You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாரதிராஜா: சிவாஜிக்கு போட்டியாக வர நினைத்தவர் 'இயக்குநர் இமயம்' ஆனது எப்படி?
- எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
கிராமத்து திரைப்படங்களுக்கு வேறொரு பரிணாமம் அளித்த பாரதிராஜாவின் மறைவு, அந்த நெடிய பாரம்பரியத்தில் வெற்றிடத்தை விட்டுச் சென்றுள்ளது. 1970களின் தமிழ் சினிமாவில் அதற்கு முந்தைய தலைமுறை நடிகர்களான எம்ஜிஆர், சிவாஜி ஆகியோர் கோலோச்சிய காலகட்டமாக இருந்தாலும் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் வருகையின் ஆரம்பகாலமாக இருந்தது.
பெரும்பாலும் ஸ்டுடியோவுக்கு உள்ளேயே எடுக்கப்பட்டிருந்த தமிழ் படங்கள், மெல்ல தமிழகத்தின் கிராமப்புற நிலப்பரப்புகளை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த காலகட்டம். வலுவான கதைகள், கிராமப்புற யதார்த்த வாழ்வியல் ஆகியவற்றை நோக்கி நகரத் தொடங்கியிருந்த தமிழ் சினிமாவில் பாரதிராஜாவின் முதல் படமான '16 வயதினிலே' ஒரு "புதிய பாய்ச்சலை" ஏற்படுத்தியது என்கின்றனர் திரைத்துறையினர்.
நாயக - வில்லன் கதாபாத்திர வடிவமைப்பை வேறொரு பரிணாமத்தில் சொல்லிய படம் '16 வயதினிலே.
'''அவர்கள்', 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் போன்ற திரைப்படங்கள் வந்துகொண்டிருந்த காலகட்டம் அது. அந்த படத்தில் 'சப்பானி' போன்ற கதாபாத்திரத்தை வைத்து ஒரு படம் எனும்போது அந்த கதாபாத்திரத்தை எவ்வளவு பேர் உதாசீனப்படுத்தியிருப்பார்கள். நிச்சயம் முதலில் என்னிடம் வந்து பாரதிராஜா கதை சொல்லியிருக்க மாட்டார், பலரிடமும் கதை சொல்லியிருப்பார். பல படங்களில் சிறு கதாபாத்திரமாக வந்துபோகக்கூடிய 'சப்பானி' போன்ற கதாபாத்திரத்தை மையமாக வைத்து 16 வயதினிலே எடுக்கப்பட்டிருக்கும். படப்பிடிப்பில் யார் இயக்குநர் என்று எல்லோரும் தேடுவார்கள். அப்படி எல்லா வேலைகளையும் பார்ப்பார் பாரதிராஜா. அவர்தான் உண்மையான 'சப்பானி'" என பேட்டி ஒன்றில் கூறியிருப்பார் கமல்ஹாசன்.
முன்னுதாரணமாக மாறிய '16 வயதினிலே'
அழுக்கு படிந்த - கிழிந்த சட்டை, வாயில் வெற்றிலை என கதாநாயக பிம்பத்துக்கான எந்த அடையாளங்களும் இல்லாத 'சப்பானி', வில்லன் கதாபாத்திரத்துக்கான இலக்கணங்களை மீறிய 'பரட்டையாக' ரஜினிகாந்த், துருதுரு பெண்ணாக இருந்து பின்னர் முதிர்ச்சியான பாத்திர மாற்றத்தைக் காட்டும் 'மயிலு' ஸ்ரீதேவி, இளையராஜாவின் இசை என, தன் முதல் படத்திலேயே வலுவான முத்திரையை பதித்திருந்தார் பாரதிராஜா.
கமல், ரஜினிகாந்த் போன்ற வளர்ந்து வரும் இளம் நடிகர், ஏற்கெனவே நன்கு அறியப்பட்ட ஸ்ரீதேவி ஆகிய நடிகர்கள் இருந்தும் அந்த திரைப்படத்தை விநியோகஸ்தர்கள் வாங்க தயங்கியதாக நிகழ்ச்சி ஒன்றில் கூறியிருக்கிறார் ரஜினிகாந்த்.
'பரட்டை' கதாபாத்திரம் இன்றும் தமிழ் திரையுலகில் மாறுபட்ட வில்லன் கதாபாத்திரமாக திகழ்கிறது. இன்றளவும் பல புதிய இயக்குநர்களின் படங்களில் அதன் தாக்கத்தைப் பெற முடியும். "'பரட்டை' போன்ற கதாபாத்திரத்தை வில்லன் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். அடிதடி செய்ய மாட்டார், கடத்த மாட்டார், எதுவும் செய்ய மாட்டார். நண்பர்களுடன் சேர்ந்து மரத்தடியில் கேலி, கிண்டல் செய்வார். இப்படி வில்லனின் பரிணாமத்தை மாற்றியது 'பரட்டை' கதாபாத்திரம்" என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.
16 வயதினிலே படத்துக்குப் பிறகு அவர் பல தனித்துவமான படங்களை இயக்கினார். பெரும்பாலானவை கிராமத்துப் பின்னணியில் அமைந்தவையாக இருந்தாலும் ஒவ்வொன்றும் மற்றவற்றிலிருந்து தனித்து விளங்குபவையாகவே இருக்கும்.
அவருடைய இரண்டாவது திரைப்படம் 'கிழக்கே போகும் ரயில்'. அறிமுக நடிகர்களான, சுதாகர், ராதிகா ஆகியோரை வைத்து, அத்திரைப்படத்தை இயக்கியிருப்பார்.
இரண்டு படங்களை கிராமத்துப் பின்னணியில் இயக்கியிருந்த அவர், தன் அடுத்த படமான 'சிகப்பு ரோஜாக்கள்' திரைப்படத்தில் அந்த சாயலை மாற்றினார். இன்றும் 'சைக்கோ த்ரில்லர்' பாணி திரைப்படத்துக்கான முன்னுதாரணமாக திகழ்கிறது அப்படம்.
16 வயதினிலே படத்தில் ஆரம்பித்து 'இயக்குனர் இமயம்' என்ற அடைமொழியை அடைவதற்கான அவரின் பயணம் நீண்டது.
நடிக்க வேண்டும் என்ற ஆசை
தேனி மாவட்டம் அல்லி நகரம் எனும் கிராமத்தில் 1941ம் ஆண்டு ஜூலை 17 அன்று பெரியமாயத்தேவர் - மீனாட்சியம்மாள் (எ) கருத்தம்மாள் ஆகிய தம்பதிக்கு மகனாக பிறந்தவர் பாரதிராஜா.
சிறுவயதிலிருந்தே சினிமா மீது ஆர்வம். இயக்குநராக வேண்டும் என்பது அவருடைய ஆசை அல்ல, நடிகராக வர வேண்டும் என்பதுதான் அவரின் கனவாக இருந்தது. பள்ளியில் படிக்கும்போதே பல நாடகங்களை இயக்கி, நடித்துள்ளார். அப்போது கிடைத்த பாராட்டு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை அவருக்குள் தூண்டியது.
"பள்ளியில் படிக்கும்போது நாடகங்களை இயக்கி நடிப்பேன். அப்போது கிடைத்த பாராட்டு நான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையை தூண்டியது. பராசக்தி வசனம் எல்லாம் அத்துப்படி. 'சிவாஜியா, நானா?' என்ற சவாலில் தான் சினிமா கனவில் சென்னை வந்தேன்," என ஒரு பேட்டியில் கூறியுள்ளார் பாரதிராஜா. இதை 'முதல் மரியாதை' படத்தின் படப்பிடிப்பில் சிவாஜி கணேசனிடமே தெரிவித்துள்ளார் பாரதிராஜா.
பாரதிராஜாவின் இயற்பெயர் சின்னசாமி. பால்பாண்டி என்பது அவருடைய செல்லப் பெயர். பின்னர், சினிமாவில் நுழைந்தபின் தன் பெயரை பாரதிராஜா என வைத்துக்கொண்டார்.
தன் இளம்பருவத்தில் மலேரியா ஒழிப்பு திட்டத்தின்கீழ் வீடு, வீடாக பரிசோதிக்கும் 'இன்ஸ்பெக்டராக' பணியாற்றியுள்ளார் பாரதிராஜா. அப்போது அவருக்கு ரூ.75 சம்பளம். பின்னர், இந்திய ராணுவத்தின் 'மெட்ராஸ் சேப்பர்ஸ்' எனப்படும் மெட்ராஸ் இன்ஜினியரிங் குரூப் படைப்பிரிவில் பெங்களூருவில் பணிக்கு சேந்துள்ளார். அங்கு பல கடினமான வேலைகளை செய்ய வேண்டியிருந்ததாக பேட்டி ஒன்றில் நினைவுகூர்ந்துள்ளார் பாரதிராஜா.
பின்னர் அங்கிருந்து வெளியேறி சினிமா கனவில், "ஒரு டிரங்க் பெட்டி, 4-5 சட்டை, பேண்ட், 300 ரூபாய் எடுத்துக்கொண்டு சென்னைக்கு லாரியில் கிளம்பினேன். 'நீ நல்லா பெரிய ஆளா வருவ' என என் தாய் வழியனுப்பி வைத்தார். அவருடைய வார்த்தை பலித்தது," என பாரதிராஜா கூறியுள்ளார்.
'வறுமையான காலகட்டம்'
சென்னையில் வறுமையான காலகட்டத்தை எதிர்கொண்டதாக அப்பேட்டியில் கூறியுள்ளார் பாரதிராஜா.
தன்னுடைய ஊரில் இருக்கும்போதே கம்யூனிச கட்சி சார்பான நிகழ்ச்சிகள் வாயிலாக இளையராஜாவின் சகோதரர் பாஸ்கர் பாரதிராஜாவுக்கு அறிமுகமானார். பின்னர், பாரதிராஜா இயக்கிய நாடகங்களுக்கு இளையராஜா இசையமைத்தார். சென்னையிலும் இளையராஜாவின் நட்பு தொடர்ந்தது. சென்னை டிரஸ்ட்புரத்தில் கட்டி முடிக்கப்படாத வீடு ஒன்றில் இருவரும் தங்கி சினிமா வாய்ப்புகளுக்காக காத்திருந்தனர். இளையராஜா அச்சமயத்தில் பிரபல இசையமைப்பாளர் ஜிகே வெங்கடேஷிடம் உதவியாளராக, பல்வேறு திரைப்படங்களில் வாத்தியங்கள் இசைத்துள்ளார். அப்போது அவருக்கு கிடைத்த சம்பளத்தில் தாங்கள் நல்ல உணவு உண்ண முடிந்ததாக நினைவு கூர்ந்திருக்கிறார் பாரதிராஜா.
"மிகவும் வறுமையில் இருந்திருக்கிறோம். ஒரேயொரு இட்லி மட்டும் வாங்கி அதற்கான சட்னி, சாம்பார் மட்டும் அதிகமாக வாங்கி சாப்பிட்ட காலம் இருந்திருக்கிறது. இளையராஜா சினிமாவில் இசை வாத்தியங்களை வாசிக்க ஆரம்பித்ததன் மூலமே நன்றாக இருக்க ஆரம்பித்தோம்," என கூறியுள்ளார் அவர்.
'பெல்லி மோடா' எனும் கன்னட படத்தைப் பார்த்து வியந்த பாரதிராஜா, அதன் இயக்குநர் புட்டண்ணா கனகலிடம் உதவி இயக்குநராக சேர்ந்து பணியாற்றினார். அதன்பின், திரைப்பட நிறுவனத்தை சேர்ந்த இளைஞர்களுடன் இணைந்து எடுக்கப்பட்ட 'தாகம்' எனும் படத்தில் பணியாற்றினார்.
அதன்பிறகே, அவருக்கு '16 வயதினிலே' படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 20 நாட்களில் சுமார் ரூ.5 லட்சம் செலவில் அப்படத்தை எடுத்தார் பாரதிராஜா. அப்படம் 1977ம் ஆண்டில் வெளியானது. முதலில் கமல் பாத்திரத்தில் நாகேஷையும் ஸ்ரீதேவி பாத்திரத்தில் ரோஜா ரமணியையும் நடிக்க வைக்கவே திட்டமிட்டு, பின்னர் கமல்-ஸ்ரீதேவி நடித்தனர்.
"இன்று பெரிய நடிகர்களாக உள்ள இருவரிடம் இந்த கதையை சொன்னபோது அவர்கள் என்னை புறக்கணித்தனர்" என ஒரு பேட்டியில் கூறியுள்ளார் பாரதிராஜா.
முதல் படத்திலேயே தன் நண்பரான இளையராஜாவை இசையமைக்க வைத்தார். பாரதிராஜா-இளையராஜா இணை அடுத்தடுத்த படங்களிலும் மிளிர்ந்தது. அந்த திரைப்படங்களின் பாடல்கள் கல்யாண வீடுகள், கச்சேரிகள் என கிராமம்தோறும் ஒலித்து அந்த இணையை சென்று சேர்த்தது.
தனித்துவமான கதைகள்
கிழக்கே போகும் ரயில், மண் வாசனை, அலைகள் ஓய்வதில்லை, கடலோரக் கவிதைகள், முதல் மரியாதை எனவும் கிராமத்துப் பின்னணியைக் கொண்டிருந்தாலும் அவை தனித்துவமான கதைகளை கொண்டவை என்கிறார், எழுத்தாளரும் திரைப்பட விமர்சகருமான தீபா ஜானகிராமன்.
"கிராம பின்னணியை கொண்ட படங்கள் அச்சமயத்தில் பல வந்தாலும் வயல்வெளி, காதல், பண்ணையார், மேம்போக்கான கதை என இவற்றை சுற்றியே படங்கள் வந்தன. கிராமங்களில் கதைகளுக்கு பஞ்சமில்லை என எடுத்துக் காட்டியவர் பாரதிராஜா. ஒரு கதையிலிருந்து மற்றொரு கதை வேறுபட்டதாகவே இருந்திருக்கிறது. 'கல்லுக்குள் ஈரம்' படத்தில் இயக்குநர் ஒருவர் படம் எடுக்கிறார், அவர் மீது கிராமத்தில் இருக்கும் பெண்ணுக்கும் காதல் வருகிறது. இப்படி கதைக்குள் கிளைக் கதைகளை வைத்து படம் எடுப்பார்." என்கிறார் தீபா ஜானகிராமன்.
தன்னுடைய கதைகளுக்காக கிராம நிலப்பரப்பை பயன்படுத்திக் கொண்டாரே தவிர நிலப்பரப்புக்காக அவர் கதையை உருவாக்கவில்லை என்கிறார் அவர்.
அப்போது வந்த படங்களின் 'சக்சஸ் ஃபார்முலாவை' அவர் உடைத்திருக்கிறார் என்கிறார் தீபா ஜானகிராமன்.
பலரை அறிமுகம் செய்தவர்
70-80களின் தமிழ் சினிமாவுக்கான நடிகர்கள் என்பதற்கான "அம்சங்கள்" அல்லது எவ்வித பின்னணியும் இல்லாத பல நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்தியுள்ளார் பாரதிராஜா.
குறிப்பாக, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வளையல் கடை ஒன்றில் பணியாற்றிய பாண்டி என்பவரை (நடிகர் பாண்டியன்) மண்வாசனையிலும் கன்னிமாராவில் வரவேற்பாளராக பணியாற்றிய வடிவுக்கரசியை சிவப்பு ரோஜாக்களில் நவீன பெண்ணாகவும் கிராமத்து பின்னணியில் வளர்ந்திராத ராதிகாவை 'கிழக்கே போகும் ரயிலில்' படத்திலும் தன்னுடைய உதவி இயக்குநர் விஜயனை 'நிறம் மாறாத பூக்கள்' படத்திலும் அறிமுகம் செய்தார்.
நடிகைகளுக்கான இலக்கணங்களையும் சில திரைப்படங்களில் மீறியிருப்பார் பாரதிராஜா. 'கிழக்கே போகும் ரயில்' படத்தில் ராதிகாவை நடிக்க கேட்டபோது 'என்னை யார் பார்ப்பா?' என பாரதிராஜாவிடம் கேட்டதாகவும் அப்படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்த பாக்யராஜ் தன் உருவத்தைக் குறிப்பிட்டு தான் அந்த கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பேனா என சந்தேகம் அடைந்ததாகவும் ராதிகா பலமுறை பின்னாளில் குறிப்பிட்டுள்ளார். தன் சிரிப்பும் அப்படத்தில் பலருக்கும் ஈர்ப்பு இல்லாத ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளார் ராதிகா. பின்னாளில், பாரதிராஜா இயக்கத்தில் கிழக்குச் சீமையிலே, பசும்பொன், தாஜ்மஹால் போன்ற படங்களில் தன் வயதை மீறிய கதாபாத்திரங்களில் நடித்து முக்கியத்துவம் பெற்றார் ராதிகா.
அதேபோன்று, 'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் ராதாவை அறிமுகப்படுத்தினார். தன்னுடைய மற்றொரு மகளுக்காக வாய்ப்பு கேட்டு சென்றுள்ளார் ராதாவின் அம்மா. ஆனால், ராதாவின் புகைப்படத்தைப் பார்த்து அவரை நடிக்க வைக்க கேட்டுள்ளார் பாரதிராஜா. "அவள் கருப்பாக இருப்பாள், சினிமாவுக்கு சரியாக இருக்கமாட்டாள்" என கூறியுள்ளார் ராதாவின் அம்மா. ஆனால், "அவர் தான் என் கதாநாயகி" எனக்கூறி நடிக்க வைத்ததாக பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார்.
இவர்கள் தவிர, ரேவதி, ரதி அக்னிஹோத்ரி போன்றவர்களையும் அறிமுகம் செய்தார் பாரதிராஜா. அவர் அறிமுகம் செய்தவர்கள் பின்னாளில் முக்கியத்துவம் பெற்ற நடிகர்களாகினர்.
தன்னுடைய கதையின் மீது பாரதிராஜா அபார நம்பிக்கை கொண்டிருந்ததையே, அவருடைய அறிமுக நடிகர்களின் பட்டியல் காண்பிக்கிறது.
தன்னுடைய பெரும்பாலான படங்களில் நடிகர், நடிகைகளுக்கு நடித்து காண்பிப்பதும் அவருடைய பாணி. 'என் இனிய தமிழ் மக்களே' என அவருடைய குரலிலேயே அவரின் படங்கள் ஆரம்பிக்கும்.
அதேபோன்று, 80-90களில் தமிழ் சினிமாவில் கோலோச்சிய பல இயக்குநர்கள் பாரதிராஜாவின் உதவி இயக்குநராக பணியாற்றியவர்கள். அந்த பட்டியல் ஒரு சங்கிலியாக, ஒரு மரபாக தொடர்ந்தது. பாக்யராஜ், மணிவண்ணன், மனோபாலா, சீமான் என பலரும் அவரிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றியவர்கள். அவருடைய தாக்கம் இன்றளவும் சசிகுமார், அமீர் போன்ற இயக்குநர்களின் படங்களில் இருக்கிறது.
வலுவான பெண் கதாபாத்திரங்கள்
தன் திரைப்படங்களில் வலுவான பெண் கதாபாத்திரங்கள், அக்காலகட்டத்தில் நிலவிய சமூக பிரச்னைகளை சுட்டிக் காட்டுதல் ஆகியவற்றுக்காகவும் பாரதிராஜா அறியப்படுகிறார்.
'கருத்தம்மா' படத்தில் பெண் சிசுக்கொலை, 'வேதம் புதிது' படத்தில் சாதிய படிநிலைகள், 'நிழல்கள்' படத்தில் வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்னைகளை பிரதானப்படுத்தி எடுத்திருப்பார். புதுமைப் பெண், முதல் மரியாதை போன்ற படங்கள் வலுவான பெண் கதாபாத்திரங்களுக்காக இன்றளவும் பேசப்படுகின்றன.
"சமூகத்தில் நிலவிய ஆணாதிக்க மனநிலையை அவருடைய படங்கள் பிரதிபலிக்கின்றன. அவரின் பெண் கதாபாத்திரங்களின் நடவடிக்கைகளும் விருப்பங்களும் ஆண் கதாபாத்திரங்களாலேயே தீர்மானிக்கப்படுகின்றன. வழக்கமான பெண் பாத்திர படைப்பாக இருந்தாலும், அந்த கதாபாத்திரங்களின் சிக்கல் தன்மை, கூர் உணர்வு, போராட்டங்கள் போன்ற அதிகம் பேசப்படாத விஷயங்களை அவை பேசின, அவற்றை அவருக்குப் பின்னால் வந்தவர்களும் பின்பற்றினர். சூழலுக்கு ஏற்ப அவரின் பெண் கதாபாத்திரங்கள் தைரியம் மற்றும் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்," என பேராசிரியர் பிருந்தா துரைசாமி என்பவரின் 'பாரதிராஜாவின் பெண் கதாபாத்திரங்கள்' குறித்த ஆய்வுக் கட்டுரை ஒன்று குறிப்பிடுகிறது.
16 வயதினிலே தொடங்கி, 2023இல் ஓடிடி-இல் வெளியான மாடர்ன் லவ் சென்னை என்ற ஆந்தாலஜி தொடர் வரை பல்வேறு படைப்புகளை உருவாக்கியுள்ள பாரதிராஜா 6 தேசிய விருதுகள், 6 மாநில விருதுகள் உள்பட பல விருதுகளை வென்றுள்ளார்.
இயக்கம் மட்டுமல்லாமல் நடிப்பிலும் தனி முத்திரையை பதித்தவர் பாரதிராஜா. கல்லுக்குள் ஈரம் படத்தில் இயக்குநராகவே நடித்திருப்பார். ஆயுத எழுத்து, திருச்சிற்றம்பலம், நம்ம வீட்டுப் பிள்ளை என இக்காலத்து கதாநாயகர்களுடன் அவர் இணைந்து நடித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு