற்கனவே எதிர்பார்த்தோம். முதலில், எஸ்.ஐ.ஆர் மூலம் வாக்குகள் திருடப்பட்டன, இப்போது இடங்கள் திருடப்படுகின்றன. இந்தத் தார்மீகப் போரை ஒவ்வொரு ஜனநாயக மற்றும் அரசியலமைப்பு தளத்திலும் நாங்கள் எதிர்கொள்வோம்" என்றார்.

தேர்தல் ஆணையம் அல்லது உச்ச நீதிமன்றத்தில் இருந்து காங்கிரஸுக்கு உடனடியாக எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை எனில், காலியாக உள்ள மூன்று இடங்களுக்கும் பாஜகவின் மூன்று வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படும் சூழ்நிலை உருவாகலாம்.

வேட்புமனுவில் விடுபட்ட தகவல்களை வழங்குவதற்கான வாய்ப்பு மீனாட்சி நடராஜனுக்கு வழங்கப்பட்டது, ஆனால் அவரால் தேவையான விவரங்களை வழங்க முடியவில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, காரணங்களைக் குறிப்பிட்டு அவரது வேட்புமனு ரத்து செய்யப்பட்டது.

காங்கிரஸ் இந்த விளக்கத்தை எதிர்த்துள்ளது.

மீனாட்சி நடராஜனின் வேட்புமனுவைச் சுற்றியுள்ள சர்ச்சை இப்போது ஒரு சட்டப்பூர்வ கேள்வியை மையமாகக் கொண்டுள்ளது. ஹைதராபாத் நீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸை அவரது வேட்புமனு ஆவணங்களில் குறிப்பிடுவது கட்டாயமானதா? என்பது தான் அக்கேள்வி.

அப்படி இல்லை என்று காங்கிரஸ் கூறுகிறது. காங்கிரஸின் சட்டப் பிரிவின் பிரதிநிதியான அஜய் குப்தாவின் கூற்றுப்படி, இந்த வழக்கை ஒரு குற்றவியல் வழக்காகக் கருத முடியாது.

நடராஜனுக்கு எதிராக எந்த ஒரு முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்படவில்லை என்றும், எந்தவொரு குற்றவியல் வழக்கிலும் நீதிமன்றம் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யவில்லை என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.

''வெறும் நோட்டீஸ் மட்டுமே அனுப்பப்பட்டிருந்தது, அதற்கும் அவர் பதிலளித்திருந்தார். எனவே, வேட்புமனு ஆவணங்களில் அதைக் குறிப்பிட வேண்டிய கட்டாயம் இல்லை. இதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டப் போவதாக'' காங்கிரஸ் கூறுகிறது.

அதே நேரத்தில், பாஜக இந்த வாதத்தை நிராகரித்து வருகிறது.

பாஜகவின் சட்டப் பிரிவு உறுப்பினரான சங்கேத் குப்தா, இந்த விஷயம் வெறும் எஃப்.ஐ.ஆர் உடன் மட்டும் முடிந்துவிடுவதில்லை என்று கூறுகிறார்.

ஒரு வழக்கில் நீதிமன்றம் சம்மன் அல்லது நோட்டீஸ் அனுப்பியிருந்தால், வேட்பாளர் அதைப் பற்றிய தகவலைத் தெரிவிக்க வேண்டும்.

ஹைதராபாத் நீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸுக்கு மீனாட்சி நடராஜன் பதிலளித்திருந்ததால், தனக்கு இந்த விஷயம் தெரியாது என்று அவர் கூற முடியாது என்று அவர் தெரிவித்தார்.

இந்த ஒட்டுமொத்த சர்ச்சையும், நீதிமன்ற நோட்டீஸ் மற்றும் நிலுவையில் உள்ள வழக்கை தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் வெளிப்படுத்தியிருக்க வேண்டுமா இல்லையா என்பதைச் சுற்றியே சுழல்கிறது.

காங்கிரஸ் இதை வெறும் சட்டப்பூர்வ நோட்டீஸ் என்று கூறிவரும் வேளையில், அதை மறைப்பது வேட்புமனு விதிகளை மீறுவதாகும் என்று பாஜக குறிப்பிடுகிறது.

இந்தக் குற்றச்சாட்டு எவ்வளவு உண்மையானது?

இந்த பிரச்னை போபாலில் உள்ள சட்டப்பேரவை செயலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்கள் ஒருவரையொருவர் எதிர்கொண்டதால், அங்கு காரசாரமான விவாதம் ஏற்பட்டது.

அமைச்சர்களான ராகேஷ் சிங் மற்றும் கைலாஷ் விஜய்வர்கியா உள்ளிட்ட பல மூத்த பாஜக தலைவர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும், முழு நடவடிக்கைகளின் போதும் சட்டப்பேரவைச் செயலகத்தில் இருந்தனர்.

காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி-யும் மூத்த வழக்கறிஞருமான விவேக் தன்கா எக்ஸ் தளத்தில் இதுகுறித்துப் பதிவிட்டுள்ளார்.

அதில், "மீனாட்சி நடராஜனின் வேட்புமனு குறித்து குழப்பம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. எந்த ஒரு குற்றவியல் வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. அவருக்கும் மற்றவர்களுக்கும் எதிராக ஏன் ரூ. 10 கோடி இழப்பீடு கோரும் நடவடிக்கைகளைத் தொடங்கக்கூடாது என்று கேட்கும் ஒரு நோட்டீஸ் மட்டுமே பெறப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸுக்கு மீனாட்சியின் வழக்கறிஞர் பதிலளித்துள்ளார். எந்தவொரு எஃப்.ஐ.ஆரும் பதிவு செய்யப்படவில்லை" என்று எழுதியுள்ளார்.

இதற்கிடையில், காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தை அணுக முயன்றது. நேற்று இரவு, கே.சி. வேணுகோபால், சச்சின் பைலட் உள்ளிட்ட காங்கிரஸ் பிரதிநிதிகள் தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு வந்தனர், ஆனால் அவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.

இதுகுறித்து கே.சி. வேணுகோபால் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இது ஜனநாயகத்தின் அடிப்படை கேள்வி. நாங்கள் உள்ளே அனுமதிக்கப்படும் வரை இங்கேயே அமர்ந்திருப்போம். முன்னாள் முதல்வர், முன்னாள் துணை முதல்வர் மற்றும் எம்.பி ஆகியோர் இங்கு வந்துள்ளனர். நாங்கள் பொறுப்புள்ளவர்கள் " என்றார்.

இதற்கிடையில், மீனாட்சி நடராஜன் வழக்கு குறித்த தகவல்களை மறைக்க காங்கிரஸ் தலைவர்கள் சதி செய்துள்ளதாக மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

பாஜக வேட்பாளர்கள் யார்?

காலியாக உள்ள மூன்று மாநிலங்களவை இடங்களில் இரண்டில் பாஜக வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதி என்றே கருதப்படுகிறது. இரண்டு இடங்களில் வெற்றி பெற்ற பிறகும், பாஜகவிடம் இன்னும் 48 எம்.எல்.ஏ-க்களின் வாக்குகள் உள்ளன.

மூன்றாவது இடத்தை வெல்வதற்குத் தேவையான எண்ணிக்கையை விட பாஜகவிடம் 10 வாக்குகள் குறைவாக இருந்ததால், பல கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் மகேஷ் கேவட்டின் வேட்புமனு அறிவிக்கப்பட்டது.

மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் காங்கிரசுக்கு 62 வாக்குகள் உள்ளன. வெற்றி கிட்டத்தட்ட உறுதி என்று கருதப்படும் இரண்டு பாஜக வேட்பாளர்கள், கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக் மற்றும் மாநிலப் பிரிவுச் செயலாளர் ரஜினிஷ் அகர்வால் ஆகியோர் ஆவர்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு